கருப்புக்கொடி
சென்னை சுற்றுப் பிரயாணத்தில் பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் பஹிஷ்கார பிரசுரங்கள் வினியோகங்களும் பல இடங்களில் கருப்புக் கொடிகள் பிடித்தலும் பல இடங்களில் “பார்ப்பன கங்காணியே திரும்பிப்போ” என்கின்ற கோஷமும் மற்றும் இதுபோன்ற பஹிஷ்காரக் குறிப்பும், அதிருப்திக் குறிகளும் நடந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றன.
இவற்றைப் பார்ப்பனப் பத்திரிகைகள் மறைத்தும் திரித்தும் கூறி வந்திருந்தாலும், எப்படியோ விஷயங்கள் வெளியாகி எல்லாப் பத்திரிகைகளும் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ, இஷ்டப்பட்டோ இஷ்டப் படாமலோ வெளிப்படுத்தி அவற்றின் மீது தங்களது அபிப்பிராயக் குறிப்புகளும் வெளியாக்கி விட்டன.
கருப்புக்கொடியானது, தமிழ் நாட்டில் பண்டிதர் ஜவஹர்லாலுக்கு மாத்திரம் பிடிக்கப்பட வில்லை. தோழர்கள் காந்தியார், ராஜேந்திரபிரசாத் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்கெல்லாம் பிடிக்கப்பட்டன. அவற்றின் காரணமும் அவ்வப்போதே சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது காங்கிரஸ் தலைவர்கள் இங்கு காங்கிரசின் பேரால் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக பிரசாரம் செய்யவும், பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்து அவர்களின் விஷமப் பிரசாரத்துக்கு ஆக்கமளிக்கவும் வருகிறார்கள். ஆதலால் அவற்றிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் காரணங்கொண்டே சற்றேறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள எல்லா சுயமரியாதைக்காரர்களும் பஹிஷ்கரித்து வந்திருக்கிறார்கள். அது போலவே இப்போது தோழர் ஜவஹர்லாலும் பார்ப்பனர் கையாளாகவே தமிழ்நாட்டுக்கு வந்தார். ஜஸ்டிஸ் கட்சியை வைதார். வழக்கம் போலவே அவரும் பஹிஷ்கரிக்கப்பட்டார். இதில் புதுமை காண யாருக்கும் இடமில்லை. ஆனால் தங்களை புதுமையாக்கிக் கொண்டவர்களுக்கு இவ்விஷயம் புதுமையாகக் காணப்படுவதில் ஆச்சரியமிருக்க நியாயமில்லை என்பதோடு அப்படிப்பட்ட புதுமைகளை அவர்களைத் தவிர மற்ற யாவரும் லக்ஷியமாய் கருதப் போவதுமில்லை.
நிற்க, கருப்புக் கொடியும் பகிஷ்காரமும் என்பது காங்கிரசுக்காரர்கள் கண்டுபிடித்ததென்றும் அதைப்பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கிறார்கள் என்றும் எழுதி சிலர் பெருமையும் திருப்தியும் கொள்ளுகிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் கருப்புக்கொடியும் பஹிஷ்காரமும் அவர்களுக்கென்றே ரிஜிஸ்டர் செய்யப்பட்டு விடவில்லை.
இஷ்டப்படாதவர்கள் எவரும் தங்களுக்கு இஷ்டப்படாத எவரையும் பஹிஷ்கரிக்க பிரிட்டிஷ் ஆட்சி சட்டம் குறுக்கிடவில்லை.
ஆதலால் அதை யார் மறுத்தாலும் பஹிஷ்காரம் செய்ய காங்கிரசுக் காரர்களுக்கு இருப்பது போன்ற உரிமை எவருக்கும் இருந்து வருகிறது.
இந்தியரை பஹிஷ்கரிப்பது ஒழுங்கல்ல என்பது சிலரது வாதமாய் காணப்படுகிறது. இந்தியர்களை பகிஷ்கரிக்கும் வேலையும், “காங்கிரசுக்காரர்கள் தான் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்” என்பதே அவர்களுக்கு நாம் அளிக்கும் பதிலாகும்.
சமதர்ம வீரரை பஹிஷ்கரிக்கக் கூடாது என்பது வேறு சிலரின் வாதம். இந்த வாதம் சமதர்மக்காரன் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்களும் சொல்லுகிறார்கள் என்பதோடு சமதர்மம் வந்தால் தங்கள் நிலைக்கே ஆபத்து என்று கூறுகிறவர்களும் சொல்லுகிறார்கள். பண்டிதரின் சமதர்மம் வெண்டைக்காய் சமதர்மமாகும். “சமதர்மம் தான் எல்லாவற்றிற்கும் வழி” என்று சொல்லுவதுடன் அவரது சமதர்மம் முடிந்து விடுகிறதே தவிர அதற்கு அவரது திட்டம் என்ன என்பதைப்பற்றி இதுவரை ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அன்றியும் தன்னிடம் சமதர்மத்துக்கு யாதொரு திட்டமும் இல்லை என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டார். அதோடு பணக்கார வியாபாரிகளுக்கும், பூமிக்கார ஜமீன்தாரர்களுக்கும் “நான் சமதர்ம விஷயமாய் எவ்வித காரியமும் செய்யப் போவதில்லை” என்று வாக்கும் கொடுத்து விட்டார். இந்நிலையில் அவரை எந்த வாயைக் கொண்டு சமதர்மவாதி என்று அழைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
பகுத்தறிவு வாதியை பஹிஷ்கரிக்கலாமா என்பது மற்றும் சிலரின் வாதம். பண்டிதரின் பகுத்தறிவுக்கு அவர் எலும்பை கங்கையில் போட்டு செத்துப் போனவர்களுக்கு மோட்சம் கொடுத்ததே சாட்சி போதாதா என்கிறோம்.
நமது நாட்டுக்கு வந்த ஒரு விருந்தாளியை பஹிஷ்கரிக்கலாமா என்பது இனி ஒரு சிலரின் ஆவலாதியாய் இருந்து வருகிறது. ஜவஹர் எந்த முறையில் யாருக்கு விருந்தாளி? நமக்கா? பார்ப்பனர்களுக்கா? விருந்து உண்டு போக வந்தாரா? தமிழ் மக்களை வைது விட்டுப்போக வந்தாரா? என்ன உத்தேசத்தில் என்ன காரியத்துக்காக வந்து திரிகிறார்? என்பவைகளை யோசித்துப் பார்த்தால் அவர் நமக்கு விருந்தாளியா பகையாளியா என்பது நன்றாய் விளங்கும்.
ஆகவே தோழர் ஜவஹர்லாலை தமிழ் மக்கள் பஹிஷ்கரித்தது மிகவும் சரி என்பதை யாவரும் உணரலாம்.
ஆனால் காங்கிரசுக்காரர்கள் பஹிஷ்கரிக்கும் முறையில் நாம் பஹிஷ்கரிக்கவில்லை. காங்கிரஸ்காரர் பகிஷ்காரமானது பழஞ் செருப்பு வீசுவது, முட்டை எறிவது, கழுதை கழுத்தில் அட்டை கட்டி விரட்டுவது ஆகிய முறைகளைக் கொண்டதாகும். இந்த மூன்று காரியமும் இப்பொழுது சுயமரியாதைக்காரர் பஹிஷ்கரித்த முறையைவிட மிகவும் சௌகரியமும் சுலபமுமான காரியமேயாகும். ஆனாலும் மனிதத்தன்மையையும் வீரத்தையும் உத்தேசித்து சு.ம. காரர்கள் அக்காரியங்கள் கண்டிப்பாகக் கூடாது என்று நிர்ப்பந்தமாய் நிறுத்திவிட்டார்கள்.
அவர்கள் அப்படிச் செய்ய வேண்டுமென்று கருதியிருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு கிடைக்கும் கழுதைகள், செருப்புகள், முட்டைகள் ஆகியவற்றைவிட அதிகமாகவே கிடைத்திருக்கும். ஆனால் சு.ம. காரர்களுக்கு பொறுப்பும், மனிதத் தன்மையும், மானமும் இருப்பதால் காணாமல் செய்து விட்டு கோழைப் பட்டம் சம்பாதித்துக்கொள்ள அவர்களுக்கு இஷ்டமில்லை.
ஆகையால் பகிஷ்காரத்தை நேர்மையாகவும் ஆண்மையாகவும், சாந்தத்துடனும் நடத்தினார்கள். கலகமேற்பட்டால் சர்க்காரார் பஹிஷ் காரத்தை நிறுத்தி விடுவார்கள் எனக் கருதி மிகவும் சாந்தத்துடனும் பொறுமையுடனும் நடத்தினார்கள். பார்ப்பனக் கூலிகளும் அடிமைகளும் தங்களாலான அளவுக்கு கலகமும் செய்தார்கள், மறைக்கவும் செய்தார்கள். ஆனாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் பார்ப்பனரல்லாதார் என்று தங்களை கருதிக்கொள்ளும் சிலர் பஹிஷ்காரத்தை கண்டித்துப் பார்ப்பனரிடம் கூலி பெறுகிறார்களே இதைக் காணத்தான் நமக்கு பரிகாசமாய் இருக்கின்றது.
சமீப காலத்தில் சேலத்தில் சு.ம. தொண்டர்களை காங்கிரஸ் காலிகள் அடித்தார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் செல்லுமிடங்களில் காங்கிரஸ் காலிகள் கூட்டங்களில் குழப்பம் செய்தார்கள். கழுதைகள் கழுத்தில் அட்டை கட்டி விட்டார்கள். கூட்டத்தில் முட்டைகளையும் செருப்புகளையும் வீசினார்கள். சென்னை கார்ப்பரேஷன் மீட்டிங்கில் தோழர் அலமேலு மங்கைத் தாயாரம்மாள் மீது முட்டை எறிந்து அந்தம்மாள் அவர்களின் உயர்ந்த சேலைகளை அசிங்கப்படுத்தினார்கள். அந்தம்மாள் பக்கம் செருப்பை எறிந்தார்கள்.
இதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளோ அவர்களது அடிமைப் பத்திரிக்கைகளோ வாய்திறக்கவில்லை. தங்களை சு.ம. வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சமய சஞ்சீவிகளும் வாய் திறக்க வில்லை. அந்த அம்மாள் அவர்களே செருப்பையும் முட்டையையும் வீசிய காந்திக் குல்லாய் அயோக்கியனை கைப்பிடியாய் பிடித்துக்கொடுத்தும் நன்றியும் நாணயமுமற்ற மேயர் கவனியாமல் அயோக்கியனுக்கு உதவியாய் இருந்தார்.
ஆகவே இம்மாதிரி காரியங்கள் பதிலுக்கு பதில் செய்து கொண்டே போய் கையில் வலுத்தவன் ஜெயம் பெற்ற பிறகுதான் அடக்கப்பட முடியுமே அல்லாமல் வெறும் போலி வேதாந்தம் பேசுவதால் ஒழிந்துவிடும் என்று நாம் கருதவில்லை.
நிற்க, இதுவரை பஹிஷ்கரித்தவர்களை யெல்லாம் விட ஜவஹர்லாலை பகிஷ்கரித்தது மிகவும் சரியான காரியம் என்பதை ஜவஹர்லாலே தெளிவாய் காட்டிக்கொண்டார்.
பண்டிதர் ஜவஹர்லால் தமிழ் நாட்டிற்கு வந்தது தேர்தல் பிரசாரத்துக்கும் பணம் வசூலிப்புக்கும் என்பதை நன்றாய் ஒப்புக் கொண்டார்.
அற்பத்தனமான முறையில் மற்ற கக்ஷிகளைப் பற்றி பேசினார். முன் வரிக்கு பின் வரி மனதறிந்த பொய் பேசி வருகிறார்.
கீழ்த்தர மக்கள் முறையில் பேசி வருகிறாரே ஒழிய கவுரவமுள்ள மக்கள் வாயில் வரும் பேச்சு பேசுவதில்லை.
சத்தியமூர்த்தியார், உபயதுல்லா சாயபு, குப்புசாமி முதலியார் பேச்சுகளுக்கும் ஜவஹர்லாலார் பேச்சுக்கும் ஏதும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதில் சொல்ல முடியாத சமயத்தில் இழிமக்கள் போலவே வைது விட்டுத் தப்பித்துக் கொள்வது என்கின்ற இழி முயற்சியை கையாடி இருக்கிறார்.
இவை மாத்திரம் அல்லாமல் ஜவஹர்லால் விஜயத்தால் பொதுவாக ஏற்பட்ட நன்மை என்ன என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
~subhead
வீர வசந்த ராயர்
~shend
வீர வசந்த ராயர் என்று ஒருவர் வரப்போகிறார் என்று சொன்னவுடன் தமிழ் மக்கள் நகரத்திலும் கிராமத்திலும் தங்கள் தங்கள் வீட்டு கதவுகளுக்கு நாமம் போட்டுவிட்டு கூட்டம் கூட்டமாய் தெருவில் நின்று ஓடி அலைந்தது கொஞ்சகாலத்துக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த சம்பவமாகும்.
ஆதலால் தமிழ்நாட்டு மக்களின் மூடத்தனத்தைக் கொண்டுதான் ஒரு மனிதனின் பெருமையை விளக்கவேண்டி இருக்குமானால் அம்மனிதனின் உண்மையான யோக்கியதை எவ்வளவாயிருக்கும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
கணித சாஸ்திரத்தில் பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லை என்பது ஒரு விதி. அந்த விதியை பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன நிருபர்களும் கையாண்டு விட்டார்கள். அதாவது எந்த ஊருக்கு ஜவஹர்லால் போனாலும் அங்கு 10000, 50000, 100000 பேர்கள் வந்திருந்தார்கள் என்று பெரிய எழுத்துகளில் போட்டு விட்டார்கள். உண்மை 10ல் ஒரு பங்கு கூட இல்லை என்பது அந்தந்த ஊர் சேதி பத்திரிகையில் வந்திருப்பதை அந்தந்த ஊர்க்காரர்கள் பார்த்தால் விளங்கிவிடும்.
முதலாவது கருப்புக்கொடிக்குப் பயந்து ஒவ்வொரு ஊரிலும் ஜவஹர்லால் வரும் நேரத்தை குறிப்பாக குறிப்பிடாமலே வைத்துக் கொண்டார்கள். இரண்டாவது அவர் வரும் தடம் இன்னது என்பதில் ஒன்றைக்காட்டி மற்றொரு வழியில் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்தந்த ஊரில் 1 நிமிஷம், 2 நிமிஷம் கூட நிற்காமல் ஓட்டம் ஓட்டமாய் ஓடி இருக்கிறார்கள். தினம் 200 மைல் 300 மைல் என்று ஆகாயக்கப்பல் வேகத்தில் நடத்தி இருக்கிறார்கள். இந்த குறிப்பு இல்லா நேரத்தில் இந்த அவசரத்தில் இந்த வழி மாறி மாறி மக்களை ஏமாற்றி ஓடும் நிலையில் என்ன பேசி இருப்பார் என்ன நடந்திருக்கும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.
மொத்தத்தில் பார்க்கப் போனால் இவைகள் எல்லாம் பார்ப்பனர்கள் ஜவஹர்லாலுக்கு தமிழ் நாட்டின் நிலைமை அறியச் செய்யாமல் இருக்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய வேறில்லை. இவை ஒருபுறமிருக்க, ஜவஹர்லாலுக்கு ஏற்கனவே அறிவுக் கண் கிடையாது. அதோடு பார்ப்பனர்கள் செய்த அவசரக்கோலம் ஜவஹரின் காதையும் செவிடாக்கி விட்டது. ஜவஹர்லால் தமிழ்நாட்டின் உண்மை தெரிந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பெரிய நன்மை ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. தெரியாததினால் முழுகிப் போவதும் ஒன்றுமில்லை அது உலகறிந்த விஷயமாகும். ஆதலால் இது ஒத்தைக் காசைக்கொண்டு சூரியனை மறைக்கச்செய்த முட்டாள் தனம் போல்தான் முடிந்ததே தவிர பார்ப்பனர்களுக்கு எவ்வித வெற்றியும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. இதனால் பார்ப்பனர்களின் முயற்சி வீணாயிற்று என்பதோடு ஜவஹர்லாலின் யோக்கியதையும் வெளியாயிற்று என்றுதான் சொல்லவேண்டும்.
உதாரணமாக செட்டிநாட்டில் பிரதானப் பட்டணமாகிய தேவக்கோட்டையில் தோழர்கள் ஈபன், டாக்டர் மூர்த்தி நாயுடு முதலிய வக்கீல், டாக்டர் ஆகியவர்களே கருப்புக்கொடி ஏந்தி ஜவஹர்லாலை பஹிஷ்கரித்ததும், அதைப் பார்ப்பன போலீஸ் இன்ஸ்பெக்டரும், பார்ப்பன சப் மேஜிஸ்ட்ரேட்டும் தடுத்து கொடி பிடித்தவர்களை அரஸ்டு செய்யச் சொன்னதுமான பார்ப்பன ஆதிக்கக் காரியங்கள் மற்றொரு பக்கத்தில் காணலாம்.
மற்றும் தொழிலாளர்களும் சிறப்பாக பொன்மலை தொழிலாளர்கள் காங்கிரசை முதலாளிகள் ஆதிக்க ஸ்தாபனம் என்றும், காங்கிரஸ் இதுவரை தொழிலாளிகளுக்கு பல கெடுதிகள் செய்து வந்திருக்கிறதேயல்லாமல் நன்மை ஒன்றும் செய்யவில்லை என்றும் ஆதாரங்கள் காட்டி (ஜவஹர் லாலை) பகிஷ்கரித்திருப்பதையும் மற்றொரு பக்கம் காணலாம்.
இவ்வளவு பகிஷ்காரத்துக்கும் எதிர்ப்புக்கும் ஜவஹர்லாலின் பதில் ஒரே பல்லவியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதாவது, “நீங்கள் ஜமீன்தார் பிரதிநிதிகளா? சர்க்கார் பிரதிநிதியா?” என்பதேயாகும். இது ஒரு கோழைச் சமாதானமே தவிர ஆண்மைச் சமாதானமாக ஆகாது. ஏனெனில் எதிரிகளது காரியத்துக்கு சமாதானம் சொல்லி விட்டு பிறகு இப்படிச் சொன்னால் அது ஆண்மையாகலாம்.
இப்போதும் நாம் சொல்லுகிறோம். அதாவது ஜவஹர்லால் தமிழ் நாட்டில் இறங்கின நிமிஷம் முதல் தமிழ் நாட்டை விட்டு ரயிலேறும் நிமிஷம் வரை ஒரே மாதிரி பேச்சாக எல்லா ஊரிலும் ஒரு எழுத்துக் கூட மாற்றமில்லாமல் பேசியதையே பேசிவரும் அவரது பேச்சில் முக்கிய பல்லவியாகிய வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை ஆகியவற்றைப் போக்க வந்திருப்பதாகச் சொல்லுவதை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கச் சொல்லும் சூழ்ச்சிப் பேச்சென்றே சொல்லுகிறோம்.
ஏனெனில் இவரிடம் அக்காரியங்களுக்கு திட்டம் என்ன இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஏழ்மைக்கும் மருந்து சமதர்மம் தான் என்கிறார். சமதர்மத்துக்கு இப்போது தன்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்று ஒரு இடத்திலும், சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகுதான் சமதர்மப் பேச்சு என்று மற்றொரு இடத்திலும், உலகப் புரட்சி வரும் போதுதான் சமதர்மம் ஏற்படலாம் என்று இன்னொரு இடத்திலும் இப்படியாக குளறிக் கொட்டி வருகிறார்.
வாஸ்தவத்தில் ஜவஹர்லால் உண்மை சமதர்மக்காரராய் இருந்தால் நமது பார்ப்பனர்கள் இத்தனை பேரும் அவரை சங்கராச்சாரி ஆக்கி இருப் பார்களா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
ஜவஹர்லால் அவர்களுக்கு அரசியல் ஞானமாவது இருக்கிறதா என்பதை அவரது சென்னை பேச்சு முதல் கடசி தென்னாற்காடு பேச்சு வரை அலசிப் பார்த்தால் மடையனுக்கும் விளங்கும்.
தான் ஒரு சாமியாடி போலும் மற்றவர்களை வாக்கு கேட்கும் அடி மண்டுகள் போலும் கருதிக்கொண்டு அறைத்த மாவை அறைப்பதுபோல் ஒரேமாதிரி எழுதிப் படிப்பவர் போல் படித்துக் கொண்டே போகிறார்.
ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லத்தெரியாமல் போன ஊர்களில் எல்லாம் கேள்வித்தாள்களை பார்த்துவிட்டு கசக்கி கீழே போட்டுவிட்டு வாய் குளறி இருக்கிறார். சில இடங்களில் கேள்விக்காரர்களை வைது அடக்கி விரட்டி இருக்கிறார்.
அருப்புக் கோட்டை தோழர்கள் கேள்வியை பார்த்து விட்டு திடீரெனக் கோபித்து சு.ம. காரர்கள் பொய்யர்கள் என்று வைது பதில் சொல்லாமல் தப்பித்துக்கொண்டிருக்கிறார்.
சு.ம. இயக்கம் இருப்பதே தனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். கொளும்பிலும், திருநெல்வேலியிலும், நாகர்கோவிலிலும் 2 வருஷத்துக்கு முன் வந்திருந்தபோது அதைப் பாராட்டி பேசி இருக்கிறார். இவர் மாத்திரமல்லாமல் காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை ராஜகோபாலாச்சாரியார் உள்பட சு.ம. இயக்கத்தைப் பாராட்டி காங்கிரசோடு சேரும்படி கூப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் இருக்க சிறிதும் முன் பின் யோசனை இல்லாமல் காலிப் பிரசாரகர் போல் நடந்து கொண்டு காங்கிரசின் தலைமை ஸ்தாபனத்தின் மதிப்பை அடியோடு ஒழித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
இம்மாதிரி போலி சமதர்மம் பேசி முட்டாள்கள் வாயால் சமதர்ம வீரப் பட்டம் பெறுவதைப் பார்க்கிலும், அயோக்கியர்களுக்கு போலி சமாதானத்துக்கு இடம் கொடுப்பதைப் பார்க்கிலும் நாணயமாக உண்மையையும் சாத்தியா சாத்திய சவுகரியத்தையும் சொல்லி யோக்கியமாய் நடந்து கொள்ளுவது உண்மையான வீரனின் செய்கை என்றே சொல்லுவோம்.
இவர் கூறும் சுயராஜ்யத்துக்கு ஆவது இவரிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
சட்ட சபைக்குப் போவதால் சுயராஜ்யம் கிடைத்து விடுமா?
இவர் தகப்பனாரே “சட்டசபை மெனக்கெட்ட வேலை சபை” என்று சொன்னாரே அதை மறந்து விட்டாரா? சுயராஜ்யம் என்றால் என்ன என்றாவது எங்காவது கூறி இருக்கிறாரா? ஒன்றும் இல்லாமல் தமிழ் நாட்டில் ஒரு பறவை பறந்துவிட்டுப் போய் விட்டார்.
குடி அரசு தலையங்கம் 18.10.1936