மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா கலாம் என்று திராவிட மாடல் அரசு கொண்டு வந்த சமூக புரட்சித் திட்டத்தில் மாபெரும் ஓட்டையைப் போட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் திருவரங்கம் குமர வயலூர் கோயிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களான எஸ்.பிரபு, எஸ்.ஜெயபால் ஆகியோரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
அதற்கு அவர் கூறுகிற காரணம், “இந்தக் கோயில் காமிகா ஆகமத்தின் கீழ் வருகிறது. இந்தப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அந்த ஆகமக் கோயிலில் பூஜை செய்ய முடியாது. ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர்கள் மட்டும் தான் இங்கு பூஜை செய்ய உரிமை உண்டு” என்று அவர் கூறியிருக்கிறார்.
பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் தங்களை ‘அகஸ்தியர் குலம்’ என்று கூறியபோது அதற்கு சான்று கேட்டார் நீதிபதி. காமிகா ஆகமபடி ஆதி சிவாச்சாரியார்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் சிவாச்சாரியார் குலம் என்பதற்கு சான்று கேட்டீர்களா என்று வழக்கறிஞர் கேட்ட போது நீதிபதியிடம் பதில் இல்லை.
வழக்கைத் தொடுத்தவர்கள் ஏற்கனவே இதே கோயிலில் அர்ச்சகர்களாகப் பணி யாற்றி வந்த கார்த்திக், பரமேஸ்வரன் என்ற இரண்டு பார்ப்பனர்கள். அவர்களுடைய மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசித்திரமான கருத்துக்களைக் கூறியிருக் கிறார்.
“ஏற்கனவே ஆகமம் விதிக்கும் சில மரபுப்படி பார்ப்பன அர்ச்சகர்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் அற நிலையத் துறையால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பார்ப்பனரல்லாத அர்ச்ச கர்கள் அறநிலையத் துறையால் நியமிக்கப் பட்டவர்கள். ஏற்கனவே அர்ச்சகர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிற இந்தப் பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்ய ‘தகுதி’ படைத்தக் குலத்தில் பிறந்ததினால் மட்டும் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். முறையாக ஆகமங்களைக் கற்றுத் தெரிந்திருக்கிறார்களா என்பதற்கு எந்த சோதனையும் நடத்தப்பட வில்லை. எந்தத் தேர்வையும் அவர்கள் எழுதவில்லை. அந்த குலத்தில் பிறந்தாலே போதும் அவர்கள் ஆகமங்கள் தெரிந்தவர்கள் தான்” என்ற அடிப்படையில் நீதிபதியின் தீர்ப்பு வந்திருக்கிறது.
இது பச்சை வர்ணாசிரமப் பார்வை யிலான ஒரு தீர்ப்பாகும்.
அதோடு மட்டுமல்லாமல் ஊதியமின்றி பல கோயில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தீர்ப்பு புகழாரம் சூட்டுகிறது. அவர்கள் அறங் காவலர்களால் நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
பழக்க வழக்கம், கலாச்சாரம், பாரம்பரிய மரபு இவைகளின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்கின்ற முறை தொடர்ந்து நீடிக்கலாம். இதில் ஆட்சி யாளர்கள் குறுக்கிட முடியாது என்ற கண்ணோட்டத்தில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்த தீர்ப்பின் வழியாக பல ஆகமக் கோயில்களில் நியமிக்கப்பட்ட பார்ப்பன ரல்லாத அர்ச்சகர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வழக்கை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும், சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பவர்களின் கோரிக்கை ஆகும்.
பெரியார் முழக்கம் 09032023 இதழ்