காங்கரஸ் ஆர்ப்பாட்டம்
வீண் ஆர்ப்பாட்டம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் காங்கரஸ்காரர். ஆனால் அந்த ஆர்ப்பாட்டம் கண்ணியமும் பொறுப்பும் வாய்ந்த பதவி வகிப்பவர்களுக்கு அவமதிப்பையுண்டு பண்ணக்கூடியதாயிருந்தால் அதை அறிவாளிகள் ஆதரிக்கவே மாட்டார்கள். இம்மாதம் 2ந் தேதி இந்தியச் சட்டசபையில் காங்கரஸ்காரர் ஆடிய வெளியேற்ற நாடகமானது தலைவரை அவமதிக்கத்தக்கதாயும் அறிவாளிகள் வெறுக்கக் கூடியதாயும் இருக்கிறது.
பிரிட்டிஷ் ஜவுளியின் இறங்குமதி வரியைச் சட்டசபையைக் கலக்காது குறைத்துவிட்டது சம்பந்தமாக சர்க்கார் நடத்தையைப் பற்றி ஆலோசிப்பதற் காகச் சட்ட சபையின் இதர நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென்று கோவை மெம்பர் தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் ஒரு அவசரப் பிரேரணை கொண்டுவந்தார். தோழர் செட்டியார் பேசியபிறகு எக்கட்சியிலும் சேராத ஸர். கஜ்னாவியும், ஐரோப்பிய மெம்பர் தோழர் ராம்ஸே ஸ்காட்டும் அவருக்குப் பிறகு எக்கட்சியிலும் சேராத ஸர்.ஆர்.எஸ். சர்மாவும் பிரேரணையை எதிர்த்துப் பேசினார்கள். அப்பால் தோழர் கிருஷ்ண காந்த மாளவியாவும் டாக்டர் ஜியாவுதீனும், காங்கரஸ் மெம்பர் பந்தும் பிரேரணையை ஆதரித்துப் பேசினார்கள். தோழர் பந்துவின் பேச்சுக்கு ஐரோப்பிய மெம்பர் தோழர் இ.எப். ஜேம்ஸ் பதிலளித்தார். அப்பால் தொழிலாளர் பிரதிநிதியான எஸ்.எம். ஜோஷி பேசினார். உடனே விவாதத்தை முடிக்கவேண்டுமெனப் பலர் கூறினர். அப்பால் சர்க்கார் மெம்பர்கள் யாராவது பேச விரும்புகிறார்களா என்று தலைவர் கேட்டு அவர்கள் பேசுவதற்கு அதுதான் தருணம் என்றும் குறிப்பிட்டார். அதன்பேரில் வர்த்தக மந்திரி ஸர். ஜாபருல்லாகான் எழுந்து விவாதத்தில் சொன்ன விஷயங்களுக்கு பதிலளித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் காங்கரஸ் பிரதம கொறடாவான ஜனாப் அஸாப்அலி தலைவரிடம் சென்று மேற்கொண்டு காங்கரஸ் மெம்பர்கள் பேச விரும்பவில்லை யென்றும் பிரேரணையை வோட்டுக்கு விட்டுவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வோட்டுக்கு விடும் விஷயம் விவாதப் போக்கைப் பொறுத்திருக்குமென்று தலைவர் தெரிவித்தார்.
ஸர். ஜாபருல்லா பேசி முடிந்ததும் தோழர் சத்தியமூர்த்தி தலைவரிடம் சென்று விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டு மென்றும் பிரேரணையை வோட்டுக்கு விடாமல் தடுக்கச் சர்க்கார் பொக்கிஷ மந்திரியைப் பேசும்படி கேட்கப்போவதாகவும் தெரிவித்தார்.
அப்பிரேரணையினால் பொக்கிஷ மந்திரியின் இலாகாவும் பாதித்திருப்பதினால் அவர் பேச விரும்பினால் அவருக்கும் சந்தர்ப்பமளிக்க வேண்டியிருக்குமென்று தலைவர் தோழர் சத்தியமூர்த்தியிடம் தெரிவித்தார். கடைசியில் விவாதத்துக்கு பதிலளிக்க பொக்கிஷ மந்திரி ஸர். ஜேம்ஸ் கிரிக் எழுந்தார். அப்பொழுது மணி 5.45. காங்கரஸ்கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் எழுந்து பிரேரணையைப் பேசித் தீர்த்து விட இது ஒரு சூழ்ச்சியென்றும், ஸர்.ஜேம்ஸ் கிரிக் பேச விரும்பினால் முன்னாடியே பேசியிருக்க வேண்டு மென்றும் கூறி வெட்கம் வெட்கம் என்ற கோஷத்துடன் அசம்பிளியை விட்டு வெளியேறினார். ஏனைய மெம்பர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். தோழர் தேசாய் சொன்னது சரிதானென்றும் ஆனால் பொக்கிஷ மாதிரி பேச விரும்பு வதினால் அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டியது அவசியமென்றும் தலைவர் கூற பொக்கிஷ மந்திரி பேசத்தொடங்கி 6 மணியானவுடன் பிரேரணை பேசி முடிக்கப்பட்டது. இதுதான் காங்கரஸ் வெளியேற்ற நாடகத்தின் மர்மம்.
காங்கரஸ் மெம்பர்கள் சபையை விட்டு வெளியேறி தலைவரை அவமதித்ததோடு நில்லாமல் சில காங்கரஸ் கட்சி மெம்பர்கள் 3 அவமரியாதையான கடிதங்களையும் தலைவருக்கு அனுப்பினார்களாம். ஆகவே பிரஸ்தாப சம்பவத்தைப்பற்றி அசம்பிளித் தலைவர் கனம் ஸர். அப்துர் ரஹிம் அசம்பிளியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “சபையோருக்குத் தலைவரிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் அதனை வற்புறுத்த வேறு முறையுண்டு. அம்முறையை அனுசரிக்காதவரை தலைவர் தீர்ப்பை அசம்பிளி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாமலாவது கீழ்ப்படிய வேண்டும். இது பற்றிய விவாதத்தை நான் விரும்பவில்லை. மெம்பர்கள் இந்நிலையைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவர்களது அபிப்பிராயங்களைத் தெரிவிக்க அவர்களுக்குக் கூடிய சீக்கிரம் சந்தர்ப்பம் அளிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
மறுநாள், நிலைமையை அமைதியாகச் சிந்தித்துப் பார்த்து காங்கரஸ் கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் “அசெம்பிளியில் அன்று நாங்கள் வெளியேறியது ஒரு தவறை ஏக காலத்தில் கண்டிக்கும் பொருட்டேயாகும். தலைவர்மீது நம்பிக்கையில்லாததினால் நாங்கள் வெளியேறவில்லை. ஆனால் மொத்தத்தில் சம்பவத்தைக் கண்டிக்கும் மூலமாகவும் அதிலும் விசேஷமாக சர்க்காரின் நடத்தையைக் கண்டிக்கவும் தலைவர் தீர்ப்பினால் அடைந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தவுமே வெளியேறினோம்” என அசம்பிளியில் சமாதானம் கூறி காங்கரஸ் கூத்தை முடித்தாராம்.
“தலைவர் தீர்ப்பினால் அடைந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்து வதற்காக, மெம்பர்கள் அசம்பிளியை விட்டுக் கும்பலாக வெளியேறியது” தலைவரை அவமதித்ததாகுமா ஆகாதா என்பதை நிர்ணயம் செய்யும் பொறுப்பை சட்ட நிபுணர்களுக்கு விட்டுவிடுகிறோம்.
பிரேரணையைப் பேசி முடித்து விடலாமென்று எண்ணிக்கொண்டு கடைசி நேரத்தில் பொக்கிஷ மந்திரி பேச எழுந்திருந்ததாகவே வைத்துக் கொண்டாலும் அது எப்படித் தவறாகும்? சட்ட நிபுணரான தோழர் புலாபாய் தேசாய் கோபித்துக்கொண்டது எவ்வாறு நியாயமாகும்? எனக் கேட்கிறோம்.
இந்தியச் சட்டசபைக்குச் சென்ற காங்கரஸ் மெம்பர்கள் ஆக்க வேலை செய்யும் நோக்கத்துடன் செல்லவில்லையென்பது உலகப் பிரசித்தமான விஷயம் பகிஷ்காரங்கள், சட்ட மறுப்புகள், உப்புப்போர், மறியல் முதலியன வெல்லாம் தோல்வியடைந்து காங்கரஸ்காரர்களுக்கு வெளியில் தலை நீட்ட முடியாமலானபோது சட்டமறுப்பை நிறுத்திவிட்டு சட்டசபைகளில் புகுந்து முட்டுக்கட்டை போட்டு சர்க்காரிடம் பழிக்குப்பழி வாங்கிவிடலா மென்று தீர்மானித்தார்கள். காங்கரஸ்காரர் அசம்பிளியில் சென்ற நாள் முதல் இதுவரை அந்தப் பழிக்குப்பழி வாங்கும் வேலையே நடந்து வருகிறது. உருவான வேலை ஒன்றையாவது அவர்கள் செய்ய வில்லை. சர்க்காருக்குத் தோல்வி மேல் தோல்வி என விளம்பரம் செய்து தமது கையாலாகாத்தனத்தையும் அரசியல் முட்டாள் தனத்தையும் மறைக்கும் பொருட்டு “தோல்விக்குமேல் தோல்வி” உண்டாக்கினார்கள். அத்தோல்விகள் எல்லாம் வெறும் காகிதத் தோல்விகளே. அந்த தோல்விகளினால் சர்க்காரின் சுள்ளாணிகூட அசையவில்லை. சர்க்கார் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அசம்பிளி கூடும் போதெல்லாம் சர்க்கார் தோற்கடிக்க வழி யென்னவென்றால் காங்கிரஸ்காரர் சூழ்ச்சி செய்தும், அச்சூழ்ச்சி களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சர்க்கார் மெம்பர்கள் முயல்வதும் ஒரு வாடிக்கையாகப் போய்விட்டது.
சர்க்கார் செயல்களில் குற்றம் காண்பதே காங்கரஸ்காரர் தொழிலாகப் போய்விட்டது. சர்க்கார் மெம்பர்களும் காங்கரஸ் மெம்பர்களைப்போல மனிதர்கள் தான், காங்கரஸ் மெம்பர்கள் குறும்புக்கு பதில் குறும்பு செய்ய சர்க்கார் மெம்பர்கள் முயன்று அது மன்னிக்கக்கூடிய ஒரு அரசியல் குற்றமே. ஆனால் அந்த குறும்புக்கு சட்ட ஆதரவுண்டு என்பதை மட்டுமே நான் கவனிக்கவேண்டும். தர்ம நியாயங்களை கவனிக்கத் தேவையே இல்லை. அரசியல் சதுரங்கத்தில் தர்ம நியாயங்களுக்கு இடமே இல்லை. சட்ட நியாயங்களுக்குத்தான் இடமுண்டு. அசம்பிளித் தீர்மானங்களை வைஸ்ராய் நிராகரிப்பது தர்ம நியாயப்படி தப்பாக இருக்கலாம்; சட்ட நியாயப்படி தவறல்ல; ஏன்? சந்தர்ப்பத்துக்கு தக்கபடி பிரயோகம் செய்து சர்க்காரைக் காப்பாற்ற தேவையான விசேஷ அதிகாரங்களை யெல்லாம் சட்டம் வைஸ்ராய்க்கு அளித்திருக்கிறது. அதுபோலவே முக்கியமான பிரேரணைகளை வோட்டுக்கு விட வொட்டாமல் பேசித் தீர்த்துவிடுவது தர்ம நியாயப்படி தவறாக இருக்கலாம்; ஆனால் சட்ட நியாயப்படி தவறல்ல, ஏன்? சட்டம் அதற்கு இடம் கொடுக்கிறது. பூரண சுயேச்சை நாட்டு பார்லிமெண்டுகளிலும் அந்தப் பேசித் தீர்க்கும் திருவிளையாடல் தாராளமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரித் திருவிளையாடல்களுக்கு இடம் கொடுக்கும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்ட அசம்பிளியில் புகுந்து, வீண் ஆர்ப்பாட்டம் செய்வது காங்கரஸ்காரரின் அரசியல் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. தற்கால நிலைமையில் சர்க்காரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதென்று கருதியே பழைய அசம்பிளி மெம்பர்கள், எதிர்க்க வேண்டிய காலத்து எதிர்த்தும் ஆதரிக்கவேண்டிய காலத்து ஆதரித்தும் விட்டுக்கொடுக்க வேண்டிய காலத்து விட்டுக் கொடுத்தும் ஜனங்களுக்குச் சொற்ப நன்மையாவது செய்து வந்தார்கள். சர்க்காரோடு போராடச் சென்ற காங்கரஸ் வீரர்கள் இதுவரை சாதித்ததென்ன? தபாற்கார்டு விலையில் ஒரு பைசாவையாவது குறைக்க முடிந்ததா? சட்டசபை ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால் சர்க்காருக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டிருப்பதைக் காணலாமே யொழிய ஜனங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு வரியாவது காணமுடியாது.
நாளை, சர்க்கார் மெம்பர்கள் வீற்றிருக்கும் ஸ்தானத்தில் புலாபாய் தேசாயும் சத்தியமூர்த்தியும் ரெங்காவும் அவனாசிலிங்கமும் வீற்றிருக்கும்படி நேர்ந்தாலும் பிரேரணைகளைப் பேசித்தீர்க்கும் நாடகங்கள் நடைபெறத்தான் செய்யும். ஏன்? சட்ட சபை நடவடிக்கைகளில் அதுவும் ஒரு முக்கியமான அமிசம். சோகரஸமும் ஹாஸ்யரசமும் இல்லாமல் ஒரு நாடகம் எப்படி ஸ்வாரஸ்யமாக இராதோ அப்படியே பேசித்தீர்க்கும் சீன் இல்லா விட்டால் சட்டசபை நடவடிக்கை களும் ஸ்வாரஸ்யமாக இருக்கமாட்டா. எனவே, “ஐயோ பேசித் தீர்த்துவிடப் போகிறார்களே!” என வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொள்கிறவர்கள் சட்டசபை ஐதீகங்களை அறியாத அடிமுட்டாள்கள் என்றே சொல்லவேண்டும்.
மேலும் பார்லிமெண்டரி முறைகளையும் கண்டனத் தீர்மானங்களையும் ஒத்திவைப்புத் தீர்மானங்களையும் பேசித் தீர்க்கும் திருவிளையாடல்களையும் நமக்குக் கற்பித்தவர்கள் ஸர். ஜேம்ஸ் கிரிக்கின் வமிசத்தாரே. நமது நாட்டு முனீச்வரர்களும், தர்ம சாஸ்திரகாரரும், கனபாடிகளும், தீக்ஷதர்களும், சாஸ்திரி களும் அல்ல. எனவே தாய் மாமனிடம் குலமும் கோத்திரமும் கேட்ட கதைபோல, நமக்குப் பாடம் கற்பித்தவர்களுக்கே நாம் டிமிக்கி காட்ட விரும்பினால் அவர்கள் இலேசில் விடுவார்களா? கொல்லத்தெருவில் ஊசி விற்கவா போகிறது?
காங்கரஸ்காரர் விரும்பும் பூரண ஸ்வராஜ்யம் வந்தாலும் இந்த நாடகம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஏன்? ஸ்வராஜ்ய சர்க்காரிலும் எதிர்க்கட்சி இருக்கத்தான் செய்யும். கட்சிப் பிரதிகட்சிகள் உள்ள இடத்தில் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் இருந்துதான் வரும்.
தோழர் அவினாசிலிங்கம் பிரேரணையை 3 மெஜாரட்டி வோட்டினால் நிறைவேற்ற காங்கரசுக்கு பலமிருந்ததாம். எனினும் நமது பருப்பு வேகவில்லையே யென காங்கிரஸ்காரர் வருந்தலாம். என்ன செய்வது? இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எதிரிகளைத் தோற்கடிக்க சட்டசபைச் சட்டங்களில் பொடி வைத்திருக்கும் சட்ட நிபுணர்களைத்தான் அதற்காக நோகவேண்டும். ஸர். ஜேம்ஸ் கிரிக்கின் மீதும், சட்டசபைத் தலைவர் மீதும் முட்டிப் பயன் என்ன?
குடி அரசு கட்டுரை 06.09.1936