தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது. 20ஆம் தேதி சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. 21ஆம் தேதி குடியாத்தம், திருப்பூர், சங்கரன்கோயில் பயணக் குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. முன்னதாக சென்னை பயணக் குழுவின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஆகஸ்டு 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி சேக்தாவூது தெருவில் அருண்குமார் தலைமையில் சி.இலட்சு மணன் முன்னிலையில் ப. பிரபாகரன் வரவேற்புரையுடன் தொடங்கியது.
கலைஞர் நினைவு அரங்கம் என்று மேடைக்கு பெயர் சூட்டப்ப்டடிருந்தது. கலைஞர் உருவப் படத்தைப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தொடக்க உரையைத் தொடர்ந்து ‘விரட்டு’ கலை பண்பாட்டுக் குழுவினரின் பறை இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. சமூக நீதி காத்த தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் பாடல்கள், கல்வி உரிமைப் பயண நோக்கங்களை விளக்கம் பாடல்களைத் தொடர்ந்து ‘நீட்’ தேர்வின் பாதிப்பு களையும் தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக்காரர்கள் திணிக்கப் படுவதையும் மக்களிடம் உணர்ச்சி பூர்வமாக விளக்கும் நாடகங்களை குழுவினர் நடத்தினர். கலை நிகழ்வுகளை மக்கள் கைதட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது உரையாற்றினார். “ஒரு இயக்கம் உயிர்த் துடிப்போடு இருக்கிறது என்பதற்கு அடையாளம் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதேயாகும். பெரும் எண்ணிக்கை இருந்தால் மட்டும் போதாது. திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து இத்தகைய மக்களை சந்திக்கும் பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. அவ்வப் போது சமுதாயத்துக்கு அவசியமான கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தலில் போட்டியிடுகிற கட்சி அல்ல; சமுதாயத்துக்காக உழைக்கும் இயக்கம். இந்த இயக்கத்தில் உழைக்கும் தோழர்களை உளப்பூர்வமாக பாராட்டுகிறேன். இஸ்லாமியர்கள் கூட இந்த இயக்கத்தை ஏதோ கடவுள் மறுப்பு இயக்கமாக மட்டுமே பார்க்கிறார்கள். இந்தியா விலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்கே இஸ்லாமியர் சமூகப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது என்றால், அது பெரியாரும் அவர் தொடங்கிய திராவிட இயக்கமுமே காரணம் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியரும் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞரை நாம் அரவணைக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே போதும். பார்ப்பனர்கள் அவர் மறைவுக்குப் பிறகும் அவரை மெரினாவில் அடக்கம் செய்யக் கூடாது என்று வெறுப்பைக் காட்டு கிறார்கள். பார்ப்பனரின் இந்த வெறுப்புக் காகவே கலைஞர் நமது நட்புக்கும் அரவணைப்புக்கும் உரிய தலைவராகி விடுகிறார்” என்று கூறி, தொடர்ந்து சங்பரிவார் ஆட்சியில் இஸ்லாமியர் களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறை களையும், வடநாட்டுக்காரர்களை தமிழ் நாட்டுக்குள் வேலைகளில் திணிப்பதையும் கண்டித்துப் பேசினார்.
இறுதியாக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து பெரியார் இயக்கம் நடத்திய போராட்டம், காமராசரின் சமூகநீதித் திட்டங்கள், கலைஞரின் சமூகநீதி திராவிட இயக்கக் கொள்கைகளை செயல்படுத்துவதில் காட்டிய உறுதி, நடுவண் ஆட்சியின் மக்கள் விரோதக் கல்விக் கொள்கைகளை விளக்கிப் பேசினார்.
பெரியார் முழக்கம் 23082018 இதழ்