6. பிராமணர் திராவிடரா?

வேலூரில் நடைபெற்ற தமிழர் மாநில மாநாட்டில் தலைமை வகித்த ஸர்.எ.டி.பன்னீர் செல்வம் பிராமணர் தமிழரா? என்ற பிரச்சினையைக் கிளப்பியது முதல் அதுபற்றிப் பலர் பலவிதமாகப் பத்திரிகைகளில் எழுதியும் பொது மேடைகளில் பேசியும் வருகிறார்கள். ஆரியர்? திராவிடர் தகராறை இப்பொழுது கிளப்புவது அனாவசியமென்றும் திராவிடர்களுக்குள் ஆரியர்  இரத்தமும் ஆரியருக்குள் திராவிட இரத்தமும் வெகு நாட்களுக்கு முன்னமேயே கலந்து விட்டதென்றும், சுத்த ஆரியரோ சுத்த திராவிடரோ இப்பொழுது இல்லையென்றும், இப்பொழுது ஆரியர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் திராவிடர்களே என்றும், திராவிடர் என்று சொல்லிக்கொள்வோரில் பெரும்பாலோர் ஆரியரே என்றும் ஒரு ஆந்திர ஜமீன்தார் ஜனவரி 13-ந்தேதி ஹிந்துப் பத்திரிகையில் எழுதி அதற்கு ஆதாரமாக சில ஆங்கில நூல்களிலிருந்து மேற்கோள்களும் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆரியர்க்குள் திராவிட இரத்தமும் திராவிடர்க்குள் ஆரிய இரத்தமும் வெகு நாட்களுக்கு முன்னமேயே கலந்திருப்பது உண்மையே. சுத்த ஆரியரோ சுத்த திராவிடரோ இப்பொழுது இல்லை என்பது மெய்யே.

திராவிடர்களுக்குள் ஆரிய இரத்தமும், ஆரியருக்குள் திராவிட ரத்தமும் வெகு காலத்துக்கு முன்னமேயே கலந்திருந்தாலும் இன்று ஒரு கூட்டத்தார், தாம் ஆரிய பார்ப்பனர் என்று சொல்லிக்கொண்டும் தாம் ஏனையோரை விட மேல்ஜாதியார் எனக் கூறிக்கொண்டும் தனித்து வாழ்ந்து வருகிறார்களா இல்லையா என்பதே கேள்வி அவ்வாறு வாழ்ந்து வரும் ஆரியப் பார்ப்பனர் தமிழர்களுக்கு இப்பொழுதும் இன்னல் விளைவிக்கத் தொடங்கியிருப்பதினாலேயே அவர்கள் தமிழரா என்ற பிரச்சினையை ஸர்.எ.டி.பன்னீர்செல்வம் கிளப்பினார் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசிய தோழர் மயிலை ஸ்ரீநிவாசய்யங்கார் எல்லாரும் ஆரியரானால் நானும் ஆரியனே; எல்லாரும் திராவிடரானால் நானும் திராவிடனே எனக் கூறினாராம். ராஜபாளையம் மகாநாட்டைத் திறந்துவைத்த கனம் ராஜகோபாலாச்சாரியரும் அநேகமாக அவ்வாறே பேசினாராம். ஆரியப்பார்ப்பனர்கள் தமிழர் என உரிமை பாராட்ட விரும்பினால் தாராளமாக உரிமை பாராட்டிக் கொள்ளட்டும். நாம் ஆட்சேபிக்கவில்லை. அவ்வாறு உரிமை பாராட்டுவோர் தமிழர்களுடன் ஐக்கியப்பட்டு சகோதர உணர்ச்சியுடன் நடந்துகொள்ளவேண்டும். கிரியாம்சையில் ஆரியர் ? திராவிடர் என்ற வேற்றுமையோ, பார்ப்பனர் ? பார்ப்பனரல்லாதார் என்ற வேற்றுமையோ காட்டக்கூடாது. திருச்சியில் கூடிய ஒரு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கூட்டத்திலே பிறப்பினால் உயர்வு தாழ்வர் வர கிடையாது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அப்பொழுது தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி மெம்பர்களாக இருந்த சில பார்ப்பனர் தம் பதவியை ராஜிநாமாச் செய்யக்காரணமென்ன? சேரன் மாதேவிக் குருகுலத்திலே பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் சமபந்தியில் உண்ணவேண்டுமென பார்ப்பனரல்லாதார் கூறியபோது பார்ப்பனத் தலைவர்கள் எதிர்க்கக் காரணமென்ன? இப்பொழுதாவது பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லையென்ற கொள்கையை காங்கிரஸ் ஒப்புக்கொண்டிருக்கிறதா? பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லையென திருச்சி காங்கரஸ் கமிட்டிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய காரணத்திற்காக தமது மெம்பர் பதவியை ராஜிநாமாச் செய்தவர்கள் இன்று மந்திரிகளாக இருக்கவில்லையா? இப்பொழுதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழர் கொள்கையை அவர்கள் ஆதரிக்கிறார்களா? பிராமணர் தமிழரா என ஸர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கேட்டதற்காக மட்டும் நாங்களும் தமிழர்களே என பிராமணர்கள் சொன்னால் போதாது. பிராமணர்கள் மெய்யாகவே தமிழர்களானால் தென்னிந்திய சிவாலயங்களில் முதலில் வேத பாராயணம் செய்ய வேண்டுமென்றும் அப்புறம் தான் தேவாரம் ஓதவேண்டுமென்றும் பிடிவாதம் செய்வதேன்? பிராமணர் தமிழர்களானால் சைவர்கள் மகாநாட்டில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? பிராமணர் தமிழர்களானால் அறுபத்தி மூன்று நாயன்மாரையும் பட்டினத்தார் தாயுமானவர், இராமலிங்கசாமிகள் முதலிய பெரியார்களையும் ஏன் வணங்கவில்லை; சைவசமயாச்சாரியார்களை ஏன் கும்பிடவில்லை? பிராமணர் தமிழரானால்? திராவிடரானால் பிராமண ஹோட்டல்களில் தமிழர்கள் எல்லாம் வேற்றுமையின்றி ஒன்றாக இருந்து சிற்றுண்டி யருந்தும் போது பிராமணர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்? பிராமணர் தமிழரானால் தமிழ் நூல்களன்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்கவேண்டும்! வேதத்தை பிராமணர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்? பிராமணர் தமிழரானால் சமஸ்கிருததுக்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்? தமிழ் நூல்கள் எல்லாம் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டவைகளே எனப் புனைந்து கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால் அவர்கட்கு மட்டும் தனி சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்திருப்பதேன்? அப்பள்ளிக் கூடங்களில் தமிழர்கட்கு அனுமதியளியாததேன்? வேதமோத தமிழர்க்கு உரிமையில்லையெனக் கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால் சமஸ்கிருத மந்திரஞ் சொல்லி கலியாண இழவுச் சடங்குகள் நடத்துவதேன்? பிராமணர் தமிழரானால் தமிழர் அநுஷ்டிக்காத பலவகைப்பட்ட நோன்புகளையும் சடங்குகளையும் பிராமணர் மட்டும் அநுஷ்டிப்பதேன்? இப்பொழுதும் தமிழர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வருவதேன்? தமிழர் பார்த்தால் திருஷ்டி தோஷம் எனக்கூறி பிராமணன் மறைவிடங்களில் உண்பதேன்? இவ்வண்ணம் கிரியாம்சையில் தாம் அன்னியர் என்று காட்டிக்கொள்ளும் ஒரு கூட்டத்தார் வாய்ப்பேச்சளவில் மட்டும் நாமும் தமிழர் எனக்கூறினால் யாராவது லட்சியம் செய்வார்களா? பிராமணர் மெய்யாகவே தமிழர்களானால் நடை உடை பாவனைகளில் அவர்கள் தமிழர் ஆகவேண்டும். முதலில் பூணுhலை அறுத்தெறிய வேண்டும். எல்லாத் துறைகளிலும் தமிழர்களைப் போல் நடக்கவேண்டும். தமிழ் நூல்களையே தமது முதல் நூல்களாகக் கொள்ளவேண்டும். தமிழே தமது குலமொழி கோத்திரமொழி யென ஒப்புக்கொள்ள வேண்டும். ஸ்மஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்தது என்ற தப்பெண்ணத்தை விடவேண்டும். நடை உடை பாவனைகளால் பழக்க வழக்கங்களால் மதாச்சாரங்களால் அந்நியர் எனக்காட்டிக்கொள்ளும் பிராமணர் விவாதத்துக்காக மட்டும் தமிழர் எனக் கூறிக் கொள்வது சுத்த அசட்டுத்தனமாகும்.

குடிஅரசு, தலையங்கம் – 22.1.1939

You may also like...