ஒன்றுபட்ட தமிழகம் – 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை 161ஆவது விதியின் கீழ் இராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதை வரவேற்று பாராட்டுகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு அதிசயமாக தமிழக அரசின் இந்த முடிவை அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒருமித்து வரவேற்றிருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு பொதுக் கருத்தை தமிழ் மண்ணின் உணர்வாக மாற்றியது கடந்த காலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பரப்புரைகளும் போராட்டங் களும், செங்கொடியின் உயிர்த் தியாகமும்தான். சமுதாயத்தைப் பக்குவப்படுத்தி விட்டால் சட்டம் அதன் பின்னால் ஓடி வரும் எனும் சமூகவியலை இது மெய்ப்பித்திருக்கிறது. இதுவே இந்த மண்ணை சமூகநீதிக்கும் சுயமரியாதைக்குமான விளைச்சல் பூமியாக்கிட
பெரியார் பின்பற்றிய அணுகுமுறையும்கூட!
மாநில அரசுக்கு அரசியல் சட்டப் பிரிவு 161இன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு கூட்டாட்சி அமைப்பில் மாநில இறையாண்மையை
உறுதி செய்கிறது. இதே வழக்குகளில் மாநில அரசுக்கு உரித்தான
இந்த உரிமைகளை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வலியுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
1999ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி
தண்டனைக் குறைப்புக்காக தன்னிடம் வந்த கருணை மனுக்களை நிராகரித்து அவரே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டபோது சென்னை உயர்நீதிமன்றம் வழியாக, அந்த முறைகேடான முயற்சி முறியடிக்கப்பட்டது. ‘ஆளுநரின் முடிவு தன்னிச்சையானது; சட்டவரையறைக்கு உட்பட்டதல்ல’ என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘மாநில அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையிலேயேதான் முடிவு எடுக்க முடியும்’ என்று தீர்ப்பளித்தது. அன்றைய கலைஞர் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் (25.4.2000) நளினியின் தூக்குத் தண்டனையை 161ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. தூக்குக்கு உத்தரவிட்ட ஆளுநர், பிறகு அமைச்சரவை பரிந்துரைக்குப் பணிந்து, நளினிக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் முடிவுக்கு ஒப்புதல் தர சட்டம் அவரை நிர்ப்பந்தித்தது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி குடியரசுத் தலைவர் வழியாக கருணை மனுக்களை தள்ளுபடி செய்து தூக்குத் தண்டனையை உறுதி செய்த நிலையில் கருணை மனு போட்டு 11 ஆண்டுகால தாமதத்துக்குப் பிறகு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2013இல் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, வீரப்பன் வழக்கில் தொடர்புடைய நால்வர் மற்றும் இராஜிவ் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த மூவர் உள்ளிட்ட 15 பேரின் மரணதண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக்கியது (21.10.2014). தொடர்ந்து இந்த மூவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுதும் சிறை என்றிருந்தாலும், இவர்களுக்கான தண்டனைக் காலத்தை உரிய அரசாங்கம் (ஹயீயீசடியீசயைவந ழுடிஎநசnஅநவே) குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-அய் பயன்படுத்தி குறைக்கலாம் என்று தெளிவுபடுத்தியது. அந்த அடிப்படையில்தான் அன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 432ஆவது பிரிவைப் பயன்படுத்தினார். தண்டனைக் குறைப்புக்கு உரிய அரசு மாநில அரசுதான் என்பதை உறுதி செய்து, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்தார் (19.2.2014). ஆனாலும் இந்த வழக்கை மத்திய அரசின் அமைப்பான சி.பி.அய். விசாரணைக்குட்பட் டிருந்ததாலும் மத்திய அரசிடம் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுவதாலும் (பிரிவு 435(1)(ய)) – மத்திய உள்துறையிடம் ஆலோசனை கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. 3 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் கெடு விதித்தார். பதில் தருவதற்கு மீண்டும் தேவையற்ற காலதாமதத்தை மத்திய அரசு உருவாக்கக் கூடும் என்பதால் விதிக்கப்பட்ட ‘கெடு’ அது. ஆனால் நடுவண் ஆட்சியோ மாநில அரசின் இறையாண்மையை சற்றும் மதிக்காமல் பதில் கூட அளிக்காமல் நேரடியாக உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசின் விடுதலை முயற்சிக்குத் தடை ஆணையை வாங்கியது (20.2.2014). இதில் முடிவெடுக்கக்கூடிய ‘உரிய அரசு’ நடுவண் அரசே தவிர, மாநில அரசு அல்ல என்று வாதிட்டது.
விடுதலையைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற நடுவண் அரசின் நோக்கம் ஓரளவு வெற்றியும் பெற்றது. ‘உரிய அரசு’ எது என்பதை முடிவெடுக்கவும், வழக்கோடு தொடர்பே இல்லாத வேறு பிரச்சினைகளையும் இணைத்து 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த அமர்வு, 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டாலும், 41ஆவது தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருந்த லோதா, தனது 5 மாத பதவிக் காலத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் ஓய்வு பெற்றதோடு, அடுத்து 42ஆவது
தலைமை நீதிபதியாக வந்த நீதிபதி தத்து, பதவி ஏற்று ஓராண்டுக்குப் பிறகு தான் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வையே நியமித்தார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த அமர்வு இரண்டு தீர்ப்புகளை வழங்கியது. மூன்று நீதிபதிகளுக்கான தீர்ப்பை நீதிபதி கலிஃபுல்லாவும் இரண்டு நீதிபதிகளுக்கான தீர்ப்பை நீதிபதி லலித்தும் வழங்கினர். நீதிபதி கலிஃபுல்லா எழுதிய தீர்ப்புக்கு கையெழுத்திடவே தலைமை நீதிபதி தத்து, தனது பணி ஓய்வு நாளான 2015 டிசம்பர் 2 வரை காத்திருந்தார்.
மேற்சொன்ன இரண்டு தீர்ப்புகளில் இந்த வழக்கில் முடிவெடுக்கக் கூடிய உரிய அரசு எது என்பதை திட்டவட்டமாகக் கூறாமல் மூவர் கொண்ட வேறு ஒரு உயர்நீதிமன்ற அமர்வு முடிவு செய்யட்டும் என்று நீதிபதி கலிஃபுல்லா தீர்ப்பு எழுதி விட்டார். முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசுக்குத் தான் என்று நீதிபதி லலித் தீர்ப்பு எழுதினார். ஆனால் இரண்டு தீர்ப்புகளும் தண்டனைக் குறைப்புக்கு மாநில அரசுக்கு 161ஆவது பிரிவு வழங்கும் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் கை வைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டன. (ஹசவiஉடந 72 டிச ஹசவiஉடந
161 டிக வாந உடிளேவவைரவiடிn றடைட யடறயலள நெ யஎயடையடெந நெiபே ஊடிளேவவைரவiடியேட சுநஅநனநைள ரவேடிரஉhநன லெ வாந ஊடிரசவ) (சட்டப் பிரிவு 72 – குடியரசுத் தலைவருக்குரிய தண்டனைக் குறைப்பு அதிகாரம் பற்றியது)
இதற்குப் பிறகு உச்சநீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432ஆவது பிரிவில் தண்டனைக் குறைப்பு வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்று தீர்ப்பளித்தது. வழக்கு ஒரு கட்டத்தில் தேங்கிப்போய், 7 தமிழர் விடுதலைக்கு வழியே இல்லை என்ற நிலை உருவானது. பேரறிவாளன் தளரவில்லை; தனது சட்டப் போராட்டத்தை சிறைக்குள்ளிருந்தே மேலும் நகர்த்தினார்.
2010லிருந்து 2015 வரை தண்டனைக் குறைப்பு செய்த கைதிகளின் விவரங்களை நடுவண் அரசு தெரிவிக்கக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் கேட்டார். தகவல் தர உள்துறை அமைச்சகம் மறுத்தது. தகவல் ஆணையருக்கு மேல் முறையீடு செய்தார். உள்துறை அமைச்சகத்தின் மறுப்பை தகவல் ஆணையம் ஏற்க மறுத்ததோடு இந்த விவரங்களை அரசே இணையத்தில் வெளியிட உத்தரவிட்டது. நம்பிக்கைக் கீற்று பளிச்சிடத் தொடங்கியது.
அதற்குப் பிறகு தமிழக ஆளுநருக்கு 2015ஆம் ஆண்டு 161ஆவது பிரிவின் கீழ் தாம் விண்ணப்பித்திருந்த தண்டனைக் குறைப்புக் கோரும் மனுவுக்கு ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்துவதற்கு விளக்கம் கேட்டு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனுப் போட்டார்; மீண்டும் 161 பிரிவுக்கு உயிர் கொடுக்க முயன்றார். கடந்த ஆக.20இல் தாக்கல் அவர் செய்த மனுவுக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ஆளுநர் பேரறிவாளன் மனுவை பரிசீலிக்கலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தது.
ஏழு தமிழர்கள் சார்பில் பேரறிவாளன் நடத்திய நீண்ட சட்டப் போராட்டம் இப்போது பேரறிவாளன் மனுவின் வழியாகவே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இராஜிவ் கொலை வழக்கில் இப்போது குற்றம்சாட்டப்பட்டவர் களுக்கு அதில் நேரடி தொடர்பே இல்லை. நேரடி தொடர்புள்ளவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தேடுதல் வேட்டையில் காவல் துறையால் சுடப்பட்டு 16 பேர் இறந்து விட்டனர்.
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சேயை 16 ஆண்டுகளிலேயே காங்கிரஸ் ஆட்சியே தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்தது. தமிழ்நாட்டு சிறைகளில் 20 ஆண்டு சிறைத் தண்டனை கழித்த சிறைவாசிகள், தண்டனைக் குறைப்புக் கேட்க தமிழக அரசே சட்டம் இயற்றியிருக்கிறது.
அது மட்டுமின்றி, தண்டனைக் குறைப்புக்கு செய்த குற்றங்களைப் பார்க்கக் கூடாது; சிறைவாசியாக இருந்த காலத்தில் நன்னெறிகளைப் பின்பற்றினார்களா என்ற நடத்தைகளைத் தான் பார்க்க வேண்டும். ஆனால் குற்றங்களையே பேசிக் கொண்டிருந்தது நடுவண் ஆட்சி!
இராஜிவ் கொலைக்குப் பயன்படுத்திய ‘மனித வெடிகுண்டு பெல்ட்டை’ தயாரித்தது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதன் பின்னணியில் அந்நிய சதி இருந்ததா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று ஜெயின் ஆணையம் கூறி, அதன்படி விசாரிக்க நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணையும் முடியவில்லை. இவ்வளவுக்கும் பிறகு, 27 ஆண்டு சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு சட்டம் அனுமதிக்கும் உரிமைகளை மறுப்பது நியாயமல்ல; ஆளுநர்களைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் வழியாக நடுவண் அரசு தடுக்க முயற்சிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
இந்தியாவில் நடப்பது ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சி முறையே தவிர, குடியரசுத் தலைவர் ஆட்சி அல்ல என்பதையும் நினைவூட்டுகிறோம்.
மாநில அரசின் மதிப்புமிக்க உரிமைகளான 161ஆவது பிரிவை மீண்டும் உறுதிப்படுத்தி, தங்கள் விடுதலையோடு மாநில உரிமைகளையும் மீட்டுத் தந்த 7 தமிழர் வருகையை தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பெரியார் முழக்கம் 13092018 இதழ்