உடைப்பதா அனுபவிப்பதா?

1937 ஏப்ரலில் அனுபவத்துக்கு வரப்போகும் சீர்திருத்தத்தை உடைப்பது என்பது காங்கிரஸ்காரர்களின் கொள்கை என்று சொல்லி மக்களை இதுவரை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றி வந்தார்கள். அந்தப் பிரச்சினையை முக்கியமாய் வைத்தே காங்கிரஸ்காரர் இந்திய சட்டசபைக்கும் போனார்கள். ஆனால் அங்கு சென்று அது விஷயமாய் யாதொரு காரியத்தையும் செய்யாமல் தாங்கள் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்வதற்கு ஆகவே அவர்களது முழுநேரமும் செலவிட வேண்டியதாய் விட்டது. அதே தன்மையின் மீது ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சென்றார்கள். அங்கும் அவர்கள் இல்லாதிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று காட்டிக் கொண்டார்களே தவிர ஒரு காரியமும் புதியதாய் செய்யவில்லை. அன்றியும் ஒருவரோடொருவர் போரிட்டவண்ணமாய் இருக்கிறார்கள். இனிவரப் போகும் சட்டசபைக்கும் நிற்கப்போகிறார்கள். ஆனால் நல்ல வேளையாய் அதற்கு என்ன கொள்கை? என்ன பிரச்சினையின் மீது நிற்பது? பொது ஜனங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுப்பது? அங்கு போய் என்ன செய்வது? என்கின்ற விஷயங்களில் இதுவரை யாதொரு முடிவும் இல்லாமல் “பலசரக்கு கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது” போல் (அதாவது ஒரு சாமானை எடுத்து மற்றொன்றில் கொட்டுவதும் அதை மற்றவர்கள் பிரித்து வைப்பதும் மறுபடியும் கொட்டிக் கலக்குவதுமான வேலை) கண்டபடி உளறிக் கொண்டிருப்பதே வேலையாய் இருந்து வருகிறார்கள். இப்போது காங்கிரசானது சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் இனி உபயத்துல்லா, குப்புசாமி, கல்யாணராமய்யர் கம்பினியாரால் முடியாத காரியமாகிவிட்டது. இந்தக் கம்பினியின் யோக்கியதையை சிறு தேர்தலிலேயே கண்டுவிட்டார்கள். ஆதலால் இனி சுப்பராயன், நாடிமுத்து, ராமலிங்கம் போன்ற மந்திரி பதவி கொள்கை கம்பினியை பிடித்துதான் ஆகவேண்டும். அந்தக் கம்பினிக்கும் முட்டுக்கட்டை தகர்த்தெறிவது பதவி மறுப்பு ஆகிய விஷயங்களுக்கும் வெகுதூரம். ஏனெனில் அது தங்களுக்கு சிறிதாவது மானமிருப்பதாய் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் கம்பினியாதலால் அது சுலபத்தில் சத்தியமூர்த்திக்கு ஜே போடுவதென்பது முடியாத காரியம்.

இந்தக் காரணங்களால் சென்னை மாகாண காங்கிரஸ் படிப்படியாய் முட்டுக்கட்டை, தகர்த்தெறிதல், பதவிமறுப்பு ஆகிய தந்திரங்களை சிறுகச் சிறுக கைவிட்டே வந்து கடசியாக விதவை கர்ப்பம் “கரைந்து” ஒரே நாளில் சூதகக்கட்டியாய் மறைந்துவிட்டது போல் இப்போது தோழர் சத்திய மூர்த்தியார் அவர்கள் சிம்லாவில் இருந்து மந்திரி கனம் ராஜன் அவர்களின் பெரியகுளம் பேச்சுக்கு பதிலளிக்கும் முறையில் எழுதியனுப்பப்பட்ட சேதியில் உண்மையை கக்கிவிட்டார். அதாவது

(அது 25-7-36ந் தேதி தினமணி என்கின்ற பத்திரிகையில் பக்கம் 5ல் கலம் 3ல் பிரசுரித்திருக்கிறபடி)

  1. “நாங்கள் மாகாண சட்டசபையில் மெஜாரிட்டியாக இருந்தால் இந்த அரசியலமைப்புக்கு பதிலாக யாவரும் ஒப்புக்கொள்ளும்படியான ஒரு அரசியலமைப்பைப் பெறுவதற்கும் (யாவரும் ஒப்புக்கொள்ளும் படியாய் ஒரு நாளும் முடியப்போவதில்லை பர்) அதற்கிடையில் (அது பெறும் வரை பர்)
  2. இந்த சீர்திருத்தத்தின் கீழ் முடிந்த அளவுக்கு ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கும்,
  3. ஜஸ்டிஸ் கட்சி போன்ற பிற்போக்கானதும் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டதுமான கட்சிகளின் விஷமங்களை தடுப்பதற்கும் நாங்கள் பதவியேற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறோம்”

என்று பதில் சொல்லியிருக்கிறார். ஆகவே இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சீர்திருத்தத்தை ஏற்று நடத்துவதென்றும், அதனால் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்யக்கூடுமோ அவ்வளவு செய்ய பயன்படுத்திக் கொள்வது என்றும் பச்சையாய் ஒப்புக்கொண்டு மந்திரி ஆசை உள்ளவர்கள் எல்லாம் காங்கிரசில் சேரவேண்டும் என்றும் ஜஸ்டிஸ் கட்சிக்கோ பீபிள்ஸ் பார்டிக்கோ போகக்கூடாது என்றும் முரசு அடித்துவிட்டார்கள் என்பதேயாகும்.

மற்றும் இந்த பேச்சுப்படி பார்த்தால் சீர்திருத்தத்தை என்ன செய்கின்றது என்கின்ற வரையில் ஜஸ்டிஸ் கட்சிக்கோ, பீபிள்ஸ் பார்டிக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித வித்தியாசமாவது இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் ஒரு வித்தியாசம் மாத்திரம் இருக்கிறது. அது என்ன வென்றால் வகுப்புவாதத்தை ஒழிக்கப்போகிறோம், தடுக்கப்போகிறோம் என்பதேயாகும்.

இந்த ஒரு விஷயத்தைக் கவனித்தால் உண்மைப் பார்ப்பனரல்லாதாராயும், முஸ்லீமாயும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராயுமிருக்கும் ஒவ்வொரு சிசுவும் காங்கிரசை அது பதவியேற்க முடியாமல் முறி அடித்துத் துரத்தியே ஆகவேண்டியிருக்கிறது.

ஏனெனில் இந்த மூன்று வகுப்பாரும் வகுப்புவாதம் பேசியே வகுப்புத் தீர்ப்பு பெற்று அனுபவித்து வருகிறார்கள்.

அதாவது முஸ்லீம்களுக்கும் தீண்டப்படாத வகுப்பு என்பாருக்கும் சீர்திருத்தத்திலேயே வகுப்பு உரிமை புகுத்தப்பட்டு இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற கூட்டத்தாருக்கு மாகாண அரசாங்கத்தில் சில முறைகளின் மூலம் ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்துக்கும் உத்தியோகப் பிரதிநிதித்துவக்கும் வகுப்பு உரிமை இருந்து வருகிறது. காங்கிரஸ்காரர்கள் பதவியேற்பது இதை ஒழிப்பதற்காகவே என்று சொன்னால் இதை உண்மையான சுத்த ரத்த ஓட்டமுள்ள மக்கள் யார்தான் சகித்துக்கொண்டு தங்கள் வகுப்புக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்துவிட்டு பார்ப்பனர்கள் காலைக் கழுவ ஓடக்கூடும் என்று கேட்கின்றோம்.

வகுப்புவாதத்துக்கு இந்த முறை தவறு என்று சொல்வதானால் இவர்களாவது (காங்கிரஸ்காரர்களாவது) வேறு வழி காட்டட்டும். அதில்லாமல் அடியோடு வகுப்புரிமையை ஒழிப்பது என்றால் காங்கிரஸ் ஒழிவதுதான் நிச்சயமே ஒழிய வகுப்புரிமை வாதம் ஒரு நாளும் இந்தியாவில் ஒழியப் போவதில்லை. ஏனெனில் வகுப்புப் பிரிவையும், வகுப்பு பேதத்தையும் ஒழிக்கக் காங்கிரசே சம்மதிப்பதில்லை.

நிற்க, ஜஸ்டிஸ் கட்சி இதுவரை என்ன நன்மை செய்தது என்கின்ற விஷயத்தில் கனம் மந்திரி ராஜன் எடுத்துக்காட்டியிருக்கும் விஷயங்களை எல்லாம் தோழர் மூர்த்தியார் அப்படியே ஒப்புக்கொண்டுவிட்டார்.

அதாவது அதே 25-7-36ந் தேதி தினமணியில் பக்கம் 5ல், கலம் 4ல் உள்ள மூர்த்தியார் பதிலில் “எவ்வளவு பெரிய ஜாப்தா” என்கின்ற தலைப்பில் கனம் மந்திரி ராஜன் கூறிய எல்லாவற்றையும் எடுத்துப்போட்டு ஒப்புக் கொண்டு 5வது கலத்தில் (அரசியல் சட்டத்தில் பர்)

“எவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதிலும் அவர்கள் (ஜஸ்டிஸ் கட்சியார்கள்) இன்னமும் அதிகமாய் செய்திருக்க முடியும்” என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதிகமாய் என்ன செய்து இருக்க முடியும் என்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு வரியாவது மூர்த்தியார் சொல்லவே இல்லை.

ஆகவே சீர்திருத்தத்தை ஏற்று நடத்துவது, தன்னால் கூடியவரை மக்களுக்கு நன்மை செய்வது என்பதிலும், இதுவரையில் செய்திருக்கும் காரியங்கள் என்பவைகளை மூர்த்தியாரே ஒப்புக்கொண்டதிலிருந்தும் காங்கிரஸ் கட்சியானது ஜஸ்டிஸ் கட்சிக்கு மாறானதாக இல்லை என்பது வெளிப்படை.

இப்படி இருக்க எந்த வகையில் ஜஸ்டிஸ்கட்சியை பிற்போக்கான கட்சி என்று மூர்த்தியாரோ அல்லது காங்கிரஸ் கூலிகளோ சொல்லுகிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை.

மற்றும் காங்கிரசின் மூலாதாரக் கொள்கைகளின் விஷயத்திலும் பூரண சுயேச்சை என்பது குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் என்றும், வெள்ளையருடன் ஒரு ராஜித்திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இந்த நாட்டில் சுயராஜ்யம் பெறுவது என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் தோழர் மூர்த்தியார் ஆனைமலையில் வெள்ளைக் காரர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் தன் கையிலேயே எழுதிப் பத்திரிக்கைகளுக்கு சேதி அனுப்பியிருக்கும் அறிக்கையும் இருக்கும்போது, “ஜஸ்டிஸார் வெள்ளையர்களுடன் கூட்டாளிகளாக இருக்க விரும்புகிறார்கள்” என்று ஜஸ்டிஸ் கட்சியை சிம்லா பேச்சில் குறை கூறுவது யோக்கியமா? என்று கேட்கின்றோம்.

ஆகவே இந்த நிலைமையில் காங்கிரசுக்காரர்கள் சீர்திருத்தத்தை உடைக்கப் போகிறார்களா அல்லது ஏற்று நடத்தப்போகிறார்களா? என்பதையும், ஏற்று நடத்துவதில் ஜஸ்டிஸ்காரர்களை விட எந்த அம்சத்தில் முற் போக்காளர்களாய் இருக்கக்கூடும் என்பதையும், அவர்களது முக்கிய நோக்கம் எப்படியாவது மந்திரி பதவிகளைக் கைப்பற்றி இப்போது இருந்து வரும் வகுப்பு உரிமைகளை ஒழித்து ஒரே வகுப்பு அதாவது பார்ப்பன ஆட்சி ஆக்க வேண்டுமென்பதல்லாமல் வேறேதாவது உண்டா என்பதையும் பொதுமக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 09.08.1936

 

You may also like...