நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்?

தெளிவாகச் சிந்தனை செய்து பழகவேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. அதாவது

“நீ அதை உண்மையென நம்பக் காரணமென்ன?

அல்லது

நான் அதை உண்மையென நம்புவதற்கு ஆதாரமென்ன?” என்பதே.

பெரும்பாலார் கொண்டிருக்கும் பெரும்பான்மையான அபிப்பிராயங் களுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதை நாம் முக்கியமாக உணரவேண்டும். அவர்கள் அவைகளை ஏன் நம்புகிறார்கள் என்பதற்குக் காரணமே இல்லை; அவர்களுடைய அபிப்பிராயங்கள் சரியென நிரூபிக்க அவர்களுக்கு ஆதாரமும் காட்ட முடியாது. “நீங்கள் அவ்வாறு ஏன் எண்ணுகிறீர்கள், அல்லது அவைகளை நம்புவதற்குக் காரணம் என்ன?” எனக்கேட்டால் அவர்களுக்கு விடையளிக்க முடியாது. அவ்வாறு கேட்டால் அவர்கள் திகைப்படைவார்கள். அம்மட்டோ? அம்மாதிரிக் கேள்விகள் கேட்பதைப் பெரிய தொந்தரவாகவும் எண்ணுவார்கள். அல்லது மிகப் பிரயாசைப்பட்டு ஏதாவது ஒரு மாதிரிக் காரணங்களைக் கூறுவார்கள். ஆனால் அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்பதை நீங்கள் வெகு சுளுவில் அறிந்துகொள்வீர்கள்.

ஆதாரமில்லாமலும் ஆராய்ந்து பாராமலும் மக்கள் பல விஷயங் களைச் சுளுவாக நம்பி விடுவதைப்பற்றி ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். ஆராய்ச்சி யுணர்ச்சியில்லாதவர்களும் சோம்பேறிகளும் சுயமாக ஒரு பொழுதும் சிந்தனை செய்யாதவர்களும் ஏற்கனவே தாம் கொண்டுள்ள அபிப்பிராயங்களுக்கு முரணாக இல்லாதிருப்பின் பிறர் கூறுவனவற்றை யெல்லாம் அப்படியே நம்பி விடுவார்கள்.

ஆனால் நுட்ப புத்தியும் ஆராய்ச்சியுணர்ச்சியும் சுயமாகச் சிந்தனை செய்யும் பழக்கமும் உடையவர்கள் தமது நம்பிக்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்தமான ஆதாரமுண்டா எனப் பாராதிருக்கமாட்டார்கள். பகுத்தறிவுக்குப் பொருந்தாத அபிப்பிராயங் களை யெல்லாம் விஷயங்களை எல்லாம் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். பகுத்தறிவுக்குப் பொருத்தமானவைகளையெல்லாம் அவர்கள் நம்புவார்கள். அவ்வாறு நம்புவதினால் தமது பழைய அபிப்பிராயங்களையும் நம்பிக்கைகளையும் நிராகரிக்க வேண்டியதாக ஏற்பட்டாலும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.

“நீ எப்படியறிந்தாய்? அதை உனக்கு நிரூபிக்க முடியுமா? ஆதாரங்கள் எவை? நம்புவதற்குள்ள காரணங்களை நன்கு பரிசீலனை செய்து பார்த்தாயா?”

என்பன போன்ற கேள்விகளை இடையறாது கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களிடம் இக்கேள்விகளை வெகு சாதுரியமாகக் கேட்கவேண்டும். மற்றும் இக்கேள்விகளைப் பிறரிடம் கேட்பதற்குமுன் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளவும் வேண்டும்.

மற்றும் ஒரு விஷயம். ஒரு விஷயம் சரியானதென்று நமக்குத் திருப்தி ஏற்பட்டால் அதை எவ்வாறு விளக்குவது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

கருத்துகள், அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள் முதலியவை எவ்வெக்காரணங்களால் நம்பவேண்டும் என்பது பின்னர் விளக்கிக் கூறப்படும். தம் பார்வைக்கு வரும் விஷயங்களை எவ்வாறு பரிசீலனை செய்து உண்மை காணவேண்டும் என்பதை வாசகர்களுக்கு ஒருவாறு விளக்குவதே நமது தற்கால நோக்கம்.

  1. பிறர் முடிபினாலும்
  2. நமது சொந்த முடிபினாலும்

அபிப்பிராயங்களும் நம்பிக்கைகளும் ஆதாரமுடையவை எனக் கொள்ளலாம். தாமாக ஆராய்ச்சி செய்து முடிபுக்கு வராமல், ஆராய்ச்சி செய்து ஒரு முடிபுக்கு வந்துள்ள பிறர் அபிப்பிராயங்களை நம்புவதற்குள்ள நிபந்தனைகளை கீழே விளக்கிக் கூறுவோம்.

அவைகளை விளக்கிக் கூறிய பிறகு சுயமாகச் சிந்தனை செய்வதையும் ஒரு முடிபுக்கு வருவதையும் பற்றி விளக்குவோம்.

பிறர் முடிபை ஒப்புக்கொள்ளுதல்

பிறர் முடிபுகளை நாமாக ஆராய்ந்து பாராமல் ஒப்புக்கொள்வது பகுத்தறிவுப்படி நியாயமாகுமா! நாம் அவ்வாறு ஒப்புக்கொள்ளலாமா!

ஆம்! தாராளமாக ஒப்புக்கொள்ளலாம்; பிறர் ஆராய்ச்சியையும் முடிபையும் தமது ஆராய்ச்சியாகவும் முடிபாகவும் ஒப்புக்கொள்ளலாம்.

அறியப்பட்ட விஷயங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவைதான், அல்லது அறிய முயலுகிறவர்களுக்கெல்லாம் விளங்கக் கூடியவைகள் தான் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தக்காலம் மலையேறி விட்டது. இன்று அறியப்பட்டுள்ள விஷயங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை அல்லது லக்ஷத்தில் ஒரு பகுதியைக் கூட ஒருவன் அறிந்துகொள்வது சாத்தியமல்ல. எனவே நாம் சொந்தமாக ஆராய்ந்து ஒரு முடிபுக்கு வரமுடியாத விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஏனெனில் அவ்விஷயங்களைப் பற்றி நாம் எதுவுமே அறியோம்.

ஏதேனும் ஒரு துறையில் இதுகாறும் வெளிவந்துள்ள உண்மைகளை நாமாகவே ஆராய்ந்து பார்த்து ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நாம் வாழ்நாள் முழுதும் செலவு செய்தாலும் முடியாது. பிரபஞ்ச அமைப்பைப்பற்றி வானசாஸ்திரிகளும் கணித சாஸ்திரிகளும் கூறியுள்ள உண்மைகளை யெல்லாம் நாமும் ஆராய்ந்து பார்த்து முடிபுகட்ட வேண்டுமானால் நம் வாழ்நாள் முழுதும் அம்முயற்சியில் ஈடுபடவேண்டியதாகவே ஏற்படும். மேலும் அத்தகைய ஆராய்ச்சியில் நாம் ஈடுபட்டாலும் பல விஷயங்களில் நாம் பிறர் முடிபுகளைத்தான் ஒப்புக்கொள்ளவேண்டியதாக வரும். பூகர்ப்ப சாஸ்திரிகள் பிரகிருதி நூல் வல்லார் உயிர் நூல் வல்லார் மநோதத்துவ ஆராய்ச்சியாளர் மனிதவர்க்க ஆராய்ச்சியாளர் பிறமொழி நூல் மொழிபெயர்ப்பாளர் பிறநாட்டு அரசியல் விஷய நிபுணர்கள் இஸ்லாம் மத ஆராய்ச்சியாளர் ஜப்பானிய சரித்திராசிரியர்கள் சுகாதார நிபுணர்கள் க்ஷயரோக நிபுணர்கள் முதலியோர் கண்ட உண்மைகளை யெல்லாம் நாமும் ஆராய்ந்து முடிபுகாண எண்ணுவது சாத்தியமாகுமா! அவைகளை அப்படியே நம்புவதைத் தவிர வேறு வழியுண்டா! ஆகவே இத்தகைய விஷயங்களில் பிறர் முடிபுகளை ஒப்புக்கொள்வது தவறாகாது.

ஒரு துறையில் தற்காலம் வெளிவந்துள்ள அறிவுகளை அல்லது உண்மைகளை யெல்லாம் அறியாத ஒருவன் அவ்வுண்மைகளைக் காணப் பிறர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என அறியாத ஒருவன் இதுகாறும் அறியப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உண்மைகளில் சிலவற்றைத் தான் அறிந்துள்ளதாக பாவித்துக்கொண்டு, இதுகாறும் அறியப்பட்டுள்ள உண்மைகளையெல்லாம் அவனும் ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது எவ்வளவு மதியீனம்? ஒரு பிரச்சினையைப் பற்றிய தகவல்கள் எவ்வளவுக்கெவ்வளவு சுருக்கமாக அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தப் பிரச்சினை சுளுவான தென்று அவர்கள் நம்பிவிடுகிறார்கள். ஏதேனும் 10 விஷயங்களை நாம் அறிந்திருந்தால் அவைகளுக்குப் பொருத்தமான ஒரு கொள்கையை நிர்ணயம் செய்வது அவ்வளவு கஷ்டமானதல்ல. ஆனால் நமக்குத் தெரியாதவைகளும் பிறர் அறிந்துள்ளவைகளுமான 5 லக்ஷம் விஷயங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் நாம் கண்ட கொள்கைகள் என்னவாகும். 10 விஷயங்களுக்குப் பொருத்தமான கொள்கை 10 ஆயிரம் விஷயங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா?

மற்றும் விஷயாராய்ச்சி செய்ய, விஞ்ஞான முறையில் பழக்கம் பெற்ற மனம் முக்கியமான தேவையாகும்; அந்த மனம் காரண காரிய ஆராய்ச்சியில் வெகு காலம் பழகி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

அம்மாதிரி விஷயங்களில் பிறர் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ளக் கூடாதுதான். பிறர் சித்தாந்தங்களை ஒப்புக் கொள்வதும் உசிதமல்ல.

நமக்கு வேண்டுவது பகுத்தறிவுக்குப் பொருத்தமான முடிபே. ஏனெனில் பகுத்தறிவுக்கொத்த முறையில் ஆராய்ச்சி செய்து கண்ட முடிபுகளை நமக்கு நிராகரிக்க முடியாது.

இதனாலேயே, ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நாமாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமில்லையென்றும் பிறர் முடிபுகளை ஒப்புக் கொண்டால் போதுமென்றும் ஏற்படுகிறது.

நம்பத்தக்க பிறர் முடிபுகளை ஒப்புக்கொள்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதே.

அவர்களது முடிவுகளுக்கு ஆதாரமாக உள்ளவைகளை நாம் ஆராயத் தேவையில்லை. எனினும் ஒரு ஆராய்ச்சி வேண்டியதுதான். எனவே அவர்களுடைய முடிபை நாம் ஆராயத் தேவையில்லை. முடிபு செய்தவர் களைப் பற்றி நாம் ஆராயவேண்டும். நமது ஆராய்ச்சியில் அவர்கள் சரியானவர்கள் எனத் திருப்தி ஏற்பட்டால் அவர்கள் முடிபுகளை தாராளமாக ஒப்புக் கொள்ளலாம். பிறர் முடிபுகள் நமக்குத் திருப்தியளிக்கா விட்டால் ஒன்றில் நாமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்; அல்லது எத்தகைய முடிபையும் ஒப்புக் கொள்ளாமல் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை செம்டம்பர் 1936

You may also like...