தீண்டாமையும் இஸ்லாமும்
இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்.
இந்த நிலைமையில் தீண்டாதார் என்று இழிவாய் கருதப்படும் மக்கள் ஜாதிபேதத்தையும் தீண்டாமையையும் முக்கியத்துவமாய்க் கொண்ட இந்து மதத்தைவிட்டு அதில்லாத மதத்துக்குப் போவதால் என்ன கெடுதியென்று கேட்கின்றோம்.
முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்.
பெண்கொடுப்பது வாங்குவது கர்னாடகக் காலம் ஆகப்போகிறது. புதிய உலகில் அவனவனுக்குப் பிடித்தது தானாகவே ஜோடி சேரப்போகிறது. அப்படியே சில இடங்களில் சேர்ந்தும் வருகிறது.
ஆனால் ஒரு தீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒரு கூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம்.
இஸ்லாம் மதத்தில் பெண்கள் மூடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அது மத சம்பிரதாயமல்ல. ஏனெனில் இந்து சமூகத்திலும் சிறிது பணமோ வலிமையோ சந்தேகமோ இருந்தால், பெண்கள் மூடித்தான் வைக்கப்படுகிறார்கள். இது பெண் அடிமையைப் பொறுத்ததாகும். தீண்டாமை, அதாவது ஆண் அடிமை தீர்ந்த உடன் பெண் அடிமை தீரப்போகிறது. அதற்காகப் போர் நடக்கப் போகிறது. அந்தக் காலம் வெகுதூரத்தில்இல்லை. ஆதலால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் வைப்பது தகுந்த நியாயம் சொல்ல முடியாத பயங்காளித்தனமே ஆகும்.
ஆதலால் இதுவரை தீண்டாமை விலக்குக்காக சமூக சீர்திருத்தக்காரர் களும், அரசியல் கிளர்ச்சிக்காரரும் செய்த சகலவித முயற்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் தோல்வியே அடைந்துவிட்டார்கள்.
அம்பேத்கார் உபதேசமே இப்போது தீண்டாமை ஒழிவதற்கு உண்மையான சாதனமாய் இருக்கிறது. சுமார் 6,7 கோடி பேர்கள் ஏற்கனவே அனுபவித்துப் பார்த்துவிட்டார்கள்.
தீண்டாதவர்கள் இஸ்லாமாகிமுஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம்.
இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரீதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.
– குடி அரசு துணைத�் தலையங்கம் 09.08.1936
~cstart
பன்னிரண்டாவது ஆண்டு
~cmatter
“குடி அரசு” பத்திரிகைக்கு பதினோரு ஆண்டு நிரம்பி பன்னிரண்டாவது ஆண்டின் பன்னிரண்டாவது மலரின் முதல் இதழாக இவ்வாரப் பத்திரிகை பிரசுரமாகின்றது.
“குடி அரசு” இதுவரை அதாவது இந்த பதினொரு வருஷ காலமாக என்ன காரியம் செய்திருக்கிறது என்று கேட்கப்படுமானால் முதலில் ஒரு பதில் தைரியமாகச் சொல்லுவோம்.
சரியானாலும் தப்பானாலும் தனக்கு சரியென்று தோன்றியதை தயவு, தாக்ஷண்ணியம், பயம், பாரபட்சம் இல்லாமல் தைரியமாய் வெளிப்படுத்தி வந்திருக்கிறது.
மற்றொரு காரியம் என்ன வென்றால் பத்திரிகையில் வாசிப்பவர்களைப் பின்பற்றாமல் பத்திரிகையில் உள்ளதைப் பின்பற்றும்படி வாசகர்களை செய்து வந்திருக்கிறது.
உலகில் பத்திரிகைகள் இரண்டு விதம். அவை தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால் மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று.
மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்ப வேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று.
முதலாவது தரம். பத்திரிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இருக்க முடியாது. தயவு, தாக்ஷண்ணியம், பயம், பாரபட்சம் ஆகியவை இல்லாதத் தன்மையில் இருக்க முடியாது என்பதோடு சமயத்துக்குத் தகுந்தபடி சரிப்படுத்திக் கொள்வதன் மூலம் அவைகளுக்கு எவ்வித கஷ்டமும், தொல்லையும், நஷ்டமும் இருக்க முடியாது.
ஆனால் இரண்டாவதாகக் குறிப்பிட்டதான அதாவது கொள்கைகளுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு பல தொல்லையும், கஷ்டமும் நஷ்டமும் ஏற்படுவதோடு வெகு சுலபத்தில் எதிரிகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இம்மாதிரி பத்திரிகைகள் பொதுஜன செல்வாக்குக்கு விரோதமாகவும் வேலை செய்யவேண்டி ஏற்பட்டு விடுவதால் பொதுஜனங்கள் ஆதரவும் இல்லாமல் இருக்க வேண்டியும் வரும். ஆதலால்
உலகத்தார் உண்டென்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
என்னும் மூதுரைக் கேற்ப நமது “குடி அரசு” பத்திரிகையானது உலக மக்களின் சமுதாயத் துறையில், பழக்க வழக்கத்தில் பலஆயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வந்த நம்பிக்கைகளையும், எண்ணங்களையும், காரியங்களையும் முரட்டுத் தனமாய் எதிர்த்தும், மறுத்தும், கண்டித்தும், வைதும் எழுதி வந்ததில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி இருக்க வேண்டும் என்பதை வாசகர்களே சிறிது சிந்தித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.
ஆரம்பத்தில் “குடி அரசு” தென்னாட்டில் செல்வாக்கும் ஒற்றுமையும், பலவிதத்தும் தந்திரமும் சூழ்ச்சித் திறமும்கொண்ட வகுப்பாராகிய பார்ப்பனர்களின் தொல்லையில் இருந்து மற்ற பார்ப்பனரல்லாத பொது மக்களை விடுதலை பெறச் செய்ய வேண்டும் என்னும் கொள்கைக்காகவே உழைத்தது. அதன் பயனாய் அப்பார்ப்பனர்களின் ஆயுதமாகிய வைதீக மென்னும் துறையில் புராணம், சாஸ்திரம், மதம், கடவுள் என்பனவாகி யவைகளின் புரட்டுகளை வெளியாக்கவேண்டிய காரியத்துக்கு உழைத்தது. அதோடு கூடவே பார்ப்பனர்களது லௌகீகம் என்னும் துறையில் காங்கிரஸ் தேசீயம் சுயராஜ்யம் என்னும் ஆயுதங்களின் புரட்டுகளையும் வெளியாக்க மிகவும் பாடுபட்டு வந்தது. இவ்விருவகைத் தொண்டின் பயனாய் “குடி அரசு”க்கு பாமர மக்களாலும் படித்தவர்கள் என்பவர்களில் சுயநலவாதிகளாலும் சமயோசிதவாதிகளாலும் பெரிய கஷ்டமும் நஷ்டமும் தொல்லையும் தாங்க முடியாத நிலையில் அனுபவிக்க வேண்டி வந்தது. எப்படி எப்படியோ மகத்தான எதிர்ப்புக்களுக்கிடையும் சொல்ல முடியாத கஷ்ட நஷ்டங்களிடையும் 11 வருஷ காலம் “குடி அரசு” வாழ்ந்து வந்து 12 வது வயதில் புகுந்துவிட்டது.
இந்த 11 வருஷ வாழ்வில் “குடி அரசு” சமூகத்துறையில் இதுவரை யாரும் தைரியமாய் வாயால் கூட சொல்லப் பயப்படும்படியான காரியங்கள் பல காரியத்தில் நடைபெறும்படியாகவும் மனப்பான்மையில் ஒரு பெரும் புரட்சி உணர்ச்சி உண்டாகும்படியாகவும் செய்து வந்திருக்கிறது. அரசியல் துறையிலும் காங்கிரசின் புரட்டை வெளியாக்க “குடி அரசு” செய்து வந்த வேலையானது கன்யாகுமரி முதல் இமயமலைவரை காங்கிரஸ்காரர்களை திக்குமுக்காடச் செய்து வந்திருப்பதுடன் காங்கிரசார் மக்களை ஏமாற்ற செய்து வந்த சூழ்ச்சிகள், தந்திரங்கள் ஒவ்வொன்றிலும் பக்கா தோல்வியே அடையும்படியாகச் செய்து தோழர் காந்தியார், ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் கூட நிலைமையை சமாளிக்க முடியாமல் “ராஜிநாமா” செய்யும் படியும் “ஓய்வு” எடுத்துக் கொள்ளும்படியும் செய்து வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அகில இந்திய காங்கிரஸ் கொள்கைகளையும் திட்டங்களையும் கூட நிர்ணயிக்கும் விஷயத்தில் பயப்படும் படியான நிலைமையை “குடி அரசு” உண்டாக்கி வந்திருக்கிறது என்று சொல்லலாம். இன்றைய காங்கிரசின் பரிதாபகரமான நிலைக்கு காரணம் “குடி அர”சின் சளையா உழைப்பும் பின்வாங்கா முயற்சியுமேயாகும்.
அதுவும் “குடி அரசு” வின் கொள்கைக்கு “குடி அரசு”வைவிட வேறு உதவிப் பத்திரிகை இல்லை என்கின்ற நிலையில் தன்னந்தனியாக இருந்தே இவ்வளவு காரியமும் செய்து வந்திருக்கிறது. இவ்வளவு காரியத்துக்கும் “குடி அரசு” ஆனது இந்த 11 வருஷ காலமாய் எவ்வளவோ கஷ்டமும், பொருளாதார நஷ்டமும் அடைந்து வந்திருந்தாலும், ஒரு ஒத்தைச் சல்லியாவது பொது ஜனங்களிடமிருந்து வரியோ, உதவித்தொகையோ கேட்காமலும் எதிர்பாராமலும் இருந்துகொண்டே இந்தக் காரியங்களை செய்து வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
இவ்வளவு பெரிய காரியங்கள் “குடி அரசு” பத்திரிகை செய்வதற்கும் அதன் கொள்கைகளைப் பரப்ப பிரசாரத்துக்கும் உதவி செய்துவந்த தோழர்கள் சிலர் உண்டு என்பதோடு அதனை ஆதரித்து வந்த வாசகர்களையும் நாம் மறந்துவிடவில்லை. அவர்களுக்கு “குடி அரசு” நன்றி செலுத்த கடமைப்பட்டதேயாகும்.
குடி அரசு தலையங்கம் 16.08.1936