காலித்தனத்தின் வளர்ச்சி

 

காங்கிரஸ் காலித்தனத்துக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது.

தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆகிவிட்டது என்பது போல் கூட்டங்களில் செருப்பும் முட்டையும் போட்டு வெளி முனிசிபாலிட்டிகளில் (திருச்சியில்) செருப்பும் முட்டையும் போட்டு இப்போது சென்னை கார்ப்பரேஷனிலேயே செருப்புகளும், முட்டைகளும் வந்து விழுக ஆரம்பித்து விட்டன.

ஆகவே இனி சென்னையைப் பொறுத்தவரை சட்டசபை மண்டபத்தில் வந்து விழுகவேண்டியதுதான் பாக்கி என்று சொல்ல வேண்டிய நிலைமையை எய்தி விட்டது.

காங்கிரசுக்காரர்கள் மகாத்மா என்பவர் தலைமையில் 3, 4 கோடி ரூபாய் செலவில் 40, 50 ஆயிரம் பேர் ஆண் பெண் அடங்க “அடி உதைபட்டு சிறை சென்று தியாகம் செய்த” தியாக புத்தியில் காங்கிரசால் படிப்பிக்கப்பட்ட படிப்பு கார்ப்பரேஷனில் மீட்டிங்கில் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் வந்து விழுந்த பெருமைதான்.

காங்கிரசுக்காரர்கள் இந்த இடங்களில் மாத்திரமல்லாமல் மற்றும் அநேக இடங்களிலும் மந்திரிகள் கூட்டங்களில் இப்படியே நடந்து வருகிறார்கள். நாமக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை கட்டி ஓட்டினதும் திண்டுக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை கட்டி ஓட்டினதும் சில இடங்களில் மந்திரிகளை அவமானப்படுத்தி கூட்டங்களில் செய்ததும் பொள்ளாச்சி திண்டுக்கல் கூட்டங்களில் தோழர்கள் அழகிரிசாமி பொன்னம்பலம் முதலியவர்கள் பேசும்போது முட்டைகள் எறிந்ததுமான காரியங்கள் காங்கரசு யோக்கியமான முறையில் வாழ முடியாது என்றும் வெற்றி பெற முடியாது என்றும் கருதும்படியான நிலையை அடைந்து விட்டதைத்தான் காட்டுகிறது. இவ்வளவுதானா என்றால் இதற்குமேல் போய் விட்டார்கள் என்பதற்கும் உதாரணங்கள் காட்டலாம்.

என்னவென்றால் பொள்ளாச்சிக்கு தோழர் ஈ.வெ. ராமசாமி, பொன்னம்பலம், டி.ஜி. வெங்கிடாசலம் ஆகியவர்கள் போனபோது கூட்டத்துக்கு தலைமை வகிக்க ஒத்துக்கொண்டிருந்த முனிசிபல் வைஸ்சேர்மென் அவர்களுக்கு ஒரு வசவும் பயமுறுத்தலும் கொண்ட கடிதம் எழுதி தபாலில் அனுப்பினார்கள். அவர் அதை போலீசில் ஒப்படைத்து விட்டார். தோழர் ஈ.வெ. ராமசாமி 2 ந் தேதி பொள்ளாச்சிக்குச் சென்ற உடன் ஒரு கடிதம் போஸ்டுமேன் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தக்கடிதம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படியும் ஆரம்பித்து விட்டார்கள். 1927, 28, 29 ஆகிய வருஷங் களில் இப்படிப்பட்ட கடிதங்கள் தினம்தோறும் வந்து கொண்டிருந்தன.

அதுபோலவே இப்போதும் ஆரம்பமாகி இருக்கிறது. இவற்றைக் கண்டு ஒரு வகையில் நாம் திருப்தி அடைகின்றோம். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தங்கள் நிலை மோசமானதென்றும் இம்மாதிரியான அயோக்கியத்தனங்களாலும் இழிதன்மைகளாலும் அல்லாமல் தாங்கள் வாழமுடியாது என்றும் உள்ள நிலைமையை அடைந்து தாங்கள் அடையப் போகும் தோல்வியையும் தெரிந்து விட்டார்கள் என்பதேயாகும்.

குத்துவது, சுடுவது, செருப்பால் அடிப்பது என்பனபோன்ற காரியங் களால் பயமுறுத்தினால் அதற்கு ஆக யார்தான் பயந்து கொள்வார்கள். ஜெயிலுக்குப் போனவனும் போலீசாரால் அடிபட்டவனும் பெரிய தியாகியாகி பாக்கட்டில் இருந்த பணத்தை திருடியவனானாலும் தேசபக்தனாகி ஓட்டுகளை பெறும்போது செருப்பில் அடிபடுகின்றவர்கள் இனி எவ்வளவு பெரிய தியாகிகளாகவும் தேசபக்தர்களாகவுமாகி ஓட்டுப் பெறமாட்டார்கள் என்று கேட்கின்றோம்.

அதிகம் தடவை ஜெயிலுக்குப் போனவன் அதிக தேச பக்தர் ஆவது போல் அதிகம் தடவை செருப்பால் அடிபடுகிறவனும் அரும் பெரும் தேசபக்தராகிற காலம் வந்துவிட்டது போல் இருக்கிறது. தலைவர் ஸ்தானங்களுக்கும் தேசபக்த ஸ்தானங்களுக்கும் செருப்படி படுவதும் ஒரு யோக்கியதாபக்ஷமாகிவிடும் என்றுதான் எதிர்பார்க்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது நமது காங்கிரசின் திட்டங்கள்.

குடி அரசு துணைத் தலையங்கம் 04.10.1936

You may also like...