காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
வருகிறது, வருகிறது, வரப்போகிறது, வரப்போகிறது என காங்கிரஸ் காரர்களால் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை கடைசியாக வந்தேவிட்டது. பெரிய தேச பக்தர்களும் அரசியல் ஞானிகளும் பாஷ்யகாரர்களும் வெகுநாள் மூளைக்கு வேலை கொடுத்து அவ்வறிக்கையைத் தயார் செய்தார்களாம். அவ்வாறு வருந்தி உருவாக்கப்பெற்ற அறிக்கையோ இன்னந் தெரியமுடியாத விகார ரூபமுடையதாயிருக்கிறது. அதன் திணை பால் முதலியவைகளை நிர்ணயம் செய்வது வெகு கஷ்டமாக இருக்கிறது. “ஜஸ்டிஸ்” திட்டத்தின் சாயல் ஒருபக்கம் சாடையாகத் தெரிகிறது. சோஷியலிஸ்டு மணமும் ஒருபக்கம் வீசுகிறது. எல்லா கட்சியாரையும் திருப்திப்படுத்தும் இந்திரஜால வித்தையும் அறிக்கை முழுதும் நேர்முகமாயும் மறைமுகமாகவும் தாண்டவமாடுகிறது.
சென்ற புதன்கிழமையன்று சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தோழர் சத்தியமூர்த்தி பேசியபோது “அதிதீவிர அபேதவாதியான பண்டித ஜவஹர்லால் முதல், பதவியேற்பதை ஆதரிக்கும் நான் வரையில் எல்லாரும் இந்த தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்கள்” எனப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர் தற்பொழுது ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி இருந்துவருகின்றனர். தற்கால காங்கிரஸ்வாதிகளை (1) அபேதவாதிகள், அபேதவாதத்தை எதிர்ப்போர், வெளிப்பார்வைக்கு அபேதவாதிகள் போல் நடிப்போர் (2) பூரண சுயேச்சை வாதிகள், குடியேற்ற நாட்டு அந்தஸ்துவாதிகள், (3) வரப்போகும் சீர்திருத்தத்தை எதிர்ப்போர், ஆதரிப்போர் (4) வகுப்புத் தீர்ப்பை ஆதரிப்போர், எதிர்ப்போர், (5) பதவி ஏற்பதை ஆதரிப்போர், எதிர்ப்போர் எனப் பல தினுசுகளாக பிரிந்து விடலாம். காங்கிரசுக்குள் பிளவில்லை யென்பதைக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் எல்லாம் இப்பொழுது ஒற்றுமையுடையவர்கள் போல் பாவனை செய்துகொண்டாலும், செயலில் இறங்கத் தருணம் வரும் போது அவர்கள் எல்லாம் ஒத்துழைப்பார்கள் என்று நம்பமுடியுமா? தென்னாட்டு காங்கிரஸ் போக்கை அறிந்தவர்களுக்கு அந்தக் கூட்டத்தார் ஒத்துழைப்பது அசாத்தியமென்று விளங்காமல் போகுமா? எனினும் ஒரு மாரீச அறிக்கையை காங்கிரஸ் பிரகஸ்பதிகள் தயார் செய்திருக்கிறார்கள்.
இந்திய மக்களை ஏய்ப்பதற்கு இதைவிட ஆடம்பரமான ஒரு அறிக்கையை எவருக்கும் தயார் செய்யவே முடியாது. இத்தகைய ஏமாற்று அறிக்கை தயார் செய்வதில் காங்கிரஸ் பிரகஸ்பதிகளே நிபுணர்கள் என்பதை அவர்களது எதிரிகளும்கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அறிக்கையை ஒருமுறை மேற்பரப்பாகப் பார்ப்பவர்களுக்குக்கூட அதைத் தயாரித்தவர்களுக்கு கடுகத்தனையாவது அனுபவஞானம் இல்லை யென்பது நன்கு விளங்கும்.
“வெளியாட்களால் சுமத்தப்படுவதும், இந்திய மக்களின் பரிபூரண சுதந்திரத்தைக் குறைப்பதும், இந்தியாவின் அரசியல், பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் உரிமை முற்றிலும் இந்தியருடையதே என்பதை அங்கீகரிக்காததுமான எந்த அரசியலமைப்பையும் ஒப்புக்கொள்ள முடியாது”
என்று காங்கிரஸ் மகாசபை ஏற்கனவே தீர்மானித்திருக்கிறதாம்.
இதை உலகம் அறிந்துதான் இருக்கிறது; வரப்போகும் சீர்திருத்த அரசியலை வகுத்த பிரிட்டிஷாரும் அறிந்துதான் இருக்கிறார்கள். வரப்போகும் சீர்திருத்தத் திட்டம் காங்கிரஸ் லக்ஷ்யத்துக்குப் பொருத்தமற்றதானால் அவர்கள் செய்ய வேண்டியதென்ன?
அவர்களது லக்ஷ்யத்துக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தை தயார் செய்ய வேண்டியதே அவர்களது வேலை.
அந்த வேலையைச் சட்டசபைக்குள் சென்று செய்ய முடியாது. மந்திரி பதவிகளைக் கைப்பற்றினாலும் செய்ய முடியாது. ஏன்? வரப்போகும் அரசியல் திட்டம் கண்டிப்பான பாதுகாப்புகள் நிறைந்த சிக்கலான திட்டம் என காங்கிரஸ்காரர்களே கூறுகின்றார்கள்.
காங்கிரஸ் லட்சியத்தை நிறைவேற்றி வைக்கச் சக்தியில்லாத காங்கிரஸ் வாலாக்கள், தேச க்ஷேமத்துக்கு அநுகுணமாக உழைக்க முன் வருகிறவர்களை ஏற்கனவே தேசத்துக்குப் பல நன்மைகள் செய்து அனுபவம் பெற்றவர்களை அரசியல் வேலை செய்யும்படி விட்டு, மரியாதையாக ஒதுங்கிக் கொள்வதே யோக்கியப் பொறுப்பாகும்.
அப்படிச் செய்தால் மானம் போய்விடுமே காங்கிரஸ் மாண்டுவிடுமே உலகம் சிரிக்குமே காந்தி பெயர் கெட்டுவிடுமே என்ற பொய்யான அசட்டு அபிமானத்தினால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்யப் போகிற வேலைகளை கிளிப்பிள்ளை மாதிரி பாமர மக்களுக்கு எடுத்துக் கூறி ஏமாற்ற முயல்வது யோக்கியப் பொறுப்பாகுமா!
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பாதான்.
ஆனால் மீசை முளைக்க வேண்டுமே!
சுயராஜ்யம் கிடைத்த பிறகு காங்கிரஸ்காரர் கூறும் வேலைகள் மட்டுமல்ல, அவைகளைவிட இரட்டிப்புப் பங்கு வேலைகளையும் செய்துவிடலாம். சுயராஜ்யம் பெற வழி என்ன என்பதுதான் கேள்வி.
சட்டசபைகள் மூலம் சுயராஜ்யம் பெற முடியாதென்று காங்கிரஸ்காரர் கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள்.
எனவே, சுயராஜ்யம் பெற அவர்கள் வேறு வழி தேடவேண்டும். அது சாத்தியமில்லையானால் காங்கிரஸ் கடையை மூடிவிட்டு அவரவர்கள் பாட்டைப்பார்க்க வேண்டும். அனுபவ சாத்தியமில்லாத வேலைகளை செய்யப் போவதாய்க் கூறி பாமரமக்களை ஏமாற்றி நாட்டைக் குட்டிச் சுவராக்குவது மகா பாதகச் செயலாகும்; தேசத்துரோகம் மட்டுமல்ல ஜனத் துரோகமுமாகும். சுயராஜ்யம் கிடைத்தபிறகு அவர்கள் செய்யப்போவதாகக் கூறும் வேலைகளை ஜஸ்டிஸ் கட்சியார் வரப்போகும் சீர்திருத்தத்தை கொண்டே சாத்தியமான வரை செய்யக்கூடுமென்று கூறுகிறார்கள். காங்கிரஸ் திட்டத்தையும் ஜஸ்டிஸ் திட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை விளங்கும்.
உண்மையில் இரண்டு திட்டங்களுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை. வித்தியாசம் வகுப்பு விஷயம் ஒன்றில்தான்.
காங்கிரஸ்காரர் வகுப்புத் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்.
வேறொரு திருப்திகரமான திட்டம் ஏற்படும் வரை வகுப்புத் தீர்ப்பை ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரிக்கிறார்கள். மற்றபடி இரண்டு திட்டங்களுக்கும் பாராட்டக்கூடிய வித்தியாசங்களே இல்லை.
வித்தியாசம் ஏதாவது உண்டானால் அது பாஷை நடையிற்றான். காங்கிரஸ்காரர் பொதுமக்களை ஏய்க்கும் படாடோப நடையில் தமது திட்டத்தைத் தயார் செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார் காரியவாதிகளானதினால், பகட்டில்லாத பொருளமைதியுடைய எளிய நடையில் தமது திட்டத்தை தயார் செய்திருக்கிறார்கள்.
சுயராஜ்யம் வந்தபிறகு காங்கிரஸ்காரர் செய்யப் போவதாக கூறும் காரியங்களை ஜஸ்டிஸ் கட்சியார் இப்பொழுதே செய்ய முடியுமென்று கூறுகிறார்களே அது சாத்தியமா? அவர்களை நம்பலாமா? எனச் சிலர் கேட்கக்கூடும். ஆம், அது ஆணித்தரமான கேள்விதான்.
அவர்களை நம்பலாமா? நம்பக்கூடாதா? அவர்கள் கூறுவது சாத்தியமா? என்பதை அவர்கள் இதுகாறும் செய்துள்ள வேலைகளைப் பரிசீலனை செய்து பார்த்து முடிவு செய்துவிடலாம்.
அவர்கள் செய்த வேலைகள் சர்க்கார் ரிக்கார்டுகளில் இருக்கின்றன. அவைகளை எவருக்கும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அவைகளை அறிய ஜோசியர்கள், பாஷ்யகாரர் உதவியும் தேவையில்லை.
சென்ற 15 வருஷ காலமாக அவர்கள் வாக்காளர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிவைக்க தவறியதே இல்லை. தற்கால அரசியல் அமைப்புப்படி செய்யமுடியாத காரியங்களைச் செய்வதாக அவர்கள் பொது மக்களிடத்தில் வீண் நம்பிக்கை உண்டு பண்ணவும் இல்லை. ஏமாற்ற வுமில்லை.
சுயராஜ்யம் நடத்த, நாட்டையும் மக்களையும் படிப்படியாகப் பக்குவம் செய்தால் பக்குவதசை யடையும் போது, சுயராஜ்யம் அழையாமலே வந்துவிடும் என்பது ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கை.
அந்தக் கொள்கைப்படியே அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அவ்வாறு வேலை செய்ததினாலேயே மாகாண இரட்டையாட்சிக்கு பதிலாக மாகாண ஆட்சி கிடைத்திருக்கிறது.
அதில் பல பாதுகாப்புகள் இருப்பது மெய்யே. வரப்போகும் மாகாண சுய ஆட்சியை புத்திசாலிகளான ஜஸ்டிஸ் கட்சியார் நடத்தினால் “பாதுகாப்புகள்” தேய்ந்து மாய்ந்து போவது நிச்சயம்.
அப்பால் கலப்பற்ற மாகாண ஆட்சி வருவதும் உறுதி.
காங்கிரஸ்காரர் விரும்பும் சுயராஜ்யத்தை கொண்டுவர, ஆற்றலும் அரசியல் ஞானமும் உடைய அரசியல் கட்சி இந்தியாவில் ஒன்றுண்டானால், அது ஜஸ்டிஸ் கட்சியே என எந்த கோபுரத்தின் மீது நின்றும் நாம் உறுதிகூற தயாராயிருக்கிறோம்.
கத்தியின்றி, இரத்தமின்றி, கிளர்ச்சியின்றி, புரட்சியின்றி இந்தியர்கள் மனத்து ஜனநாயக உணர்ச்சியையும் சுதந்தர சுயமரியாதை யுணர்ச்சிகளையும் தோற்றுவித்த பிரிட்டிஷாரின் ஆதரவை இழக்காமலே “சுயராஜ்யம்” கொண்டுவர ஜஸ்டிஸ் கட்சியாருக்குத்தான் ஆற்றலுண்டென உறுதி கூறவும் தயாராயிருக்கிறோம்.
இந்தியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி போன்ற மோசமான கட்சி இல்லவே இல்லை. காங்கிரஸ் தோன்றிய நாள் முதல் நாளிதுவரை கிளர்ச்சி செய்வதே அதன் வேலையாக இருந்து வந்திருக்கிறது.
காந்தியார் அரசியலில் புகும்வரை காங்கிரஸ், சட்டவரம்புக்கு வுட்பட்டுக் கிளர்ச்சி செய்து வந்தது. காந்தியார் பிரவேசித்தது முதல் சட்டவரம்பை மீறிக் கிளர்ச்சி செய்யத் தொடங்கிற்று.
காந்தி பிரவேசத்துக்கு முன் “பெட்டிஷனிங் பாடி” (மனுச் செய்யும் கூட்டம்) ஆகவிருந்த காங்கிரசாவது தன் கிளர்ச்சியின் பயனால் பார்ப்பனர் களுக்குச் சில பெரிய உத்தியோகங்களைத் தேடி கொடுத்தது.
காந்தி கைப்பற்றிய காங்கிரஸ் பல “தியாகங்கள்” செய்திருந்தாலும் அடைந்த பலன் பூச்சியமே. காந்தீய காங்கிரசைப்போல் முழுத் தோல்வி யடைந்த அரசியல் ஸ்தாபனம் உலகத்திலேயே இல்லை.
காந்தி காங்கிரசில் கால் வைத்தது முதல், போடப்பட்ட காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாவது நிறைவேறவில்லை.
ஒரு கோடிரூபாய் அளித்தால் சுயராஜ்யம் தருவதாக பனியா காந்தி பேரம் பேசினார். அவர் கேட்டபடியே கொடுத்தோம். அவர் தந்தது என்ன?
ஒத்துழையாமை என்ன வாயிற்று? சட்டமறுப்பு என்ன வாயிற்று? சத்தியாக்கிரகம் என்ன வாயிற்று? பகிஷ்காரக் கதை என்ன வாயிற்று? உப்புப் போர் என்ன வாயிற்று? தீண்டாமையொழிப்பு என்னவாயிற்று? கிராமப் புனருத்தாரணம் என்ன வாயிற்று?
எல்லாம் முழுத் தோல்வி; சாமானியத் தோல்வியா? மானங்கெட்ட தோல்வி. ஆகவே அரசியலையே “காந்தி” தலைமுழுகிவிட்டார்; ஒரு நாலணாக் காங்கிரஸ்வாலாக இருக்கக்கூட அவர் விரும்பவில்லை. அவ்வளவுக்கு வீழ்ச்சியடைந்துவிட்டது. காங்கிரஸ் அரசியல் வேலை கண்ணாம்பூச்சி விளையாட்டல்ல; அரசியல் ஞானம் வேண்டும்; அனுபவம் வேண்டும்; பழக்கம் வேண்டும்; சகிப்புத்தன்மை வேண்டும்; நிதான புத்தி வேண்டும். ஆனால் இந்தச்சரக்குகள்தான் காங்கிரஸ்காரரிடமில்லை. எனவே அரசியல் வேலை செய்ய முக்கியமாக ஆக்க வேலைகள் செய்ய அவர்களுக்கு லாயக்கில்லை. அதற்கு அவர்களது பூர்வ சரித்திரமே அத்தாட்சி. எனவே அவர்களது தேர்தல் அறிக்கையும் பயனற்றது. அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கும் திட்டங்களை அவர்களால் நிறைவேற்றி வைக்கவும் முடியாது.
“காந்தி ஒரு லக்ஷ்யவாதி; பகற்கனவு காண்பவர்; மதக் கிறுக்கர் அதனாற்றான் காங்கிரஸ் வேலை குட்டிச்சுவராயிற்று. இப்பொழுது அவர் காங்கிரசில் இல்லை. தற்காலத் தலைவர்கள் அனுபவசாலிகள்; காரியவாதிகள்; சொன்னபடி நடத்த ஆற்றலுடையவர்கள். ஆகவே தேர்தல் அறிக்கையை நம்பலாம்” எனச் சிலர் சொல்லக்கூடும்.
ஆனால் ஆழ்ந்து நோக்கினால் தற்காலத்தவர்கள் காந்தியை விட மோசமானவர்கள் செல்லாக் காசுகள் என்பது நன்கு விளங்கும்.
காந்தியார் குட்டு வெளிப்பட 15 வருஷத்துக்கு மேல் பிடித்தது. தற்காலத் தலைவர்கள் குட்டோ எட்டு மாதத்துக்குள் வெளிப்பட்டு விட்டது. ஸ்வராஜ்யம் பெறுவதற்கு ஸ்தல ஸதாபனங்களைக் கைப்பற்றுவது முதல் வேலை என்று தற்கால காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டார்கள். சில ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றவும் செய்தார்கள். முடிவு என்னவாயிற்று. “அப்பாடா! போதும் போதும்” என்று ஆகிவிட்டது. மேற்கொண்டு ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்று கூட ஆலோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. வேலூர் உபதேர்தலில் காங்கிரஸ்காரர் போட்டி போட வேண்டாமென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் தீர்மானிக்கும் படியும் ஆகிவிட்டது. கோவை காங்கிரஸ் கமிட்டியார் ஜில்லா போர்டு தேர்தலில் கலந்துகொள்ளத் தேவையில்லை யென்றும் முடிவுகட்டி விட்டார்கள்.
கேவலம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நடத்த யோக்கியதை யில்லாத தற்காலத் தலைவர்களாசுயராஜ்யம்அதுவும் கலப்படமற்ற பூரண சுயராஜ்யம் கொண்டு வரப்போகிறார்கள்?
கூரையேறிக் கோழி பிடிக்காத குருக்கள், வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா! தென்னாட்டு மக்களே யோசித்துப் பாருங்கள்!
குடி அரசு தலையங்கம் 30.08.1936