பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?

வெள்ளையரிடம் பார்ப்பனர் சரணாகதி

முஸ்லீம்கள் தீண்டாதவர்கள் பிரச்சினை

முதலில் ஜஸ்டிஸ் கட்சியார்தான் முகம்மதியர்களுக்கும், ஏழைகளுக்கும், தீண்டாதார்களுக்கும் வேலை செய்தார்கள். அதன் பிறகுதான் காந்தியும் அவர்களைப்போல் வேலை செய்ய ஆரம்பித்தார். காந்தியானவர் மகாத்மா ஆனபின் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்யம் வரமுடியாது என்றார். அப்படியே தீண்டாதாரிடம் தீண்டாமை ஒழிந்தால்தான் சுயராஜ்யம் வரும் என்றும், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வராது என்றும் வந்தாலும் அது வேண்டாம் என்றும் சொன்னார். பிறகு வட்டமேஜை மகாநாட்டுக்குப் போனதும் சுயராஜ்யம் வந்தாலொழிய ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாதென்றார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ஜனாப் ஜின்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் “சுயராஜ்ய கவர்ண்மெண்டில் எங்களுடைய நிலை இன்னது என்று சொல்லிவிட வேண்டு”மென்று கேட்டார். ஏனென்றால் காந்தியின் ராமராஜ்யமானது ஹிந்து ராஜ்யமாகத்தான் இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். காந்தியார் எல்லாரையும் ஏமாற்றி விட முடியாதல்லவா? இவர்கள் ஒரு முடிவுக்கும் வராதது கண்டு இங்கிலீஷ் அரசாங்கத்தார் அந்தந்த சமூகத்திற்கும் ஞாயம் வழங்கினார்கள்.

அடுத்தபடியாக காந்தி தீண்டாதார் தலையில் கைவைக்கப் பட்டினி கிடந்தார். உடனே அம்பத்காரானவர், பயந்து போய் “நாம் எவ்வளவோ பாவம் செய்து இப்படி தீண்டா வகுப்பில் பிறந்து விட்டோம். நமக்கு இன்னும் என்ன பாவம் வருமோ” என்று காந்தியிடம் ஓடி “பூனா பேக்ட்”ல் கையெழுத்துப் போட்டார்.

இவர்கள் தீண்டாமையை விலக்குவதற்காக என்ன செய்துவிட்டார்கள்? அவர்களுக்கு எண்ணெயும் சோப்பும் கடலையும் பொரியும் பெப் பெர்மிண்ட்டும் கொடுத்து வருகிறார்கள். இதுதான் ஹரிஜன சேவையா? இதற்கு வாரம் ஒரு ரூபாய் செலவு. ஆனால் இதைக் கொடுக்கிறவருக்கு மாதம் 36 ரூபாய் சம்பளம்!

~subhead

வகுப்பு வாதம்

~shend

எந்த எலக்ஷனில் இவர்கள் வகுப்பு வாதத்தை நினைக்காமல் இருக்கிறார்கள்? இவர்கள் எந்தத் திட்டத்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர் களுக்கும் சீக்கியர்களுக்கும் வீதாசாரப் பிரதிநிதித்துவம் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை? இவர்கள் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் மட்டும் ஏன் கொடுக்க முடியாது என்று சொல்ல வேண்டும்? முஸ்லீம் கிறிஸ்தவர் நீங்கினால் மற்ற வகுப்பு பார்ப்பன வகுப்பு என்றே கருதுகிறார்கள். மற்றவர்களைப்பற்றி காங்கிரசுக்கு ஞாபகமே இல்லை. கூலி வேலைக்கும் காலி வேலைக்கும்தான் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களாகிய நாம் பார்ப்பனர்களுக்கும் முஸ்லீம் களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வீதாசாரப்படி பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறோம். அத்துடன் ஸ்திரீகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறோம்.

காங்கிரஸ் பார்ப்பனர்கள் வெள்ளைக்காரனிடம் “நீயும் நானும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தோம். நாமெல்லாம் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கே இப்படி கங்கை சமவெளிக்கு வந்து குடி ஏறிவிட்டோம். நீங்கள் யூரல்மலை வழியாய் போய் மேற்கே குடியேறி விட்டீர்கள். இவ்வளவு தானே யொழிய மற்றப்படியாக நீங்களும் நாமும் தாயாதிகள் தான் ஆகையால் நாம் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று சொல்லுகிறார்கள். இவர்கள் வெள்ளைக்காரரிடம் இப்படிப் பேசி விட்டுப் பொது ஜனங்கள் முன்னிலையில் தாங்கள் வெள்ளைக்காரரிடம் சுயராஜ்யம் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். இவர்கள் நாளைக்கு சுயராஜ்யம் வேண்டும் என்றால் நாம் இன்றைக்கே சுயராஜ்யம் வேண்டும் என்று சொல்லுகிறோம். ஆனால் எல்லாப் போராட்டமும் முடிந்த பின்பு சுயராஜ்யத்தில் எங்கள் நிலை என்ன என்று கேட்டால் அவர்கள் அது தேசத்துரோகம் என்கிறார்கள். அவர்கள் வெள்ளைக்காரனிடம் ஓடிப்போய் “நாங்கள் தானே உங்களுக்கு ஆதி முதல் உதவி செய்து உங்களை இந்தத்தேசத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கிறோம். ஆகையால் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொல்லுகிறார்கள்.

~subhead

உத்தியோக வேட்டை

~shend

நாம் நம் வரும்படியைச் செலவு செய்து நமது வீட்டை விற்று நம் சொத்தை விற்று நம் மக்களைப் படிக்க வைக்கிறோம். ஆகையால் சர்க்கார் உத்தியோகங்களில் எங்களுக்கும் பங்கு தா என்றால், அது தேசத் துரோகமா? மாடு மேய்க்கிறவனுக்கும் பஞ்சாங்கம் பார்க்கிறவனுக்கும் நாம் உத்தியோகம் கொடு என்று கேட்கிறோமா? பரீக்ஷை என்ற தெர்மா மீட்டரின்படி எங்களில் யாருக்குக் கொடுக்கலாமோ அவர்களுக்கு கொடு என்று சொல்லுகிறோம்.

எங்கும் இவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது? இவர்களே எங்கும் சப் இன்ஸ்பெக்டர்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள்; இவர்களே மேஜிஸ்ட்ரேட்டுகள்; இவர்களே தாசில்தார்கள்; முனிசீப்புகள்; கலெக்டர்கள்; 100க்கு 75 பேர் எல்லாம் இவர்களே இருக்கிறார்கள்! இதனால் தங்கள் வகுப்பை மேன்மைப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இவர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு சதா கூட்டங்களை நடத்திக் கொடுக்க உதவி செய்கிறார்கள். பார்ப்பன சப் இன்ஸ்பெக்டர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு சகல உதவியும் செய்து கொடுக்கிறார்கள். இவர்களுடைய சுயராஜ்யத்தில் நாம் கஷ்டங் களைத்தான் அனுபவிக்க முடியும். இவர்களுக்குத் தவிர வேறு ஒருவருக்கும் உத்தியோகமே கிடைக்காது. எல்லாம் அவர்களே அனுபவிப்பார்கள்!

~subhead

பார்ப்பனருக்கு உத்தியோகம் வேண்டியதில்லை

~shend

பார்ப்பனரல்லாத சிறுவர்களில் எவ்வளவோ பேர் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்துவிட்டு வேலைகள் அகப்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு பங்கா இழுத்துக் கொண்டும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதாக வேலை கேட்டுக் கொண்டும் அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் அதுபோல் பார்ப்பனர்களுக்கு வேலை கிடைப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்களுக்கு ஏற்கனவே ஜாதி காரணமாய் தாராளமாய் வேலை இருக்கிறது. கோவில்களில் இவர்களே இருக்கும்படி அமைத்துக் கொண்டார்கள். மோக்ஷ வாசலுக்கு டிக்கட் கொடுக்கும் வேலையும் இவர்களுடையதே, புரோகிதமும் இவர்களுடையதே, தர்மம் வாங்க யோக்கியதையும் இவர்களுக்கே, காப்பி ஹோட்டல்களெல்லாம் இவர்களுடைய தாகவே ஆய்விட்டன. பார்ப்பான் படிக்கு 40 இட்லி போட்டாலும் அங்குதான் போய் லீ அணாக் கொடுத்து வாங்குகிறோம். தமிழன் படிக்கு 8 இட்லி போட்டாலும் ஒருவனும் போய் லி அணாவுக்குக்கூட வாங்குவதில்லை. வாங்கித் தின்னமாட்டேன் என்கிறான்! இது சூத்திரன் கடை இட்லி என்று நம்மவனே சொல்லுகிறான்!

பார்ப்பனர்களில் உண்மையில் ஏழைகள் இல்லை. பஞ்சாங்கக்காரன் வீட்டில் போய்ப் பாருங்கள். அவன் வீட்டு ஸ்திரீகள் கழுத்தில் வைர நகைகள் அணிந்து கொண்டிருக்கிறார்கள்! அவன் வீட்டோடு ஒரு பெரிய குடியானவன் வீட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விதம் பார்க்க முடியுமா? நாம் எத்தனை தலைமுறைக்கு இப்படி ஒருவழியுமில்லாமல் ஏமாந்து கிடப்பது? இப்போது அவர்கள் நம்மை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லுகிறார்களே என்று பயந்து ஓடுவதா? நமக்கு அறிவு இருந்தால் நாம் இந்தப் பார்ப்பனருடன் சேர்வதைவிட வெள்ளைக்காரருடன் தான் சேர்வோம்.

நம்மவன் பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் காப்பி கடை கதவண்டை போய் வெளியே நின்று கொண்டு சாமி! சாமி! என்று கையை ஏந்திக் கொண்டு ஆருத்திரா தரிசனத்தில் விபூதி வாங்குவதுபோல் கத்துகிறான்! இந்த முதலாளியின் ஆளாக இருக்கக் கூடிய மோட்டார் ட்ரைவர் நேராக உள்ளே போய் சூடாக இட்லி தின்றுவிட்டு ராஜா மாதிரி வெளியே போகிறான்! எப்பொழுது நம்முடைய நிலை உயர்வது? எப்போது நம் சுயமரியாதை காப்பாற்றப்படுவது? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் உண்டா? ஆகவே பார்ப்பன சுயராஜ்யமும் நம் சுயராஜ்யமும் ஒன்றாய் இருக்க முடியுமா?

~subhead

ஜெயில் புரட்டு

~shend

இவர்கள் ஜெயிலுக்குப் போனோம் என்கிறார்கள். ஜெயிலுக்குப் போனால் என்ன கஷ்டம்? நான் ஜெயிலுக்குப்போன அந்த நாளில் மூத்திரச் சட்டியில்தான் தண்ணீர் குடிக்கவேண்டும். அந்த நாளில் நம்மவர்களுக்கு ஏ கிளாஸ் கிடையாது. நான் 6, 7 தடவை ஜெயிலுக்குப் போனவன்தான். இப்போது ஜெயில் வெகு சுகம். நான் இன்று ஜெயிலுக்குப் போனால் அதிக சுகமாக இருப்பேன். நான் இப்படி கஷ்டப்படுவதால் முன் இரண்டு தடவை சீக்கு ஆகிவிட்டேன். டாக்டர்கள் சும்மா இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் படி சொன்னார்கள். நான் இப்பொழுது ஜெயிலுக்குப்போனால் ஓய்வு எடுத்துக் கொண்டு சுகமாகத்தான் இருப்பேன்.

சத்தியமூர்த்தி ஜெயிலுக்குப்போய் வந்த கதை உங்களுக்குத் தெரியாதா? போனவருஷம் சில பார்ப்பனர்களுடன் நான் ஜெயிலில் இருந்தேன். அங்கே அக்காரவடிசில் புளியோதரையெல்லாம் நாங்கள் தினமும் செய்து சாப்பிட்டோம். ஜெயிலில் என்ன கஷ்டம் என்கிறேன். காங்கிரஸ் காரர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாவிட்டால் ஒரு கொடியைக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டியது; காந்திக்கு ஜே என்று கூச்சல் போட வேண்டியது; ஜெயிலுக்குப் போக வேண்டியது; போய் நன்றாய் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியது என்கின்ற சவுகரியம் இருந்தது.

~subhead

காங்கிரஸ் யோக்கியதை

~shend

காங்கிரசானது 1885 முதல் 1936 வரையில் உண்மையாகவே ஏழை களுக்கு என்ன நன்மை செய்தது? யாராவது சொல்லட்டுமே. எல்லாம் நஷ்டமும் கஷ்டமும் தான். ஆனால் நான் ஜஸ்டிஸ் கட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்லுகிறேன். அதனால் தேசத்தில் பார்ப்பனரல்லாத மக்களிடையில் அதிகம்பேர் படித்திருக்கிறார்கள். எத்தனையோ பேர்கள் உத்தியோகம் பெற்று அதனால் எத்தனையோ வகுப்புகள் முன்னுக்கு வந்திருக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் பெண்களும்கூட படித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இப்பொழுது எவ்வளவோ பார்ப்பனரல்லாதார் வக்கீல்களாக இருக்கிறார்கள். பி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகளாக வருவதற்கு முன்பெல்லாம் பார்ப்பன இளைஞர்களே படிக்கவும் இப்படிப்பட்ட பட்டங்கள் பெறவும் வசதி இருந்தது. அதனால் அவர்களே 100க்கு 100 பேர் படித்தவர்கள் ஆனார்கள். இதையெல்லாம் நீங்களே ஆராய்ச்சி செய்து பார்த்துக் கொள்ளலாம்.

~subhead

போக்கிரித்தனம்

~shend

காங்கிரஸ்காரர்கள் காலிகளுக்குப் பணம்கொடுத்தும் கூலிகளை ஏவி விட்டும் என்னை காங்கிரசிலிருந்து பணம் எடுத்துக் கொண்டதாகச் சொல்லிக் கூச்சல் போடச் சொல்லுகிறார்கள். தட்டிப் பேச ஆள் இல்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பது போல் இவர்கள் செய்கை இருக்கிறது.

நீ காங்கிரசிலிருந்து 5000 ரூ. எடுத்துக் கொண்டாய் என்கிறார்கள். நான் 5000 ரூ. எடுத்துக் கொண்டிருந்தால் அப்பொழுது சத்தியமூர்த்தி 10000 ரூபாயும் ராஜகோபாலாச்சாரி 20000 ரூபாயும் திருடி இருப்பார்கள். அதனால் தான் அவர்கள் அப்போதும் என்னை சும்மா விட்டு விட்டு இப்போதும் காங்கிரசுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லவேண்டும். பின் ஏன் அவர்கள் அந்த நாளிலேயே என்னைக் கேட்கவில்லை? நான் காங்கிரஸ் பணத்தை எடுத்துக் கொண்டால் அதை வட்டியோடு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னிடம் வசூல் பண்ணிக் கொள்ள முடியாதா? என்னால் கொடுக்க வழியில்லாவிட்டால் இப்பவே சோலை நாடாரையும், சௌந்திர பாண்டியனையும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லுகிறேன். எப்பொழுதுஎதில் என்று எந்தக் கழுதையாவது சொல்லட்டும்.

நான் காங்கிரஸ் பணத்தை எடுத்துக்கொண்டால் ராஜகோபாலாச்சாரி யாரும் காங்கிரஸ் பக்தர்களும் என்னை ஏன் காங்கிரசில் சேரும்படி இன்றும் கூப்பிடுகிறார்கள்? இதோ சத்தியமூர்த்தி முதலியவர்கள் பேசியதும், பத்திரிகையில் எழுதியதும், எனக்குக் கடிதம் எழுதினதும் பத்திரிகைகளைப் பாருங்கள். (கடிதம் பத்திரிகை படிக்கப்பட்டது) “வரதராஜுலு நாயுடு காங்கிரசில் சேர்ந்து விட்டார்; கல்யாணசுந்தர முதலியார் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; ஜியார்ஜ் ஜோசப் காங்கிரசில் சேர்ந்து விட்டார்; இனி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் பாக்கி” என்று சொல்லிக்கொண்டு அவர்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள். ஏன்? நான் இன்னும் ரூபாய் திருடி இவர்களுக்குப் பங்கு கொடுக்கவா?

~subhead

காலித்தனம்

~shend

எங்கள் கூட்டத்தில் இவர்கள் ஏன் காந்திக்கு ஜே என்று கூச்சல் போட வேண்டும்? இவர்கள் யோக்கியமும் நாணயமும் இல்லாமல் இருக்கிற பொழுது மற்றவர்கள் இவர்களிடத்தில் எப்படி யோக்கியமாயும் நாணயமாயும் நடந்து கொள்ள முடியும்? “பொப்பிலிக்குக் கண் பெரியது; ஈ.வெ. ராமசாமி தாடி வைத்துக் கொண்டிருக்கிறான்; ராமசாமி முதலியார் தேசத் துரோகி; ஷண்முகம் செட்டி தேசத்துரோகி” என்று இப்படி அவர்கள் நாணயமில்லாமல் பேசுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் இன்ன குற்றம் இருக்கிறது என்று உண்மையாக எடுத்துச் சொன்னால் அது ஆண்மையாகும்.

டாக்டர் சுப்பராயனைவிட, தோழர் சத்தியமூர்த்தியைவிட, மோசமான ஆள் ஜஸ்டிஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் சொல்லட்டும். பிறகு வேண்டுமானால் தோழர்கள் உபயதுல்லாவுக்கும் கிருஷ்ணசாமி பாரதிக்கும் மோசமானவர்கள் யார் என்று கேட்கலாம்.

கழுதை கழுத்தில் அட்டை எழுதிக் கட்டி நம் கூட்டத்தின் நடுவில் ஓட்டி விடுதல் கௌரவமுடையதா? கொஞ்சமும் யோக்கியம் இல்லை. அவர்கள் நம் கூட்டங்களில் கல்லையும் முட்டையையும் செருப்பையும் வீசினால் என்ன பிரயோஜனம்? நாம் கோழைகளா? அடிக்கு அடியும் உதைக்கு உதையும் கொடுக்க நம்மால் முடியாதா?

~subhead

செருப்படித் திருநாள்

~shend

சேலத்தில் ஒருவருக்கொருவர் இப்படி செருப்பால் அடித்துக் கொண்டதால் அது வழக்கத்துக்கு வந்து இப்பொழுது அங்கு செருப்படித் திருநாள் என்று திருவிழா நடக்கிறது. அதில் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக்கொள்ளுகிறார்கள். அதுபோல் இனி அரசியலிலும் நேருக்கு நேர் செருப்படித் திருநாள் ஏற்பட்டு விடும்.

~subhead

காங்கிரசுக்கு வரத் தயார்

~shend

இன்றைக்கு உண்மையில் ஏழைகளின் கஷ்டங்களைச் சொல்லி முடியாது. அவர்களுடைய நலங்களை யாரும் கவனிப்பதில்லை. ஏழை மக்களை மேல் ஜாதியார் துன்புறுத்துவது சொல்ல முடியாததாக இருக்கிறது. நாம் இதையெல்லாம் கவனித்தே காங்கிரசையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் யோக்கியன் காங்கிரசுக்கு வராதபடி செய்து கொண்டார்கள். பார்ப்பனன் அடிமையைத் தவிர மற்றவனுக்கு அங்கு இடமில்லை. ஆனால் ஒரு கேள்வி. தேர்தல்களில் வெற்றிபெற்றால் எல்லாப் பதவிகளிலும் எல்லோருக்கும் வீதாச்சாரம் சமசந்தர்ப்பம் தருகிறோம் என்று அவர்கள் சொல்லட்டும். இது தேசத்துரோகம் என்று மிரட்டினால், என்ன முடியும்? எங்களை மிரட்டுவது போல் சாகிபை மிரட்டு; பெங்கால் முஸ்லீம்களைப் போய்மிரட்டு. உடனே பல்லை உடைத்துக் கையில் கொடுப்பார். அதனால் தான் அவருக்கு வீதாச்சாரம் கொடுக்க சரித்திர சம்மந்தமான காரணம் இருக்கிறதென்று காந்தியார் சொல்லுகிறார். நமக்குக் காரணம் இல்லையா? சாகிபைவிட எங்களுக்குத்தான் அதிக காரணம் இருக்கிறது. சாகிப்புக் கொடுக்க சரித்திர சம்பந்தமான காரணம் (ஏடிண்tணிணூடிஞிச்டூ ணூஞுச்ண்ணிண) இருக்கிற தென்றால் எங்களுக்கும் இருக்கிறது. சாகிப்பு வந்து 1000 வருஷம் ஆகிறதென்றால் நீ எங்களை 4000 வருஷமாய் சூத்திரன் (தாசிமகன் வேசிமகன்) என்று சொல்லி ஒதுக்கி வைத்து விட்டாயே! சீக்கியர்க்கும் தாழ்த்தப்பட்டவர்க்கும்கூட வீதாச்சாரம் ஏற்படுத்தி ஆய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் ஏற்படுத்த கூடாது? இது என்ன பித்தலாட்டம்! நாம் எத்தனை நாளைக்கு மூடர்களாக இருந்து கொண்டு இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்போம்! நாம் 100க்கு 97 பேர் இருந்தும் இன்னும் வீதாச்சாரம் பெறவில்லை யென்றால் அது தேசத்துரோகம் தான்.

ஒரு குடும்பத்தில் 2 பேர் பங்காளிகள் இருந்துகொண்டு ஒருவன் மற்றவனுக்கு வீதாச்சாரம் கொடுக்கவில்லை யென்றால் வக்கீலாயிருக்கிறவன் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டுப்போய் விடுகிறான். இந்த 2 பேரும் சண்டை போட்டுக்கொண்டு அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. வீதாச்சாரம் கேட்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் முட்டையையும் கல்லையும் செருப்பையும் எறிந்தால் அவர்கள் வட்டியுடன் அதற்கு பதில் பெற்றுத்தான் தீர்வார்கள். சைமன் கமிஷன் வந்த காலத்தில் எங்களை தேசத்துரோகிகள் என்று கூப்பாடு போட்டவர்களெல்லாம் திருவல்லிக்கேணியை விட்டு ஓட்டமெடுத்தார்கள். அப்படிக் கூப்பாடு போடுகிறவர்களை இனிமேலும் அப்படித்தான் அனுப்புவார்கள். எல்லா வகுப்பாருக்கும் இடம் தராமல் எல்லா வகுப்பாருக்கும் அவரவர்க்கும் உள்ள உரிமைகளைக் கொடுக்காமல் தடங்கலெல்லாம் செய்து கொண்டு “நாங்களும் நீயும் ஒரு தாய் வயிற்று மக்களானதால் எல்லாவற்றையும் நாங்கள் அனுபவித்தால் என்ன நீ அனுபவித்தால் என்ன” என்று பேசி மக்களை ஏமாற்றாமல், ஒருவரோடொருவர் சமாதானமாயும் சமரசமாயும் வாழ உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு நான் இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். (கரகோஷம்)

குறிப்பு: 27.09.1936 ஆம் நாள் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை. (04.10.1936, 11.10.1936 குடி அரசு தொடர்ச்சி)

குடி அரசு சொற்பொழிவு 18.10.1936

 

You may also like...