11. பனியா சூழ்ச்சி பலிக்குமா?

நாட்டிலே அரசியல் உலகில் காந்தீயத்தைப்பற்றிய பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. காந்தீயத்தை வளர்த்து வந்த காங்கிரஸ் தளகர்த்தர்களான படேல் கம்பெனியாரின் ஆதிக்கம் என்று காங்கிரசிலே வீழ்ச்சியடைந்தோ? என்று செல்லாக்காசு ஆகக்கருதப்பட்டதோ அன்றே காந்தீயத்துக்கு சாவுமணியடித்து விட்டதென்று சொல்லலாம். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலே இக்குட்டை வெளிப்படுத்தி விட்டது. தோழர் போஸின் வெற்றி தமது தோல்வி என்று தோழர் காந்தியாரே தமது பத்திரிகையாகிய ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். எப்பொழுது அவர் பட்டாபி தோல்வி தமது தோல்வி என்று சொல்லியபின்னும் காந்தீயம் ஒழியவில்லை என்று சொல்லப்படுமானால் அறிவுள்ளவர்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? இதற்கு ஷாஹாபாத் அரசியல் மாநாட்டில் ஒரு அபேதவாதத் தோழர் பேசுகையில் மகாத்மா காந்தியின் வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லையென்றும் காங்கரசின் காந்தீய வேலைத்திட்டத்தினால் வகுப்புப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிறதென்றும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவ்வளவு பச்சையாக, பகிரங்கமாக காந்தீயத்தைக் கண்டித்ததை காந்தி பெயரால் செல்வாக்குப் பெற்று, காந்தியின் பெயரால் பதவி வகித்து வருபவர்கள் வாளா கிடப்பார்களா? உலகந்தான் அவர்களைக் கண்டு நகைக்காதா? அதனால் மறுநாள் ³ மாகாநாட்டில் பீஹார் நிதி மந்திரி தோழர் அனுக்ரஹ நாராயண சின்ஹா நாட்டுக்கு இன்னும் சீக்கிரமாக விடுதலை பெற அபேதவாதிகளிடம் ஏதாவது வேலைத்திட்டமிருந்தால் தாராளமாக அதை நிறைவேற்றட்டுமே! யார் அதைத் தடுக்கிறார்கள்? அவர்கள் பிச்சாரஞ் செய்து, ஜனங்கங்களைத் தங்கள் பக்கமாகத் திருப்பட்டுமே. காங்கிரசைவிட்டு வெளியே போய், தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பதுதான் யோக்கியப் பொறுப்பு. அதை விட்டுவிட்டு காங்கிரசிலிருந்துகொண்டே அதற்கு குழி தோண்டிக் கொண்டிருப்பதும், அதன் கொள்கைகளுக்கு விரோதமாகவே வேலை செய்வதும் யோக்கியப் பொறுப்பாகாது என்று ஓலமிட்டிருக்கிறார் தோழர். காந்தியாரின் வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை காந்தீய வேலைத் திட்டத்தினால் வகுப்புப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிறதென்றும் அந்த அபேதவாதி சொன்ன குற்றச்சாட்டுக்கு நேர்மையான ? யோக்கியமான ? நாணயமான பதில் புள்ளி விவரங்களோடு பீஹார் நிதி மந்திரியார் சொல்லியிருந்தால் நியாயமாயிருந்திருக்கும். ஆனால் அவருடைய பதிலில் எங்காவது காந்தியின் வேலைத் திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை தீர்ப்பதில் எந்தெந்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறது விளக்கப்பட்டிருக்கிறதா? என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் நாட்டிலே வகுப்புப் பிரச்சினைகளையும் தீர்க்கப்பட்டது என்பதற்கு எங்காவது ஆதாரம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறதா? என்று பார்க்கும்படியும்   வாசகர்களை வேண்டிக்கொள்கிறோம். காந்தீயம் நாட்டிலே புதைக்கப்படாமலிருந்தால் காந்தியாரின் மீதும் காந்தீயத்தை ஆதரித்து வளர்த்து வரும் பார்லிமெண்டரிக் கமிட்டியார் மீதும் நம்பிக்கை யிருக்கிறதா இல்லையா வென்பதை தெரிவிக்கும்படி மாகாணத்தின் எல்லாக் காங்கிரஸ் கிளை சங்கங்களையும் மாகாணக் கமிட்டியார் கேட்டிருப்பார்காளா? காந்தீயம் மறையாவிட்டால் ? மாண்டழியாவிட்டால் சாவுமணியடிக்கப்படா விட்டால் இந்தப் பிரச்சினை எழுவதற்குக் காரண மென்ன? எனவே தாந்தீயம் ஒழிந்து விட்டது; காந்தியார் செல்லாக் காசாசிவிட்டார், அவரை விளம்பரப்படுத்தி போற்றி வந்தவர்கள் தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். தனது மகாத்மாப் பட்டத்தை காப்பாற்றுவதற்காக தனது பெயர் மறையாதிருக்க தோழர் காந்தியார் ஒரு புது வழி கண்டு பிடித்திருக்கிறார். ஏன்? அவர் ஒரு பனியா வல்லவா? சமயத்திற்குத் தகுந்தபடி பேசிச் சரக்கை விற்பனை செய்ய வேண்டாமா? காந்தீயச் சரக்கு நாட்டிலே செல்லாது என்பதை நன்கு உணர்ந்த காந்தியார் இப்போது சமஸ்தான கிளர்ச்சியில் தலையிட ஆரம்பித்துவிட்டார். சமஸ்தான விவாகரங் களில் காங்கிரஸ் தலையிடக்கூடாதென்றும் சமஸ்தான காங்கிரசுக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கும் நேரடியான தொடர்பு இருக்கக்கூடாதென்று செப்பிய தோழர் காந்தியார் இன்று சமஸ்தான கிளர்ச்சியில் தலையிடவேண்டுமானால் ஏதாவது மர்மமில்லாமலிருக்க முடியுமா? என்பதை வாசகர்களே யோசித்துப்பாருங்கள். அவர் மக்களுடைய மனோபாவத்தை நன்கறிந்த வரானதினாலே தன்னிடத்திலே? தன் கொள்கையிலே அவநம்பிக்கை கொண்டுள்ள மக்களின் கவனத்தை வேறொரு விஷயத்தில் திருப்பிவிட்டால் பழைய தோல்வியை மறந்து விடுவார்கள் என்பதைத் தவிர இதில் வேறு என்ன மர்மம் இருக்கமுடியும்? உண்மையிலே சமஸ்தான பிரஜைகள் கோரும் பொறுப்பாட்சிப் பிரச்சினையில் தோழர் காந்தியாருக்கு அபிமானம் இருக்குமே யானால் திருவிதாங்கூர் சமஸ்தான பொறுப்பாட்சிப் போராட்டத்தை கொலை செய்திருக்கமாட்டார். திவான் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையெல்லாம் வாபஸ் வாங்கவேண்டுமென்று வற்புறுத்தியிருக்க மாட்டார். இவ்வளவு  திருக்கூத்தும் செய்துவிட்டு இன்று திடீரென்று சமஸ்தான கிளர்ச்சியில் இரக்கங்கொண்டு அதில் காங்கிரஸ் பங்குகொள்ள வேண்டுமென்று கூறுவதற்குக் காரணம் நாம் மேலே கூறியது போல இழந்த பெருமையைக் கைப் பற்றுவதற்கும், நாட்டு மக்களிடம் மீண்டும் செல்வாக்குப் பெறுவதற்கு மேயாகும். பனியா காந்தியார் சமயத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றாற்போல் பேச்சையும், மாற்றுவ தோடு நோக்கத்தையும் கொள்கைiயும் மாற்றிக்கொள்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டுமென்று கேட்கிறோம்? தொட்டது துலங்கா மகாத்மாவின் சாதகம் நாட்டு மக்கள் பெரும்பாலாருக்குத் தெரிந்ததுதான். சமஸ்தானப் பிரச்சினையிலும் காந்தியார் தலையீடு என்னமாய் முடிகிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் சமீபத்தில் நாகபுரியில் டாக்டர் கரே பேசுகையில் காந்தீயமே நாட்டில் குருட்டு நம்பிக்கைக்கும், அடிமை மனப்பான்மைக்கும் காரணமென்றும் காந்தீயம் காங்கிரசில் தலை விரித்தாடும்வரை காங்கிரஸ் சீர் பெற முடியாது;  உருப்பட  முடியாதென்றும் குறிப்பிட்டிருப்பதையும் அன்பர்கள் ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

குடிஅரசு, தலையங்கம் -19.2.1939

You may also like...