பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்பு பரப்புரைக் குழுவில் பங்கேற்ற தோழர்கள், பயண ஒருங்கிணைப்பாளர்கள் செப்டம்பர் 15 அன்று கூடி, பயணத்தின் அனுபவங்கள், மேலும் பயணத்தை செழுமை யாக்குதல் குறித்து விரிவாக விவரித்தனர். ஈரோடு கே.எஸ்.கே. மகாலில், 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.  இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் மோகன், விழுப்புரம் அய்யனார், சென்னை உமாபதி, மேட்டூர் அ. சக்திவேல், கொளத்தூர் பரத், காலாண்டியூர் ஈஸ்வரன், குருவை நாத்திகஜோதி, பவானி வேணுகோபால், திருப்பூர் முத்துலட்சுமி, காவை இளவரசன், சந்தோஷ் குமார், பெரம்பலூர் தாமோதரன் ஆகியோர் பயணத்தில் சந்தித்த ஆதரவையும், மேலும் பயணம் வெற்றி பெறுவதற்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முன் வைத்தனர்.

ஒவ்வொரு குழுவிலும் கலைக் குழுவினர் கட்டாயம் இடம் பெற வேண்டும்; பயணக் குழுவில் பேச்சாளர்களுக்கு பேசும் பொருள் குறித்து முன்கூட்டியே அழைத்து பயிற்சிதர வேண்டும்; ஒவ்வொரு நாளும் பயண அனுபவங்களை திறனாய்வு செய்து குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்; தோழமை அமைப்புகளோடு தொடர்பு கொண்டு நிகழ்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும்; பயணக் குழு வருகை குறித்த விளம்பரங்களை உள்ளூர் தோழர்களே முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்; பயணத்தில் பங்கேற்று உறுதியளித்தவர்கள், கடைசிநேரத்தில் வராமல் தவிர்ப்பதால் பயணக் குழுவின் பணிகள் தடைபடுகிறது. எனவே பயணத்தில் பங்கேற்க உறுதியளித்தவர்கள் பங்கேற்பை தவிர்க்கக் கூடாது. வாய்ப்பில்லாதவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பயணக் குழுவில் பங்கேற்ற அனைவருமே தங்கள் கூச்சத்தைத் தவிர்த்து சுருக்கமாக உரையாற்றுவதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு பேச வேண்டும். பரப்புரையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பிரச்சினைகளை தலைப்பு வாரியாகப் பிரித்துக் கொண்டு தனித் தனியாக தோழர்கள் அந்தத் தலைப்புக்குரிய செய்தி விளக்கங்களை மட்டுமே 5  அல்லது 10 நிமிடங்களில் பேசிட வேண்டும்.

பரப்புரைப் பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தால் அல்லது பேருந்து நிலையப் பகுதிகளாக இருந்தால் பேருந்துகளில் பரப்புரையை நிகழ்த்த வேண்டும். காரணம், பேருந்துக்குள் பல்வேறு கிராமம், ஊர்களைச் சேர்ந்தவர்கள் பயணத்துக்காக அமர்ந்திருப்பார்கள். அவர்கள் பரப்புரைக் குறித்தும் அதில் பேசப்பட்ட கருத்துகள் குறித்தும் அவரவர் ஊர்களில் போய் பேசுவார்கள். சுருக்கமாக ‘நமது மக்களின் உரிமைகளுக்காகவே இதைப் பேசுகிறோம்; காது கொடுத்து கேளுங்கள்’ என்று கூறி, கருத்துகளைக் கூறும்போது மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது; அது நல்ல பயனைத் தருகிறது.

பயணக் குழுவினர் தங்கும் இடம், ஒரே இடமாக இருத்தல் வேண்டும். வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்படுவதால், இரவு பயணம் குறித்த விவாதங்கள் நடத்த முடியாமல் போகிறது. அடுத்த நாள் பயணத்தையும் குறித்த நேரத்தில் தொடங்க முடியாத சூழல் உருவாகி விடுகிறது. உள்ளூரில் தோழமை அமைப்புகளை பங்கேற்கச் செய்வது அவசியம். அவர்கள் அனைவரையும் பேச அனுமதிக்கும்போது சில நேரங்களில் பொதுக் கூட்டமாக மாறி விடுவதோடு, பயணத்தின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட அரசியலையும் அவர்கள் பேசுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு, தவிர்க்க இயலாத சூழலில் சிலரைப் பேச அனுமதிக்கலாம். அப்போது, பயணத்தின் நோக்கங்களைப் பற்றியே பேசுமாறு கேட்டுக் கொள்ளலாம். சில பகுதிகளில் காவல்துறை கெடுபிடி, கொள்கை எதிரிகளின் திட்டமிட்ட எதிர்ப்புகள் வரும்போது, அதைக் கடந்து போய் பயணம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்ற இலக்கு நோக்கிய பார்வையோடு அணுகிட வேண்டும். சமூக வலைதளங்கள் வழியாக இந்த செய்திகளை பரப்பவும் கூடாது. அது பிற பகுதிகளுக்கும் பரவி ஆங்காங்கே எதிர்ப்பாளர்களைத் தூண்டி விடக் கூடும்.

பயணக் குழுவின் பரப்புரைக்கு காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வழியாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு பயணத்துக்கும் உள்ளூர் தோழர்கள்தான் காவல்துறையில் தெரிவித்து அவர்களின் அனுமதியைப் பெற வேண்டும். சில பகுதிகளில் உள்ளூர் தோழர்கள் இந்தப் பணியை செய்யாத நிலையில் பயணக் குழுவினரே காவல்துறையிடம் போய் பயணத்தை எடுத்துக் கூறி அனுமதி பெறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இது பயணக் குழுவினருக்கு பெரும் சுமையாகிவிடுகிறது.

பரப்புரைப் பயணங்களில் பேசும்போது, கழக வெளியீடுகளை கட்டாயம் அறிமுகப்படுத்திப் பேச வேண்டும். துண்டறிக்கைகளின் எழுத்து வடிவம் இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாம். பரப்புரைப் பயணத்துக்கு முன்பு மாவட்டக் கழகக் கூட்டத்தைக் கூட்டி, பயணத்துக்கான ஏற்பாடுளைப் பற்றி திட்டமிட வேண்டும். பயணக் குழு வருகையை சுவரொட்டி அல்லது துணிப் பதாகை வழியாக விளம்பரப்படுத்த வேண்டும். பயணத் திட்டத்தில் மாறுதல்களை செய்து வேறு பகுதிகளுக்கு குழுவினரை அழைத்துச் செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். காலை முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து பயணக் குழுவில் பணியாற்றும் தோழர்கள் இரவில்  சோர்வடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான தங்குமிடம், உணவு ஏற்பாடுகளை ஓரளவு நன்றாகவே செய்து தர வேண்டும். பயணக் குழுவினருக்கு  அந்தப் பகுதிக் கழக  அமைப்புகள் செலவுத் தொகை வழங்க வேண்டும். தங்கள் பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினால் ஆகும் செலவை கருத்தில் கொண்டு இப்படி ஒரு பரப்புரை வந்திருப்பதை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வரவேற்று தோழர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கருத்துகள் தோழர்களால் முன் வைக்கப்பட்டன. நிறைவு விழா மாநாட்டை தோழர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தி முடித்த பெரம்பலூர் துரை. தாமோதரன், அண்மைக்கால பெரம்பலூர் வரலாற்றில் இவ்வளவு பெரிய மாநாடு நடந்தது இல்லை என்று பலரும் தன்னிடம் தெரிவித்ததாகவும், தோழமை அமைப்புகள் மாநாட்டுக்கு மகிழ்வோடு நன்கொடை அளித்து உதவியதையும் கழகத்தின் மீது பொதுவான நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருப்பதை நேரில் அறியும் வாய்ப்பு கிட்டியதையும் சுட்டிக் காட்டினார்.

பரப்புரைப் பயணத்தை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தலாம். நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றும் பல தோழர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

மக்களை சந்தித்து கொள்கைகளைப் பரப்புகிறோம் என்ற மனநிறைவோடு கழகத் தோழர்களிடையே நெருக்கமான உறவு – புரிதலை உருவாக்கி, கழகத்தை இத்தகைய பயணங்கள் மேலும் வலிமையாக்குகிறது என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  தோழர்கள் முன் வைத்த  யோசனைகளை பரிசீலித்து அடுத்த பயணத் திட்டங் களை மேலும் செழுமையாக்குவோம் என்று கூறி தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 27092018 இதழ்

You may also like...