சம்பாஷணை

– நாரதர்

ஓர் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ரெயிலில் போகும் போது நடந்த சம்பாஷணை

(பார்ப்பனர் சாஸ்திரியார், பார்ப்பனரல்லாதார் கந்தையா)

சாஸ்திரியார்: கந்தையா எங்கு போகிறீர்.

கந்தையா: அது யார் சாஸ்திரியா?

சாஸ்திரி: ஆம், ஆசீர்வாதம் (மார்பிற்கு நேரே உள்ளங்கையை வளைத்துக்கொண்டு)

கந்தையா: நான் உம்மை ஆசீர்வாதம் கேட்கவில்லை. அது உமக்கே இருக்கட்டும், எது வரைக்கும் பிரயாணம்?

சாஸ்திரி: என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்? பிராமணாள் ஆசீர்வாதம் இலகுவில் எல்லோருக்கும் கிடைக்குமா?

கந்தையா: எனக்குப் பிராமணனென்றும், மற்றவர்களென்றும், ஆசீர்வாதமென்றும், சாபமென்றும் இருப்பதாகவும், அதன் பெயருக்குத் தக்கபடியான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும் நம்பிக்கையில்லை. அப்படியிருப்பதெனச் சொல்லுபவர்களையும், நம்புபவர்களையும் நான் பொருட்படுத்துவதுமில்லை.

சாஸ்திரி: அப்படியானால் இதுவெல்லாம் உலகத்தில் எப்படி தொன்று தொட்டு நடந்து வருகிறது.

கந்தையா: உலகம் என்று எதைச் சொல்லுகிறீர்? நீர் வசிக்கும் இடத்தையா? மற்றுமுள்ள 5 கண்டங்களின் நிலப்பரப்புகளையும் சேர்த்தா?

சாஸ்திரி: மற்ற விஷயமெல்லா மெதற்கு? முதலில் நாம் வசிக்கு மிடத்தின் நடப்பைக் குறித்தே சொல்லும் பார்ப்போம்.

கந்தையா: உலகமே இன்னதென்று அறியாத உமக்குப் பிராமணா ளென்றும், ஆசீர்வாத மென்றும் வீண் ஆராவாரமெதற்கு?

சாஸ்திரி: நான் என்ன ஒன்றும் அறியாதவனென்று நினைத்துக் கொண்டீரோ?

கந்தையா: உலகமே அக்கிரகாரத்துக்குள்ளிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற உம்மோடு ஏன் வீண் வாதம்.

சாஸ்திரி: என்ன நீர் நம்மை நிரக்ஷரகுஷி என்று நினைத்து விட்டீர் போலிருக்கிறது. நான் இந்த 20, 25 வருஷங்களாக எவ்வளவோ சிரமப்பட்டு வீடு வாசல், தாய் தகப்பன் முதலியவர்களை எல்லாம் விட்டு விட்டு தன்னந்தனியாக இருந்து காவிய நாடக அலங்காரம், வியாகரணம், தர்க்கம், மீமாம்சம், வேதாந்தம் முதலிய சாஸ்திரங்களை சாங்கோபாங்கமாக ஓதி பரீக்ஷையில் முதற்றரமாகத் தேரி பரிசுகளும் கூட பெற்று வித்வ சிகாமணி என்ற பட்டமும் பெற்றிருக்க இப்படி நினைத்து விட்டீரே.

கந்தையா: உங்கள் வாசிப்பில் உலகத்துக்கு ஏதாவது இலக்கணம் சொல்லப்பட்டிருக்கின்றதா? அது விளங்கும் படி யாராவது கற்பித்திருக்கிறார்களா?

சாஸ்திரி: உலகம் உலகம் உலகத்தையே கட்டியழுகிறீர். உலகத்தைப்பற்றி பூகோள ககோள சாஸ்திரங்களில் விசதமாகச் சொல்லி யிருக்கிறது. அதைப்பார்த்தால் எல்லாம் தெரிந்துவிடும். அதென்ன ஒரு காவியம் வாசிக்கும் சிறுவன் பார்த்தாலும் தெரிந்துவிடும். நீர் அதை ஒரு பிரமாதமாக நினைத்துக்கொண்டு வாதிக்கிறீரே.

கந்தையா: நான் உமக்குத் தெரியுமா என்றுதானே கேட்டேன். எதிலிருக்கிறது, யாருக்கெல்லாம் தெரியும் என்று கேட்வில்லையே. நீர் தர்க்க சாத்திரமும், மற்ற சாத்திரமும், சாங்கோபாங்கமாக வாசித்த வித்வசிகாமணியாயிற்றே. இப்படித்தான் உம்ம சங்கதிகளிருக்கும். எதற்காக வீண் வாதம்? போதும் சும்மாயிரும்.

சாஸ்திரி: என்னைய்யா இருக்க இருக்க மிகவும் கேவலமாக எண்ணி விட்டீர். தர்க்க சாஸ்திரத்தைப்பற்றி உமக்கென்ன தெரியும்? எல்லாவற்றையும் அலட்சியமாக நினைத்து விட்டீரே.

கந்தையா: உம்முடைய தர்க்கமும், வியாக்யானமும், வேதாந்தமும், காவிய நாடகாலங்காரமும் எனக்கு வேண்டாம். அதையும், அதை வாசித்த உம்மையும் நீரே பெருமை பாராட்டிக்கொள்ளும். எனக்கு அவை ஒன்றும் வேண்டாம்.

சாஸ்திரி: ஆனால் எதுதான் உமக்கு வேண்டியது?

கந்தையா: மக்களுக்குள் ஏற்றத்தாழ்வை யுண்டாக்கி அவற்றால் சில சோம்பேறிக் கூட்டத்தார் வயிறு வளர்த்து வருவது முதலில் ஒழிந்து, எல்லோரும் ஒரு குடி மக்களென்ற உணர்ச்சியும் ஒற்றுமையும் வளர்ந்து வாழவேண்டும்.

சாஸ்திரி: ஜாதி பேதமே கூடாதென்கின்றீரா?

கந்தையா: ஆமாம் (அழுத்தம் திருத்தமாக)

சாஸ்திரி: ஓ, ஓ! நீர் தற்காலம் கலியின் மகிமையைக் காட்டி மெய்ப்பிக்க பிறந்த பாஷாண்ட மதத்தினரோ! சரி, சரி. உம்மோடு பேசியதற்கும், பார்த்ததற்கும் பிராயச்சித்தம் செய்து கொள்ளச் சொல்லியிருக்கிறது?

கந்தையா: எதற்காக?

சாஸ்திரி: நீங்கள் எல்லோரும் பூர்வ ஜென்மத்தில் சண்டாளர்களாக இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பார்ப்பனனைப் பார்த்து அவனையும், அவன் கஷ்டப்பட்டு வாசித்தவைகளையும் கேவலமாக நினைப்பீர்களா?

கந்தையா: நீர் என்னை முன்ஜென்மத்தில் சண்டாளனென்று சொல்லும் சமயத்தில் எனக்குச் சுயமரியாதையும், பலமும், வீரமும் இருக்கும்போது அத்தகைய சொல்லையும் கேட்டு உம்முடைய விஷயத்தில் எனக்குக் கோபம் வராமல் பரிதாபமுண்டாகிறதே, இதற்கென்ன காரணம் என யோசித்தால் அந்தக்காலத்தில் நீர் எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாம். புத்திர வாத்சல்யம் உம்முடைய விஷயத்தில் அனுதாபம் காட்டவேண்டி வருகிறது.

சாஸ்திரி: என்னடா சூத்திரப்பயலே! என்னைச் சண்டாளனுக்கு மகனென்று சொல்லி விட்டதோடல்லாமல் என் விஷயத்தில் வாத்சல்யமாம், பரிதாபமாம், அநுதாபமாம். நீயா எனக்குத் தகப்பன்?

கந்தையா: நான் தகப்பனானால் நானிறந்தால் என் சொத்தெல்லாம் உமக்குத்தானே சேரும். நீர் கலியாண மாகாமலிருந்தாலும், காயலானாலும், பட்டினி கிடந்தாலும் அவைகளைப்பற்றி எனக்குத்தானே அதிக கவலை? இப்படியிருக்கிற என் மீது உமக்கேன் இவ்வளவு வருத்தம்? என்னைச் சொன்னது போல் உம்மைச் சண்டாளனென்றும் சூத்திரனென்றும் இழிவையுண்டாக்கும் சொற்களையாவது பேத புத்தியையுண்டாக்கும் பதங்களையாவது சொன்னேனா? எதற்காகப் பொங்கி வழிகிறீர்?

(சாஸ்திரியார் பிறகு தன் குற்றத்தை யுணர்ந்து வருந்துவதாகச் சொல்லி தன்னிருப்பிடம் போய்ச் சேர்ந்தார்.)

பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் அக்டோபர் 1936

~front

குடி அரசு – 1936

You may also like...