பண்டிதர் கேள்விக்கு பதில்

பண்டிட் ஜவஹர்லால் சுற்றுப்பிரயாணத்தில் சுயமரியாதைக்காரர்கள் பல இடங்களில் கருப்புக்கொடி பிடித்தும் பஹிஷ்காரம் செய்தும் நடத்தின ஆடம்பர ஊர்வலங்களில் முதலில் சில இடங்களில் அலட்சியமாய் கருதி துச்சமாய்ப்பேசினார் என்றாலும் அனேகமாக ஒவ்வொரு இடங்களிலும் அவர் கருப்புக்கொடியும் பஹிஷ்காரக் கோஷமும் நேரில் கண்டதால் நாகப்பட்டணத்தில் அதன் விபரத்தை “நடு நிலையில்” நின்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்திற்குள்ளானார். அது சமயம் கருப்புக்கொடி பிடிக்கப்படுவதினுடையவும் பகிஷ்காரத்தினுடையவும் காரணங்கள் கண்டறிந்து பண்டிதர் ஆதியில் தனது அறியாமையால் இரண்டொரு இடங்களில் துச்சமாய்ப் பேசினதற்கு ஆக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் தனக்கு விளக்கவேண்டும் என்று 6 கேள்விகள் கேட்டிருக்கிறார். அக்கேள்விகள் “மெயில்” “சுதேசமித்திரன்” முதலிய ஆங்கிலம் தமிழ் பத்திரிக்கைகளில் காணப்படுகிறபடி,

  1. இந்த பஹிஷ்காரம் சுயமரியாதைக்காரர்கள் முன்னமே ஏற்பாடு செய்துகொண்டு செய்கிறார்களா?
  2. இது சுயமரியாதைக்காரர்களின் பொது முறையா?
  3. காங்கிரசைப்பற்றி சுயமரியாதைக்காரர்களின் நடைமுறை என்ன?
  4. ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி சுயமரியாதைக்காரர்களுடைய நடைமுறை என்ன?
  5. சுதந்திரத்தைப் பற்றி சுயமரியாதைக்காரர்களின் அபிப்பிராயம் என்ன?
  6. கருப்புக்கொடி பற்றியும் மரியாதை காட்டுவதுபற்றியும் சுய மரியாதைக்காரர்களின் நடைமுறை என்ன?

என்று கேட்டு இருக்கிறார்.

அவைகளுக்கு நாம் விடையளிக்க வேண்டியது நமது கடமை என்றே கருதுகிறோம்.

ஆனால் பண்டிட் ஜவஹர்லால் அவர்களை அருப்புக் கோட்டையில் சுயமரியாதைக்காரர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் சுயமரியாதைக்காரர்களை பொய்யர்கள் என்று வைதார். பண்டிதர் சுய மரியாதைக்காரர்களுடைய எந்த கேள்விக்கு ஆக அப்படி யோக்கியப் பொறுப்பற்ற தன்மையில் வைதார் என்பதை வைத வார்த்தையை மாத்திரம் கொட்டை எழுத்தில் விளம்பரம் செய்த பத்திரிகைகாரர்கள் அந்தக் கேள்விகளையும் சின்ன எழுத்திலாவது போட்டு காட்டி இருப்பார்களானால் அப்பத்திரிகைகாரர்களுக்கு நேர்மையும் நாணயமும் இருக்கிறது என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல்லாமல் வைத வார்த்தையை மாத்திரம் விளம்பரப்படுத்தினர்.

பார்ப்பனர்களிடமும் பார்ப்பன அடிமைகளிடமும் நாம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவர்களிடம் நேர்மையோ, மானமோ இருக்குமானால் அவர்கள் பார்ப்பனர்களாகவும் பார்ப்பன அடிமைகளாகவும் இருக்க ஒரு நிமிஷம் கூட சம்மதிக்க மாட்டார்கள். ஆதலால் அதை விட்டு விட்டு மற்ற விஷயங்களைப் பற்றி கவனிப்போம். அருப்புக்கோட்டை சு.ம. காரர்களுடைய கேள்விகள் ஆங்கிலத்தில் அச்சிட்டு பண்டிதரிடம் கொடுத்தபடி அப்படியே மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதற்கு தமிழ் மொழிபெயர்ப்பும் அதன் கீழே கொடுத்திருக்கிறோம். பண்டிதர் பதில் சொல்ல முடியாவிட்டாலும் பண்டிதரை ஆதரிக்கும் பத்திரிகைகளோ ஆசாமிகளோ யாராவது இப்பொழுதாவது பதில் சொன்னாலும் சரி என்றே அறைகூவி கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாத பத்திரிக்கைகளாகிய “தமிழ்நாடு” “நவசக்தி” “ஊழியன்” முதலிய பார்ப்பன சிபார்சு பத்திரிக்கைகள் பதில் சொன்னாலும் சரி என்றே விரும்புகிறோம். சரியோ தப்போ தாங்கள் போட்டுக்கொண்ட வேஷத்துக்காக தங்களது சுதந்திர அறிவையும் லீ அணாவுக்கும், 1லி அணாவுக்கும், 1லீ அணாவுக்கும் விற்று விட்டு நடப்பதானால் அதில் நாம் குறுக்கிட ஆசைப்படவில்லை. ஆனால் தங்கள் நிலையை மறந்தாவது சில சமயங்களில் நேர்மையைப் பற்றியும் மானத்தைப்பற்றியும் இவர்கள் பேச வருவதினால் இவற்றை பிரஸ்தாபிக்க வேண்டி இருக்கின்றது.

நிற்க, பண்டிதரின் முதல் கேள்விக்கு பதில் :

பஹிஷ்கார விஷயம் பண்டிதர் தென்னாட்டுக்கு பார்ப்பன கங்காணியாக ஓட்டுப் பிரசாரத்துக்கு வரவழைக்கப்படுகிறார் என்று தெரிந்த உடனேயே பண்டிதரை பஹிஷ்கரிக்க வேண்டியது தங்கள் கடமை என்று சுயமரியாதைக்காரர்கள் முடிவு செய்து கொண்டார்கள். ஆதலால் முன்னேற்பாடு என்று இல்லாவிட்டாலும் பண்டிதர் வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும்.

இந்த பஹிஷ்காரம் பண்டிதருக்கு மட்டும் இல்லாமல் காந்தியாருக்கும் ராஜேந்திரருக்கும் சென்ற வருஷத்திலும் அதற்கு முந்தின வருஷத்திலும் செய்ததேயாகும். பகிஷ்கார முறையை காந்தியார் மெச்சி வடநாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் புகழ்ந்து கூறி இருக்கிறார். எதற்காக இதைக் காட்டுகிறோம் என்றால் அவ்வளவு ஒழுங்காகவும் கண்ணியமாகவும் பஹிஷ்காரமும் கருப்புக்கொடியும் நடத்தப்பட்டன என்பதற்காகவும் அவர்கள் பண்டிதரைப் போல் கேவலமாகவும் இழிவாகவும் கருப்புக்காரரிடம் நடந்து கொள்ளவில்லை என்பதற்கு ஆகவும் காட்டப்படுகிறது.

ராஜேந்திரரும் கண்ணியமாகவே நடந்துகொண்டதோடு “நான் ஒரு பார்ப்பனரல்லாதார் ஆச்சே, என்னை ஏன் பகிஷ்கரிக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு பதிலாக, ராஜேந்திரரே தாங்கள் பார்ப்பனரல்லாதார் ஆனாலும் பார்ப்பனர் ஆயுதமாக பார்ப்பனர் தேர்தலுக்கு ஓட்டுப்பிரசாரம் செய்ய வந்திருக்கிறீர் என்று சு.ம. காரர்கள் பதில் சொன்னார்கள். அதற்கு ராஜேந்திரர் “எனக்கு இங்கு எலக்ஷன் நடப்பதே தெரியாது” என்று பதில் சொன்னார்.

ஆனால் ஜவஹர்லாலோ “நான் எலக்ஷன் பிரசாரத்துக்கே வந்திருக் கிறேன், காங்கிரசுக்கே ஓட்டுக்கொடுங்கள். நிற்கும் ஆள் மொண்டியானாலும் குருடனானாலும் ஓட்டுக் கொடுங்கள்” என்றார்.

ஆகையால் பஹிஷ்காரம் செய்யவேண்டியது கடமை என்றும் முறை என்றும் சு.ம. காரர்கள் கருதினார்கள்.

~subhead

இரண்டாவது கேள்விக்கு பதில் :

~shend

இப்படிப்பட்ட ஆசாமிகள் விஷயத்தில் பகிஷ்காரம் செய்ய வேண்டியது பொதுவான முறை என்று தான் சு.ம. காரர்கள் கருதுகிறார்கள்.

~subhead

மூன்றாவது கேள்விக்கு பதில் :

~shend

காங்கிரசானது மேல் ஜாதிக்காரர், படித்தவர்கள், பணக்காரர்கள் ஆகியவர்களுக்கு நலனும் பாதுகாப்புமளிக்கும் சாதனம் என்றும், வருணாச் சிரமத்தை ஆதரிக்கும் ஸ்தாபனம் என்றும், பிற்பட்ட மக்களுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் நன்மை செய்ய யாதொரு திட்டமும் இல்லாத ஸ்தாபனம் என்றும் (காங்கிரசைப் பற்றி) சு.ம. காரர்கள் கருதுகிறார்கள்.

~subhead

நான்காவது கேள்விக்கு பதில் :

~shend

ஜஸ்டிஸ் கட்சியானது அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகத்திலும் சகல மத வகுப்புகளுக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் அளிக்கக்கூடியது என்றும், சமூக இயலில் மதம், பழக்கவழக்கம் சாஸ்திரம் என்பவைகளை லக்ஷியம் செய்யாமல் சமூக வாழ்வில் சகல வகுப்புகளும் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்றும், கொள்கையையும் வேலை முறையையும் சமத்துவத்தையும் உடைய கட்சி ஆதலால் அதை அவ் வேலை முறைகளின் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் கெடுத்து விடாமல் இருக்க வேண்டுமென்று கருதி சு.ம. காரர்கள் தங்களால் கூடுமான அளவு ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கின்ற கொள்கை உடையவர்கள்.

~subhead

ஐந்தாவது கேள்விக்கு பதில் :

~shend

சுதந்திரம் என்கின்ற வார்த்தைக்கு பண்டிதர் என்ன அர்த்தம் கொண்டு அவ்வார்த்தையை உபயோகித்து வருகிறார் என்பது விளங்கவில்லை.

வெள்ளைக்காரர்களின் அரசியல் ஆதிக்கம் இந்நாட்டை விட்டு ஒழிக்கப்படுவது தான் சுதந்திரமே ஒழிய அதற்கப்புறம் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மூடு மந்திரமாகவோ, அல்லது கராச்சி தீர்மானப்படி பழய பழக்க வழக்கம் அதாவது பார்ப்பன பழக்கவழக்க உரிமையும் பறையன் பழக்க வழக்க உரிமையும் நிலைநிறுத்தப்படுவதாகிய வருணாச்சிரம முறை காப்பாற்றப்படும் என்கின்ற உத்திரவாதம் கொண்ட சுதந்திரமாகவோ இருக்குமானால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை தடுக்க சு.ம.க்காரர்கள் தங்களால் ஆனவரையும் பாடுபடுவார்கள். அப்படிக்கில்லாமல் பண்டிதர் கூறும் சுதந்திரத்தில் பார்ப்பான் என்று ஒரு ஜாதி முறையும் பறையன் என்று ஒரு ஜாதி முறையும் மற்றும் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கின்ற பதங்களும் அரசியல் ஆதாரங்களிலோ சட்டத்திலோ அமுலிலோ காணப்படாத தத்துவம் கொண்ட சுதந்திரமாகவும் இருக்குமானால் அந்த சுதந்திரத்துக்கு ஆக பண்டிதரை விட ஒரு அடி முன்னணியில் இருக்க சு.ம.காரர்கள் தயாராய் இருக்கிறார்கள்.

~subhead

ஆறாவது கேள்விக்குப் பதில் :

~shend

கருப்புக்கொடி பஹிஷ்காரமானது வந்திருக்கும் நபரை பிரதானமாய்க் கருதி அல்ல, அந்த நபரின் வருகையின் காரியம், காரணம், அவசியம் எது? என்ன? ஏன்? என்பவைகளைப்பற்றியதேயாகும்.

அதாவது இந்த நாட்டில் பார்ப்பனர்கள் காங்கிரசில் ஆதிக்கம் பெற்று இருக்கிறார்கள். வடநாட்டு பிரமுகர்களும் தலைவர்களும் இந்த நாட்டு பார்ப்பனர்களைத்தான் அறிந்திருக்கிறார்களே ஒழிய பார்ப்பனரல்லாதாரைப் பற்றி அறியா விட்டாலும் கெட்ட அபிப்பிராயம் கொண்டு இருக்கிறார்கள். எந்த வடநாட்டுத்தலைவரும் சுதந்திரமாக இங்கு வருவதில்லை. (வடநாட்டுப் பெரியார்களில் இந்த நாட்டுக்கு வந்தவர்களில் விவேகாநந்தரும் லாலா லஜபதியும் தான் சுதந்திர புத்தியோடு வந்து சுதந்திர புத்தியோடு அபிப்பிராயம் தெரிவித்துவிட்டுப் போனவர்கள்.) தவிரவும் காங்கிரசானது தன்னைத் தவிர மற்ற ஸ்தாபனங்களை தேசத்துரோக ஸ்தாபனம் என்றும் காங்கிரஸ் காரர்களும் தங்களை தவிர மற்றவர்களை தேசத்துரோகிகள் என்று கருதுகிறார்கள்.

இந்த நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் சிலர் செல்வவான் களாகவும் அதிகாரம் வகிப்பவர்களாகவும் இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமானது அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலையில் வைத்து விடுகிறது. மற்றும் அப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் எவ்வளவுதான் நன்மை அடைந்தாலும் அதற்கு தகுந்த நன்றியும் விஸ்வாசமும் காட்ட முடியாமலும் செய்துவிடுகிறதோடு பலரை துரோகிகளாகவும் செய்து விடுகிறது. பார்ப்பனர்கள் செல்வாக்கானது பார்ப்பனரல்லாதாரில் பொதுவாழ்வில் ஈடுபடுகிறவனையும் பல தொல்லைகளுக்கும் பழிப்புகளுக்கும் ஆளாகும்படி செய்து அடக்கி ஒடுக்கி விடுகிறது. பத்திரிக்கைகள் நடத்துவது என்பதிலும் பார்ப்பனர்களுக்கு கூலியாகவோ அடிமையாகவோ இல்லாத பத்திரிக்கைகள் பெரிதும் நடைபெற முடியாதவைகளாகவும் ஆக்கிவிடப்படுகிறது. இந்தக் காரணங்களால் பாமர மக்களும் சுலபத்தில் ஏமாந்துபோய் தவறுதலாக அதாவது பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு துணையாக இருக்கும்படியாக நடந்துவிடக் கூடுமாதலால் பார்ப்பனர்கள் பொதுமக்களை ஏய்க்க இம்மாதிரி வெளியிடங்களில் இருந்து ஆள்களைக் கூட்டி வந்து பிரசாரம் செய்யும் போதெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் கருப்புக்கொடி போன்ற பல காரியங்களால் பாமர மக்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை உணரும்படி செய்யவேண்டியது என்பது முதலியவை கருப்புக் கொடியின் தத்துவமும் அதனின் அவசியமும் ஆகும்.

ஆனால் இதுவரை வடநாட்டில் இருந்துவந்த பிரமுகர்கள் தலைவர்கள் என்பவர் யாரும் பார்ப்பனரல்லாத தலைவர்களையோ பிரமுகர்களையோ அல்லது குறிப்பிட்ட ஏதாவது நபர்களையோ கூப்பிட்டனுப்பியாவது “உங்கள் குறை என்ன” என்று கேட்டவர்களே அல்ல. அதற்கு மாறாக அவர்களைக் குறை கூறி குற்றம் சாட்டி வைதுவிட்டே போயிருக்கிறார்கள். இந்த லக்ஷணத்தில் இந்நாட்டுப் பார்ப்பனரல்லாதாருக்கும் தாங்களே தலைவர்கள் என்றும் பிரதிநிதிகள் என்றும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதிலும் ஒரு ஆச்சரியமென்னவென்றால் பார்ப்பனர்களே முன் வந்து இப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

மரியாதை விஷயத்திலும் சுயமரியாதைக்காரர்களைப் பற்றி காந்தியாரே நற்சாக்ஷி பத்திரமளிக்கிறார்.

ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் தேச சுதந்திரத்தைவிட மக்கள் சமூக சுதந்திரம் பெரிதென்று கருதி அதற்கு விரோதியானவர்கள் அல்லது அதை அலக்ஷியமாய் கருதுபவர்கள் யாராயிருந்தாலும் பஹிஷ்கரிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களுடைய ஆயுதங்களும் கையாள்களுமாய் வரவழைக்கப்படுகிறவர்களும் பஹிஷ்கரிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்றும் கொண்ட தத்துவம் கருப்புக் கொடியில் அடங்கி இருக்கிறது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 25.10.1936

You may also like...