ரிசர்வ் வங்கி ஒப்புதல் : பண மதிப்பு நீக்கம் படுதோல்வி?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016, நவடம்பர் 8ஆம் நாள் நள்ளிரவு பிரதமர் மோடி அறிவித்தவுடன் இந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கத்திலிருந்த மதிப்பான ரூ.15.44 இலட்சம் கோடியில் கறுப்புப்பணம் முடங்கிவிடும்; புரட்சிகர அறிவிப்பு என்றெல்லாம் கூறப்பட்டது. வேடிக்கை என்ன வென்றால் இதில் 99.3 சதவீதம் (ரூ.15.28 இலட்சம் கோடி) அப்படியே வங்கிக்கு திருப்பி மாற்றப்பட்டுவிட்டன என்று இப்போது ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. திரும்பி வராமல் முடங்கியது 0.71 சதவீதமான 10 ஆயிரம் கோடிதான். இந்த 10 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை முடக்க, ரூ.2.25 இலட்சம் கோடி மதிப்பு மிக்க உள்நாட்டு உற்பத்திகளும், வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன. தங்கள் சேமிப்புத் தொகையை அன்றாட செலவுக்கு வங்கியிலிருந்து எடுப்பதற்காக நாடு முழுதும் மக்கள் கியூ வரிசையில் நின்று அதில் 100 பேர் உயிரிழந்தனர். ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டதோடு 1000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டதால் பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் இன்று வரை திணறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து ஆராய்ந்த நாடாளுமன்றக் குழு அறிக்கையை வெளி வரவிடாமல் மத்திய அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது. ஏன் அதைத் தடுக்க வேண்டும்? வெளி வந்துவிட்டால் அரசு முகத்திரை கிழிந்து தொங் கும் என்ற அச்சம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம்ராஜன் ஆதரிக்கவில்லை. அதற்காகவே அவர் பதவி ஓய்வு பெறும் காலம் வரை மோடி காத்திருந்தார்.
இப்போது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது ரகுராம் ராஜன் உருவாக்கிய மோசமான நிதிக் கொள்கைதான் என்று குற்றம்சாட்டக் கிளம்பியிருக்கிறார்கள். திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பை உருவாக்கியது மோடி ஆட்சி. அதன் துணைத் தலைவரான ராஜிவ் குமார், ரகுராம்ராஜன் பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் பொருளாதார வளர்ச்சியை தேக்கமடைய வைத்தார் என்று குற்றம்சாட்டி யுள்ளார். ஆக பொருளாதார வளர்ச்சி முடங்கி நிற்கிறது என்பதை ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி பட்டை நாமம் போடும் தொழிலதிபர்களைக் குற்றம் சொல்ல முடியாது என்றும், வங்கிகளுக்கு கடன் திரும்பி வராததற்குக் காரணம் ரகுராம் ராஜன் உருவாக்கிய வங்கிகளுக்கான கொள்கைகள்தான் என்கிறார் நிதி அயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ஒரு அதிகாரி, நாட்டின் பொருளாதாரத்தையே தீர்மானிக்க முடியும் என்றால், நிதி அமைச்சர், நிதி அமைச்சகம் எல்லாம் எதற்கு?
ஆட்சிக்கென்று கொள்கை ஏதும் கிடையாதா?
நாட்டின் பொருளாதாரத் தேக்கத்துக்குக் காரணம், ‘ஆட்சியல்ல; ஆண்டவன் அப்படி சோதிக்கிறான்’ என்று, எதிர்காலத்தில் இவர்கள் பேசினாலும் வியப்பதற்கில்லை!
பெரியார் முழக்கம் 06092018 இதழ்