அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி
பிறப்பும் கல்வியும் : 1920ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10ஆம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணி யம்மையின் இயற் பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா பத்மாவதி. காந்திமதி வேலூர், கொசப் பேட்டை அரசுப் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார்.
மே 15, 1943ஆம் ஆண்டில் கனகசபை இறந்துவிட, எவ்வித வைதிகச் சடங்குகளும் இன்றி, தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து இறுதிக் காரியங்கள் நடத்தினார் கனகசபையின் நண்பரான அண்ணல் தங்கோ. (தனித்தமிழ்ப் பற்றாளரான அண்ணல் தங்கோ அவர்கள்தான் காந்திமதி என்னும் பெயரைத் தமிழ்ப் பெயராகவும், காந்திமதியின் அரசியல் ஈடுபாடு கருதியும் க.அரசியல்மணி என மாற்றி அமைத்தவர் ஆவார்.) அந்த நிகழ்ச்சிக்குப் பெரியாரும் வந்திருந்தார். அதன்பின்,1943 ஜூலை மாதத்தில் முழுநேரப் பணியாளராக பெரியாரிடம் வந்துசேர்ந்தார். பெரியார் அவரை, குலசேகரன்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பில் சேர்த்தார். தேர்வு எழுத மதுரை சென்றபோது அவருடைய உறவினர் ஒருவரை வழியில் சந்திக்க நேர்ந்தது, உடனே அவர் காந்திமதி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாக நினைத்து அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்றனர். அங்கு காவலர்களிடம், தான் தேர்வுக்கு செல்வதாக கூறி,தனது தேர்வுக்கான நுழைவுச் சீட்டைக் காட்டிப் புரிய வைப்பதற்குள் தேர்வு எழுதும் நேரமே முடிந்துவிட்டது. இவ்வாறு புலவர் கல்லூரி படிப்பை முடித்து பின் முழுநேர இயக்கச் செயல்பாட்டாளராக பெரியாருடன் பயணிக்க ஆரம்பித்தார்.
பெரியாரின் உற்ற உதவியாளர் : மணியம்மையார் பெரியாரின் உடல்நிலையின்மீது எப்போதும் கவனத்தோடு இருப்பார். மருத்துவரின் ஆலோசனைபடியே உணவுகளை வழங்குவார். பெரியாரின் நண்பர்கள், தொண்டர்கள் ஆசையோடு அவருக்குச் சாப்பிடக் கொடுத்தாலும், கண்டிப்போடு தவிர்க்க வைத்துவிடுவார். ஒருமுறை, மணியம்மைக்குத் தெரியாமல் பெரியாருக்கு, பிரியாணியை அவர் நண்பர் தந்துவிட, உடலுக்கு என்னவாகுமோ என்று பதறிப் போனார். இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வதைப்போல, பெரியாரைக் கவனித்துக்கொண்டார். பெரியாரும் மணியம்மையாரை அம்மா என்றே அழைத்தார்.
ஒருமுறை பெரியார், இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், இந்த அம்மாவால் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான் என்று மணியம்மையாரைப் பற்றிச் சொல்கிறார் என்றால், மணியம்மையாரின் பணி எவ்வளவு அர்ப்பணிப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும்.
பெரியார் அவ்வப்போது தனது கிண்டலால் அம்மாவையும், சுற்றி இருப்பவர்களையும் நகைக்க வைத்தது உண்டு. கடினமான போராட்ட வாழ்க்கையிலும், தொண்டு மற்றும் தியாக வாழ்க்கையிலும் பயணிப்பவர்களுக்கும் இதழ் ஓரங்களில் மெல்லிய புன்னகைப் பூக்க செய்யும் நிகழ்வுகள் பல இருக்கும் தானே.
அவற்றில் ஒன்று: ஒரு சமயம் திருச்சியில் பெரியார் மாளிகையில் அய்யாவும், அம்மாவும் தங்கியிருந்தார்கள். அப்போது பணியாளர் பித்தளை, வெண்கலப் பாத்திரங்களை உருட்டிச் சத்தம் ஏற்படச் செய்தார். அம்மாவிற்குக் கோபம் வந்துவிட்டது. என்ன சத்தம் அங்கே என்று உரக்கக் கேட்டார்.
அப்போது பெரியார் அம்மாவின் சத்தத்தைக் கேட்டு, “அம்மா அவர்களே! பாத்திரத்தின் சப்தத்தை விடத் தங்களுடைய சப்தமே பெரிதாக இருக்கிறது” என்று தனக்குரிய பாணியில் நக்கல் தொனிக்கச் சொல்ல, கூடியிருந்த பிள்ளைகள் எல்லாம் குதூகலமடைந்து நகைத்தார்களாம்.
மிகவும் மகிழ்ச்சியாகவும் பிறரின் நலத்தில் அக்கறை கொண்டும் தனது இயக்க வாழ்க்கையைக் கொண்டு சென்றவர் மணியம்மையார்.
மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி.
“பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு.
ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும், காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?
பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும், வெட்டிவேர் முதலிய மணப் பொருள்களாலும் அழகு பெறக்கட்டிய மாலைகளை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில்
தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள். ஒரே ஒரு மாலையை
என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது
சொன்னதில்லை.
எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை. “- (குயில் இதழ், 10.04.1960)
மணியம்மையார் அவர்கள் பிறந்தது 10.03.1920. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்தது 29.04.1891. தன்னை விட 29 வயது சிறிய பெண்மணியை, அன்னை என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது ? எனக் குறிப்பிடுகிறார் என்றால் அம்மையாரின் அர்ப்பணிப்புக்கு ஈடு இணை இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.
அம்மையார் மறைவு : பெரியாரை 95 வயது வரை பாதுகாத்தவர் தனது உடல்நிலையைக் கவனிக்காமல் இருந்ததால் 58 வயதிலேயே காலமானார்.
1978 மார்ச் 16 ம் நாள் அன்று காலையில் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தோழர்களிடம் கூறினார். உடனே, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அய்யா மறைந்த போது ஏற்பட்ட அதே துக்கத்திற்கு கழகத் தோழர்கள் ஆளாயினர்.
அம்மையாரைப் பற்றிப் படிக்கும் போது மற்ற திராவிட இயக்கத் தலைவர்களை போன்று 90 வயதை கடந்து வாழ்ந்து இருந்தால் எங்கள் தலைமுறையும் அம்மையாரின் வீர செயல்களை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றிருக்கும் என்ற சிறிய ஏக்கம் கட்டாயம் அனைவருக்கும் ஏற்படும்.
பெரியார் முழக்கம் 09032023 இதழ்