5. விடுதலை வழக்கு தீர்ப்பு

சென்ற ——— விடுதலை நிகழ்ச்சிகளில்  —-

—– படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இவ்வழக்கின் முடிவைத்தான் இரண்டொரு மாதங்களாக தமிழர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தது. இந்த முடிவைக் கண்டு எவரும் ஆச்சரியமோ அல்லது மனச் சஞ்சலமோ அடைந்திருப்பார்கள் என்று நாம் கருதவில்லை. விடுதலை ஆசிரியர் பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை மீதும் பதிப்பாளர் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும்  இ.பி.கோ 124 எ, 153 எ செக்ஷன்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்ததை நமது நேயர்கள் அறிவார்கள். மேற்படி வழக்கில் தீர்ப்புக் கூறிய கோவை ஜில்லா அடிஷனல் ஜட்ஜ் கனம் கொய்லோ அவர்கள் எதிரிகள் இருவரும் இ.பி.கோ 124எ செக்ஷன்படி ராஜதுவேஷக் குற்றம் செய்யவில்லை என்றுதாம் அபிப்ராயப்படுவதாலும் அஸெஸர்களும் எதிரிகள் குற்றவாளிகள் அல்ல என்று ஏகோபித்து கூறிய முடிவையும் ஏற்று எதிரிகளை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  இங்குதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினையிருக்கிறது. அதாவது அதிகார வர்க்கத்தாரால் அதுவும் அன்னியரால் தங்களது ஆதிக்கத்தை – ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக இயற்றப்பட்ட அதுவும் இன்றைக்கு சுமார் 80 வருடங்களுக்கு முன் அன்று இருந்த ஆட்சி முறைப்படி இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை, 80 வருடங்களுக்குப் பின் மக்களுக்கு பொறுப்பாட்சி அளித்திருக்கும் நாளிலே உபயோகிப்பது நேர்மையாகுமா என்று யோசிக்க வேண்டியதாகும். நாம் ஏன் இவ்வாறு சொல்லுகிறோமென்றால் ஜனநாயகதத்துவப்படி ஆளப்படுகிற நாட்டிலே அரசியலில் இருகட்சிகள் இருந்து தீரவேண்டுமென்பதை எந்த ஜனநாயகவாதியும் ஒப்புக்கொள்ளுவார்கள். எந்த ஜனநாயக நாட்டிலும் எதிர்கட்சியிலிருப்பவர்கள் ஆட்சியை நடத்தும் கட்சியினரை வீழ்த்த தருணம் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். எப்பொழுதாவது அவர்கள் (ஆட்சி நடத்துகிறவர்கள்) தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவோ அல்லது நாட்டின் நலனுக்கு மாறாகவோ நடப்பார்களேயானால் அதை பொது மக்களுக்கு அவ்வப்போது பிரச்சாரம் மூலமாகவும் பத்திரிகை முலமாகவும் விளக்குவது வழக்கம். ஆகவே அதிகார வர்க்கத்தாரால் தங்களது ஆட்சியை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட அதே சட்டத்தின்படி —ஜனநாயகத்துவப்படி கட்சி பொறுப்பாட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்தினர் ? அரசியலார் தங்களது எதிர் கட்சியினர்கள் மீது நியாயப்படி ? ஜனநாயகத்துவப்படி உள்ள உரிமையை பறிப்பதற்காகவோ அல்லது போக்குவதற்காகவோ உபயோகப்படுத்தப்படலாமா என்பதை நேயர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பதவி வகித்து வருகிற ஒரு கட்சியாரால் ஆளப்படும் ஆளுகையைக் குறிக்க பொதுவாக ஜனநாயக நாடுகளிலே உபயோகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக இங்கிலாந்திலே பார்லிமெண்டெரி ஸிஸ்டம் ஆப் கவர்ன்மெண்டு அதாவது கட்சி அரசாங்கம் ஆரம்பம் ஆன பிறகு டோரி கட்சியினர் சர்க்காரை நடத்தியபோது அந்த சர்க்காருக்கு, டோரி கவர்ன்மெண்டுஎன்றும்,விக்ஸ் கட்சியினர் ஆட்சி நடத்திய போது விக்ஸ் கவர்மெண்டு என்று வழங்கப்பட்டு வந்ததையும் வழங்கி வருவதையும், பிரான்ஸில் தொழிற் கட்சியினர் சர்க்காரை நடத்துகையில் லேபர் கவர்ன்மெண்டு என்றும் சோஷியலிஸ்டு கட்சியினர் நடத்தும்போது சோஷியலிஸ்டு கவர்ன்மெண்டு என்று இன்றும் வழங்கப்பட்டு வருவதையும் வழங்கிவருவதையும் எவரும் மறுக்க முடியுமா என்றும் கேட்கிறோம். இந்த நிலையில் ஆட்சி நடத்துகிற கட்சியார் செய்கையைக் குறித்து எதிர் கட்சியினர்குறை சொல்லும்போது அந்தந்த கட்சி சர்க்கார் என்று தானே சொல்லி விளக்குவார்கள் ஆகவே அக்காலத்திலே சர்க்கார் என்ற சொல்லுக்கு இருந்த கருத்தும் கூறப்பட்ட வியாக்யாணமும் ஜனநாயக ஆட்சிமுறைக்கு எப்படி பொருந்தும் என்பதோடு அன்றைய சர்க்காரை பாதுகாக்க அதிகாரவர்க்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை இன்றைய பொறுப்பாட்சி நடத்துபவர்கள் துணைகொண்டு எதிர்கட்சியினர் களுக்குள்ள உரிமையை ஒழிக்க இன்றைய பொறுப்பாட்சி சட்டமிடங்கொடுக்குமேயானால் இந்த ஆட்சிமுறை எப்படி ஜனநாயகதத்துவ ஆட்சி முறை என்று ஒப்புக்கொள்ள முடியும் என்று சொன்னால் தப்பா என்று கேட்கிறோம். இந்நிலையிலே பார்த்தால் சென்றவார      ஜஸ்டிஸ் பத்திரிகை கூறுவது போல உதாரணமாக இந்தக் காங்கிரஸ் சர்க்கார் பப்ளிக் பிராஸிகியூட்டர்களை வக்கீல் சங்கங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு வக்கீல் சங்கங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் மெஜாரட்டியாயிருக்கிற தென்ற எண்ணத்தால் செய்யப்படுகிற ஒரு சூழ்ச்சி என்று நாம் சொன்னால் சர்க்கார் மீது துவேஷத்தை உண்டு பண்ண முயற்சித்ததாகவோ அல்லது உண்டுபண்ண முயற்சித்ததாவோ, கருதப்பட்டால், பொது மக்களுக்கு விரோதமாக சர்க்கார் செய்யும் காரியங்களை எதிர் கட்சியினர் தாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை செய்ய தடை செய்வது போல் ஆகுமா ஆகாதா? என்று கேட்க ஆசைப்படுகிறோம். இதிலிருந்து நாம் அறியக்கிடப்பது என்னவென்றும் பொறுப்பாட்சி என்று சொல்லப்படுவதும் ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படுவதும் செவியளவில்தான் கேட்க இன்பமாயிருக்கிறதே யொழிய நடைமுறையில் பழைய சட்ட திட்டங்களால்தான் அதுவும் அந்நியர் என்று சொல்லப்பட்டவர்களாலும், அதிகார வர்க்கத்தார் என்று சொல்லப்பட்டவர்களாலும் தாய் நாட்டிடத்தில் அன்பு காட்டினால் ராஜாங்க துவேஷி என்றும், சுய அபிப்பிராயம் என்றும் உத்தியோகத் தால் ராஜத்துவேஷி என்றும் சொல்லி எவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தோமோ அது போலவே இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகிறோ மென்பதும் நன்கு விளங்கும். ஆதலால் இவ்விடுதலை வழக்கு இவ்விஷயத்தில் மக்களை விழிப்புறச் செய்துவிட்டது என்று சொன்னால் ஒரு நாளும் தவறாகாது. எதிரிகள் 153 எ செக்ஷன் கீழ் குற்றவாளிகள் என்பதற்கு நீதிபதியவர்கள் தீர்ப்பில் கூறியிருக்கும் காரணத்தைக் குறித்து நாம் ஒன்றும் சொல்ல ஆசைப்பட வில்லையானாலும் காங்கிரசிலே பார்ப்பனர் ஆதிக்கம் அதிகரித்து இருக்கிறது. ஆதலால் காங்கிரஸ் அபேட்சருக்குக் தேர்தலில் ஓட்டளிக்காதீர்கள் என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்வதற்காக விடுத்த விண்ணப்பம் என்பதை மட்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். கடைசியாக சமூக சீர்திருத்தத்தில் ஆர்வமுள்ளவர்களும் சமூகம் விடுதலைபெறவேண்டுமென்று பாடுபட முன் வந்திருப்பவர்களும் இப்பிரச்சினையைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக சிறையிலடைக்கப்பட்ட இரண்டு பெரியார்களைக்குறித்து சில வார்த்தைகள் எழுதாமல் விட்டுவிட்டால் இத்தலையங்கம் பூர்த்தியாகாதென்று கருதுகிறோம். சிறை புகுந்த இரு பெரியார்களையும் நாம் பாராட்டுவோமாக. சுயமரியாதை இயக்க ஸ்தாபகர் 20 ஆண்டு இந்நாட்டை ஆண்ட ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் தோழர் ராமசாமிப் பெரியார் சிறையிடப்படலாம். 40- ஆண்டுகளாக பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டு பல தினசரிகளில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்து அனுபவம் வாய்ந்த 60-வயதுக்கு மேற்பட்ட தோழர் பண்டித முத்துசாமி பிள்ளையவர்களும் சிறைப்படலாம். பெரியார் தமயனார் தமிழ் வைத்திய பூஷணம் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் சிறையிலிடப்படலாம் இவைகளைக் கண்டு சுயநலக் கூட்டத்தார் உள்ளம் பூரிக்கலாம். ஆனால் உண்மையில் நடக்கப் போவதென்ன? அடிக்கஅடிக்க ரப்பர் பந்து உயர எழும்புவது போல் தமிழரியக்கம் வளரும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. தமிழ் மொழிக்கும் தமிழர் நன்மைக்கும் உழைக்கும் பெரியாருக்குத் தமிழ் நாட்டில் கிடைத்த பரிசை தமிழர்கள் அறியாமலிருக்க முடியாது. இப்பொழுது தமிழ் மொழி, கலை, நாகரிகம் ஆகியவைகள் பாதுகாக்க, வளர நடத்தப்படும் தமிழர் பத்திரிகையான விடுதலையின் பதிப்பாளருக்கு ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையும் அதன் ஆசிரியப் பெரியார் பல்லிழந்த கிழப்புலி, முத்தசாமிப் பெரியாருக்கு 6 மாத தண்டனை விதிக்கப்பட்டதையும் வாசகர்கள் அறிவார்கள். —–

— கார்ப்பரேஷன் தேர்தலில் ஓட்டர்களுக்கு எச்சரிக்கை செய்ததற்காக; மூன்றும் பழுத்த சிங்கங்கள்; 60-வயதுக்கு மேலானவர்கள்; .இன்று சிறைச்சாலையில் கட்டுண்டு கிடக்கின்றனர். மூன்றும் நரைத்த தலையர்கள்; முதிர்ந்த வயிரம் பாய்ந்த நெஞ்சழுத்தம் படைத்த உருவங்கள்; வாலிபர்கள் பொறாமைப்படக்கூடிய ஊக்கமும் உற்சாகமுமுடையவர்கள். இவர்கள் எதற்காக இன்று சிறைபுகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பது தமிழர்கள் அறிந்த உண்மை. தமிழர் கிளர்ச்சியை ஒடுக்க, குலைக்க, அழிக்க காங்கரஸ்காரர்கள் எந்த வித தந்திரோபயங்களைக் கையாண்டாலும், அடக்கு முறைகளைக் கைக்கொண்டாலும் தமிழர்கள் ஒரு நாளும் அதைரியப்படவோ பின் வாங்கவோ போவதில்லை என்பதோடு தங்கள் மொழிக்காகவும் சமுதாய உரிமைக்காகவும் கிளர்ச்சி புரியவும் பின் வாங்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

குடிஅரசு, தலையங்கம்- 15.01.1939

You may also like...