ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லாலுக்கு கராச்சி முனிசிபாலிட்டி உபசாரப்பத்திரம் கொடுக்க மறுத்துவிட்டது. பம்பாய் முனிசிபாலிட்டியும் உபசாரப் பத்திரம் கொடுக்க மறுத்து விட்டது. கடைசியாக மதராசும் மறுத்து விட்டது. அவ்வளவுதானா என்று பார்த்தால் திருச்சியும் மறுத்தது.
தானாகக் கனியாத பழத்தை தடியாலடித்து கனியவைப்பது போல் காங்கிரஸ்காரர்கள் இப்போது மறுபடியும் அந்த முனிசிபாலிட்டிகளில் உபசாரப் பத்திரம் படிக்கச் செய்வதற்கு வாசல் வைத்த வீடு தோறும் அலைந்து திரிந்து 32 பற்களையும் காட்டி “வரவேற்பு செலவை நாங்களே பொறுத்துக் கொள்ளுகிறோம்” என்று கெஞ்சுகிறார்கள்.
ஜவஹர்லாலுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்காத முனிசிபாலிட்டிகள் ஒரு நல்ல பெருமையை இழந்து விட்டதாக பரிதாபக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் மத விஷயங்களிலும் இப்படியே பார்ப்பானுக்கு பணங் கொடுக்காத கை உலக்கை என்றும், பார்ப்பான் உபதேசம் கேட்காத காது நிலைக்காது என்றும், பார்ப்பானைப் புகழாத வாய் நாவாய் என்றும் பிரசாரம் சேர்த்துப் பேசுவது வழக்கம். அதுபோலவே ஜவஹருக்கு வரவேற்பு கொடுக்காத ஊரையும் முனிசிபாலிட்டி ஜில்லா போர்டுகளையும் கேவலமாகப் பேசுகிறார்கள். ஆனால் அதே ஸ்தாபன மெம்பர்களை திரும்பத் திரும்ப கெஞ்சி உபசாரம் பெறப் பாடுபடுகிறார்கள்.
எதற்காக இவ்வளவு ஆத்திரம் என்பது தான் விளங்கவில்லை. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது சாதாரண 3ந்தர 4ந்தர மானமுள்ளவர்கள் பழமொழி. நமது காங்கிரசுக்காரருக்குப் 10ந்தர மானம் கூட கிடையாதாகையால் எப்படியாவது எதை விற்றாவது தங்கள் சுயநலம் பெறுவதையே கொள்கையாதலால் ஒருபக்கம் வீடுவீடாய், ஊர் ஊராய் அலைந்து கெஞ்சிக் கொண்டு மற்றொரு பக்கம் கண்டபடி மக்களைக் குலைத்து வருகிறார்கள்.
தேர்தல் காலங்களில் இந்நாட்டு பாமரமக்கள் கண்களில் மண் தூவுவதற்கு ஆக யாரையாவது பிடித்து இந்திரன் சந்திரன் என்று கூறி, விளம்பரம் செய்து இந்நாட்டுக்கு அழைத்து வருவதென்றால் இதை யார்தான் சகித்துக் கொண்டு அதற்காக வருபவர்களுக்கெல்லாம் உபசாரப் பத்திரமும் பணமும் கொடுத்துக்கொண்டிருக்க முடியும்?
நமது ஸ்தல ஸ்தாபனங்கள் பொறுப்பற்ற முறையில் நடைபெற இடம் கொடுக்கின்றது என்பதற்கு இது போன்ற காரியங்களே சரியான உதாரணங்களாகும்.
இனி தமிழ் நாட்டுக்குள் அனேகமாக மற்றும் பல இடங்களிலும் இந்த நிலைமைதான் ஏற்படும் என்பதையும் பஹிஷ்காரமும் முன்போலவே ஏன், அவற்றை விட அதாவது காந்தியார், பட்டேல், ராஜேந்திரபாபு முதலியவர்களுக்கு நடந்ததை விட மேலாகவே நடக்கும் என்பதையும் நமது பார்ப்பனர்கள் உணர்ந்து அதற்கேற்றபடி புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள எதிர்ப்பார்க்கிறோம்.
தோழர் ஜவஹர்லால் தமிழ்நாட்டிற்கு எலக்ஷன் பிரசாரத்துக்கு வருகிறார் என்பது மாத்திரமல்லாமல் மேல்கொண்டு பண வசூலுக்கு ஆகவும் வருகிறார் என்பதை பொது மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவதுடன் இதுவரை காங்கிரசுக்காரர்கள் இம்மாதிரி எத்தனை தடவை பணம் வசூலித்து இருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
ஒவ்வொரு தடவையிலும் லட்சக் கணக்காய் வசூலித்த பணங்கள் என்ன ஆயிற்று என்று பணம் கொடுத்தவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? பணத்தை வசூல் செய்வதும் வாயாடிகளுக்கும் காலாடிகளுக்கும் கொடுப்பதும் கள்ளுக்கடை மீன்கடை பாஷையில் பார்ப்பனரல்லாத மக்களையும் அவர்களது தலைவர்களையும் அற்பத்தனமாய் பேசச் சொல்லுவதுமல்லாமல் அப்பணங்களால் என்ன நன்மை ஏற்பட்டது?
இப்பொழுதும் தோழர்கள் ஆலச்யமய்யரும், கல்யாணராமய்யரும் போல் சட்டசபை மெம்பரும் ஜில்லா போர்டு மெம்பருமாக ஆக வேண்டுமானால் இந்த வசூல் பணங்களில் செலவு செய்வதும் தோழர்கள் அவினாசி லிங்கமும் சேஷாசல செட்டியாரும் போல் அசம்பளி மெம்பரும் ஜில்லா போர்டு மெம்பரும் ஆக வேண்டுமானால் அவரவர்கள் சொந்தப்பணம் முறையே 25 ஆயிரம் 15 ஆயிரம் செலவாவதுமாகத்தான் இருந்து வருகிறது. எப்படியோ இரண்டு பார்ப்பனர்கள் அதுவும் டிபாசிட்டு கட்டக்கூட சவுகரியமில்லாதவர்கள் சட்டசபைக்கும் போர்டுக்கும் புகுந்து விடுகிறார்கள்.
சில பார்ப்பனர்கள் எலக்ஷனில் நின்று தன் காசு செலவில்லாமல் வெற்றி பெறுவதோடு பணமும் மிச்சம் பிடித்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் தேசிய நிதி வசூலிப்பதின் தன்மையாக இருக்கிறது.
திலகர் நிதி கணக்கு கேட்டதற்கு இதுவரை காங்கிரசுக்காரர்களால் என்ன பதில் சொல்ல முடிந்தது?
மற்றும் சதுர் பாட்டுக் கச்சேரிகள் முதலிய கண் காது மெய் காக்ஷி சாலைகள் வைத்து கொள்ளை அடித்த பணங்களுக்கு என்ன கணக்கு சொன்னார்கள் என்பதைப் பற்றி யெல்லாம் பாமர மக்கள் கவனிக்காமல் கண்மூடித்தனமாய் நடந்து கொண்டதின் பயனே மத இயலில் பார்ப்பனரல்லாத மக்கள் பாடுபடுவதும் பார்ப்பனர்களுக்கு அழுவதுமாய் வாழ்க்கை நடத்தப் படுகிறது போலவே பார்ப்பனரல்லாதார் பணங்கொடுப்பதும் உஞ்சவிருத்தி பார்ப்பான் தேர்தலில் வருவதுமாய் இருந்து வருகிறது.
என்னதான் சமதர்மமும் பொது உடமையும் பேசினாலும் ஜவஹர்லால் பார்ப்பனர் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
அவர் பூசையும் குங்குமப் பொட்டும் கங்கா ஸ்நானமும் பார்ப்பன கருமமும் திதியும் திவசமும் ஒவ்வொன்றிலும் எந்த பார்ப்பனருக்கும் விட்டவர் அல்ல என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்.
தோழர் ராஜேந்திரப் பிரசாத் அவர்களை பார்ப்பனரல்லாத மக்கள் பஹிஷ்கரித்த போது அவர் “எனக்கு எலக்ஷன் நடப்பது தெரியாது, நானும் பார்ப்பனரல்லாதார்தானே, என்னை ஏன் திரும்பிப்போ என்று சொல்லுகிறீர்கள். நான் எங்கே போவது?” என்று கேட்டார். ஆனால் தோழர் ஜவஹர்லாலை தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் போ என்று சொல்லும் போது அவர் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.
இவை ஒரு புறமிருக்க, திருச்சி முனிசிபாலிட்டி முதலில் வரவேற்பு தீர்மானத்தை யோசிக்கவே மறுத்துவிட்டு மறுபடியும் சில காங்கிரஸ்காரர் களுடைய “பிரம்ம”ப் பிரயத்தனத்தால் அதுவும் வரவேற்புச் செலவை தாங்களே சொந்தத்தில் ஏற்றுக் கொள்ளுவதாகச் சொல்லி வரவேற்பு தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டு வெற்றி பெற்று விட்டதாகத் தெரிகிறது.
ஆனால் அதை யார் படிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. சேர்மென் தோழர் பொன்னையா பிள்ளை அவர்களும், வைஸ் சேர்மென் கோபாலராவ் அவர்களும் காங்கிரஸ் கட்டளையை இரண்டு தடவை மீறினவர்கள். காங்கிரஸ் கட்டளையை மீறியே அந்த ஸ்தானங்களைப் பெற்ற தோடல்லாமல் காங்கிரஸ்காரர்கள் ராஜிநாமா கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டும் அவ்வுத்திரவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு விண்ணென்று நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் “காங்கிரஸ் துரோகிகள்” ஆவார்கள். அப்படிப்பட்ட “துரோகிகள்” இடம் காங்கிரஸ் தலைவர் உபசாரம் பெற்றுக் கொள்ளப்போகிறாரா அல்லது காங்கிரசின் கட்டுப்பாட்டையும் கவுரவத்தையும் உத்தேசித்து திருச்சி முனிசிபல் வரவேற்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிடப் போகிறாரா, அல்லது “சாம்பாரில் மலம் கலந்து விட்டது மேலாக இறுத்தாப் போல் வடிகட்டி விடு” என்று ஆச்சாரக்காரர்கள் சொல்லுவது போல் சேர்மென், வைஸ்சேர்மென் நீங்கலாக வேறு யாரையாவது அதாவது தோழர் தேவர் போன்றவர்களைக் கொண்டு வரவேற்பு வாசிக்கச் சொல்லப் போகிறாரா, அல்லது இந்த எழவே வேண்டாம் “நான் திருச்சிக்கே வரவில்லை” என்று சொல்லிவிடப் போகிறாரா என்பது ஒரு போட்டிப் பரிசு போன்ற விஷயமாக இருக்கிறது.
எப்படி இருந்த போதிலும் நமக்கு ஒரு விஷயத்தில் திருப்தி ஏற்பட்டிருப்பதை மறைப்பதற்கு இல்லை. அதாவது ஏதோ ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரால் குருவாகக் கருதப்படுகின்ற ஒரு பார்ப்பனரை சங்கராச்சாரி ஆக்கி அவருக்கு உலக குரு என்று பெயர் வைத்து விளம்பரம் பண்ணி பல்லக்கில் சுமந்து பணம் பறிப்பது போல், ஏதோ ஒரு ஸ்தாபனத்துக்குத் தலைவர் என்பவரை இந்திய தலைவர் என்று கூப்பிட்டு விளம்பரம் செய்து ஊர்கோலம் செய்து பணம் வகுலிக்கப்போகும் ஒரு ஆசாமிக்கு வரவேற்பளிக்க மறுக்கும்படியானவர்களோ பகிஷ்கரிப்பவர்களோ ஆன “தேசத்துரோகிகள்”, “அபாக்கியவான்கள்” இந்த இந்திய நாட்டில் சென்னை மாகாணத்தில் மாத்திரம் இல்லாமல் பம்பாய் மாகாணத்திலும், சிந்து மாகாணத்திலும் கூட இருக்கிறார்கள் என்றால் மற்றும் காங்கிரஸ்காரர்களே மெஜாரிட்டியாய் வெற்றி பெற்ற முனிசிபாலிட்டிகளிலுமே இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு அளவுக்காவது நமக்கு கிடைக்கும் “தேசத்துரோகப் பட்டத்தில்” பங்கு கொள்ள வேறு மாகாணங்களும் காங்கிரஸ்காரர்களும் கிடைத்தனவே என்பதுதான் நமக்கு ஏற்பட்ட திருப்தியாகும்.
தோழர் ஜவஹர்லாலை பஹிஷ்கரிப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகி என்றும், பார்ப்பனர்களும் அவர்கள் பத்திரிகைகளும் கூலிகளும் கூவக்கூவ இந்தியாவில் கூடிய சீக்கிரம் “தேசத்துரோகிகள்” தான் 100க்கு 95 வீதம் பேர்களுக்கும் அதிகமாகப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களே தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் ஆனைமலையில் வெள்ளைக்காரரிடம் தோழர் “ஜவஹர்லால் கொள்கையை நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை” என்றும் “அவருடைய கொள்கைக்காக அவரை காங்கிரஸ் தலைவராக்கவில்லை” என்றும் கல்லில் எழுதிய எழுத்துப்போல் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப் பட்ட சத்தியமூர்த்தியார் இன்றும் தேச பக்தராகவும் பாரதமாதாவின் அருந் தவப் புத்திரராகவுமே விளங்குவதோடு ஜவஹர்லாலையும் கூட்டி ஆட்டம் காட்டி பணமும் வசூலிக்கப் போகிறார்களே ஒழிய மற்றபடி அவர் எந்த தேச பக்தர்களாலும் தேசீயப் பத்திரிக்கைகளாலும் தேசீயப் பிழைப்புக்காரர் களாலும் தேசத்துரோகியாகவோ அபாக்கியவானாகவோ அழைக்கப்படவில்லை. ஆகவே தேசத் துரோகம் என்றால் என்ன என்பதை இதிலிருந்தே நன்றாய் தெரிந்து கொள்ளலாம்.
வடநாட்டுப் பார்ப்பனர் ஒருவரும் தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவரும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு பார்ப்பனரல்லாதார் மக்களின் மானங்கெட்ட அறிவு மழுங்கிய ஒரு கூட்டத்தாரின் உதவியைக் கொண்டு மூட மக்களை குரங்கு போல் ஆட்டப் போகிறார்கள்; ஏய்த்துப் பணம் பிடுங்கப் போகிறார்கள்; இதுதான் அகில இந்தியத் தலைவர் வரவேற்பு நாடகம் என்பதின் கருத்து.
ஆகவே தோழர்கள் இது விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமாய் எச்சரிக்கிறோம்.
குடி அரசு தலையங்கம் 27.09.1936