11. பனியா சூழ்ச்சி பலிக்குமா?
நாட்டிலே அரசியல் உலகில் காந்தீயத்தைப்பற்றிய பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. காந்தீயத்தை வளர்த்து வந்த காங்கிரஸ் தளகர்த்தர்களான படேல் கம்பெனியாரின் ஆதிக்கம் என்று காங்கிரசிலே வீழ்ச்சியடைந்தோ? என்று செல்லாக்காசு ஆகக்கருதப்பட்டதோ அன்றே காந்தீயத்துக்கு சாவுமணியடித்து விட்டதென்று சொல்லலாம். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலே இக்குட்டை வெளிப்படுத்தி விட்டது. தோழர் போஸின் வெற்றி தமது தோல்வி என்று தோழர் காந்தியாரே தமது பத்திரிகையாகிய ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். எப்பொழுது அவர் பட்டாபி தோல்வி தமது தோல்வி என்று சொல்லியபின்னும் காந்தீயம் ஒழியவில்லை என்று சொல்லப்படுமானால் அறிவுள்ளவர்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? இதற்கு ஷாஹாபாத் அரசியல் மாநாட்டில் ஒரு அபேதவாதத் தோழர் பேசுகையில் மகாத்மா காந்தியின் வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லையென்றும் காங்கரசின் காந்தீய வேலைத்திட்டத்தினால் வகுப்புப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிறதென்றும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவ்வளவு பச்சையாக, பகிரங்கமாக காந்தீயத்தைக் கண்டித்ததை காந்தி பெயரால் செல்வாக்குப் பெற்று, காந்தியின்...