கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!
கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை :
திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் :
கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் முன்னிலையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில், மாவட்ட தலைவர் சாமி நாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலை ஞரின் சாதனைகள் மற்றும் கலைஞரின் மக்கள் நலத் திட்டங் களைப் பற்றி நினைவு கூர்ந்து உரை யாற்றினர். மேலும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் கலந்து கொண் டனர்.
ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாநில துணைப்பொதுச் செயலாளர் தமிழரசு இரங்கல் உரை நிகழ்த்த, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் கலைஞரின் சமூக நீதி சாதனைகள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்களின் குரலாக எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நிறைவுரையாக தனது இரங்கல் கருத்தைப் பதிவு செய்தார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித் தமிழர் பேரவையின் செயலாளர் சரவணன் மற்றும் திருச்செங்கோடு பகுதியின் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண் டனர். இறுதியாக கௌதமன் நன்றியுரையாற்றினார்.
திருப்பூர் :
திருப்பூர் திமுகழகம் சார்பாக கலைஞருக்கு 10.08.2018 அன்று மாலை 3 மணிக்கு மவுன அஞ்சலி நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.
திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, வடக்கு மாவட்டச் செயலாளர் கருணாநிதி, மாநகரத் தலைவர் வீ. தனபால், மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், சின்னு, நகுலன், சரத், பார்வதி மற்றும் பெரியர் பிஞ்சுகள் யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டு கலைஞருக்கு மலர்தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.
நங்கவள்ளி : 08.08.2018 அன்று காலை மறைந்த கலைஞருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கண்ணன், நங்கவள்ளி ஒன்றியத் தோழர்கள் மற்றும் திமுக நகர செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் நங்கவள்ளி பேருந்து நிலையம் தொடங்கி ஊர்வலமாக சென்று இறுதி வீரவணக்க அஞ்சலியை கலைஞரின் சமூகநீதி பணிகளை விளக்கும் முழக்கங்களோடு நடத்தினர்.
விழுப்புரம் :
8.8.2018 அன்று விழுப்புரம் மாவட்டக் கழகம் சார்பில் கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
காலை 10 மணியளவில் கடுவனூர் பெரியார் படிப்பகத்திலிருந்து பேரணியாகச் சென்று பேருந்து நிறுத்தம் அருகில் நிறைவடைந்தது. அங்கு கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் க. இராமர், மு.நாகராஜ்,
மா. குமார் உள்பட கழகத் தோழர்கள் மற்றும் பொது மக்கள் 250 பேர் பங்கேற்றனர்.
மாலை 4 மணியளவில் பாக்கம் கிராமத்திலும் கழகத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர்கள் துளசி, நீதிபதி, பிரபு ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 16082018 இதழ்