கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்
ஈரோடு வடக்கு – ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.09.2018 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் வேலுச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் விழாவை கோபியில் அனைத்து இயக்கங்களும் இணைந்து ஊர்வலம் நடத்துவது எனவும், மாவட்ட முழுவதும் அய்யா பிறந்த நாள் விழாவினை தமிழர் கல்வி மீட்பு பரப்புரை பயணமாக வாரந்தோறும் ஞாயிறன்று ஒவ்வொரு ஒன்றியங்களாக நடத்துவது எனவும், பரப்புரை பயணத் தொடக்க நிகழ்வாக செப்டம்பர் 23 அன்று குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சி மாவட்ட கலந்துரையாடல்
02.09.2018 அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தினேஷ்குமார் தலைமையில் ந.அய்யனார் முன்னிலையில் நடைபெற்றது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அ.மோகன்ராஜ், இரா.செல்வகுமார், மு.அய்யப்பன், ப.சஞ்சய், சே.வசீகரன், விநாயகமூர்த்தி, ம.வினோத் குமார், மதன் ஆகிய தோழர்கள் கூட்டத்தில் கழகத்தில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தோழர்கள் செங்குட்டுவன், ராஜேஷ், தெள்ளமிழ்து ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 06092018 இதழ்