காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல்
இப்போதுதான் புத்தி வருகிறது
காங்கிரஸ் 1920ம் வருஷம் வரை அதாவது சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடந்து சீர்திருத்தம் பெறுவது என்கிற கொள்கையின் மீது கிளர்ச்சி செய்து பதவி அதிகாரம் முதலியவை பெறுவது என்கின்ற திட்டத்தில் வேலை செய்து வந்தவரை நிர்வாகம் அதிகமான ஊழல் இல்லாமல் நடந்துவரத் தக்கதாய் இருந்தது. ஆனால் அந்த நிருவாகம் பார்ப்பனரல்லாதார் இயக்க மூலம் பார்ப்பனரல்லாதார் கைக்கு மாறிய உடன் இனி சட்டப்படி ஒழுங்குக்கு கட்டுப்பாட்டு யோக்கியமான முறையில் கிளர்ச்சி செய்தால் தங்கள் கைக்கு நிர்வாகம் வரமுடியாது என்றும் தங்கள் வகுப்பார்களே ஏகபோகமாய் அனுபவிக்க முடியாது என்றும் கருதிய பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு புதிய கொள்கை ஏற்படுத்தி அதாவது சட்டம் மீறுவது, சட்டம் மறுப்பது, சர்க்கார் உத்திரவுகளை அலட்சியம் செய்வது முதலிய கொள்கைகளை ஆதரவாய் கொண்டு ஒழுங்கு விரோதமான முறைகளைக் கையாண்டு கிளர்ச்சி செய்வது என்பதற்கு ஏற்ற திட்டத்தில் கிளர்ச்சி செய்து வந்ததின் பயனாய் காங்கிரசில் கட்டுப்பாடு நாணயம் என்பன அடியோடு பறந்து விட்டதுடன் சூழ்ச்சியும், தந்திரமும், பொய்யும், ஏமாற்றுமே ஆட்சி புரியத் தொடங்கிவிட்டன. இதன் பயனாகவே காங்கிரசுக்கு யோக்கியமான மனிதர்களோ தொண்டர்களோ கிடைப்பதே அரிதாய்விட்டது.
காங்கிரசின் கீழ் நேரான கணக்கு வைக்கவோ, காங்கிரசுக்கு ஆக வசூல் செய்யப்பட்ட தொகைகள் நாணயமாய் கையாளப்படவோ முடியாமல் போனது ஒருபுறமிருந்தாலும், காங்கிரஸ் ஸ்தாபனத்தின் நிர்வாகமும் சிறிதும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் தலைவிரி கோலமாய் ஆளுக்காள் தலைவர்களாய் தடியெடுத்தவன் தண்டக்காரன் என்கின்ற முறையில் நடந்து வந்து பொதுஜனங்களின் ஒழுக்கத்தையும் நாணயத்தையும் கூட பாதிக்கும்படியான கேவல நிலைக்கு வந்துவிட்டது.
இவை ஒருபுறமிருந்தாலும் மத உணர்ச்சிபோல் புகுத்தப்பட்ட தேசிய உணர்ச்சி என்பதானது பாமர மக்களுடையவும், படித்த மக்களுடையவும் பகுத்தறிவைப் பாழ்படுத்தி பொதுத்தேர்தல்கள் சிலவற்றில் ஞானமில்லாமல் நடந்துகொள்ள வேண்டியதாய் ஏற்பட்டதின் பயனால் சில பொதுத் தேர்தல்களில் காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டு சில பதவிகளும் ஸ்தாபனங்களும் அவர்கள் கைக்கு போக நேர்ந்து விட்டது என்பது யாவரும் அறிந்ததாகும். அப்படி அவர்கள் கைப்பற்றிய ஸ்தாபனங்களும் ஸ்தானங்களும் அனேகமாய் ஒன்றுகூட பாக்கியில்லாமல் எல்லாமுமே ஊழலாகவும் கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமலும், ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் லட்சியம் செய்யப்படாமலும் தலைவிரி கோலமாய் நடந்து ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தைப் பாழாக்குவதோடு ஸ்தல ஸ்தாபன உரிமைகளையும் பாழாக்கி வருகிறது.
தவிரவும் காங்கிரஸ்காரர்கள் இந்த 10, 16 வருஷ காலமாய் பஹிஷ்கார முறையிலும் அழிவு முறையிலும் சட்டமறுப்பு முறையிலுமே வேலை செய்துவந்தவர்களானதால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவர்களிடமிருப்பதற்கு ஞாயமில்லை என்பது ஒரு புறமிருக்க, காங்கிரசின் கொள்கையானது தகுதியான நபர்கள் அதில் இருக்க இடமில்லாமல் செய்துவிட்டதால், எப்படியோ நிர்வாகம் காங்கிரசார் கைக்கு வருவதாய் இருந்தாலும், தகுதியும், அனுபோகமுமுடையவர்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு இல்லாமலேயே போய்விட்டது. இவற்றைப்பற்றியெல்லாம் நாம் அந்தந்த சமயங்களில் விரிவாய் எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செய்து வந்திருந்தும், காங்கிரஸ் தலைவர்கள் அவற்றைச் சிறிதும் இட்சியம் செய்யாமல் “எப்படியாவது காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று ஆனால் போதும்” என்று கருதி ஆங்காங்கு நடை பெற்ற தேர்தல்களில் காலிகளையும், கூலிகளையும் மான வெட்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்க தகுதியும் அனுபவமும் அவசியமும் இல்லாத ஆட்களையும் அந்த ஸ்தாபனங்களில் பங்கா இழுப்பதற்குக் கூட அமர்த்த தகுதியில்லாத ஆட்களையும் பிடித்து தேர்தலில் (ஏனென்றால் யோக்கியமும் தகுதியும் உடையவர்கள் அவர்களில் கிடைக்காததாலும் தகுதியும் அனுபவம் உள்ளவர்கள் காங்கிரசில் சேர மறுத்ததாலும்) நிறுத்தி தேர்தலில் அனேகவிதமான மனதறிந்த பொய்ப்பிரசாரமும், விஷமப்பிரசாரமும் செய்து ஓரளவுக்கு வெற்றிபெற்றார்கள் என்றாலும் இப்போது அவற்றின் பயனை அனுபவிக்கிறார்கள்.
இதன் பயனாய் காங்கிரசுக்காரர்களுக்கு யாதொரு கெடுதியும் இல்லை யென்றாலும் சில கூலிகளுக்கும் காலிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த பதவியும் பயனும் ஏற்பட்டது என்றாலும், அவற்றின் நிர்வாகம் பாழானதுடன் நாணயம் ஒழுக்கம் இல்லாமல் நடப்பதின் பயனாய் பொது மக்களுக்கும் எவ்வளவோ அசௌகரியங்களும் நஷ்டங்களும் ஏற்படுகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்திய சட்டசபை தேர்தலும் ஜில்லாபோர்டு முனிசிபாலிட்டி தேர்தலும் வந்த காலத்திலெல்லாம் நாம் சட்டசபைக்கு யோக்கியர்களாய் பார்த்து நிறுத்த வேண்டும் என்றும் ஸ்தலஸ்தாபனங்களில் கட்சி வேற்றுமை பாராட்டாமல் தகுதியும் அனுபவ ஞானமும் ஒழுக்கமும் உள்ளவர்களையே பார்த்து நிறுத்த வேண்டும் என்றும் தலையால் அடித்துக்கொண்டோம். அப்பொழுது மிகவும் பொறுப்பும் அபாரஞானமும் வாய்ந்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கூட சிறிதும் யோசனையும் பொறுப்பும் இன்றி ஒரே வார்த்தையில் அவற்றிற்கு சமாதானம் சொல்லிவிட்டார்.
அதாவது மதவிஷயத்தில் “எப்படிப்பட்ட அயோக்கியனாகவும், பாதகனாகவும், சண்டாளனாகவும் இருந்தாலும் ஒரு தடவை ராமா என்று சொன்னவுடன் எப்படி அவ்வளவு இழிவும், பாதகமும், பாவமும் தொலைந்து அவன் மோட்சத்துக்கு அதிகாரியாய் விடுவானோ, அதுபோல் காங்கிரசிலும் ஒருவன் எவ்வளவு அயோக்கியனாகவும் மடையனவாகவும், காலியாகவும், கூலிக்காகவும், சுயநலத்துக்காக எதையும் விற்று வாழ்பவனாயும் இருந்தாலும் காங்கிரசுக்கு நாலணா கொடுத்து கையெழுத்துப் போட்டுவிட்டால் யோக்கியனாகி விடுவான், மேதாவி ஆகி விடுவான்” என்று சொல்லி கடைந்தெடுத்த அயோக்கியர்களையும், காலிகளையும் கூட சேர்த்து எலக்ஷன் போர் நடத்தி ஒரு அளவுக்கு வெற்றிபெற்றார்.
அப்படிப்பட்ட அந்த வெற்றியின் முரசு ஒருவாரமே ஒலித்தது. ஆனால் அதன் ஊழல் நாற்றம் இந்த ஒன்றரை வருஷகாலமாக இந்தியா பூராவையும் சூழ்ந்து ஒவ்வொரு காங்கிரசுக்காரனும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியிருப்பது மாத்திரமல்லாமல் கண்களையும் மூடிக் கொண்டு தலைக்கு முக்காடிட்டு முகத்தையும் மூடிக்கொண்டு நடக்க வேண்டியதாக ஆகிவிட்டது.
இப்பொழுதுதான் “ஹிந்து”, “சுதேசமித்திரன்”, “தமிழ்நாடு” போன்ற தேசீயப் பத்திரிகைகளுக்கும் கூட புத்திவந்து “வெற்றி கொஞ்சமாக இருந்தாலும் அதன் பயன் யோக்கியமானதாகவும் நாணயமானதாகவும் இருந்தால் போதும் என்றும் கட்சியையே பிரதானமாய் எண்ணாமல் யோக்கியதையையும், நாணயத்தையும் பிரதானமாய் கருதவேண்டும்” என்றும் உபதேசம் செய்யப் புறப்பட்டுவிட்டன.
கட்சித் தலைவர்களான தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்களும் கூட தாங்கள் அனுபவமில்லாமல் அவசரமாய் செய்துவிட்ட காரியங்களால் இவ்வித ஊழல்கள் நேர்ந்ததென்றும் இனி இந்த அனுபவத்தைக் கொண்டு ஜாக்கிரதையாய் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துத் தங்கள் தவறுதல்களை ஒப்புக்கொண்டதோடு சமீபத்தில் நடக்கப்போகும் வேலூர் ஜில்லாபோர்டு மெம்பர்கள் தேர்தலுக்குக் காங்கிரசின் பேரால் யாரும் போட்டிபோடக் கூடாது என்று அதிகார தோரணையில் கட்டளை இட்டு விட்டார்கள்.
ஆனாலும் அந்தத் தேர்தல்களின் மூலம் வாழ்க்கை நடத்தும் காலிகளுக்கும், போலிகளுக்கும் இது தங்கள் ஜீவனோபாயத்தைத் தடுக்கும் கட்டளையாய் இருப்பதால் காங்கிரசின் பெயரைச் சொல்லி தேர்தல் நடத்தி வயிறு கழுவ வேண்டிய நிமித்தம் மறுபடியும் தேர்தலில் காங்கிரசின் பெயரை உபயோகிக்கப் பார்க்கிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் காங்கிரசுக்கு மானமும் கட்டுப்பாடும் உடைய ஆட்கள் கிடைக்காமல் ஒரு வேளைக் கஞ்சிக்கு எதையும் விற்கும் காலிகளே அதிகமாய் கிடைக்கக்கூடியதாய் இருப்பதால் காங்கிரசில் ஒழுக்கமும் மானமும் காண்பது அரிதாய்விட்டது.
இதற்கு யார் என்ன செய்ய முடியும்? தோழர் ராஜகோபாலாச்சாரியார் “தலை”விதியை அவர் செய்த கர்மத்தின் பயனை அனுபவிக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் அபார மூளை சக்தி எப்படியும் “வெற்றி”யை உண்டாக்கிவிடலாம். ஏனென்றால் அவர் “வெற்றி”யில் கண்ணுள்ளவர்; அதற்கேற்ற மூளையுள்ளவர். ஆனால் அவ்வெற்றியின் பயன் தோல்வியைவிட கேடானதாகவும், ஊழலானதாகவும் முடிகின்றதே தவிர வேறில்லை. இதுவரை அப்படியே ஆகி வந்திருக்கிறது.
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்பே காங்கிரசின் யோக்கியதை என்ன? என்பதும் காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போய் சாதிக்கக் கூடியது என்ன? என்பதும் பொதுமக்களுக்கு விளங்கியதோடு மறுதேர்தலுக்கு முகத்தைக் காட்டமுடியாதபடி சிலர் தேர்தல் மேடையிலிருந்து ஒழிந்து கொள்ள வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது.
ஜில்லா போர்டு தேர்தல்களைப் பற்றியோவென்றால் காங்கிரஸ் வெற்றி பெற்ற எல்லா ஜில்லா போர்டு ஸ்தாபனங்களுக்கும் கமிட்டி நியமித்து அதன் ஊழல்களையும் கட்டுப்பாடற்ற தன்மைகளையும் விசாரித்து நீதி செலுத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டியதாகிவிட்டன.
இந்த காரியங்கள் எல்லாம் காங்கிரசுக்காரர்களின் அனுபவமற்ற தன்மையையும் ஞானமற்ற தன்மையையும் ஒழுக்கமற்ற தன்மையையும் காட்டவில்லையா என்று கேட்கின்றோம்.
ஆனால் ஒரு விஷயத்தில் நமக்கு மகிழ்ச்சியே. அதாவது தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் முதல் யோக்கியமான தென்று காட்டிக்கொள்ளும் தேசீயப்பத்திரிகைகள் வரையில் இந்தத் தவறுதல்களை ஒப்புக்கொண்ட விஷயத்தைப் பற்றியேயாகும்.
என்றாலும் இதிலும் நமக்கு ஒரு சந்தேகம். அதென்னவென்றால் இந்த தலைவர்களும், பத்திரிகைகளும் தங்களுக்கு உண்மையாகவே புத்தி வந்து இந்த தப்பிதங்களை ஒப்புக்கொண்டார்களா, அல்லது இப்பொழுது நேர்ந்து விட்ட ஊழல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக்கொள்ள மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி தற்கால சாந்தியாக “தவறிவிட்டோம். இனிமேல் எங்களுக்கு புத்திவந்து விட்டது” என்று சொல்லுகிறார்களா என்பது நமக்கு விளங்கவில்லை.
சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல் சம்பந்தமாக ஆட்களை சென்னைக் காங்கிரஸ் கமிட்டி பார்லிமெண்ட் போர்டார் என்பவர்கள் தெரிந் தெடுத்த விஷயம் இப்போது சென்னை மாகாணம் பூராவுமே சிரிப்பாய் சிரிக்கிறது.
இதிலிருந்தே தோழர் ஆச்சாரியாரும் பத்திரிகைகளும் தங்களுக்கு புத்தி வந்தது என்று வார்த்தையில் காட்டிக்கொண்டார்களே தவிர காரியத்தில் காட்டிக்கொண்டவர்களாக இல்லவே இல்லை என்பது தெரிகிறது.
பொதுவாக சென்னையில் இருந்தும் வேறு சில இடங்களில் இருந்தும் வந்த தகவல்களின்படி பார்த்தால் பார்லிமெண்டு போர்டு மெம்பருக்கோ அல்லது அவர்களிடம் செல்வாக்கு இருக்கும் அங்கத்தினருக்கோ பணம் கொடுத்தால் எப்படிப் பட்டவர்களும் போர்டாரால் தெரிந்தெடுக்கப்பட்டு விடலாம் என்பதாக நினைக்க வேண்டி இருக்கிறது.
இதுபோலவே வேலூர் முதலிய இடங்களிலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
இதுபோன்ற காரியங்களில் பயனை அனுபவித்த பிறகும் இந்த மாதிரியான காரியங்கள் திரும்பத் திரும்ப நடப்பதானால் இவர்களுக்குப் புத்திவந்ததாக யார்தான் சொல்லக்கூடும்.
இதைப்பற்றி நாம் எழுதும்போது காங்கிரஸ் ஊழலாகிவிட்டதே என்கின்ற கவலை மீது நாம் எழுதவில்லை. அது ஊழலாகிவிட்டது என்று 10,12 வருஷங்களுக்கு முன்னமேயே உணர்ந்து கொண்டோம்.
பின்னை ஏன் அதைப்பற்றி எழுதுகிறோம் என்று சொன்னால் அந்த ஊழலின் தீங்கு பொதுவாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பதையும் அதனால் பொது ஜனங்களுக்கு அரசாங்கத்தால் ஏற்பட வேண்டிய காரியங்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கு ஆகவே ஒழிய வேறில்லை.
ஆகையால் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் மற்றும் உண்மையில் கவலைகொண்ட பொதுநல சேவைத் தோழர்கள் யாராவது காங்கிரசில் இருந்தால் அவர்களும் சேர்ந்து மற்ற தேர்தல்கள் நெருங்குவதற்கு முன்பாகவே கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து இம்மாதிரி ஊழல்களும் காரியக் கெடுதிகளும் இனிமேல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தக்கது செய்ய முன்வருவார்களா என்று கேட்கின்றோம்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஜஸ்டிஸ் கட்சியையோ, பீபிள்ஸ் பார்ட்டியையோ அடுத்த தேர்தல்களில் தோற்கடித்துவிட (முடியாது) முடியும் என்றே வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு என்ன செய்வது என்பதும் அதன்பிறகு என்ன ஏற்படும் என்பதும் அவ்வளவு சுலபத்தில் முடிவு செய்யக்கூடிய காரியமல்ல. மறுபடியும் வழுக்கி விழுகவேண்டியதுதான். ஒரு மைல் ஏறவும் 3 மைல் சறுக்கி கீழே வரவுமாய் இருந்தால் எப்பொழுது லட்சியத்தை அடைய முடியும். தேர்தல் வெற்றியேதான் நமது லட்சியமா? வெற்றியில் பயனென்ன என்று கருதவேண்டாமா?
இனி ஆச்சாரியார் பொதுஜனங்களிடம் முன்போல் பணம் பறிக்க முடியாது. பணக்காரன் தான் எலக்ஷனில் நிற்கமுடியும். ஏழைகள் ஸ்தாபனமென்று காங்கிரசை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்காய் பணம் வசூலித்து பாழாக்கப்பட்டுவிட்டது. அவ்வளவு பணத்திலும் ஒரு காசு கூட நாளை எலக்ஷனுக்கு பயன்படாமல் அடுத்த தேர்தலுக்கு காங்கிரசு சார்பாய் பணக்காரர்களையும், தந்திரக்கார பார்ப்பனர்களையும் தான் நிறுத்த வேண்டியதாய் இருக்கிறது. தந்திரக்காரப் பார்ப்பனன் காங்கிரசில் இருந்தால் என்ன? ஜஸ்டிஸிலோ, பீபிள்ஸ் பார்ட்டியிலோ இருந்தால் என்ன? எல்லாம் ஒன்று தானே. அதுபோல் பணக்காரனும் எதில் இருந்தால் என்ன, கால் ரூபாய் கொடுத்துக் கையெழுத்துப் போட்டதால் கருப்பு நாய் வெள்ளை நாய் ஆகிவிடுமா? சாயம் பூசி வைப்பதால் சாயம் எவ்வளவு நேரம் நிற்கும், அழிந்தாலும் மறைந்துவிடும்; உதிர்ந்தாலும் வேறு முளைத்துவிடும்.
ஆகையால் உண்மையான ஆட்கள் 100க்கு 10 பேர் இருந்தாலும் அவர்களைக் கொண்டு உள்ளும் புறமும் நாணயமான போர்செய்தால் கட்டாயம் ஏழை மக்களுக்கு நன்மை உண்டாகலாம். ஆதலால் இனியாவது ஆச்சாரியார் கவனிப்பார் என்று கருதுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 09.08.1936