சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (3) இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

குடும்ப வாரிசுரிமை சட்டத்தில் பெண் களுக்கு பங்கு உண்டு என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாகக் கொண்டு வந்தது கலைஞர் ஆட்சி தான் என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

(சென்ற இதழ் தொடர்ச்சி)

கலைஞரின் சிந்தனையில் இந்த சட்டத்தைக் கொண்டு வரத் தூண்டுதலைத் தந்தது. 1929இல் செங்கல்பட்டில் பெரியார் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் சட்டத்தை நிறைவேற்றி விட்டு கலைஞர் சொன்னார், செங்கல்பட்டு மாநாடு முடிந்து 60 ஆண்டு கழித்தல்லவா, இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்ற முடிந்திருக் கிறது!” என்றார். பின்னர் நாடு முழுதும் இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டதற்குக்கூட தூண்டுகோலாக இருந்தது, அன்றைய நடுவண் ஆட்சியில் தி.மு.க.வின் பங்கேற்பு தான். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களை முதன் முதலாக காவலர் பணிக்குத் தேர்வு செய்தது என்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பெருமை கலைஞரின் நிர்வாகத் திறனுக்கு சான்றாகும். நாடாளுமன்றத்தில் பெண் களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் நாட்டில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர்.

ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு நிதி உதவி, தாலி வழங்கும் திட்டத்தைக் கலைஞர் கொண்டு வந்தபோது இந்த உதவியைப் பெற பெண்கள் எட்டாவது வரை படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அதில் இணைத்துக் கொண்டார். இத்திருமண உதவிகளைப் பெறுவதற்காவது பெண்களை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்படு வார்களே என்ற சிந்தனையில்தான், இப்படி ஒரு முடிவை எடுத்ததாகக் கூறினார். அரசின் திருமண உதவித் திட்டத்தை பெண் கல்வியோடு இணைத்தது, கலைஞரின் நிர்வாகத் திறன்.

சத்துணவுத் திட்டம் குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டம் போன்ற திட்டங் களை மக்களைக் கவர்வதற்கான திட்டங்கள், வளர்ச்சியை நோக்கிய திட்டங்கள் அல்ல என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதை அழுத்தமாக மறுக்கிறார் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன். 1996இல் ஆட்சிக்கு வந்த கலைஞர், ஒரு கிலோ அரிசி ரூ.2 என்ற திட்டத்தை பதவி ஏற்ற நாளிலேயே அறிவித்தார். இதன் சமூகத் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று கூறும் பேராசிரியர் ஜெயரஞ்சன், பசியிலிருந்து மக்களை விடுவிப்பது சமூக விடுதலையின் ஒரு பகுதி என்பது மட்டுமல்ல. “ஆண்டைகளை நம்பி தொழிலாளர்கள் வயிறு வளர்க்கும் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திட்டம்” என்று சுட்டிக் காட்டுகிறார். உணவுக்காகவே உழைக்க வேண்டியிருந்த ஏழை மக்களை அதிலிருந்து விடுவித்து அவர்களை வேறு புதிய பணிகளில் திரும்ப வைத்தது இத்திட்டம்.

இந்திய உணவுக் கழகத்துக்கு இணையாக தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கியவர் கலைஞர். இந்திய உணவுக் கழகம், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்து மாநிலங்களுக்கு பங்கீடு செய்யும் அதிகாரத்தை வைத்திருந்தது. அந்தப் பங்கீட்டில் அரசியல் தலை தூக்கியது. தமிழகத்தில் வறட்சிக் காலத்தில் கூடுதல் நெல் கேட்டபோது நடுவண் ஆட்சி தர மறுத்த நிலையில் மாநிலமே ஏன் நேரடி கொள்முதல் செய்து கிடங்குகளை உருவாக்கி சேமிக்கக் கூடாது என்று கலைஞர் சிந்தனையில் உதித்த திட்டம் தான் தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகம். உணவு வழங்கலில் டெல்லியின் அதிகாரத்தைத் தகர்த்த மிகச் சிறந்த திட்டம் என்கிறார், பேராசிரியா ஜெயரஞ்சன்.

நிர்வாகத்தில் கோப்புகள் பல்வேறு நிலைகளைக் கடந்து துறை செயலாளர் பார்வைக்கு வந்து இறுதியில் துறை அமைச்சருக்கு வந்து சேர்வதற்குள் எடுத்துக் கொள்ளும் காலம் நீண்டது. இந்தக் கோப்பு தாமதங்களை நீக்கி நிர்வாகத்தை முடுக்கிவிட கலைஞர் சனி, ஞாயிறு விடுமுறை நாட் களிலும் தலைமைச் செயலகத்துக்கு வரும் நடைமுறையை மேற்கொண்டார். இதனால் துறை சார்ந்த அதிகாரிகளும் தலைமைச் செயலகம் வரும் கட்டாயம் உருவானது; நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது.

வார இறுதி நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அந்தந்த மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து அதிகாரிகளுடன் பேசுவதை வழக்கமாக்கினார். அந்த செயல்பாடுகளின் விளைவுகளை – அதிகார மட்டத்தையும் கடந்து தனக்குள்ள தனிப்பட்ட உறவுகளிடம் விசாரித்து அறிவார். 1996ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக வந்தபோது நிர்வாகத்தில் ஒரு புதிய நடைமுறையை பின்பற்றத் தொடங் கினார். அரசின் திட்டங்கள் செயலாக் கத்தைக் கண்காணிக்க முதல்வர் அலுவலகத் திலிருந்தே அய்.ஏ.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்து அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தார். கலைஞரால் நியமிக்கப்படும் அதிகாரிகள் குழு அதைக் கண்காணிக்கும் அதிகாரிகள் டி.ஆர். ராமசாமி, அசோக் வர்த்தன் ஷெட்டி, இறை அன்பு ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக் குழுவை 2016இல் உருவாக்கினார். பல்வேறு துறைகளைப் பகுத்து, துறைசார் செயல்பாடுகளின் திட்டங்களை தொடக்க நிலை பரிசீலனைக்கு உட்படுத்தி, அதன் தொடர் நிக்ழவுகளைக் கண்காணிப்பது குழுவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. திட்டங்களை உருவாக்கி ஆணைகள் பிறப்பித்து இறுதிக் கட்டத்தில் முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு முறை அதிகாரத்துக்கு வரும்போதும் இத்தகைய நிர்வாகத் திறன் கொண்ட குழுவை உருவாக்கி செயல்பட்டார் கலைஞர். குறிப்பாக 1996-2001 காலகட்டத்தில் கலைஞரின் ஆட்சித் திறன் மிகச் சிறப்பான ஒன்றாக பாராட்டப்படுகிறது. மிகச் சிறந்த விளைவுகளை இந்த நிர்வாகத் திறன் உருவாக்கியது மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. இராதாகிருட்டிணன், ‘பிரண்ட் லைன்’ ஆங்கில ஏட்டில் (ஆக.31, 2016) இத்தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

கலைஞரோடு ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்குள்ள தொடர்பை அவரது மரணத்துக்குப் பிறகு ஏராளமானோர் குறிப்பிடுகிறார்கள். இப்படி அவரது தொடர்பு – உறவுகளின் எல்லைப் பரந்து விரிந்து கிடப்பதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார். பெரும்பாலான நாட்களில் விடியற்காலை 4 மணிக்கே விழிக்கும் பழக்கம் கொண்ட அவர், முதலில் எழுத்துப் பணிகளை முடித்து விடுவார்; பிறகு செய்தி ஏடுகள் அனைத்தையும் படிப்பார். அன்றைய ஏடுகளில் வந்த செய்திகள் தொடர்பாக தொடர்புடையவர்களிடம் உடனே நேரடியாக தொடர்புக் கொண்டு பேசி விடுவார். அன்றே முடிக்கப்பட வேண்டிய பணிகளை பலரிடம் பேசிய பிறகு முடித்து விடுவார். மக்கள் வழக்கமாக உறக்கத்திலிருந்து விழிக்கும் நேரத்துக்கு முன்பே கலைஞரின் இந்தப் பணிகள் முடிந்து விடும்.

தமிழ்நாட்டில்  தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்கள் பிரச்சினைகளை கலைஞர் எப்படி அணுகினார் என்ற தகவலை மூத்த செய்தியாளர் இராதாகிருஷ்ணன் அதே கட்டுரையில் குறிப்பிடுகிறார். 2006ஆம் ஆண்டு முதல்வராக வந்தவுடன் தொழில் துறை செயலாளராக இருந்த எம்.எச். ஃபரூக்கியை அழைத்து முதலீட்டாளர்கள் பிரச்சினையை அவர் மட்டுமே கையாள வேண்டும் என்று அறிவுறுத்தினார். துறை செயலாளர் பரிந்துரையை மேல் மட்டக் குழுவில் விவாதித்து தொடங்கப்படவிருக்கும் தொழிலுக்கு ஒப்புதல் பெற்றுவிட்டால், காலதாமதமின்றி அதற்கான அனுமதியை வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தி யிருந்தார். முதலீட்டாளர்கள் துறைச் செய லாளரைத் தவிர வேறு அதிகாரிகளையோ அமைச்சர்களையோ சந்திப்பதற்கு முழுமையாக கலைஞர் தடை விதித்தார். இத்தகைய சந்திப்புகள் இலஞ்ச ஊழலுக்கு வழி வகுத்து விடும் என்ற நோக்கத்தோடு கலைஞர் எடுத்த முடிவு இது.

2006ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மேலும் விரிவாக்கவும் தொடர் புடைய பல துணைத் தொழில்களை உருவாக்கவும் தூத்துக்குடியை பெரும் தொழில் நகரமாகவும் மாற்றும் திட்டங்களோடு தொழில்துறை செயலாளர் ஃபரூக்கியை சந்தித்துப் பேசியது. உற்சாகமடைந்த தொழில்துறை செயலாளர் மிகவும் ஆர்வத்தோடு முதல்வர் கலைஞரை சந்தித்து எடுத்துக் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட கலைஞர், ‘பார்க்கலாம்’ என்ற ஒரே வரியில் முடித்துக் கொண்டார். அவ்வளவு தான். ‘ஸ்டெர்லைட்’ விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது வரலாறு.

1900இல் உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவில் நுழைந்தவுடன் தனியார் பன்னாட்டு நிறுவன முதலீடுகள் வரத் தொடங்கியதோடு, உயர் கல்வியும் தனியார் மயமானது. சூழ்நிலையைப் புரிந்து கொண்டார் கலைஞர். தகவல் தொழில் நுட்பத் துறையில் ஒரு புரட்சி நடக்கப் போகிறது. அதற்கேற்ப தமிழ்நாட்டை தயார்படுத்தத் திட்டமிட்டார். 1997இல் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கைகளை உருவாக்கி அறிவித்தார். இந்தியாவிலேயே இத்துறைக்கான கொள்கைகைய உருவாக்கி அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. அதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையே வெளியிடப்பட்டது. கலைஞர் உருவாக்கிய கொள்கையினால்தான் ‘டைடல் பார்க்’ சென்னைக்கு வந்தது. அந்த பூங்காவில் இருந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான உயர்கல்வித் துறையும் முடுக்கி விட்டார் கலைஞர். 1999இல் அவர் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு குறிப்பிடப்பட வேண்டியதாகும். இணைய உலகில் தமிழ் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது இந்த மாநாடு.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 27092018 இதழ்

You may also like...