ஆதாரமற்ற நம்பிக்கைகள்

ஒரு விஷயத்தை ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் என்ன செய்கிறோம்.

“அது உனக்கு எப்படித்தெரியும்? அது உண்மையென்று நாங்கள் ஏன் நம்பவேண்டும்? அது உண்மை என்று நம்ப ஆதாரமென்ன?” எனப் பொதுவாக மூன்று கேள்விகளைக் கேட்கிறோம்.

பிரதி தினமும் நாம் எத்தனையோ விஷயங்களை அறிகிறோம். அவைகளில் பலவற்றை நாம் கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். “அது உண்மையா? உண்மை யென்பதற்கு ஆதாரமென்ன?” என்பன போன்ற விஷயங்களை நாம் கவனிப்பதே இல்லை.

நமது நம்பிக்கைகளில் பலவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவற்றிற்கு ஆதாரமே இல்லையெனத் தோன்றா நிற்கும். ஒரு காலத்திலே ஒரு விஷயம் உண்மையென்று யாரோ ஒருவர் சொன்னார். அல்லது ஆராய்ந்து பாராமலே அதை நாம் உண்மையென நம்பிக்கொண்டோம். அல்லது அது உண்மையாகத்தான் இருக்குமென்று சுளுவில் நம்பிக்கொண்டோம்.

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நாம் முதலிலே கூறிய மூன்று கேள்விகளையும் கேட்டால் எந்த விஷயத்தின் உண்மையையும் நாம் அறிந்துகொள்ளலாம்.

உண்மையாராய்ச்சியில் தோல்வியடைந்த பிறகும் ஒரு விஷயத்தை நாம் உண்மையென நம்புவோமானால் அந்த நம்பிக்கை பகுத்தறிவுக்குப் பொருந்தாததென்றே ஏற்படும்.

யாரேனும் ஒருவரது இலேசான தூண்டுதலின் பேரில் முதலில் ஒரு விஷயத்தை உண்மையென நம்புகிறோம். அந்த நம்பிக்கை காலக் கிரமத்தில் வலுப்பெற்று விடுகிறது. இப்பொழுது அது நமது சர்வ சாதாரண நம்பிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. யாரோ ஒருவர், ஏதோ ஒரு இடத்தில், எப்போழுதோ ஒரு காலத்து ஒரு விஷயத்தை நம்மிடம் சொன்னார். அதை ஆராய்ந்து பாராமலே நாம் ஒப்புக்கொண்டு நம்பிவிட்டோம். நம்மிடம் கூறப்படுகிறவைகளைப் பற்றிக் கேள்வி கேட்கும் சக்தி நமக்குண்டாகாதிருந்த இளம் பருவத்திலேயே அந்த விஷயத்தை நாம் கேட்டிருக்கலாம். நமது உறுதியான நம்பிக்கைகளில் பல அப்பொழுது ஏற்பட்டவைகளாகும். நாம் பக்குவ தசையடைந்திருக்கும் இப்பொழுது அது உண்மையா அல்லவா என்று கேட்கக்கூட நாம் துணிவு கொள்வதில்லை. அது தெளிவான உண்மை யென்றே நமக்குத் தோன்றுகிறது. எனவே அதைப்பற்றிக் கேள்வி கேட்பதே பைத்தியக்காரத்தனம் என நாம் உணருகிறோம்.

ஒரு தீவிர வைஷ்ணவனையும், ஒரு தீவிர சைவனையும் இள வயதிலேயே இடம் மாற்றி வளர்த்தால் அதாவது தீவிர வைஷ்ணவனை தீவிர சைவப் பெற்றோரும், தீவிர சைவனை தீவிர வைஷ்ணவப் பெற்றோரும் இளமை முதற்கொண்டே வளர்க்கும் படி செய்தால் அவர்களது பழக்க வழக்க நம்பிக்கைகள் எல்லாம் நேர்மாறாகவே அமையும். அவர்களில் ஒவ்வொருவனும் தனது நம்பிக்கையே பழக்க வழக்கமே மெய்யென்று நம்புவான். சமயத் துறையில் மட்டுமன்றி இதர துறைகளிலும் இதே நிலைமையே ஏற்படும். பலதார மணம், சிசுஹத்தி, நரபலி, மாட்டுச் சண்டை, குத்துச் சண்டை, கோழிப் போர் முதலியவைகள் அமலில் இருக்கும் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவை தீயவை என்றே தோன்றா; சர்வ சாதாரணப் பழக்க வழக்கமாகவே தோன்றும். அவை அசாதாரணமான பழக்கங்கள் என்றோ ஒழுக்கத்துக்கு முரணான பழக்கங்கள் என்றோ தோன்றமாட்டா.

குற்றபரம்பரையினர் வாழும் நகரத்தின் ஒரு பகுதியிலே குற்ற பரம்பரையினர்க்கு இடையிலே, ஒருவர் வளர்ந்துவந்தால் அவருடைய பழக்க வழக்கங்கள் ஏனையோர் பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டனவாகவே இருக்கும். ஒரு ஆங்கிலப் பெண்ணை ஒரு ரஷ்ய மாது ஸ்வீகாரம் செய்து ரஷ்ய குடும்பத்தில் ரஷ்ய பழக்க வழக்கப்படி வளர்த்தால், அவளுடைய பழக்க வழக்கங்களும் உணர்ச்சியும் ரஷ்ய போக்காக இருக்குமே ஒழிய, ஆங்கிலப் போக்காக இராது. இது போலவே நமது அநேக அதிதீவிர நம்பிக்கைகளுக்குக் கூட நமது வளர்ப்பு முறையே காரணமாகும்.

இளமைப்பருவம் கடப்பதுடன் புதுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் குணமும் உண்மையில் நின்று விடுவதில்லை. நம்மையறியாமலே நமது வாழ்நாள் முழுதும் புதுப்புதுக்கருத்துக்களை பிரதிதினம் ஏற்றுக்கொண்டே இருக்கிறோம். இதற்கு பத்திரிகைகளும் விளம்பரங்களுமே காரணம். பொதுவாக அநேக விஷயங்களைப்பற்றி நுட்பமாகச் சிந்தனை செய்வதே இல்லை. நாம் பெரிதும் கிளிகள் மாதிரியே நடந்து வருகிறோம். பிறர் சொல்வதை நம்புகிறோம்; செய்வதைப் பின்பற்றுகிறோம். இளமைப்பருவம் கடந்தபிறகும் நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் கருத்துகளுக்குப் பொருத்தமான கருத்துகளைத்தான் ஒப்புக்கொள்ளுகிறோம்; மற்றவைகளை நிராகரிக்கிறோம்.

“எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள், அதனால் நம்புகிறோம்” என்ற ரகத்தைச் சேர்ந்தவைகளுக்கு ஒரு தனியிடம் வகுக்கவேண்டியதுதான். அவை தெளிவான உண்மைகள் ஆகமாட்டா. அப்பேர்ப்பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட தனிமனிதன் கூறியவைகளாயிருக்கமாட்டா. அவை யாரோ ஒருவராலோ பலராலோ கூறப்பட்டு பரம்பரையாய் நம்பப்பட்டு வந்தவைகளாக இருக்கலாம். அல்லது மக்களின் ஐதீக நம்பிக்கைகளாகவும் இருக்கலாம். அப்படியானால் அவை வார்சுரிமைப்படி நாம் பெற்ற சமூக (சொத்து) நம்பிக்கை களாகும். எனவே ஒரு நம்பிக்கை மிகவும் பழமையானது என்ற ஒரே காரணத்தினால் மட்டும் அது ஆதாரமுடைய உண்மையாகி விடமாட்டாது.

சந்தேகத்துக்கு இடமில்லாதபடி, வெளிப்பார்வைக்கு உண்மையாகத் தோன்றுபவைகள் விஷயத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

“ஏதேனும் ஒரு விஷயத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்வதே ஆபாசமானது, அநாவசியமானது துரோகமானது என்ற உணர்ச்சி மக்களுக்கு இருக்குமானால் அந்த விஷயம் பகுத்தறிவுக்கு முரணானது என்று தான் ஏற்படும்”

டிராட்டர்.

“அது தெளிவான பொது உண்மை. அதைப்பற்றி சந்தேகம் கொள்வதோ ஆராய்ச்சி செய்வதோ அநாவசியம்” என ஏற்படுமானால், மக்கள் அறிவு வளர்ச்சியின் சரிதம் முழுவதிலும் அப்பேர்ப்பட்ட தெளிவான பொது உண்மைகளே நிறைந்திருக்கின்றன. ஆராய்ச்சியில் அவை ஆதாரமற்றவை என்றும் வெளியாகியிருக்கின்றன. உதாரணமாக அடிமை வர்த்தகம் இயற்கையானது, நியாயமானது, இன்றியமையாதது என்றே வெகுகாலமாக நம்பப்பட்டு வந்தது. மக்களில் பல வகுப்பார் இயல்பாக அடிமைகளாகவே இருந்து வருகின்றனர். அடிமை வாழ்க்கையையே பெரிதும் விரும்புகின்றனர். அதைப்பற்றி சந்தேகங்கொள்ளவே இடமில்லை.

மற்றும் வட்டமாக அன்றி இதர முறைகளில் கிரகங்கள் சுற்றுகின்றன என்று நம்புவது வெகுகாலமாக அசாத்தியமாகவே இருந்து வந்தது. வட்டவடிவம் அல்லது மண்டலம் மேற்பார்வைக்கு ஒரு புரணமான உருவம்; எனவே கிரகங்கள் எல்லாம் வட்டமாகச் சுற்றுகின்றன என நம்புவதே இயற்கையானது; சாத்தியமானது. ஆனால் இந்த நம்பிக்கையை ஒழிக்க அநாதிகாலமாக நடந்து வந்திருக்கும் போராட்டம் சரித்திரத்திலேயே மிகவும் அற்புதமானதாகும்.

உணர்ச்சிக்கு ஹிருதயமே ஆதாரமென்றும் மூளை அல்லவென்றும் முன்னோர் நம்பி வந்தனர். இன்றோ பெரும்பாலார் மூளையின் உதவியினால் நாம் சிந்தனை செய்வதாகவே நம்புகிறார்கள். மூளையின் உதவியின்றி மனிதனுக்கு சிந்திக்கவே முடியாதென்றே தற்காலத்தவர்களில் பெரும்பாலார் கூறுகிறார்கள். எனினும் முன்னோர்கள் மாறாகவே நம்பினார்கள்.

பூமி பரப்பான தென்பது தெளிவான உண்மையாகத் தோன்றியதினால் வேறு விதமாக அபிப்பிராயப்படுகிறவர்கள் கேலி செய்யப்பட்டார்கள் தூற்றப்பட்டார்கள்.

பளுவான பொருள்கள் இலேசான பொருள்களை விட விரைவாக விழுமென இரண்டாயிர வருஷகாலம் தடையின்றி நம்பப்பட்டு வந்தது. அதற்கு அரிஸ்டாட்டல் அபிப்பிராயமும் மேற்கோளாகக் காட்டப்பட்டது. உண்மை வேறு விதமானதென்று கலிலியோ நிரூபித்துக்காட்டும் வரை மக்கள் அவ்வாறே நம்பி வந்தனர். ஆராய்ந்து பாராமல் கண் மூடித்தனமாக நம்பப்படுபவைகள் எல்லாம் ஆதாரமுடைய உண்மைகளாகிவிட மாட்டா. அத்தகைய தப்பு நம்பிக்கைகளை உடைத்தெறிவதினாலேயே அறிவு வளர்ச்சி யடைகிறது.

சுயநலப்பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படி பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமா யிருப்பதினாலேயே அவைகளை நாம் நம்பி வருகிறோம். பொதுஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல விஷயங்களை நம்புகிறோம்; அல்லது நம்புவதாக பாவனை செய்கிறோம். ஆனால் அரசியல் அபிப்பிராயங்கள் உட்பட சகல அபிப்பிராயங்களும் சுயநலம் பற்றியவை என்றும் கூறிவிட முடியாது, எனினும் நம்பிக்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் சுயநலமும் ஒரு காரணம் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.

“சுயநலம்” என்பது பொதுவாக, மக்களது ஜீவனோபாயத்துக்குரிய வழிகள், பணம் தேடுதல் முதலியவைகளையே குறிக்கும். ஆனால் சமூக வாழ்வில் ஒருவனுக்கு ஏற்படும் நலத்தையும் நாம் சுயநலத்தோடு சேர்க்கலாம். பொதுஜன மதிப்பைப் பெறும் பொருட்டும் நாம் பல விஷயங்களை நம்புவதாக அல்லது பாவனை காட்டுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறோம். இதுவும் சுயநலம் பற்றியதாகும். ஒருவனது வாழ்நாளின் வெற்றியே பொதுஜன மதிப்பைப் பொறுத்திருக்கிறது. சில ஸ்தாபனங்களையோ இயக்கங்களையோ ஆதரிப்பதினாலோ நடத்துவதினாலோ சிலருக்கு பொதுஜன மதிப்பும் வாழ்க்கை வெற்றியும் ஏற்படுகிறது. சமூக வாழ்வில் தாம் பெற்றிருக்கும் ஸ்தானம் அல்லது பதவிகள் காரணமாக சிலர் அனேக விஷயங்களை நம்ப வேண்டியதாக ஏற்படுகிறது. அவ்வாறு நம்பவில்லையானால் அவர்களுடைய மதிப்பும் ஒழிந்துபோகும்; வாழ்வும் கஷ்டமாகிவிடும்.

தனது இயல்பான குணத்துக்கு ஆதாரம் தேடும் பொருட்டும், தனது நிலைமையைக் காப்பாற்றும் பொருட்டும், தனது நடக்கை நியாயமென நிரூபிக்கும் பொருட்டும் சிலர் வேண்டுமென்றே சில விஷயங்களை அல்லது கொள்கைகளை நம்புகிறார்கள், அல்லது நம்பும்படி ஏற்படுகிறது. சோம்பேறி களும் பித்தலாட்டக்காரரும் கூட தமக்கு ஆதரவாக சில அபிப்பிராயங்களையோ கொள்கைகளையோ காட்டக்கூடும். நமது உபதேசிகளிலும் பிரசாரகர்களிலும் பெரும்பாலார் வாலிழந்த நரிக்கு ஒப்பானவர்களே.

வீண் அபிமானம் காரணமாகவும் பலர், ஆதாரமற்றவைகளை உண்மையென நம்புவதுண்டு. ஆளையோ, சம்பவத்தையோ, ஸ்தாபனத்தையோ பற்றிய அபிமானத்தினாலும் துவேஷத்தினாலும் ஆதாரமற்றவைகளைப் பலர் மெய்யென நம்புவதுண்டு. சிறுவயதில் பெற்றோருக்கு அடங்கி நடக்காத பிள்ளைகள் பெற்றோர் அபிப்பிராயங்களுக்கு அல்லது நம்பிக்கைகளுக்கு முரணாகவே நடந்து வருகிறார்கள். அதுபோலவே பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகள் அவர்களது தப்பபிப்பிராயங்களையும் ஆதரிக்கின்றன, நம்புகின்றன.

வயதுவந்த பிறகு கொடிய பிணக்கினால் சிலருடைய அபிப்பிராயங்கள் மாறுபடுவதுண்டு. ஒருவன்பேரிலுள்ள பகை அவனது அபிப்பிராயங்களையும் பாதிக்கிறது. நம் எதிரிகளின் அபிப்பிராயங்களைத் தகர்த்தெறிவதில் நாம் பெரிய மகிழ்ச்சி கொள்வதில்லையா? அதுபோலவே ஒருவன் மீதுள்ள நட்பினாலும் அவனது அபிப்பிராயங்களை ஆதரிப்பதில் நாம் பெரிய மகிழ்ச்சியடைகிறோம்.

சிலர் காலப்போக்கையொட்டி சில அபிப்பிராயங்களையும் நம்பிக்கை களையும் ஆதரிப்பதுண்டு. ஆனால் காலப்போக்கு மாறுந்தோறும் நாம் அபிப்பிராயங்களை பொதுவாக மாற்றிக்கொள்வதில்லை. வெகு சீக்கிரத்தில் நமது மனோ நிலை உறுதியடைந்து விடுகிறது.

ஒரு அபிப்பிராயத்தை ஒப்புக்கொண்டு விட்டால் அது அப்படியே நிலைத்து வருவதே சகஜமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட முறையில் சிந்தனை செய்வதினால் அம்மாதிரி செய்வதே சுளுவாகத் தோற்றுகிறது.

சிலர் கதை சொல்வதில் நிபுணர்களாயிருக்கிறார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட அபிப்பிராயங்களை அல்லது வாதங்களை விளக்குவதில் சமர்த்தர் களாயிருக்கிறார்கள். “கிராமபோன்” மாதிரி வேலைசெய்யும் பல புருஷர்களும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பழங்கதைகளைத் திருப்பித் திருப்பிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தைக் கிளப்பி விட்டால் போதுமானது. அவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாக எல்லா நம்பிக்கைளும் அபிப்பிராயங்களும் அப்பேர்ப்பட்டவைகளே. சில காலங்களுக்குப் பிறகு அவை நமது உள்ளத்து உறைத்துவிடுகின்றன. இளமையாயிருக்கும் போது பழைய கருத்துகளை மாற்றிப் புதுப்புதுக் கருத்துகளை சம்பாதித்துக்கொள் கிறோம். வயது முதிர முதிர புதுக்கருத்துகளை நாம் அவ்வளவாக நாடுவதில்லை. நாம் பழமைக் களஞ்சியமாகி விடுகிறோம்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை செப்டம்பர் 1936

You may also like...