காங்கிரசும் வகுப்புவாதமும்
இந்தியாவில் காங்கிரஸ் என்பதாக ஒரு இயக்கம் ஏற்பட்ட பிறகே இந்தியாவில் வகுப்புவாதம் என்பதாக ஒரு உணர்ச்சி பல்வேறு மதஸ்தர்களுக்குள்ளும் பல்வேறு வகுப்பாருக்குள்ளும் ஏற்பட்டு அது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஆதியில் காங்கிரசானது ஒரு ஐரோப்பிய ஐ. சி. எஸ். கனவானின் முயற்சியாலேயே ஏற்படுத்தப்பட்டது. அவர் பெயர் A.O. ஹியூம் என்பார்கள்.
அப்படிப்பட்ட காங்கிரசின் கொள்கை
பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுபடுத்துதல்,
சமூக கட்டுப்பாட்டிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் அரசியலிலும் இந்திய மக்களின் வாழ்கையை புதுப்பித்தல்,
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் என்றும் பிரிக்க முடியாத ஐக்கியத்தை ஏற்படுத்துதல் என்பனவாகும்.
~subhead
1892 லேயே வகுப்புவாதம்
~shend
இந்தக்கொள்கைகளோடு ஏற்படுத்தப்பட்ட காங்கிரசில் அதுஏற்பட்ட 6,7 வருஷத்துக்குள் வகுப்பு உணர்ச்சிகள் ஏற்பட்டு அதாவது 1892ம் Mத்திலேயே 1892ம்Mத்து இந்திய கவுன்சில் ஆக்ட் என்னும் பேரால் ஒவ்வொரு வகுப்பாருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் பல ஸ்தாபனங்களுக்கும் சர்க்காரே நாமினேஷன் செய்ய அதிகாரம் வைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அரசாங்கத்தார் ஒரு சட்டம் செய்ய வேண்டிவந்தது.
~subhead
1916ல் விகிதாச்சார வாதம்
~shend
இந்த சட்டம் ஏற்பட்டும் இந்துக்களிடம் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதோடு காங்கிரசினால் ஏற்பட்ட பதவிகள் முஸ்லீம்களுக்கு சிறிதும் கிடைக்காமல் போனதால் 1906ம் வருஷத்தில் முஸ்லீம்கள் தங்களுக்கு தங்கள் ஜன விகிதாச்சாரம் தனிப்பட்ட பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்க வேண்டியவர்களானார்கள். சர்க்காரார் அவ்வேண்டுகோளை ஒப்புக்கொண்டு முஸ்லீம்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் தனித் தொகுதியின் மூலம் (அதாவது முஸ்லீம்கள் மாத்திரமே ஓட்டு செய்யும்படியான நிபந்தனையின் மீது) ஏற்படுத்தினார்கள்.
இவற்றின் பயனால் 1909 லேயே முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி மூலம் தனிப் பிரதிநிதித்துவம் கிடைத்தது விளங்கும்.
அப்படிக் கிடைத்ததும் போதுமானபடியாகவும் எல்லாத் துறைகளிலும் கிடைக்கக்கூடியதாயும் இல்லாததால், மறுபடியும் அதாவது 1916ம் வருஷத்தில் முஸ்லீம்கள் காங்கிரசுடன் போராடி கிளர்ச்சி செய்ததின் பயனாய் அசம்பளி எலக்ஷனில் மொத்த அங்கத்தினர்களில் 3ல் ஒரு பாகம் முஸ்லீம்கள் தனித்தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்படவும், மாகாண சட்டசபைகளிலும் முஸ்லீம்களின் ஜனத் தொகைக்குத் தகுந்தபடி தனித் தொகுதி மூலம் மெம்பர்கள் தெரிந்தெடுக்கப்படவும் காங்கிரசே ஒப்புக் கொண்டு அந்த ஒப்பந்தத்தை சர்க்காருக்கு தெரியப்படுத்தி அந்தப்படியே 1919 ம் வருஷத்திய சீர்திருத்த சட்டத்திலும் விதி ஏற்படுத்தி இப்போது அமுலில் இருந்து வருகிறது. (இதற்குப் பெயர் லக்னோ பாக்ட் ஒப்பந்தம்)
~subhead
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்
~shend
இதை அனுசரித்துத்தான் பார்ப்பனரல்லாத இந்துக்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களும் அந்த 1916ம் வருஷம் முதல் கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார்கள். காரணம் காங்கிரசின் மூலம் வந்த பதவிகளும் பிரதிநிதித்துவங்களும் பெரிதும் பார்ப்பனர்களுக்கே கிடைக்கும்படியாகவும் மற்ற பெருங்குடி மக்களாகிய பார்ப்பனரல்லாதாருக்கு சிறிது கிடைப்பதும் மிகவும் கஷ்டமாய் விட்டதாலும் கிளர்ச்சி செய்யவேண்டியதாயிற்று. இப்படி யெல்லாம் இருக்க அதாவது சர்க்காரும் காங்கிரசும் முஸ்லீம்கள் விஷயத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒப்புக்கொண்டு அதுவும் தனித்தொகுதி மூலம் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒப்புக்கொண்டு சுமார் 25ஆண்டுகாலமாக அது அமுலிலும் இருந்து வரும்போது இன்று மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது எப்படி வகுப்புவாதம் ஆகும் என்றும் அது எப்படி தேசீயத்துக்கு விரோதமானதாகும் என்றும் நமக்கு புரியவில்லை.
~subhead
அப்பொழுதே ஏன் தடுக்கவில்லை?
~shend
உண்மையிலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசீயத்துக்கு விரோதமாக இருந்திருக்குமானால் இந்திய தேசீய காங்கிரசானது 1916ம் வருஷத்தில் லக்னோவில் ஒப்புக் கொண்டிருக்குமா என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம். மேலும் 1909 ல் மிண்டோ மார்லி சீர்திருத்தத்திலேயே வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் சேர்க்கப்பட்டிருக்கையில் அதைப்பற்றி காங்கிரஸ் அப்போது குறை கூறாதிருக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கின்றோம்.
ஆகவே காங்கிரசானது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் வகுப்புவாதம் என்றும், தேசீயத்துக்கு விரோதம் என்றும் சொல்லத் தொடங்கி இருக்கிறதே தவிர வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
~subhead
1919 லும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது
~shend
அப்படி இருந்தும் 1919ல் காங்கிரஸ் பார்ப்பனருக்கும் பார்ப்பன ரல்லாதாருக்கும் உத்தியோகங்களிலும் பிரதிநிதித்துவங்களிலும் 100க்கு 50க்கு குறையாமல் கொடுப்பதாக காங்கிரஸ் திட்ட விளம்பரத்தில் வெளியிட்டிருக்கிறதுடன் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் சங்கமாகிய சென்னை மாகாணச் சங்கம் என்பதிலும் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவ தீர்மானங்கள் செய்யப்பட்டு அதை காங்கிரஸ் தலைவர்கள் தோழர்கள் விஜயராகவாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
~subhead
தேசீயவாதிகள் சங்கமும் ஒப்புக்கொண்டது
~shend
அது மாத்திரமா என்றால் சென்னை மாகாணத்தில் தேசீயவாதிகள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் 1920ம் வருஷத்தில் சௌந்திரிய மகாலில் கூட்டப்பட்ட காலத்தில் அங்கும் 100 க்கு 50க்கு கம்மி இல்லாமல் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஸ்தானம் கொடுப்பது என்றும் தீர்மானித்து தேசீய சங்க வேலைத் திட்டத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறது.
இப்படி எல்லாம் இருக்கும் போது இன்று மாத்திரம் காங்கிரஸ்காரர்கள் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் என்றால் இவ்வளவு வேஷ அழுகை அழுவானேன் என்பது நமக்கு விளங்கவில்லை.
~subhead
இந்தியாவில் வகுப்புவாதம்
~shend
இந்தியாவில் ஜாதி மத வகுப்பு காரணமாக பிரிவு பட்ட மக்கள் பிணக்குப்பட்ட மக்கள் 1885 ம் வருஷம் காங்கிரசு ஏற்படுத்தப்பட்ட காலத்திலேயே இருந்து இருக்கிறார்கள் என்பதற்கு அப்போதே ஏற்படுத்தப் பட்ட காங்கிரஸ் திட்டத்திலிருந்தே அறியலாம். அன்று முதல் இன்று வரை காங்கிரஸ்காரர்கள் அந்த பிரிவையும் பிணக்கையும் நீக்க எவ்வித சிறு முயற்சியும் எடுத்துக்கொண்டவர்கள் அல்ல. அதற்கு பதிலாக அநேக புதிய பிரிவினைகளை உண்டாக்கவே இடம் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு புள்ளி விவரங்கள் காட்டலாம்.
பஞ்சாபில் சீக்கியர் முஸ்லீம் தகராறு, வங்காளம் பம்பாய் ஐக்கிய மாகாணங்களில் இந்து முஸ்லீம் தகராறுகள், சென்னை பம்பாய் மத்திய மாகாணம் ஆகியவற்றில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகராறுகள், மலையாளம், திருவாங்கூர், கொச்சி தேசங்களில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் நாயர், ஈழவர் தகராறுகள் மாப்பிள்ளைமார், நாயர்கள் என்பன போன்ற தகராறுகள் இருந்து வருகின்றன. இவை மாத்திரமா என்று பார்த்தால் ஆந்திரர், திராவிடர், மலையாளிகள், கர்னாடகர்கள் என்பன போன்ற தேசத் தகராறுகள் இருப்பதுடன் இன்னமும் பல உள் தகராறுகளும் இருப்பது நாம் அறியாததல்ல.
~subhead
காந்தியும் ஜவஹரும்
~shend
இவற்றை சரிப்படுத்த காங்கிரஸ் எடுத்துக்கொண்ட முயற்சி இன்னது என்று யாராவது ஒரு விரல் விட்டு எடுத்துக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.
தோழர்கள் காந்தியாரும் ஜவஹர்லாலும் “அந்நிய ஆட்சி இருப்பதால்தான் இம்மாதிரி வகுப்புவாதம் ஏற்படுகிறது என்றும் இது ஒழிந்துபோனால் வகுப்புவாதம் போகும்” என்றும் இப்போது கூறுகிறார்கள். இவர்கள் இருவர் அபிப்பிராயங்களை மாத்திரம் ஏன் எடுத்துக்காட்டுகிறோம் என்றால் அரசியலில் இப்போது இவ்விருவர் பெயரே அதிகமாக விளம்பரப் படுத்தப் படுவதால் இவர்களைப்பற்றி கூறவேண்டியிருக்கிறது.
முன்னையவர் தோழர் காந்தியார் அரசியல் ஞானமும் முன்யோசனையும் இல்லாதவர். பின்னையவரான தோழர் ஜவஹர்லால் நேருவோ அனுபவ ஞானமில்லாத புஸ்தகப் பூச்சியே ஆவார்.
தோழர் காந்தியார் 1920ல் “இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமல் சுயராஜ்யம் கிடைக்காது, கிடைத்தாலும் பெறமாட்டேன்” என்று சொன்னவர் இன்று “சுயராஜ்யம் வந்த பின்தான் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படும்” என்று சொல்லுகிறார்.
அன்றியும் ஒற்றுமைக்காக என்று அவர் கொண்ட பட்டினி வேஷம் முதல் ஒவ்வொரு காரியங்களிலும் தோல்வியே அடைந்தார். தோழர் ஜவஹர்லாலும் வாயில் சில சமயம் சமதர்மம் பேசினாலும் காந்தியார் கூடவே பின் தாளம் போட்டவர்.
~subhead
வகுப்புவாதத்துக்கு உத்திரவாதம்
~shend
இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பிணக்கு வரவும் ஒற்றுமை ஏற்படாமல் இருக்கவும் காரணம் என்ன என்பதை தோழர்கள் காந்தி, நேரு இருவருமே கண்டு பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கண்டு பிடித்திருந்தால் அவரவர் மதத்தையும் பழக்க வழக்கத்தையும் அனுபவ உரிமையையும் இவைகள் சம்பந்தமான சாஸ்திர ஆதாரங்களையும் சுயராஜ்ய சர்க்காரில் காப்பாற்றிக் கொடுக்கப்படும் என்று உத்திரவாதம் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம்.
~subhead
இவ்வளவு மாத்திரமா?
~shend
1931 ம் வருஷத்திய காங்கரஸ் வேலைக் கமிட்டியானது பிரஜா உரிமை திட்டம் என்பவற்றில் ஒன்றாக
“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பார்கள் சம்பந்தப்பட்ட வரையில் அவரவர்களுடைய கலை, பாஷை, எழுத்து, கல்வி, தொழில், மத ஆச்சாரம், மத தர்மம் ஆகியவைகள் காப்பாற்றிக் கொடுக்கப்படும்”
என்கின்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
மற்றும் ஒவ்வொரு சமூகத்துக்கும் உள்ள தனிப்பட்ட உரிமைகளையும் காப்பாற்றப்படும். ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்துக்கும் அரசியல் உரிமை காப்பாற்றப்படும் என்றும் உத்திரவாத மேற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் இங்கிலீஷ் வாசகத்தை அப்படியே கீழே குறிப்பிடுகிறோம். (இது காங்கரஸ் ஆதாரங்களில் இன்றும் இருக்கிறது)
- The article in the constitution relating to Fundamental Rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, languages, scripts, education, profession, practice, religion and religious endowments.
- Personal laws shall be protected by specific provision to be embodied in the constitution.
- Protection of political and other rights of minority communities in various provinces shall be the concern, and be within the jurisdiction of the Federal Government.
இவை அந்நிய அரசாங்கத்தாரால் ஏற்பட்ட பிரிவினை காப்புத் திட்டமா என்று தோழர் ஜவஹர்லாலை கேட்கின்றோம். அவரது “சிஷ்யர்”களையும் கேட்கின்றோம்.
~subhead
பழய சுயராஜ்ய காலம்
~shend
இது எப்படியோ இருந்தபோதிலும் இந்தியாவில் அந்நிய அரசாங்கம் இல்லாமல் சுயராஜ்ய அரசாங்கம் இருந்த காலத்தில் தானே இந்தியா 56 தேசமாகவும், பாஷைவாரி தேசவாரியான ராஜாங்கமும், ஜாதிக்கு ஜாதி சதா குத்து வெட்டும் பாஷைக்கு பாஷை சதா கொள்ளையும் கொலையும், தேசத்துக்கு தேசம் சதா படையெடுப்பும் கலாபமும் நடந்த வண்ணமாய் இருந்தன என்பதை தோழர்கள் காந்தியாரோ நேருவோ ஆட்சேபிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
~subhead
புரோகித பித்தலாட்டம்
~shend
குழந்தைக்கு தலைவலி என்றால் கிரகதோஷம் என்று புரோகிதனும், சாமி தோஷம் என்று அர்ச்சகனும் சொல்லி கொள்ளையடித்து குழந்தையை கொல்வதுபோல் இந்தியாவில் வகுப்புச்சச்சரவு வகுப்பு கொடுமை இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லு என்றால் சுயராஜ்ய மில்லாததால் என்று காந்தியாரும் அந்நிய அரசரால் என்று நேருவும் சொல்லி மக்களை ஏமாற்றி தலைவர் பட்டம் பெற்று தேசத்தைப் பாழாக்குவதென்றால் இதை அறிவுள்ள யார்தான் பொறுத்திருக்க முடியும்? என்று கேட்கின்றோம். மற்றும் இவ்வளவு ஜாக்கிரதையாக ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவரவர்கள் மதம், பழக்க வழக்கம், ஆச்சார அனுஷ்டானம், தொழில் ஆகியவைகளைக் காப்பாற்ற உத்திரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் அந்தந்த வகுப்பாருக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதில் மாத்திரம் என்ன மாட்டிக்கொண்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
இதை கேட்பதாலேயே நாம் வகுப்புவாதி, தேசத்துரோகி ஆகி விடுவதாய் இருந்தால் இதை எதிர்க்கும் இந்த நாட்டின் தேசீயவாதி களுக்கும் தேசாபிமானிகளுக்கும் என்ன பெயர் இட்டு அழைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் சுயநலவாதி என்றோ சமூகத் துரோகி என்றோ தான் அழைப்பது பொருத்தமாக இருக்கலாம்.
~subhead
நாயுடு, ஜோசப்பு
~shend
சமீபத்தில் தோழர்கள் வரதராஜுலு நாயுடுகாரும் ஜார்ஜ் ஜோசப்பு அவர்களும் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்கள் என்றும் தோழர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் முன்னமே சேர்ந்துவிட்டார்கள் என்றும் ஆதலால் ஈ. வெ. ராமசாமியும் உடனே வந்து சேரவேண்டும் என்றும் சில தோழர்கள் விரும்புவதாக பத்திரிகையில் பார்த்தோம். இரண்டொரு பத்திரிகைகள் உபதலையங்கத்திலும் குறிப்பிட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளையும் எல்லா காங்கிரஸ் அபிமானிகளையும் ஒன்று கேட்கின்றோம்.
~subhead
ஏன் போனார்கள்? ஏன் வந்தார்கள்?
~shend
அதாவது மேல்கண்ட மூவரும் எதற்காக காங்கிரசை விட்டுப் போனார்கள்? எதற்காக காங்கிரசில் வந்து சேர்ந்தார்கள் என்பதற்கு விடையளிக்க முடியுமா என்பது தான்.
இதற்கு மற்றும் வேறு யாராவது விடையளிக்கக்கூடுமா என்றும் கேட்கின்றோம்.
~subhead
தோழர் முதலியார்
~shend
தோழர் முதலியார் அவர்கள் பழைய காலத்து சோடா பாட்டல் மாதிரி ஒருநாளும் ஒரு குறிப்பிட்ட கொள்கையின் மீது நின்று அறியாதவர். கொஞ்ச நாளைக்கு முன்பு காஞ்சீபுரத்தில் பார்ப்பனரல்லாதார் காங்கிரசு கூட்ட முயற்சித்தார். மறுபடியும் 4 நாளையில் யாரோ ராஜிநாமா கொடுத்து விட்டதால் பார்ப்பனரல்லாதார் காங்கிரசு கூட்ட வேண்டியதில்லை என்றார்.
மறுபடியும் 4 நாள் பொறுத்து தோழர் சத்தியமூர்த்தியார் தஞ்சைப் பேச்சில் “தோழர் ராமசாமி கேட்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நியாயமான தென்றும் அதுவிஷயமாய் எல்லா இந்திய காங்கரஸ் கமிட்டி மூலம் ஒரு அறிக்கை வெளியிடுவதாகவும்” கூறியதைப் பார்த்து தோழர் முதலியார் தனது பத்திரிகையில் தோழர் மூர்த்தியார் மீது கோபித்து வசவுமாலை சூட்டினார். “நான் கூடாது என்கின்ற போது நீர் எப்படி அதை ஏற்றுக் கொள்ளலாம்” என்கின்ற அகம்பாவ தொனியே அம்மாலையில் புஷ்பங்களாக பிணைக்கப்பட்டிருந்தது.
மற்றபடி நாயுடுகாரை பற்றியும் ஜோசப்புகாரைப்பற்றியும் நாம் என்ன சொல்ல முடியும்? அவர்கள் அரசியல் வாதிகள். தோழர் ராமசாமியோ சமூகவாதி. தோழர் ராமசாமிக்கு ராமாயணக் கதையில் இந்தியாவை 14 வருஷ காலம் செருப்பு அரசாட்சி செய்தது என்று காணப்படுவது போல் இந்தியாவை ஒரு “கழுதை” அரசாட்சி புரிந்தாலும் அவருக்குக் கவலை இல்லை. ஆனால் சர்வ சமூகமும் சமத்துவத்துடன் ஆளப்படவேண்டும் என்கின்ற கொள்கை வாதியாவார்.
அரசியல்வாதிகளான மேல்கண்ட கனவான்களோ இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டு மென்பார்கள், அல்லது இந்தியர் இஷ்டப்படி ஆளவேண்டு மென்பார்கள் அவ்வளவுதான். கொள்கைகளைப்பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது, இருக்குமானால் கராச்சித் திட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? அல்லது சகல வகுப்பாருடைய வகுப்பு பழக்க வழக்க உரிமையை ஒப்புக் கொண்டிருப்பார்களா? இரண்டையும் அவர்களுக்குக் கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டது அவர்களுடைய அரசியல் வாதமே யாகும்.
~subhead
ஜோசப் கற்ற பாடம்
~shend
தோழர் ஜோசப்பு அவர்கள் ஒரு காலத்தில் மதுரை முனிசிபல் கவுன்சிலுக்கு காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்டிருந்தார். மற்றொரு பார்ப்பனர் காங்கிரசு அல்லாதவராய் நின்று அவருடன் போட்டி போட்டார். காங்கிரஸ் பார்ப்பனர்கள் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து காங்கிரஸ் ஜோசப்பை தோற்கடித்து, காங்கிரஸ் அல்லாத பார்ப்பனரை ஜெயிக்க வைத்தார்கள். இது போன்ற இன்னும் பல அனுபவங்களும் அவருக்கு உண்டு. அப்படியே,
~subhead
நாயுடு கற்ற பாடம்
~shend
தோழர் வரதராஜுலு நாயுடுகாருக்கும் பல அனுபவங்கள் உள்ளதில் ஒரு சின்ன உதாரணம் கூறுவோம். 500ரூ செலவு செய்து சேலம் காங்கிரஸ் கமிட்டியை கைப்பற்றினார். அந்த கமிட்டியை பார்ப்பனர்கள் செல்லுபடியற்ற தாக்கி விட்டு தோழர் கே.வி. சுப்பராவ் கமிட்டியை ஒப்புக் கொள்ளப்பட்டது.
1000 ரூ போல் செலவிட்டு சேலத்தில் ஒரு காங்கிரஸ் கான்பரன்ஸ் பிரபல தேச பக்தர் தோழர் வி.ஒ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டப்பட்டது. அதையும் பார்ப்பனர்கள் காங்கிரஸ் மகாநாடு அல்லவென்று தீர்மானித்து விட்டார்கள்.
இவை மாத்திரமல்லாமல் கோவை ஜஸ்டிஸ் மகாநாட்டில் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் (ஜஸ்டிஸ் உள்பட) காங்கிரசில் சேருவது என்று தீர்மானம் செய்தபடி எல்லோரும் காங்கிரசில் சேரப் போனார்கள். அந்தக் காலத்தில் மெம்பர் சேர்க்கும் பாரங்கள் எல்லாம் பார்ப்பனர்கள் கைக்குப் போய் மெம்பராக சேருகிறவர்கள் விண்ணப்பம் போட வேண்டும் என்றும், விண்ணப்பம் தமிழ்நாடு கமிட்டி தலைவரால் அனுமதிக்கப்பட்ட பின்பு மெம்பர் பாரத்தில் கையெழுத்து வாங்கப்படும் என்றும் எழுதாத சட்டம் தாண்டவமாடிற்று. அதை மீறிச் செய்த காரியம் எல்லாம் தமிழ்நாடு காரியக் கமிட்டியில் அங்கீகரிக்கப்படாமல் போய்விட்டது. அதில் சில தான் தோழர் நாயுடுகார் கமிட்டிகளும் மகாநாடும் ஆகும்.
~subhead
ஈ.வெ. ராமசாமி
~shend
இன்றைய தினமும் காங்கிரசின் சூழ்ச்சிகளைப் பற்றியும் பார்ப்பனர் களின் தொல்லையைப் பற்றியும் தோழர் ஈ.வெ. ராமசாமி பயப்படவில்லை.
ஆனால் காங்கிரசின் கொள்கை இன்னது என்றும், காங்கிரஸ் ஆட்சியில் பல வகுப்பு மக்களின் நிலை இன்னது, அவர்களின் பிரதிநிதித்துவ உரிமை இன்னது என்றும் தெரிய வேண்டாமா என்பதுதான் அவரது கவலை.
~subhead
மந்திரி மோகம்
~shend
வரப்போகும் சீர்திருத்தத்தில் 7 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.
அவற்றுள் ஒன்று சாயபு, ஒன்று தீண்டப்படாதார், ஒன்று கிறிஸ்தவருக்கும் கொடுத்தாக வேண்டும். தமிழ் நாட்டு பார்ப்பனருக்கு (தோழர் மூர்த்திக்கு) ஒன்று, ஆந்திர நாட்டுப் பார்ப்பனருக்கு (தோழர் பிரகாசத்துக்கு) ஒன்று மீதி 2 அல்லது அதிகமானால் மூன்று மந்திரி ஸ்தானங்கள் மீதி இருக்கும். இதில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களாகிய 100க்கு 60 க்கு மேற்பட்ட மக்களுக்கு எப்படிப் பங்கிட முடியும் என்று யோசித்தால் அந்த சமயம் காங்கிரசுக்காரர் களுக்குள் ஒரு பிளவு ஏற்பட்டு பழையபடி ஜஸ்டிஸ் அல்லது ஜனநாயகம் அல்லது கூட்டுக்கட்சி என்பன போன்றவைகள்தான் மந்திரிசபை அமைக்கக் கூடிய நிலைமைக்கு வரலாம். அந்த சமயம் இப்போது காங்கிரசில் சேரும் தோழர் சுப்பராயன் முதல்கொண்டு புதிய காங்கிரஸ்வாதிகள் நிலைமை என்ன ஆகும் என்பது கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது என்பதை புதிதாய் போய் சேரும் காங்கிரஸ்காரர்களுக்கு ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
~subhead
ஈ.வெ. ராவும் தயார்
~shend
இது எப்படியோ இருந்தாலும் தோழர்கள் நாயுடுகாரும் ஜோசப்பு காரும் கராச்சி பிரஜா உரிமைத் திட்டத்தையும் காங்கிரஸ் வேலைக்கமிட்டித் திட்டத்தையும் தெரிந்து அதை ஒப்புக் கொண்டுதான் காங்கிரசில் சேர்ந்தார்களா? அல்லது எதுவோ எப்படியோ போகட்டும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து தொலைய வேண்டுமே என்று கருதி சலிப்புடன் சேர்ந்தார்களா? என்பது நமக்கு புரியவில்லை. எப்படியானாலும் சரி இப்போது தோழர் ஈ.வெ. ராமசாமி காங்கிரசில் சேரத் தயார் தான். ஆனால் காங்கிரசு முஸ்லீம்களுக்கும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் மற்றும் சீக்கியர்கள் நாட்டுக் கோட்டையார் அவர்களுக்கும் சீர்திருத்தத்தில் அளித்திருக்கும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவப்படியும் உத்தியோகத்திலும் அந்தப்படியும் நமக்கும் ஒப்புக்கொண்டு ஜாதி மதவகுப்பு பேதங்களையும் வித்தியாசங்கள் முதலிய சமூகக் கொடுமைகளையும் ஒழிக்க சட்டம் செய்வதாகவும் ஒப்புக் கொள்வதானால் தான் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
தோழர்கள் நாயுடுகாரும் ஜோசப்புகாரும் மற்றும் ராமசாமியை காங்கிரசுக்கு அழைப்பவரும் இது விஷயத்தில் சிறிது சிரமம் எடுத்து, கைகூடும்படி செய்து விட்டால் பெரிய உபகாரமான காரியமாகும். அப்படிக்கில்லாமல் ஏதோ ஒரு கூட்டத்தார் மாத்திரம்தான் அவர்கள் எப்படிப்பட்ட எண்ணக்காரர்களானாலும் தேச பக்தர்கள் போலவும் மற்றவர்கள் எப்படிப்பட்ட உண்மையானவர்களானாலும் தேசத் துரோகிகள் என்றும் சொல்லுவதானால் அந்த தேச பக்தர்கள் தேவதாசி என்கின்ற சொல்லுக்கு இன்று என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்துக்கு தான் உரிமையுடையவர்களாவார்கள்.
இந்த நாட்டில் சமுதாயத் துறையிலும் மதத்திலும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கும் இருக்கும் வித்தியாசமானது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமோ அல்லது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமோ இருக்கும் வித்தியாசத்தைவிட குறைந்ததல்ல.
ஆதலால் ஒரு கூட்டத்தாரின் பிரிவுக்கு ஒப்புக்கொண்ட வகுப்பு உரிமை மற்றக் கூட்டத்தாருக்கு ஒப்புக் கொள்வதில் என்ன ஆக்ஷேபணை என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர் ஈ.வெ.ராமசாமி மந்திரி பதவியோ மற்ற ஏதாவது உத்தியோக பதவியோ எதிர்பார்த்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாய் யாரும் கருதிவிடக்கூடாது. தான் அவற்றிற்குத் தகுதியல்ல வென்றும், தனக்கு அவை தேவை இல்லை என்றும், அடைவதில்லை என்றும் எழுதிக் கொடுக்க எப்பவும் தயார். ஆதலால் அந்தக் கருத்தைக் கொண்டு இவற்றை கவனிக்காமல் பொது தேச சமூக நலத்தைக் கொண்டு கவனித்துப் பார்க்கும்படி தேச பக்தர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 06.09.1936