சம்பாஷணை
– நாரதர் ஓர் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ரெயிலில் போகும் போது நடந்த சம்பாஷணை (பார்ப்பனர் சாஸ்திரியார், பார்ப்பனரல்லாதார் கந்தையா) சாஸ்திரியார்: கந்தையா எங்கு போகிறீர். கந்தையா: அது யார் சாஸ்திரியா? சாஸ்திரி: ஆம், ஆசீர்வாதம் (மார்பிற்கு நேரே உள்ளங்கையை வளைத்துக்கொண்டு) கந்தையா: நான் உம்மை ஆசீர்வாதம் கேட்கவில்லை. அது உமக்கே இருக்கட்டும், எது வரைக்கும் பிரயாணம்? சாஸ்திரி: என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்? பிராமணாள் ஆசீர்வாதம் இலகுவில் எல்லோருக்கும் கிடைக்குமா? கந்தையா: எனக்குப் பிராமணனென்றும், மற்றவர்களென்றும், ஆசீர்வாதமென்றும், சாபமென்றும் இருப்பதாகவும், அதன் பெயருக்குத் தக்கபடியான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும் நம்பிக்கையில்லை. அப்படியிருப்பதெனச் சொல்லுபவர்களையும், நம்புபவர்களையும் நான் பொருட்படுத்துவதுமில்லை. சாஸ்திரி: அப்படியானால் இதுவெல்லாம் உலகத்தில் எப்படி தொன்று தொட்டு நடந்து வருகிறது. கந்தையா: உலகம் என்று எதைச் சொல்லுகிறீர்? நீர் வசிக்கும் இடத்தையா? மற்றுமுள்ள 5 கண்டங்களின் நிலப்பரப்புகளையும் சேர்த்தா? சாஸ்திரி: மற்ற விஷயமெல்லா மெதற்கு? முதலில் நாம் வசிக்கு மிடத்தின் நடப்பைக் குறித்தே சொல்லும்...