காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக்கொள்ளுபவருக்கும்
சுயமரியாதை ஜஸ்டிஸ்காரருக்கும் நடந்த சம்பாஷணை
– அனாமதேயம் எழுத�ுவது
சு.ம. காங்கிரஸ்வாதி: தோழர் ஜவஹர்லால் ஒரு சமதர்ம வீரர் அவரை சு.ம.காரர் பஹிஷ்கரிக்கலாமா?
சு.ம. ஜஸ்டிஸ்வாதி: ஜவஹர்லால் சமதர்ம வீரர் என்பதை உனக்காக வேண்டியே ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அவர் தோழர் ஈ.வெ.ராவைப் போலவே இப்போது நான் சமதர்மப் பிரசாரம் செய்ய வரவில்லை; காங்கிரஸ் பிரசாரம்தான் செய்ய வந்தேன் செய்கிறேன் என்று சொன்னாரா இல்லையா?
சு.ம.கா: அவர் எங்கே அப்படிச் சொன்னார்?
சு.ம.ஜ: காங்கரஸ் தலைமைப் பிரசங்கம் முதல் சென்னை பிரசங்கம் வரை படித்திருந்தால் எங்கே சொன்னார் என்று கேட்டிருக்கமாட்டாய். சரி அப்படி சொல்லவில்லை என்றும் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் சமதர்மத்துக்கு என்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்றும் உலகப் புரட்சியோ மகா யுத்தமோ ஒன்று ஏற்பட்டால் தான் சமதர்ம சம்பந்தமாய் ஏதாவது செய்யலாமே ஒழிய மற்றப்படி இப்போது அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் சொல்லியிருப்பதையாவது ஒப்புக்கொள்ளுகிறாயா இல்லையா?
சு.ம.கா: ஆம், அப்படிச்சொன்னால் சமதர்மம் வேண்டாம் என்று அருத்தமா?
சு.ம.ஜ: அப்படியானால் சமதர்மம் வேண்டும் என்று இந்தியாவில் ஜவஹர்லால் மாத்திரம் தானா சொல்லுகிறார்? தோழர்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சர்.சி.பி. ராமசாமி அய்யர் முதல்கொண்டு சொல்லி இருக்கிறார்கள். லார்ட் வில்லிங்டன் கூட ஒரு சமயம் சமதர்மம் நல்லதுதான் என்று சொல்லி இருக்கிறார். யேசுவும், மகமது நபியுங் கீதையும் சமதர்மத்தை போதிப்பதாக மதக்காரர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் எல்லாம் சமதர்ம வீரர்கள்தானா? இந்த மதங்களை யெல்லாம் வரவேற்க வேண்டியதுதானா?
சு.ம.கா: ஆனால் ஜவஹர்லால் இப்படிப்பட்ட சமதர்மி என்றா சொல்லுகிறாய்?
சு.ம.ஜ: அதற்கும் மேல் ஒரு டிக்கிரி அல்லது பத்து டிக்கிரி அதிகமாகவே வைத்துக்கொள். அதைப்பற்றி இப்போது நமக்கு வாதம் வேண்டாம். ஜவஹர்லால் தமிழ்நாட்டுக்கு எதற்காக வந்தார்? காந்தியாரும் ராஜேந்திர பிரசாதும் வந்த வேலை அல்லாமல் ஜவஹர்லால் வேறு என்ன காரியத்துக்கு வந்தார்? மக்களை என்ன செய்யும்படி சொல்லிப் போனார்? இதைச் சொல்ல மற்றப்படி ஜவஹர்லால் யாராய் இருந்தால்தான் என்ன?
சு.ம.கா: அப்படியானால் மனிதனைப்பற்றி கவலை இல்லை என்கிறாயா?
சு.ம.ஜ: நீதான் ஆகட்டுமே ஏதோ ஒரு மனிதனைக் கருதி அவனுடைய செய்கையை அலட்சியம் செய்துவிடுவாயா?
சு.ம.கா: என்ன இருந்தாலும் ஜவஹர்லால் மற்ற தலைவர்களைப் போல் அல்ல; அவர் ஒரு உண்மையான வீரர்.
சு.ம.ஜ: சரி, வீரர் என்றே வைத்துக்கொள். ஒரு வீரர் உங்கள் வீட்டின் மீது கல்லுப்போட்டாலோ அல்லது வீரர்கள் உன்னை வைதாலோ நீ விட்டு விடுவாயா?
சு.ம.கா: அப்படி ஜவஹர்லால் என்ன செய்ய வந்தார்?
சு.ம.ஜ: ஜவஹர்லால் எலக்ஷன் பிரசாரத்துக்கு வந்தார். காங்கிரஸ் பிரசாரத்துக்கு வந்தார். காங்கிரசின் பேரால் எப்படிப்பட்ட மனிதன் நிறுத்தப்பட்டாலும் அவனுடைய யோக்கியதா யோக்கியதையை கவனிக்காமல் அவன் மொண்டியானாலும், குருடனானாலும் செவிடனானாலும் அவனுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொல்ல வந்தார். காங்கிரசின் பேரால் நிற்பவன் தவிர மற்ற அபேட்சகர்கள் எல்லாம் தேசத்துரோகிகள், சர்க்கார் தாசர்கள் என்று தோழர்கள் சத்தியமூர்த்தி குப்புசாமி உபயதுல்லா அண்கோ சொல்லுவது போலவே சொல்ல வந்தார்.
மற்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் போலவும் அவர்களது கூலிகள் போலவும் ஜஸ்டிஸ் கட்சியும் மற்ற காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் சர்க்கார் தாசர்கள், சர்க்கார் ஏஜண்டுகள் என்று சொல்லி வம்புச்சண்டை இழுக்க வந்தார். அப்படியே சொல்லியும் போட்டார். மற்றபடி எந்த விதத்தில் மற்றவர்களையெல்லாம் விட ஜவஹர்லால் வீரர், சூரர், மகா யோக்கியர் என்று சொல்லே பார்க்கலாம்.
சு.ம.கா: ஜவஹர்லால் எவ்வளவு தியாகம் பண்ணினவர் என்பதை சிறிதுகூட நினைத்துப் பார்க்காமல் இப்படிப் பேசுகிறாயே இது நியாயமா?
சு.ம.ஜ: நான் கேட்பதை விட்டு விட்டு என்ன என்னமோ உளறுகிறாய். ஜவஹர்லால் தியாகம் பண்ணினவர் என்றே வைத்துக் கொள். காந்தி தியாகம் செய்யவில்லையா? ராஜேந்திர பிரசாத் தியாகம் செய்யவில்லையா? இவர்களையெல்லாம் விட அதிகமாக ராஜகோபாலாச்சாரியார் தியாகம் செய்ய வில்லையா? அவர்களை யெல்லாம் நாம் வரவேற்றோமா? ஜவஹர்லாலுக்கு மாத்திரம் என்ன இவ்வளவு சிபார்சு என்பது எனக்கு விளங்கவில்லையே?
சு.ம.கா: ஜவஹர்லால் சுயமரியாதைக்காரர்கள் கோரும் அறிவு இயக்கவாதி என்பது கூட தெரியாதா? காந்தியும், ராஜேந்திரரும் வருணாச்சிரம வாதிகள், மூடநம்பிக்கைக்காரர்கள். ஜவஹர்லால் பகுத்தறிவுவாதி. இதையாவது சு.ம.காரர்கள் கவனித்து இருக்க வேண்டும். கொஞ்சம் கூட யோசிக்காமல் பகிஷ்காரம் செய்துவிட்டீர்கள்.
சு.ம.ஜ: அறிவு இயக்கவாதி என்றதினாலேயே எலக்ஷன் பிரசாரம் செய்து குருடனுக்கும், செவிடனுக்கும், மொண்டிக்கும், முடவனுக்கும் ஓட்டுப்போடும்படி சொல்லவந்தால் விட்டுவிடவேண்டியதுதானா? அப்படித்தான் ஜவஹர்லால் எந்த விதத்தில் பகுத்தறிவுவாதி?
தகப்பன் எலும்பையும் பெண்ஜாதி எலும்பையும் சுமந்து கொண்டுபோய் ஆற்றில் விட்டாரே அதனாலா?
புண்ணியஸ்தல யாத்திரை செய்கிறாரே அதனாலா?
மதுரை மீனாக்ஷி அம்மனுக்கு சமீபத்தில் போய் கும்பிட்டுவிட்டு வந்தாரே அதனாலா? பழனி பஞ்சாமிர்தம் வாங்கி மூட்டை கட்டிக் கொண்டாரே அதனாலா?
கதரை ஆதரிக்கிறாரே அதனாலா? காந்தியை ஆதரிக்கிறாரே அதனாலா? சட்ட சபைக்குப்போய் சீர்திருத்தத்தை உடைக்கிறேன் என்கிறாரே அதனாலா? எதில் அவர் பகுத்தறிவுவாதி?
ஏதோ வாயில் மதத்தையும் ஜாதியையும் பற்றி கண்டித்து நாலு வார்த்தை பேசிவிட்டால் புஸ்த்தகத்தில் எழுதிவிட்டால் அதனாலேயே அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் பகுத்தறிவு வாதிகளாய் விடுவார்களா? பகுத்தறிவு சமதர்மம் என்பதெல்லாம் உங்கள் வீட்டு புறகடையில் முளைத்து இருக்கும் கிள்ளுக்கீரை என்றா நினைத்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியானால் உலகத்தில் இருக்கிறவன் எல்லோரும் பகுத்தறிவு வாதிகள்தான். ஒவ்வொருவரும் அரிசி பருப்புத்தேடி பக்குவமாய் சமையல் செய்து இலையில் போட்டு பிசைந்து உருட்டி வாயில் போட்டு மென்று தின்கின்றார்களே ஒழிய ஆண்டவன் இருக்கிறான், அல்லா இருக்கிறான் என்று கருதி அவனே நம் வயிற்றை நிரப்பி விடுவான் என்று ஒருவரும் நம்பி மூட நம்பிக்கைக்காரர்களாக இருப்பதில்லை. ஆதலால் ஜவஹர்லால் மாத்திரம் பகுத்தறிவுகாரர் என்று சொல்லிவிட முடியாது. செய்கையில் காந்திக்கும் மற்ற தலைவர்கள் என்பவர்களுக்கும் மாறாக ஜவஹர்லாலிடம் என்ன பகுத்தறிவு காரியம் இருக்கிறது? அதைச் சொல்லே பார்ப்போம்.
சு.ம.கா: இப்படிப் பார்த்தால் உலகில் ஒரு மனிதன் கூட பகுத்தறிவுவாதியாய் காணப்படமாட்டான்.
சு.ம.ஜ: காணப்படாவிட்டால் போகட்டுமே, யாராவது காணப்பட வேண்டுமே என்று எவரையாவது ஒப்புக்கொள்ள வேண்டியது சடங்கா? சாஸ்திரமா? அதற்கு ஆக ஜவஹர்லாலை பகுத்தறிவுவாதி என்று ஒப்புக்கொள்ள வேண்டுமா? சாதாரண அறிவே அவருக்கு எவ்வளவு இருந்தது என்று அவரது சுற்றுப்பிரயாண பேச்சை அலசிப்பாரே! எங்கே போனாலும் பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் என்கின்ற பல்லவி. இதை ஒழிக்க சுயராஜ்யம் சுதந்திரம் வேண்டும் என்பது அனுபல்லவி. அதற்கு ஆக காங்கிரசுக்காரருக்கு ஓட்டுப்போடுங்கள் என்கிறது சரணம். இவை ஒன்றுக்கு ஒன்று பொருத்தமானதா?
சு.ம.கா: ஏன் இவை நியாயமான பேச்சல்லவா?
சு.ம.ஜ: எப்படி நியாயமாகும்? முதலாவது யாருக்கு வேலையில்லை? யார் பட்டினி?
பார்ப்பனர்கள் யாருக்காவது வேலை யில்லையா? பெரிய பெரிய சம்பளமுள்ள வேலைகள்தான் அவர்களில் 100க்கு (90 பேருக்கும் இருந்தும்) 100 பேருக்கும் இல்லையே என்கிறார்களே ஒழிய இன்றைக்கும் சகல பார்ப்பனருக்கும் மாதம் 15 ரூபாய்க்கு குறையாத சமையல் வேலை, காப்பிகடை வேலை, கோயில் பூசாரி வேலை, புரோகித வேலை முதல் எத்தனையோ வேலை காத்துக்கொண்டிருக்கின்றன. மற்றும் வியாபாரிகள், மில் முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், வக்கீல்கள், டாக்டர்கள், ஆச்சாரி, குருமார்கள், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஆகியவர்களுக்கு எங்கே பட்டினி? எங்கே வேலை இல்லாத் திண்டாட்டம்? ஒரு ஆளைக் காட்டே பார்ப்போம். இவர்களில் ஒவ்வொருவனும் அவனவன் யோக்கியதைக்கு மேலும் இருப்பதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அவ்வளவுதானே ஒழிய, யார் பட்டினி? யாருக்கு வேலையில்லை?
படிக்காத மனிதன், கீழ் ஜாதிக்காரன், கைத்தொழிலாளி சரீரப்பாட்டாளி ஆகிய இந்தக் கூட்டத்தார்தான் பெரிதும் இன்று வேலையில்லாமலும் ஜீவனத்துக்கு போதுமானது இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இது இந்த நாட்டில் மாத்திரமல்ல. எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கிறது. (ரஷ்யாவில் மாத்திரம் இல்லை) அதற்காக ஜவஹர்லாலின் திட்டம் என்ன? சுயராஜ்யம் வந்தால் பட்டினி போய்விடுமா? வெளி தேசத்தார் ஆதிக்கம் போய்விடும்படியான சுதந்திரமே வந்தாலும் எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுமா?
இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜர்மனி இவை சுயராஜ்ய நாடல்லவா? சுதந்திர நாடல்லவா? அங்கு என்ன நடக்கின்றது? சுயராஜ்ய நாடான அபீசினியாவைப் பார், சுதந்திர நாடான ஸ்பெயினைப் பார், குடி அரசு நாடான சைனாவைப் பார். கண் மூடிக்கொண்டு புஸ்தகத்தை ஒப்புவிக்காதே. பிற்பட்ட வகுப்புக்கும் படிக்காதவனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக்கும் ஜவஹர்லாலோ, காந்தியோ, காங்கிரசோ பிரதிநிதியா அல்லது ஜின்னாவோ, ஜஸ்டிஸ் கட்சியோ, அம்பேத்காரோ பிரதிநிதியா எண்ணிப்பாரே.
இதுவரை காங்கிரசினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்கள் யோக்கியதையையும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் யோக்கியதையையும் நீ அறியாததா? இவைகளை மாற்ற ஜவஹர்லால் என்ன மருந்து கொண்டு வந்தார்.
ஜமீன்தார் பிரதிநிதியா என்ற சு.ம.காரர்களைக் கேட்டார். தர்மபுரி ஜமீன்தார் நடேச செட்டியார் வீட்டில் விருந்தினராய் இருந்து சாப்பிட்டு வந்தார். ஜஸ்டிஸ்காரர்களை காங்கிரஸ் விரோதி என்றார். காங்கிரஸ் “துரோகி” டாக்டர் ராஜன் வீட்டுக்குப் போய் பேசிவிட்டு வந்தார். குமாரமங்கலம் ஜமீன்தார் காங்கிரஸ் மெம்பர் லக்ஷப் பிரபு நாடிமுத்துபிள்ளை காங்கிரஸ் மெம்பர், திருநெல்வேலி ஜமீன்தார் குமாரசாமி முதலியார் காங்கிரஸ் மெம்பர்கள்.
கோவை ராமலிங்கம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், ஆர்.கே. வெங்கடாசலம் செட்டியார், ஆவலப்பட்டி ஜமீன், அவனாசிலிங்கம் செட்டியார் இவர்கள் எல்லாம் காங்கிரஸ் மெம்பர்கள்.
போதாக்குறைக்கு புழுத்ததின் மீது மலம் விழுந்த மாதிரி சத்தியமூர்த்தி முதலிய வருணாச்சிரம தர்மிகளும் காங்கிரஸ் மெம்பர்கள்.
இப்படிப்பட்டவர்கள் தவிர மற்ற சில சம்பளக்காரர்கள்தான் ஏழை காங்கிரஸ் மெம்பர்கள். ஆகவே தலைவர் சர்வாதிகாரி ஆகியவர்களாக மேற்கண்ட கூட்டத்தார்கள் காங்கிரசுக்குப் போனால் எப்படி பட்டினி ஒழியும்? எப்படி வேலையில்லாக் கஷ்டம் ஒழியும்? நீதான் சொல்லே பார்ப்போம்.
இதிலிருந்தே ஜவஹர்லாலுக்கு பகுத்தறிவு இருந்தால் காங்கிரசுக்கு ஓட்டுக் கொடு ஆள்கள் யோக்கியதையை பார்க்காதே என்று சொல்லி இருப்பாரா? இந்த மாதிரி யோக்கியதை உள்ள காங்கிரசுக்கு ஓட்டுப் பிரச்சாரம் செய்யாதே! என்று சொன்னதில் உனக்கு என்ன வந்து மாட்டிக் கொண்டது என்பது எனக்கு விளங்கவில்லை. கேள்வி கேட்டால் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் சு.ம. காரர்கள் பொய்யர்கள் என்று கேவலமாய் பேசிவிட்டார்.
இப்பவும் சொல்லுகிறேன். ஜஸ்டிஸ்காரர்கள் சமதர்ம வீரர்கள் என்கிறேன். தைரியமாய் வருணாச்சிமத்துக்கு விரோதமாய் வேதம் சாஸ்திரத்துக்கு விரோதமாய் சட்டம் செய்தார்கள். சொத்துரிமையை பிடுங்கிக்கொள்ளலாம் என்று சட்டம் செய்து சோம்பேறிகளுடைய சொத்தைப் பிடுங்கி பாடுபடுகிறவர்களுக்கு சொந்தமாக்கி விட்டார்கள். கொஞ்ச அளவுக்காவது இம்மாதிரியான காரியம் துணிச்சலாக செய்து வழிகாட்டி விட்டார்களா இல்லையா?
இதைச் சொல்லியே காங்கிரசுக்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைகிறார்கள், விஷமப்பிரசாரம் செய்கிறார்கள்.
வெங்கிட்டராம சாஸ்திரியார் காங்கிரசை ஆதரிக்கிறார். அவர் ஜஸ்டிஸ் கட்சி பொதுவுடமை கட்சி என்று இந்த வாரமும் “இந்து”வில் “மெயிலில்” எழுதினார். யார் சமதர்மவாதிகள் காரியத்தில் சொல்லே பார்ப்போம். உழுபவனுக்குத்தான் பூமி சொந்தமே தவிர பட்டாக்காரனுக்கு சொந்தமில்லை என்று ஒரு சட்டம் செய்வது என்றால் லேசான காரியமா? அதுவும் யாதொரு பிரதிப்பிரயோஜனமும் இல்லாமல் பறி முதல் செய்து விடலாம் என்று சொன்னார்களே அதற்கு என்ன சொல்லுகிறாய்?
சு.ம.கா: சரி, மற்றொரு சமயம் பேசலாம். எனக்கு அஜீரணம் போல் வயிற்றைப் பிரட்டுகிறது. வெளியே போய்விட்டு வருகிறேன்.
சு.ம.ஜ: மகாராஜனாய் போய்விட்டு வா. எலக்ஷன் பிரசாரத்துக்கு வந்த ஜவஹர்லாலை பகிஷ்காரம் செய்ததற்கு எலக்ஷனை அலட்சியமாய் கருதி எலக்ஷனை வெறுக்கும் வீரனான நீ கோவித்துக்கொள்கிறாயே, அதுவும் காந்திக்கும் ராஜேந்திரப் பிரசாத்துக்கும் கருப்புக் கொடியைத் தூக்கித் திரிந்துவிட்டு, அந்த வீரம்தான் எனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது. போய் விட்டுவா.
குடி அரசு உரையாடல் 25.10.1936