தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு

திண்டுக்கல்

தோழர்களே!

தமிழ்நாட்டின் தென் ஜில்லாக்கள் சார்பாய்க் கூடும் இம்மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக வரவேற்புக் கழகத்தாருக்கு நான் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நமது சங்கம்

நமது தென் இந்திய நல உரிமைச் சங்கம் தோன்றி இன்றைக்கு கிட்டத்தட்ட 20 வருஷ காலமாகிறது. இதன் முக்கியக் கொள்கை:

  1. சட்ட ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டு கிளர்ச்சி செய்து அரசியல் விடுதலை (அதாவது சுயராஜ்யம் என்பது) பெறுவதும்,
  2. அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் நம் நாட்டிலுள்ள எல்லா மதக்காரருக்கும் ஜாதிக்காரருக்கும் விகிதாச்சாரம் உரிமை வழங்குவதுமாகும். அதாவது சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம் அளிப்பதாகும்.

இந்தக் கொள்கையில் இருந்து இதுவரை நாம் சிறிதும் பிறழாமல் கொள்கைக்கு ஏற்ப நம்மால் கூடியதை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறோம்.

நமது சங்க ஆரம்பத்தில் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் ஏகபோக உரிமைகள் அனுபவித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் நீங்க, மற்ற எல்லா சமூகத்தார்களும் நமது சங்கத்தில் அங்கத்தினர்களாகலாம் என்கின்ற நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டிருந்தோம்.

ஏனெனில் பார்ப்பனர்களாகிய ஒரு கூட்டத்தார் நம்மை எத்துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் தாழ்த்தி வந்ததாலேயேயும் அவர்களின் நடவடிக்கைகளாலேயே நாம் இச்சங்கம் துவக்க வேண்டியவர்களா யிருந்ததாலும் நமது சங்கத்தில் அவர்களை நீக்கி வைக்க வேண்டியதாயிற்று.

ஆனால் இப்போது அரசியல் சம்மந்தப்பட்ட வரையில் அந்தத் தடையை நீக்கிவிட்டோம். மேல் கண்ட நமது கொள்கையை ஒப்புக் கொள்ளுகிற யாரும் இச்சங்கத்தில் அங்கத்தினராகலாம் என்ற விதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

என்றாலும் இன்றுவரை ஒரு பார்ப்பனராவது நமது சங்கத்தில் அங்கத்தினராகவே இல்லை. பார்ப்பனரல்லாதாரே தான் நமது சங்கத்து அங்கத்தினர்களாயிருக்கிறார்கள். இதனால் நமது சங்கம் ஆரம்பத்தில் எப்படி பார்ப்பனரல்லாதார் சங்கமாக இருந்ததோ அதேபோல்தான் இன்றும் பார்ப்பனரல்லாதார் சங்கமாகவே இருந்து வருகிறது.

நமது சங்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 20 வருஷம் ஆயிருந்தாலும் சென்னை மாகாண அரசியலில் 15 வருஷ காலம் அதாவது மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் அமுலுக்கு வந்த காலம் முதல்கொண்டு அத்திட்டத்தின்படி ஜனப்பிரதிநிதிகளான மந்திரிகளுக்கு மாற்றப்பட்ட இலாகா என்பவைகளில் நாம் ஆதிக்கம் பெற்று அரசியல் நடத்தி வந்திருந்தாலும் நமது கொள்கைகளில் முழு வெற்றியும் அடைவதற்கில்லாமல் நாம் பல சங்கடங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகி வந்திருக்கிறோம்.

காரணம் என்னவென்றால் இரட்டை ஆட்சி என்பதில் நமக்கேற்பட்டுள்ள சங்கடம் ஒன்று, நாம் பல மதக்காரர்களுக்கும், பல ஜாதிக்காரர்களுக்கும் விகிதாச்சார உரிமை வழங்குவது என்ற கொள்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் இக்கொள்கையால் தங்கள் ஏகபோக உரிமையையும் அனுபவத்தையும் இழந்து மற்றவர்களைப் போலவே விகிதாச்சாரம் பெற வேண்டிவர்களான பார்ப்பனர்கள் தங்களால் கூடிய எல்லாத் தடைகளையும் தொல்லைகளையும் விளைவித்து நமது உத்தேசம் நிறைவேறாமல் தடுக்க வேண்டியவர்களாகிவிட்டதால் அவர்களுடைய தொல்லைக்கும் முட்டுக் கட்டைகளுக்கும் நாம் ஆளாக வேண்டியிருந்தது மற்றொன்று.

ஏற்கனவே பார்ப்பனர்கள் அதிகாரத்திலும் உத்தியோகத்திலும் தாராளமாய் அமர்ந்து இருந்த காரணத்தாலும் சமூகத்துறையிலும் அவர்கள் மேல் நிலை பெற்றிருந்தாலும் வாழ்க்கையிலும் அவர்களே நமக்கு வழி காட்டிகளாக அமர்ந்திருந்ததினாலும் அவர்களுடைய (பார்ப்பனர்களுடைய) எதிர்ப்பும் தொல்லையும் திடீரென்று பதவிக்கு வந்த நம்மால் சுலபத்தில் சமாளிக்க முடியாததாய் இருந்தது என்றால் இதில் யாதொன்றும் ஆச்சரியம் இருக்க இடமில்லையல்லவா?

அதோடு கூட நமது மக்களும் அதாவது பார்ப்பனர் ஒழிந்த மற்ற மக்களும் பார்ப்பனீயத்தின் பயனாய் போதிய கல்வியும் உலக ஞானமும் இல்லாமல் பெரும்பாலோர் சமூகத்துறையில் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்தது போலவே வாழ்க்கைத்துறையிலும் அவர்களுக்கு அடிமையாய் இருந்ததாலும் பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பதை ஒரு மதக் கட்டளையை மீறுவதுபோல் மதிப்பவர்களாய் இருந்ததாலும் சிக்கலான அரசியலில் இருந்து கொண்டிருக்கிற நமது கஷ்டம் இன்னும் அதிகமாய் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

இந்த நிலையில் நாம் இந்த பதினைந்து வருஷ காலத்தில் அரசியல் பதவிகளை அடைந்து அதன்மூலம் நம்மால் கூடியதையெல்லாம் வெற்றிகரமாகவே செய்து வந்திருக்கிறோம் என்று சொன்னால் இதைக் கேட்பவர்கள் யாரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

~subhead

நமது நிலை

~shend

இன்னம் 5, 6 மாத காலத்துக்குள் புதிய சீர்திருத்தம் ஒன்று அமுலுக்கு வரப்போகிறது. அதற்கு ஆகவேண்டிய தேர்தல்கள் சீக்கிரத்தில் ஏற்படப் போகிறது. அதுபற்றிய பிரசாரங்கள் தனிப்பட்ட முறையிலும் கட்சி முறையிலும் இப்போது முதலே துவக்கமாய் விட்டன. கட்சி முறையில் இரண்டு முக்கிய கட்சிகள் பெரிதும் இப்பிரசாரத்தில் முன்னணியில் இருக்கின்றன. அவைகளில் ஒன்று காங்கிரசு என்னும் ஸ்தாபனத்தின் பேரால் பார்ப்பனர்கள் கக்ஷி, மற்றொன்று நம் கக்ஷி அதாவது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அல்லது ஜஸ்டிஸ் கட்சி என்னும் பேரால் பார்ப்பனரல்லாதாராகிய நாம். ஆகவே பச்சையாய் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாராகிய நாமும் இன்று போட்டிப் பிரசாரம் செய்பவர்களாய் இருக்கிறோம். இப்போட்டி பிரசாரங்களில் பார்ப்பனர்கள் இதுவரை தாங்கள் நாட்டுக்கு செய்த காரியங்கள் இன்னதென்றோ தங்கள் கொள்கைகள் இன்னதென்றோ மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாமல் இருப்பதால் நம்மைப்பற்றி எவ்வளவோ பொய்யும் புழுகும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்து வருவதை நாம் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம். நாமோ அவ்வளவுக்கும் சமாதானம் சொல்லி மீள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தேர்தலோ மிகவும் சமீபித்துக் கொண்டிருக்கிறது. ஆதலால் இந்த சமயம் நமக்கு மிகவும் நெருக்கடியான சமயம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த சமயத்தில் நமக்குள் அதிகமான ஒற்றுமையும், தளரா ஊக்கமும், தாராளமான பணச்செலவும் வேண்டியதாக இருக்கிறது. இந்தக் காரியங்களுக்கு ஆகவே இன்று இந்த மகாநாடு அதாவது தென் ஜில்லாக்களின் மகாநாடு கூட்டப்பட்டதென்றே நான் கருதுகிறேன். இம்மகாநாட்டின் பயனாய் இத் தென்ஜில்லாக்களில் தீவிரமான பிரசாரங்கள் செய்யப்பட வசதி ஏற்படுமென்றே நினைக்கிறேன்.

நாம் பதவி ஏற்றது முதல் பொது ஜன நன்மைக்கு ஆக எவ்வளவோ காரியங்கள் செய்து வந்திருக்கிறோம். அதன் பயனாக நமது பார்ப்பனரல்லாத சமூகம் இந்த 20 வருஷ காலத்தில் எவ்வளவோ மேம்பாடு அடைந்து வந்திருக்கிறது. பார்ப்பனரல்லாதார்களில் பெரிய ஜமீன்தார்கள் முதல் சாதாரண ஏழைக் குடியானவர்கள், கூலிக்காரர்கள், தீண்டப்படாத வகுப்பார் என்பவர்கள் வரை எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.

அரசியல் துறையிலும் சமூக துறையிலும் மற்றும் மனிதத்தன்மைத் துறையிலும் பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் இந்த 15, 20 வருஷத்தில் அடைந்திருக்கும் முற்போக்கையும் அதற்கு முன் சுமார் ஒரு ஐம்பது வருஷம் அல்லது நூறு வருஷத்தில் அடைந்திருந்த முற்போக்கையும் ஆதாரத்தோடு கவனித்து பார்த்தால் நமது கட்சியின் பயனாய் நாம் எவ்வளவு வேகமாய் முற்போக்கடைந்திருக்கிறோம் என்பது விளங்கும்.

குறிப்பாக காங்கிரசு என்ற ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டதில் இருந்து அதாவது நமது கட்சி ஏற்படுவதற்கு 30 வருஷங்களுக்கு முன் இருந்து பார்ப்பனரல்லாதார் சமூகம் தானாக ஏதோ கொஞ்ச நஞ்சம் முன்னேற்ற மடைந்து வந்ததும் தடைப்பட்டு வெறும் பார்ப்பனர்களே எதிலும் பயனடையும் படியாகவும் அரசியல் அடியோடு பார்ப்பனர்கள் வசமே ஆகி விடவும் சமூக இயலிலும் பழய மனு ஆட்சியே சிறிது சிறிதாக தலை தூக்கவும் சட்டங்களிலும் நியாயஸ்தலங்களிலும் மநுதர்மம் தலை சிறந்து விளங்கவுமான நிலைமையே ஏற்பட்டு வந்தது. இந்த ஆபத்தானதொரு சந்தர்ப்பத்தில் தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு பார்ப்பன ஆதிக்கத்தை தடுத்ததோடல்லாமல் இவ்வளவு தூரம் நம் சமூகம் முன்னேற்றமடையவுமான காரியங்கள் செய்திருக்கிறது.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் நம் நாட்டில் தோன்றி இருக்கவில்லையானால் இப்போது முதல் இதுவரை நமது நிலைமை என்னமாய் இருந்திருக்கும் என்பதை சிறிது உங்கள் மனதில் சிந்தித்துப் பாருங்கள். நமது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதைப்பற்றி யோசிக்கு முன் இன்று நம்மவர்களில் சிலர் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு நம்மை வைகின்றார்களே அவர்களுடைய நிலைமை என்னமாய் இருந்திருக்கும் என்பதையே முதலில் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

சாதாரணமாக இன்று பார்ப்பனர் கூட்டங்களிலேயே அடிபடும் பார்ப்பனரல்லாதார் பெயர்களாகிய தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்து பிள்ளை முதல் காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, உபயதுல்லா சாயபு என்று சொல்லப்படுபவர்கள் வரை இவர்களுடைய நிலைமை எவ்வளவு இருந்திருக்கும் என்பதை அவர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

~subhead

நம்மீது பழி

~shend

சுலபத்தில் நமது இயக்கத்தை பார்த்து தேசத்துரோக இயக்கம் என்றும் உத்தியோக வேட்டை இயக்கம் என்றும், வகுப்புவாத இயக்கம் என்றும் நம் எதிரிகளும் அவர்களது ஆட்களும் கூறுகிறார்கள்.

ஆனால் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பார் சுயநலத்துக்கோ அல்லது எந்த ஒரு தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ இவ்வியக்கம் இருந்து வருகிறது என்று யாராவது இதுவரை சொல்ல முடிந்ததா? அல்லது இந்த இயக்கக் கொள்கையின் பயனாகவோ நடத்தையின் பயனாகவோ நாட்டுக்கோ அல்லது பொது மக்களுக்கோ எந்த ஒரு நன்மையாவது தடைப்பட்டு விட்டதா? என்று தைரியமாய் கேட்கின்றேன்.

ஏதாவது ஒரு காரியம் தடைப்பட்டு இருக்குமானால் அது நமது எதிரிகளாகிய பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை சிறிது தடைப்பட்டிருக்கலாம். அதுவும் இது வரை இந்தப் பதினைந்து வருஷமாக நாம் எவ்வளவோ பாடுபட்டும் கிரமமான விகிதாச்சார நிலைமைக்கு வரவே இல்லை. இப்படிப்பட்ட இந்தக் கிளர்ச்சி காலத்திலும் கூட பார்ப்பனர்கள் உத்தியோகத்தில் 100க்கு 300 பங்கு 400 பங்கு அதிகமாகவே அடைந்து வருகிறார்கள். நம் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் அனேக இனங்களில் அவர்கள் 100க்கு 1000 பங்கு அதிகமாகவே அனுபவித்து வந்தவர்கள் இன்று நம் இயக்கத்தின் பயனாய் இந்த அளவுக்கு இறங்கி இருக்கிறார்கள். அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் மக்களாகிய எல்லா வகுப்பாரும் தாராளமாய் ஏதோ சிறிது விகிதமாவது பெறுவதன் மூலம் பயனடைந்து வந்திருக்கிறார்கள் என்பதோடு சிறுபான்மை வகுப்புகள் என்கின்ற பிரிவுகள் சில தங்கள் விகிதாசாரத்துக்கு மேலாகக்கூட சில விஷயங்களில் பயன் அனுபவித்து வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

ஆதலால் நமது இயக்கமானது எந்த துறையிலும் எவ்வித பொது நலத்தையும் கெடுத்துவிடவில்லை என்பதோடு பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு பல நன்மைகளைச் செய்திருக்கிறது என்றும் கூசாமல் சொல்லுவேன்.

~subhead

உத்தியோக வேட்டை

~shend

உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று நம்மை பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள். அவர்களால் (பார்ப்பனர்களால்) உத்தியோக வேட்டை ஆடலாம் என்று கருதுகிற சில பார்ப்பனரல்லாதாரும் நம்மை அப்படியே சொல்லுகிறார்கள். உத்தியோக வேட்டை ஆடுவதில் என்ன தப்பு இருக்கிறது என்பது எனக்கு விளங்கவில்லை. உத்தியோகம் என்பது நமது நாட்டு அரசியல் நிர்வாகத்துக்கு ஆக என்று ஏற்படுத்தப்பட்டவைகளாகும். அதற்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு பெரிதானாலும் சிறிதானாலும் நமது மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் சம்பளமேயாகும். உத்தியோகம் பெறுவதே அரசியல் கிளர்ச்சியின் கருத்தாய் சமீப காலம் வரை இருந்தும் வந்திருக்கிறது.

பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்படும் வரை அரசியல் கிளர்ச்சிக் காரர்களான காங்கிரஸ்காரர்களும் மற்ற அரசியல் கட்சிக்காரர்களும் எல்லோருமே உத்தியோகம் அடைந்து வந்திருக்கிறார்கள். “உத்தியோகம் புருஷ லக்ஷணம்” என்பது காங்கிரசின் சுலோகமாகி இருந்து வந்திருக்கிறது. ஆகவே அரசியல் உத்தியோகங்களை அடைய ஒவ்வொரு தனி மனிதனும் ஆசைப்படுவதில் யார் என்ன தப்புச் சொல்ல முடியும்? ஒரு தனிப்பட்ட வகுப்பார் ஏகபோகமாய் உத்தியோகங்களை அடைந்து வந்ததாலும் அதற்கு கொழுத்த சம்பளங்கள் இருந்ததாலும் உத்தியோகத்துக்கு அதிகாரமும் பெருமையும் இருந்ததாலும் கிளர்ச்சி செய்வதன் மூலமே அவைகள் ஏற்படுபவைகளாகவும் அவை கிடைக்கக்கூடியதாகவும் இருந்ததாலும் அதற்காக நமது சமூகமும் கிளர்ச்சி செய்ய ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. கிளர்ச்சி இல்லாவிட்டாலும் அது எல்லா வகுப்பாருக்கும் கிடைக்கும் என்கின்ற நிலை இருந்திருந்தால் உத்தியோகங்கள் அடைவதையும் ஒரு கொள்கையாக நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கவே மாட்டோம்.

மற்றவர்களைப் போலவே அதாவது காங்கிரஸ்காரர்களைப் போலவே இன்னமும் அதிக உத்தியோகத்துக்கும் அதிகம் சம்பளத்துக்குமே பார்ப்பனர்களோடு சேர்ந்து “தேசியக்கிளர்ச்சி” செய்திருப்போம்.

~subhead

வகுப்புவாதம்

~shend

இப்போது நாம் “எங்களுக்கும் உத்தியோகம் வேண்டாமா, நாங்களும் வரிகொடுக்கவில்லையா, நாங்களும் படிக்கவில்லையா” என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் உடனே பார்ப்பனர்கள் நம்மை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லுவது மாத்திரமல்லாமல் வகுப்புவாதிகள் என்றும் சொல்லுகிறார்கள். அதுவரையில் நமக்கு சந்தோஷமே. ஏனென்றால் அவர்கள் நம்மை எந்தத் தனிப்பட்ட வகுப்புவாதிகள் என்று சொல்ல முடியும். அவர்களை நாம் தனிப்பட்ட வகுப்புவாதிகள் என்கின்றோம். அதாவது பார்ப்பன நலத்துக்கு ஆகவே பாடுபடும் பார்ப்பன வகுப்புவாதிகள் என்கின்றோம். நாம் பல வகுப்புக்காரர்களாய் இருக்கிறோம். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தீண்டப்படாத மக்கள், பார்ப்பனர் அல்லாத “இந்து”க்கள் என்பதாக பல வகுப்புக்காரர்களாகவும் இருந்துகொண்டு எல்லா வகுப்புக்கும் சேர்த்து உத்தியோகங்களையும் பிரதிநிதித்துவங்களையும் அதுவும் விகிதாசாரம் மாத்திரம் கேட்கின்றவர்களாகவும் இருக்கின்றோம். ஆகவே நம்மையாரும் எந்த ஒரு தனிப்பட்ட சுயநல வகுப்புவாதிகள் என்று சொல்ல முடியாத நிலைமையில் இருக்கின்றோம். ஆதலால் நம்மை ஒருவர் வகுப்புவாதி என்பதற்கு ஆக நாம் பயப்படவோ மறுக்கவோ வேண்டியதில்லை. பார்ப்பனர்கள் வகுப்புப் போல் மற்ற வகுப்புகளும் ஆகும்வரை நாம் வகுப்புவாதிகளாய் இல்லாவிட்டால் வகுப்பு துரோகிகளே யாவோம். வகுப்பு வாதம் பேசினால் தேசத்துரோகிகள் என்று கூப்பிடுவார்களே என்று நாம் சிறிதும் பயப்படக்கூடாது என்றே வேண்டிக்கொள்ளுகிறேன்.

இந்தியர்கள் ஐரோப்பியர்கள் என்ற வகுப்புவாத அஸ்திவாரத்தின் மீதுதான் தேசியசபை என்னும் காங்கிரஸ் சபை ஏற்பட்டது. இந்துக்கள் முஸ்லீம்கள் என்கின்ற வகுப்புவாதத்தின் மீதுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டது.

காங்கிரஸ் ஏற்பட்டது முதல் ஒவ்வொரு பத்து வருஷத்திலும் வகுப்புவாதம் ஏற்பட்டே வந்திருக்கிறது. 1885ம் வருஷத்தில் காங்கிரசு ஏற்பட்டது என்று சொன்னாலும் 1895ம் வருஷத்திலேயே முஸ்லீம்கள் சர்க்காரை வகுப்பு உரிமை கேட்டு பெற்றிருக்கிறார்கள்.

1906 லும் முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து தனித்தொகுதி மூலம் தனிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

1915 லும் முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து காங்கிரஸ் தீர்மானம் மூலமே வகுப்பு பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலம் பெற்றிருக்கிறார்கள். அதுதான் லக்னோ பேக்ட் என்பது.

அதுதவிர 1924 லும் கூட தோழர் சி.ஆர்.தாஸ் அவர்களாலேயே பங்காள பேக்ட் என்னும் இந்து முஸ்லீம் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. 1932லும் இந்துக்களில் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் காங்கிரசின் மூலமே வகுப்புரிமையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் ஏற்பாடு செய்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும்படி அரசாங்கத்துக்கும் விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் தனித்தொகுதி மூலம் கிடைக்க வேண்டும் என்கின்ற கிளர்ச்சி அந்த வகுப்பாருக்குள் இன்றும் இருந்து வருகின்றது.

இப்படி எல்லாம் இருக்க நம்மை மாத்திரம் பார்ப்பனர்களும், அவர்கள் ஆசாமிகளும் வகுப்புவாதிகள் என்று சொல்லுவதென்றால் அதில் உண்மை இருக்கிறதா என்று கேட்கின்றேன். ஆதலால் நாம் நமது லக்ஷ்யத்தை அடையுமட்டும் இம்மாதிரி உத்தியோக வேட்டை வகுப்புவாதம் என்கின்ற பூச்சாண்டிகளுக்குப் பயப்படக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

~subhead

தேசத்துரோகம்

~shend

நம்மை காங்கிரசுக்காரர்கள் தேசத்துரோகிகள் என்பதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று பாருங்கள்.

தேசிய சபை, தேசாபிமான சபை என்பதான காங்கிரசின் யோக்கியதை என்ன என்று சற்று அறிந்து பாருங்கள்.

காங்கிரஸ்சபை ஒரு ஐ.இ.கு. வெள்ளைக்காரர் முயற்சியால் ஏற்படுத்தப் பட்டதாகும். அவர் பெயர் அ.O. ஹியூம் ஆகும். அவர் இந்தியர்களுக்கு உத்தியோகம் வேண்டுமானால் ஒரு ஸ்தாபனத்தின் மூலம் கேளுங்கள் என்று முதலில் யோசனை கூறினார். அதற்காகவே அதாவது வெள்ளைக்காரர்கள் போல் உத்தியோகமும் சம்பளமும் பெறுவதற்காகவே காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்டது.

~subhead

காங்கிரசின் கொள்கைகளோ,

~shend

  1. பல வகுப்பு இந்திய மக்களையும் ஒன்று சேர்ப்பது.
  2. எல்லாருடைய நன்மைக்காகவும் அரசியலிலும் சமூக இயலிலும் பாடுபடுவது.
  3. இந்தியாவும் இங்கிலாந்தும் என்றென்றும் பிரியாமல் இருக்கும்படி சேர்த்துக்கட்டி பிணைப்பது.

இந்த ஸ்தாபனம்தான் தனிப்பெரும் தேசிய ஸ்தாபனமாம். இதே முதல் இரண்டு கொள்கையுடைய நமது ஸ்தாபனம் தேசத்துரோக ஸ்தாபனமாம். காங்கிரஸின் அப்பொழுதைய கொள்கையை விட்டு விடலாம்.

இன்று தானாகட்டும் காங்கிரசின் கொள்கை என்ன? நமது கொள்கை என்ன என்று பாருங்கள்.

காங்கிரசுக்காரர்கள் சட்டங்களை மீறாமல் கிளர்ச்சி செய்து ஸ்தல ஸ்தாபனங்களையும் சட்டசபைகளையும், மந்திரி பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிறார்கள். நாமும் அதே முறையில் தான் அவைகளை கைப்பற்ற வேண்டும் என்கின்றோம். அவர்களும் ஒவ்வொரு பதவியும் ஸ்தானமும் அடைந்தவுடன் சட்டத்திற்கு அடங்கி நடப்பதாகவும் ராஜ விஸ்வாசமாய் இருப்பதாகவும் ராஜாவுக்கும் அவர்பின் சந்ததிக்கும் பக்தி காட்டுவதாகவும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சட்ட திட்டங்களுக்கு கீழ்ப் படிவதாகவும் பிரமாணம் செய்கிறார்கள். நாமும் அப்படியே செய்கிறோம்.

மந்திரி பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்வதாக கூறுகிறார்கள். நாமும் அப்படியேதான் செய்வதாக கூறுகிறோம்.

ஆனால் அவர்கள் மேல்கொண்டு சொல்லுவதெல்லாம் நம் கட்சியை அடியோடு ஒழிக்கப் போவதாய் கூறுகிறார்கள்.

நாமோ அது முடியாதென்றும் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லுகிறோம்.

இதைத்தவிர காங்கிரசுக்கும் நமக்கும் அரசியல் கொள்கையில் என்ன வித்தியாசம் என்று பாருங்கள்.

காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சட்ட சபைக்குப்போய் முட்டுக்கட்டை போட வேண்டும் என்றும் மந்திரிபதவி ஏற்கக் கூடாதென்றும் மற்றும் சிலர் மந்திரி பதவி ஏற்று சீர்திருத்தத்தை உடைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இப்படிக் கூறுவது அசட்டுப் பேச்சு என்றும் சட்ட சபைக்குப் போவதன் மூலமோ மந்திரி முதலிய பதவிகள் ஏற்பதன் மூலமோ சர்க்காரை அசைக்க முடியாது என்று தோழர் மோதிலால் நேரு அவர்களே சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறார்.

ஆகவே சீர்த்திருத்தத்தை உடைப்பதோ, முட்டுக்கட்டை போடுவதோ ஏமாற்று வித்தையே ஒழிய நாணயமானதோ புத்திசாலித்தனமானதோ ஆகாது என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

~subhead

அதிதீவிரப் பேச்சு

~shend

1920 ல் காங்கிரசானது நமது இயக்கத்தை ஒழிப்பதற்கு என்று என்ன என்னமோ சூழ்ச்சிகள் செய்தது.

அதுமுதல் இதுவரை காங்கிரஸ் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை. அதி தீவிரமாக பேசுவதன் மூலம் பொதுமக்களை அவ்வப்போது ஏமாற்றுவதையே தனது லக்ஷ்யமாகக் கொண்டிருந்ததேயல்லாமல் ஞானத்தோடோ அல்லது பொறுப்போடோ ஒரு காரியமும் அதனால் செய்ய முடியவில்லை.

பார்ப்பனரல்லாதார் இயக்க கொள்கைகளையே காப்பியடித்து இந்து முஸ்லீம் ஒற்றுமை என்றும், தீண்டாமை விலக்கு என்றும், மதுவிலக்கு என்றும் மற்றும் சைமன் கமிஷன் பகிஷ்காரமென்றும் ஆர்ப்பாட்டம் செய்த தெல்லாம் தானே வெட்கமடையும்படியான நிலைமையில் இப்போது அவற்றைக் கைவிட வேண்டி வந்தது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை இன்று காங்கிரசிலும் நாட்டிலும் இந்து முஸ்லீம் போராகவே இருந்து வருகிறது.

தீண்டாமை விலக்கு தீண்டாதாருக்கும் காங்கிரசுக்கும் போர் ஏற்பட்டு தீண்டாதார் இந்துமதத்தில் இருந்தே பிரிந்து போவதை நிறுத்த தீண்டாதாருடன் ராஜி செய்து கொள்ள வேண்டியதாய் முடிந்தது.

மதுவிலக்கு விஷயமோ இனி மறியல் செய்வதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக்கொடுக்க வேண்டியதாயிற்று. சைமன் கமிஷன் பகிஷ்காரமோ வட்டமேஜை மகாநாட்டுக்குப்போய் சைமன் ரிபோர்ட்டை விட மோசமான திட்டத்தின் மீது விவாதித்துத் தீரவேண்டியதாயிற்று.

மற்றும் இவற்றையெல்லாம் விடப் பரிதாபகரமான விஷயம் என்ன வென்றால் இன்று காங்கிரசுக்காரர்கள் சட்டசபைக்குப்போய் இன்னது செய்கிறோம் என்று சொல்லி வோட்டுக் கேட்க ஒரு திட்டம் தயாரிக்கவோ, அல்லது தங்கள் தீர்மானத்தில் உள்ளதை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லவோ முடியாத நிலைமையை அடைந்திருப்பதேயாகும். இந்த நிலையில் இருப்பவர்கள் நமக்கு கொள்கை இல்லை யென்றும் திட்டங்கள் இல்லை என்றும் பேசுவது என்பது எவ்வளவு தைரியமான நடத்தையாக இருக்க வேண்டும் என்று பாருங்கள்.

~subhead

நாம் செய்த வேலை

~shend

நாம் இந்த பதினாறு வருஷகாலத்தில் எவ்வித பகிஷ்காரப் பேச்சும், போலி வீரப்பேச்சும் பேசாமல் கண்ணியமாய் உண்மையைப் பேசி காங்கிரசுக்காரர்களால் நடத்த முடியாது என்றும் அடைய முடியாது என்றும் இருந்த அரசியலை ஏற்று அடைந்து மற்ற மாகாணக்காரர்கள் யாரும் செய்திருக்காத மாதிரி நன்றாக நடத்தி மக்களுக்கு நம்மால் கூடிய எவ்வளவோ நன்மை செய்திருக்கிறோம்.

நமது வேலைகள் பெரிதும் கிராமங்களிலேயே கிராமவாசிகளுக் காகவே செய்யப்பட்டிருக்கின்றன.

கிராம சீர்திருத்தம், கிராம போக்குவரவு வசதி, கல்வி வசதி, தண்ணீர் வசதி, கூட்டுறவு இயக்க விரிவு, நில அடமான பாங்கி, கிராமவாசிகள் கடன்கள் குறைத்தல் முதலிய காரியங்கள் செய்யப்பட்டிருப்பதோடு பட்டணங்களுக்கும் தண்ணீர் வசதி, மின்சார வசதி முதலியவைகளும் முன் 50 வருஷங்களில் கூட நடத்தப்பட்டிருக்காத அவ்வளவு அதிகம் இந்த 15 வருஷ காலத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

மற்றும் கிராம சீர்திருத்தத்திற்காக எவ்வளவோ அனுபவ சாத்திய மானதும் முன்னேற்றமானதுமான திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் குழாய் தண்ணீரும். மின்சார வசதியும், நாடக சினிமாக் கொட்டகையும், நந்தவனமும், சுகாதாரமும் இன்னும் மேலான பள்ளிக்கூடமும், மோட்டார் பஸ் போக்குவரவும் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பது நமது கொள்கையாகவும், திட்டமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் கிராம முன்னேற்ற விஷயமாய் காங்கிரசுக்காரர்களின் அல்லது காந்திஜியின் திட்டம் என்ன என்று பாருங்கள்.

கைக்குத்து அரிசி சாப்பிடுதல், கருப்பட்டி உபயோகித்தல், விளக்கெண்ணெய் விளக்கு எரித்தல், கதர்நூல் நூற்றலால் கைத்தொழில் செய்தல் போன்ற காரியங்கள் செய்தல் என்கிறார்கள். இதற்காகப் பொது ஜனங்களிடமிருந்து இன்னம் பணம் வசூலிக்கப் போகிறார்களாம். அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் பொது ஜனங்கள் வரிப்பணத்தில் இருந்தும் இந்த வேலைகள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் போகிறார்களாம்.

ஆகவே இது ஒரு வருணாச்சிரமக் கொள்கையா இல்லையா என்று பாருங்கள்.

ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களாகிய நாம் கிராமங்களை பட்டணங்கள் போலவும் கிராம ஜனங்களை பட்டண ஜனங்கள் போலவுமே ஆக்கப் பாடுபடுகின்றோம். அதற்காக நமது மந்திரிகளும் நாமும் திட்டம் போட்டு வைத்திருக்கிறோம். ஏனென்றால் கிராமம் என்பதாகவே ஒன்று இருக்கக் கூடாது என்றும் எல்லா கிராமங்களும் சிறுசிறு பட்டணம் போலவே இருந்து பட்டணத்தில் உள்ள மக்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் கிராம மக்களுக்கும் இருக்கும்படி செய்யவேண்டும் என்றும், கிராம மக்களின் சரீர உழைப்பையும், அவர்கள் உழைப்பை பட்டண வாசிகள் உறிஞ்சுவதையும் எவ்வளவு தூரம் குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைக்க வேண்டும் என்றும் கருதுகிறோம்.

காங்கிரசுக்காரர்கள் கிராமவாசிகளை பழைய கருப்பர்களாகவே வைத்து அவர்கள் பாடுபட்டு வெள்ளாண்மை செய்து பட்டணவாசிகளுக்கு அழுதுவிட்டு இருட்டு வீட்டில் கருப்பட்டித் தண்ணீர் குடித்துக்கொண்டு ராட்டினத்தைச் சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதும், பட்டணவாசிகள் கிராம வாசிகளுடைய பாட்டையும் வெள்ளாண்மையையும் அனுபவித்துக்கொண்டு ஆகாயக்கப்பலில் சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டியதும் என்றால் இது பிராமணன், சூத்திரன், பறையன் என்பதுபோல் இதுவும் ஒரு மாதிரி வருணாச்சிரம தர்மமா அல்லவா? என்று யோசித்துப்பாருங்கள். இது நிற்க, சமூகத்துறையிலும் நமது கட்சி செய்திருக்கும் முக்கிய வேலைகளைக் கவனித்துப்பாருங்கள்.

தேவஸ்தான நிருவாகத்திற்கு சட்டம் செய்திருக்கிறது. இதை நமது பார்ப்பனர்களும் அவர்களது ஆசாமிகளும் எவ்வளவுதான் பழித்துக்கூறி எதிர்த்து வந்தாலும் இதன் நலத்தை அறிந்து மற்ற மாகாணக்காரர்களும் இப்போது இதைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சாமிக்காக என்று பார்ப்பனரல்லாத வகுப்புகளின் சில வகுப்பு பெண்களை பொட்டுக்கட்டி விவசாரத்திற்கு விடும் தீய வழக்கத்தை சட்டம் செய்து அடியோடு ஒழித்தது.

வயிற்றுப் பிழைப்புக்கு ஆக விவசாரித்தனத்திற்கென்று பெண்கள் தனித்து வாழும் வாழ்க்கையையும் விவசார வியாபாரத்தையும் சட்டம் செய்து ஒழிக்கப்படுகிறது.

நாட்டு வைத்தியத்தை தற்கால முறையில் புனருத்தாரணம் செய்து அதன் மூலம் மக்களுக்கு அதிக சௌகரியம் ஏற்படும்படி செய்தது.

பொது வாழ்வில் பொது இடங்களில் தீண்டாமை பாராட்டக்கூடாது என்று சட்டங்களும், நிருவாக உத்திரவுகளும் செய்து தீண்டப்படாத மக்களுக்கு இருந்து வந்த பல அசௌகரியங்களையும், இழிவுகளையும் ஒழித்தது.

கல்வியில் பின்னடைந்த மக்களுக்கும், சிறப்பாகப் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாராளமாய் கல்வி வசதி கிடைக்கும்படி செய்து அவர்களின் எண்ணிக்கையை 100க்கு 200, 300 மடங்குக்கு மேல் உயர்த்தி இருக்கிறது.

விவசாயிகள் விஷயத்திலும் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகை விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்படியாகவும், உழுது பயிர் செய்யாத மிராசுதார்களில் ஒரு கூட்டத்தார் விவசாயிகளின் மீது வீண் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்கு ஆகவும் இனாம் நில மசோதா என்று ஒரு மசோதாவுக்கு அஸ்திவாரமாய் இருந்து நிறைவேற்றி வைத்திருக்கிறது.

இன்னும் இதுபோன்ற எவ்வளவோ நன்மைகள் எவ்வளவோ எதிர்ப்பிற்கிடையில் ஜஸ்டிஸ் கட்சி செய்திருந்தும் அதுவும் காங்கிரஸ்காரர்கள் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அதனால் யாதொரு காரியமும் செய்யமுடியாதென்றும் தள்ளிவிட்ட சீர்திருத்தத்தை ஏற்று நாம் இவ்வளவு காரியம் செய்திருக்க, நம் கட்சி தனது அதிகாரத்தில் இல்லாததும் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாததுமான காரியங்களைச் சொல்லி அதன் மீது வீண் பழி சுமத்தி பார்ப்பனர்களும் அவர்களுடைய ஆட்களும் காங்கிரசின் பேரால் ஜஸ்டிஸ் கட்சியை வைது பழிகூறி விஷமப்பிரசாரம் செய்து வருகிறார்கள்.

~subhead

நிலவரிப் பழி

~shend

இப்பொழுது காங்கிரசுக்காரர்கள் தஞ்சை ஜில்லாவிலும் மற்றும் இரண்டொரு நஞ்சை பூமி மிகுந்த ஜில்லாவிலும் ஜஸ்டிஸ் கட்சியார் நிலவரி குறைக்கவில்லை என்று பழி கூறித் திரிகிறார்கள். இது மிகவும் வெறுக்கத் தகுந்த விஷமப் பிரசாரமாகும். ஏனெனில் பூமி வரி விதிப்பதோ, குறைப்பதோ, கூட்டுவதோ ஆகிய விஷயங்கள் மந்திரிகளுடைய இலாக்காக்கள் அல்ல என்றும் அவைகள் சர்க்காரார் ஒதுக்கி வைத்துக்கொண்ட இலாக்காக்கள் என்றும் காங்கிரசுக்காரருக்கு தெரிந்திருந்தும் நாமும் அநேக தடவை எடுத்துச் சொல்லி இருந்தும் அவர்கள் இன்னும் இம்மாதிரி வீண் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் அவர்களது நாணயம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி பொது ஜனங்களே தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

~subhead

காங்கிரஸ் சாதித்தது என்ன?

~shend

இவைகள் ஒருபுறமிருக்கட்டும்.

இந்த 50வருஷ காலமாகவாவது அல்லது உலகப் பெரியார் என்னும் காந்தியார் காங்கிரஸ் சர்வாதிகாரம் வைத்து நடத்திய இந்த 16 வருஷ காலத்திலாவது காங்கிரஸ் சாதித்தது என்ன என்று யாராவது ஒரு விரலை நீட்ட முடியுமா என்று பாருங்கள்.

நமது மாகாணத்தில் தான் நாமாகிய “தேசத்துரோக” கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி இருந்து காங்கிரஸ்காரர்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தோம் என்று அவர்கள் சொல்லக்கூடுமானாலும் ஜஸ்டிஸ் கட்சி இல்லாததும் காங்கிரஸ்காரர்களே ஆதிக்கம்பெற்று இருந்ததுமான மற்ற மாகாணங்களிலாகிலும் காங்கிரஸ்காரர்கள் மக்களுக்காகவோ நாட்டுக்காகவோ என்ன செய்தார்கள்?

காங்கிரஸ்காரர்கள் நம்மை பொது ஜனங்களிடமிருந்து வசூலித்த வரிப்பணத்தை நாம் சரியாகச் செலவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதற்கு பதில் மேலே சொல்லியிருக்கிறேன்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் இந்த பதினைந்து வருஷங்களாக பொது ஜனங்களிடமிருந்து திலகர் நிதி, சத்தியாக்கிரக நிதி, கதர் நிதி, ஹரிஜன நிதி போன்ற பல நிதிகள் கோடிக்கணக்கில் வசூலித்தார்களே அந்த நிதிகளால் ஏற்பட்ட நன்மை என்ன? காங்கிரசுக்காரர்களுக்குள்ளாகவே அந்நிதி கையாளப்பட்ட நாணயத்தைப் பற்றிய புகார்களே இன்னமும் ஓயவில்லை.

நிதிகள் தான் தொலைந்து போகட்டும். கொள்கை மேல் கொள்கை, திட்டங்கள் மேல் திட்டமாக காங்கிரஸ் நாள் ஒரு கொள்கையும் பொழுதொரு திட்டமும் வகுத்து இடியைப் போல் கர்ஜித்து மின்னலைப்போல் மாற்றி மாற்றி அமைத்து பேசிய வீரப் பேச்சுகள் நடத்திய பஹிஷ்காரங்கள், சட்ட மறுப்புகள், மறியல்கள், சத்தியாக்கிரகங்கள், பட்டினிகள் ஆகியவைகள் எல்லாம் என்ன ஆயிற்று? காங்கிரஸ் பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்த நாணயமோ ஒழுக்கமோ தான் என்ன? அதனிடத்தில் இருக்கும் கட்டுப்பாடும் தலைவர்களின் ஒற்றுமையும் தான் என்ன? இவைகளில் எதைப்பற்றியாவது இன்று காங்கிரஸ் இன்னது செய்தது, அதனால் இன்ன பலன் கிடைத்தது என்றாவது சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு தேர்தல்கள் வரும் சமயத்திலும் காங்கிரஸ் ஒவ்வொரு புதிய தந்திரத்தைக் கையாண்டு வெற்றிமேல் வெற்றி காங்கிரசுக்கே வெற்றி என்றும் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டது என்றும் 1000 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டது என்றும் கொட்டை எழுத்துப் பிரசாரம் செய்து வந்ததெல்லாம் என்ன ஆயிற்று? எந்த வெற்றியால் என்ன சட்டம் செய்தது? அல்லது எந்த வெற்றியில் எவ்வளவு வரி குறைக்க முடிந்தது? அல்லது சர்க்காரையோ சர்க்கார் நடத்தையையோ எந்த அளவுக்கு அசைக்க முடிந்தது? அல்லது மக்களுக்கு இன்ன நன்மைகள் ஏற்பட்டன என்று அவைகளில் எதையாவது சொல்ல அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்று பாருங்கள்.

சென்ற அசம்பளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வெற்றி பெற்றார்கள், அவர்களால் என்ன செய்ய முடிந்தது? “153 “வெற்றி பெற்ற” தீர்மானங்கள்” குப்பைத் தொட்டிக்கு போகச் செய்ய முடிந்தது. அடக்கு முறை சட்டங்கள் என்ன ஆயிற்று? வீறுகொண்டு எழ முடிந்தது.

நமது தமிழ்நாட்டில் பல ஸ்தல ஸ்தாபனங்களில் சிறப்பாக ஜில்லா போர்டுகளில் காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற்று பிரசிடெண்ட் பதவி பெற்று ஆதிக்கம் கொண்டார்கள். இதனால் என்ன செய்ய முடிந்தது? எங்கும் ஊழல், எங்கும் நாற்றம், எங்கும் அசுத்தம் என்று காங்கிரஸ்காரர்களே ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதல்லாமல் எங்கு என்ன மாறுதல் நடந்தது என்று சொல்ல முடியும்? என்று கேட்கின்றேன்.

காங்கிரஸ் கட்டுப்பாடான சபை கட்டுப்பாடான சபை என்று தோழர் ஜவஹர்லால் முதல் ஒரே மூச்சாகக் கத்துகிறார்கள். எதில் கட்டுப்பாடு? மக்களை ஏமாற்றுவதில் கட்டுப்பாடான பொய் அல்லாமல் எந்தக் காரியத்தில் கட்டுப்பாடு என்று சொல்லமுடியும்? தேர்தல்களின் யோக்கியதையும் அதில் காங்கிரஸ்காரர் நடந்து கொண்டதும் பார்த்தாலே கட்டுப்பாடு விளங்கிவிடும்.

இப்படிப்பட்ட இவர்கள் இனியும் தேர்தலுக்கு நிற்கும் காரணம் என்ன என்பதும் இனியும் நம்மீது பழிகூறி நம்முடன் போட்டிபோடுவதின் காரணம் என்ன என்பதும் நமக்கு விளங்கவில்லை. இந்த லட்சணத்தில் வரப்போகும் சட்டசபை தேர்தலுக்குப் போட்டி போடவும் நம்மை அடியோடு முறியடிக்கவும் இப்போதே பார்ப்பனர்கள் யுத்த முஸ்தீபுகள் தயார் செய்கின்றார்கள். இவர்கள் வெற்றி பெறப்போவதாகவே வைத்துக் கொள்ளுவோம். இவர்கள் அங்கு செய்யப்போவது என்ன என்று யாருக்காவது தெரியுமா? அல்லது அவர்களாவது ஏதாவது விளங்கும்படியாய் சொல்லுகிறார்களா? ஒன்றுமே இல்லாமல் சட்டசபையைக் கைப்பற்ற வேண்டும், ஜஸ்டிஸ் கட்சியை முறியடிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் திட்டமாக இருக்கிறதே ஒழிய தாங்கள் அங்கு போய் செய்வது என்ன என்பதுபற்றி இன்றுவரை காங்கிரசுக்கு திட்டமே இல்லாமல் இருந்து வருகிறது.

காங்கிரஸ்காரர்களின் வெற்றியின் யோக்கியதையையும் வெற்றி பெற்ற பின் அவர்களால் செய்யப்பட்டதையும் அவர்கள் நடந்து கொண்டதையும் நேரில் பார்த்த நாம் இன்னமும் அவர்கள் ஒரு ஸ்தானமாவது கைப்பற்ற இடம் தரலாமா என்பது பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்த மாதிரி காங்கிரஸ் வெற்றிபெற விடலாமா?

இந்த நிலையில் காங்கிரஸ் ஒரு சமயம் வெற்றி பெற்றுவிடுமேயானால் நமது நாடும் நமது சமூகமும் அரசியலிலும் சமுதாய இயலிலும் குறைந்த பக்ஷம் ஒரு நூற்றாண்டு நிலையாவது பின் தள்ளிப் போகவேண்டியதாய் விடும். பார்ப்பனர்களின் சுயராஜ்யம் என்பதில் கருத்தோ மக்களை பழய காலநிலைக்குக் கொண்டுபோய் பழமை முறைகள் காப்பாற்றப்பட்டுப் பார்ப்பனீய ஆதிக்கத்தை எல்லாத் துறைகளிலும் நிலை நிறுத்த வேண்டும் என்பதேயாகும். ஆதலால் தோழர்களே! நாம் மிக்க கவலையுடனும் ஜாக்கிரதையுடனும் வேலை செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம். நமக்குள் எவ்வித பிளவும் இல்லாமல் ஒற்றுமையுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

~subhead

நம் தலைவர்

~shend

நமது தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் மிக நெருக்கடியான சமயமாகிய இந்த 3, 4 வருஷ காலமாக வெகு அரசியல் ஞானத்துடனும், தைரியத்துடனும், வீரத்துடனும் நமது இயக்கத்தை ஏராளமான பணச் செலவுடன் நடத்தி வந்திருக்கிறாரா என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை. அவரே நமது தலைவராயில்லாதிருக்கும் பக்ஷம் நம் கட்சி மிகவும் கஷ்டப்பட்டிருக்கும் என்று உண்மையாகச் சொல்லுகிறேன்.

மற்ற மந்திரிமார்களும் தங்களால் கூடுமானவரை கட்சி நன்மைக்கு ஆக எவ்வளவோ அசௌகரியங்களுக்கிடையில் பிரசார விஷயமாய் உழைத்து வந்திருக்கிறார்கள் என்பதையும் மிகைப்படுத்தாமல் கூறுகிறேன். பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டியாரும் தக்கதொரு சமயத்தில் வெளி வந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து பிரசாரம் செய்திருக்கிறார்கள். மற்ற ஜில்லாக்களிலும் உள்ள பிரமுகர்கள் கூடியவரை கட்சிக்கு ஆதரவளித்து வந்திருக்கிறார்கள் என்றாலும் செய்திருக்க வேண்டிய அளவு பிரசாரம் நாம் செய்யவில்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். நமது பாமர மக்கள் வெகு சுலபத்தில் பார்ப்பனர்கள் விஷமப் பிரசாரத்தாலும் அவர்களது பத்திரிகைகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். உதாரணம் வேண்டுமென்றால் இந்த இரண்டு வருஷ காலமாய் நடந்து வந்த தேர்தல்களே போதிய சாட்சியாகும். ஆதலால் தலைவர் அவர்களும் மற்றும் கனம் மந்திரிமார்களும் தயவு செய்து கவனித்து மாகாணமெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்து ஆங்காங்குள்ள பிரமுகர்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களை மாற்றி நட்பு முறை உண்டாக்கவேண்டும். தகுந்த பிரசாரகர்கள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் உண்மை நிலைமை விளங்கும்படி செய்யவேண்டும். குறைந்த விலையில் தாய் பாஷை தினசரிப் பத்திரிகைகள் ஏற்பாடு செய்து கிராமங்கள் எல்லாம் பரவச் செய்யவேண்டும். இந்தக் காரியங்கள் செய்யப்பட்டால் கண்டிப்பாக வெற்றி நம்முடையதேயாகும்.

ஆங்காங்குள்ள மற்ற தோழர்களும் கட்சி நலத்தை உத்தேசித்து தங்களால் கூடுமான உதவி செய்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். கடைசியாக திண்டுக்கல் பிரமுகர்களும் சிறப்பாக வரவேற்பு கமிட்டி அக்கிராசனர் தோழர் சோலை நாடார் அவர்களும் மனமுவந்து முன்வந்து தென் ஜில்லாக்கள் சார்பாக இப்பெரிய மகாநாடு கூட்டி மக்களுக்கு இவ்வளவு பெரிய உற்சாகத்தை மூட்டி உதவி செய்ததற்கும் என் மனப்பூர்வமான நன்றியறிதலை மறுமுறையும் தெரிவித்துக் கொள்வதோடு எனது முன்னுரையை முடித்துக் கொண்டு மகாநாட்டின் காரியத்தை துவக்குகிறேன்.

குறிப்பு : திண்டுக்கல்லில் 27.09.1936 ஆம் நாள் நடைபெற்ற தென் மாவட்ட ஜஸ்டிஸ் மாநாட்டில் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு.

குடி அரசு சொற்பொழிவு 27.09.1936

You may also like...