சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி

 

தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியின் தேசீயம், அவரது மூளை போலவே விசித்திரமானது; கோணல்மாணலானது. இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கில கவர்னர்களுக்குப் பல்லாண்டு பாடலாம்; உபசாரப் பத்திரமளிக்கலாம்; ஆனால் ஒரு இந்திய கவர்னரைப் பாராட்டவோ, உபசரிக்கவோ கூடாதென்று அவர் சென்னைக் கார்ப்பரேஷனில் வெளுத்து வாங்கியதை இந்தியர்கள் மறந்திருக்கமாட்டார்கள். ஜஸ்டிஸ்கட்சி மீதுள்ள வெறுப்பினால் ஒருகால் அவர் அவ்வாறு உளறிக்கொட்டியிருக்கக் கூடும்; அதனால் அவருடைய தேசீயக் கற்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடாது எனப் பலர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவரது பம்பாய்ப் பேச்சு அவரது உண்மைச் சுயரூபத்தை சந்தேகத்துக்கு இடமின்றி விளக்கிக் காட்டிவிட்டது. கடுகத்தனை இந்திய பற்றாவது அந்த ஆசாமிக்கு இல்லை யென்பதை அவரது பம்பாய்ப் பேச்சு நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறது. “குடியாட்சியும் தடியாட்சியும்” என்னும் பொருள் பற்றி தோழர் சத்தியமூர்த்தி பம்பாயில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தின்போது அவர் வாந்தியெடுத்த சில அபிப்பிராயங் களைப் பார்த்து சுயமரியாதையுடைய இந்தியர்கள் கலக்கம் கொள்ளாமலும் கண்ணீர் வடிக்காமலும் இருக்கமாட்டார்கள். “கடைசி பிரிட்டிஷ் சோல்ஜர் இந்தியாவிலிருந்து லண்டனுக்குக் கப்பலேறிய பிறகு, இந்திய ஊழல்களை ஒழிக்க 50 வருஷ காலம் பிடிக்கும்” என தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் திருவாய் மலர்ந்தருளினாராம். இவ்வளவு மோசமான வார்த்தைகள் எந்த தேசீயவாதி வாயிலிருந்தாவது வெளிவருமா?

மற்றும் “இந்தியா முழுதும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு துறையிலும் ஊழல் நிறைந்தே இருக்கிறது. அதை மறைப்பதினால் இந்தியாவுக்கு நலனேற்படாது” என்றும் அவர் செப்பினாராம். இந்தியர் அந்தஸ்து, பெருமை, சுயமரியாதை சுத்தம், சுதந்தர தாகத்தைப்பற்றி கடற்கரைக் கூட்டங்களில் பிரசங்க மாரி பொழியும் சத்தியமூர்த்தியார் இவ்வாறு கூறுவது?

கடைசியாக ஜனநாயக ஆட்சிக்குள்ள நிலைமை இந்தியாவில் இல்லவே இல்லையென்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டாராம்.

ஜனநாயகத்துக்குத் தேவையான நிலைமை இந்தியாவில் இல்லை யானால் “பூரண சுயராஜ்யந்தான் இந்தியர் லக்ஷ்யம்; அதற்குக் குறைந்த எந்த அரசியலமைப்பையும் இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என தோழர் சத்தியமூர்த்தியும் அவரது கோஷ்டியாரும் கூப்பாடு போடுவது “ஹம்பக்” தானே.

வாடிப்பட்டி ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டை கனம் மந்திரி ராஜன் திறந்து வைத்தபோது “இரட்டையாட்சியை நாங்கள் வெற்றிகரமாக நடத்திவைத்து சுயராஜ்யம் நடத்த இந்தியர்களுக்கு ஆற்றலுண்டு என்பதை பிரத்தியட்சமாகக் காட்டியிருக்கிறோம். வரப்போகும் மாகாண ஆட்சியைத் திறம்பட நடத்தினால் மற்றும் அதிகப்படியான அதிகாரங்களை பிரிட்டிஷ் சர்க்கார் வழங்குவார்கள்” எனப் பொருள்பட பேசினார். அது தோழர் சத்தியமூர்த்திக்குப் பிடிக்க வில்லை. கனம் மந்திரி ராஜன் இந்தியர்களை அவமதித்து விட்டதாகக் கூச்சல் போட்டார். இந்தியர்கள் என்ன பள்ளிப் பையன்களா பிரிட்டிஷாரிடம் சுயராஜ்யத் திறமையை காட்டுவதற்கு? சுயராஜ்யப் பரீட்சை நடத்த பிரிட்டிஷார் யார்? நம் நாட்டை ஆள நமக்கு உரிமையில்லையா? அந்நியரிடமிருந்தா நற்சாட்சிப் பத்திரம் பெறவேண்டும்? சீச்சீ! மந்திரி ராஜன் இந்தியர்களை ரொம்ப அவமதித்துவிட்டார்” என்றெல்லாம் சென்னை காங்கிரஸ் மண்டபக் கூட்டத்தில் வெளுத்து வாங்கினார். சென்னையில் அவ்வாறு புலம்பிய சத்தியமூர்த்தி பம்பாயிலே “இந்தியர்கள் கழிபட்டவர்கள்; ஆகாவழிகள்; ஜனநாயகம் நடத்த யோக்கியதையற்றவர்கள்” என்றெல்லாம் பிதற்றி யிருக்கிறார். இப்படிப் புலம்பும் மூர்த்தியார் தாம் பெரிய தேசீயவாதி யென்றும் பூரண சுயேச்சைவாலா என்றும் சொல்லிக்கொள்ளத் தயங்குவதுமில்லை. வாஸ்தவத்தில் தோழர் சத்தியமூர்த்தியைப் போன்ற உளறுவாயர்கள் சிலர் இந்தியாவில் இருப்பதினாலேயே “சுயராஜ்யம் பெற இந்தியர்களுக்கு லாயக்கில்லை” என்று சர்ச்சில் கோஷ்டியார் கூறுகிறார்கள். காமாலைக் கண்ணனுக்கு உலகம் முழுதும் மஞ்சள் மயமாகத் தோன்றுமாம். திலகர் நிதி, தீண்டாமை நிதி போன்ற பொது நிதிகளை “ஸ்வாஹா” செய்து வயிறு வளர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்த தோழர் சத்தியமூர்த்தி “இந்தியாவிலே எல்லா சமூகங்களிலும் எல்லாத் துறைகளிலும்” ஊழல்களையும், குப்பைமேடுகளையும் காண்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்குண்டா? ஆனால் தமது சொந்த அனுபவத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு “இந்தியா முழுதும் ஊழல் மயம். ஜனநாயகத்துக்கு இந்தியா லாயக்கில்லை” என்று புலம்புவது மூடத்தனம், விஷமத்தனம், தேசத்துரோகம் என்று கூறினால் அதை மறுக்க தோழர் சத்தியமூர்த்தியாருக்கு நாக்குண்டா!

இந்தியர் ஒழுக்கத்தைக் கண்டித்து கன்னி மேயோ எழுதியபோது இந்திய தேசப்பக்தர்கள் கொதித்தெழுந்தார்கள்; தேசீயப் பத்திரிகைகள் எல்லாம் கண்டித்தன; கூப்பாடு போட்டன. இப்பொழுது மேயோவைவிடக் கேவலமாக தோழர் சத்தியமூர்த்தி பேசியிருக்கிறார். ஆகவே குப்பைக்காரி, சாக்கடை இன்ஸ்பெக்டர் போன்ற பட்டப்பெயர்களை மேயோவுக்குச் சூட்டிய தேசபக்தர் களும் தேசீயப் பத்திரிகைகளும் குப்பைக்காரன் சத்தியமூர்த்தி, சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி என அவருக்குப் பெயர் சூட்ட தயார்தானா.

குடி அரசு கட்டுரை 30.08.1936

You may also like...