காங்கிரசும் பார்ப்பனீயமும்
அகில இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் கை ஆயுதமென்று நாம் இந்த பத்து பன்னிரண்டு வருஷகாலமாக கூறி வந்திருக்கிறோம்.
காங்கிரசில் மிக்க பக்தியுடனும் உண்மையான கவலையுடனும் ஊக்கத்துடனும் உழைத்து வந்த தோழர் ஈ.வெ.ராமசாமி போன்றவர்கள் இதை அதாவது காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்பதை உண்மையாய், சந்தேகமற உணர்ந்ததினாலேயே காங்கிரசை விட்டு வெளியில் வந்து காங்கிரசின் மூலம், பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெறாமல் இருப்பதற்குத் தங்களாலான முயற்சிகள் எல்லாம் செய்து காங்கிரசையும் பார்ப்பனச் சூழ்ச்சிகளையும் தோற்கடித்தே வந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களும் காங்கிரசின் பேரால் பிழைக்கிறவர்களும் காங்கிரசின் சார்பில் நடக்கும் பத்திரிகைகளும் பூனையானது கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகோர் கண்களும் மூடப்பட்டிருக்குமென்று கருதிக் கொள்ளும் பாவனை போல் இன்று பார்ப்பனர்கள் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றுவிட்டது, வெற்றிபெற்றுவிட்டது, வெள்ளைக்காரர்கள் கையிலிருந்து ராஜ்யம் பிடுங்கப்பட்டாய் விட்டது, அதோ சுயராஜ்ய தேவி தோன்றி விட்டாள், இதோ பாரதத் தேவி கைவிலங்கு உடைபட்டுவிட்டது என்பன போன்று புரோகித பாஷையில் மக்களை எவ்வளவுதான் ஏமாற்றி வந்தாலும் கடைசியாக அதனுடைய உண்மையான யோக்கியதை நாம் எதிர்பார்த்த அளவுக்கு மேலாகவே வெளியாகி வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
~subhead
இன்று காங்கிரஸ் யோக்கியதை
~shend
இன்று காங்கிரசின் யோக்கியதை இந்த பத்து வருஷத்துக்கு முன் இருந்தது போலவே மிகமிக இழிவான நிலைக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே
“நீ துரோகம் செய்து விட்டாய்”
“நீ காட்டிக் கொடுத்து விட்டாய்”
“நீ கட்டுப்பாட்டை மீறி விட்டாய்”
“நீ யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை”
என்று ஆளுக்காள் கேட்டுக்கொள்ளுவதும் தொண்டர் கூட்டங்களில்
“நீ திருடி விட்டாய்”
“நீ திருடி விட்டாய்”
“நீ என்னைத் தேர்ந்தெடுக்காதது அக்கிரமம்”
“நீ சூழ்ச்சி செய்து பதவி பெற்றாய்”
என்பது போன்ற சண்டையும் நிர்வாகக் கமிட்டிக்கும் பொது அங்கத்தினர்களுக்கும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும்,
ஒரு “தலைவரை” வீழ்த்தி மற்றொரு “தலைவருக்கு” முடிசூட்ட சூழ்ச்சிகள் என்பனவாகிய போராட்டங்கள் ஒருபுறமும்,
சர்வாதிகாரியாக இருந்தவருக்கும் (காந்தியாருக்கும்) சர்வாதிகாரி ஆகப் போவதாய் கருதி இருந்தவருக்கும் (பண்டிட் ஜவஹருக்கும்) அவர் அபிப்பிராயம் இவருக்கு பிடிக்காமலும், இவர் அபிப்பிராயம் அவருக்கு பிடிக்காமலும், ஒருவரை ஒருவர் பழங்கால பெண்மக்கள் போல் ஜாடை பேசி வைது கொள்வதும் ஆன நிலையில் இன்று காங்கிரஸ் இருந்து வருகிறது. இதில் எதை யாரால் மறுக்கக் கூடும் என்று கேட்கிறோம்.
~subhead
இன்று காங்கிரஸ் கொள்கைகள்
~shend
இவை ஒருபுறம் இருக்க கொள்கைகளிலும் தோழர் காந்தியார் கொள்கைக்கும், தோழர்கள் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியவர்கள் கொள்கைக்கும், பண்டிட் ஜவஹர் கொள்கைக்கும் போட்டியும் வசவும் ஒருபுறமும், தோழர் சத்தியமூர்த்தி கொள்கைக்கும் வேலைக் கமிட்டி கொள்கைக்கும் அபிப்பிராய பேதமும், மூர்த்தியாருக்கும் பண்டித நேருவுக்கும் அடியோடு தலைகீழான அபிப்பிராய பேதமும் இருப்பதோடு அடுத்த சட்டசபை தேர்தலில் மந்திரி பதவி ஏற்பதா மறுப்பதா என்கின்ற சண்டையும், ஏற்றால் அரசியலை நடத்துவதா உடைப்பதா என்ற சண்டையும், உடைக்க முடியுமா என்று ஒருவர் கேட்பதும், நடத்த முடியுமா என்று மற்றவர் கேட்பதும், உடைப்பதானால் சட்டசபைக்கே போக வேண்டியதில்லை (ஏனென்றால் உடைக்க முடியாது) என்று ஒருவர் சொல்வதும், நடத்துவதானால் மந்திரி பதவி ஏற்கவே கூடாது, ஏனென்றால் அது தேசத் துரோகமும், சுயராஜ்யத்துக்கு முட்டுக்கட்டையும், அதிகார வர்க்கத்துக்கு அடிமைபட வேண்டியதுமாகும் என்று ஒருவர் கூறுவதும் இப்படியாக இன்னும் பல விதமாய் பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் நடந்து கொள்கிறார்கள்.
~subhead
10 வருஷத்துக்கு முன்னும் இப்படியே
~shend
உண்மையிலேயே இதைவிட மோசமான நிலையில் காங்கிரஸ் 27, 28 வருஷங்களில் இருந்தபோது அந்த நிலையை சமாளிக்க சைமன் பகிஷ்கார நாடகமும் உப்பு சத்தியாக்கிரக நாடகமும் நடத்தியதின் மூலம் ஒரு அளவுக்கு பாமர மக்களை ஏமாற்ற முடிந்த தென்றாலும் அவ்விரண்டிலும் பெரும் தோல்வி அடைந்ததின் பயனாய் சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளவும் சர்க்காருக்கு எழுதிக் கொடுக்கவும், பகிஷ்காரம் செய்த கமிஷனான சைமன் கமிஷன் ரிப்போர்ட்டின் பரிசீலனைக் கூடமாகிய வட்டமேஜை நடவடிக்கைக்குப் போய் கலந்து கொள்ளவும், அதிலும் தோல்விபெற்று வந்து காங்கிரசானது சட்ட மறுப்பையும் சட்ட மீறுதலையும் நிறுத்திக் கொண்டது என்று தீர்மானம் செய்ததுமான காரியங்கள் ஏற்பட்டதோடு இந்த அவமானத்தைத் தாங்க சக்தி இல்லாததால் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிக் கொண்டதாக நடித்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு தோல்வி ஏற்பட்டு விட்டது.
~subhead
திட்டங்கள் தோல்வி
~shend
இவைகள் எல்லாவற்றையும் விட காந்தியாரின் முதல் திட்டங்களின் தீண்டாமை விலக்கும், இந்து முஸ்லீம் ஒற்றுமையும் காலங் குறிப்பிடாமல் தள்ளிப் போடவும், அதுவும் தீண்டாமை விலக்கும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் ஏற்படாமல் சுயராஜ்யம் வராது என்று சொன்ன காந்தியாரின் திருவாக்கே சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் தீண்டாமையை ஒழிக்கவும் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுத்தவும் முடியும் என்று சொல்லவுமான நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.
~subhead
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
~shend
இவற்றை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேசீயத்துக்கு விரோதம் என்றும் அது ஒருநாளும் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் சொன்ன காங்கிரசும் காந்தியாரும் வட்டமேஜை மகாநாட்டிலேயே “சரித்திர சம்பந்தமான காரணங்கொண்டு முஸ்லீம்களுக்கு மாத்திரம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கலாம்” என்று ஒப்புக் கொண்டதும்,
தீண்டாப்படாதார் என்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பாய் வகுப்பு பிரதிநிதித்துவம் கொடுக்கக்கூடாது என்றும், ஸ்தானம் ஒதுக்கி வைப்பதைக் கூடச் சம்மதிக்க முடியாது என்றும், அப்படி மீறி ஏதாவது கொடுக்கப்படுமானால் “நான் செத்துப்போவேன்” என்றும் சொன்ன காந்தியாரே தீண்டப்படாதாரின் வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொண்டு முறைகளை மாத்திரம் மாற்றி கிட்டத்தட்ட, ஒன்றுக்கு இரண்டு பங்காக ஸ்தானங்கள் கொடுத்து யாரை தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அல்ல என்று காந்தியார் சொன்னாரோ அவர்களையே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வலியக் கூப்பிட்டு ஏற்றுக்கொண்டு ராஜி செய்து கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது.
~subhead
16 வருஷ நடவடிக்கை
~shend
இனி காங்கிரசுக்காரர்கள் அவர்களுடைய பதினாறு வருஷ ஆட்சியில் 3 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் பேர் அடிபட்டும் சிறை சென்றதும் கஷ்டப்பட்டார்கள் என்று சொல்லப்படும் தியாகத்தாலும் எந்த காரியத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்று பார்த்தால் தாங்கள் முயற்சித்த எல்லாக் காரியங்களிலும் 100க்கு 99க்கு குறைவில்லாமல் தோல்வியும் அவமானமும் அடையவில்லை என்று சொல்ல முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட காங்கிரஸ் ஸ்தாபனமும், அதன் தலைவர்கள், தொண்டர்கள் என்பவர்களும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களையும் சுயமரியாதைக் காரர்களையும் வேண்டுமென்றே மான வெட்கமில்லாத கூலிகளையும், வாழ்வுக்கு யோக்கியமான வழியில்லாத காலிகளையும் விட்டு கேவலமாகப் பேசச் செய்வதின் மூலமும் கூலிப் பத்திரிகைக்கு பிச்சை கொடுத்து அற்பத்தனமாக வைது எழுதச் செய்வதின் மூலமும் காங்கிரசின் பேரால் தங்கள் சுயநலத்துக்கு பயன் அடைந்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு அவ்வேலையில் இப்போது தீவிரமாக இறங்கிவிட்டார்கள்.
~subhead
மாய வெற்றி
~shend
இந்தக் காரியத்திலும் மற்றும் எந்தக் கொள்கையிலும் வெற்றி பெறாமல் தோல்வியும் அவமானமும் இதுவரை காங்கிரசானது அடைந்து வந்திருந்தும் கடைசி மூச்சாக மனதறிந்த பொய்யையும் யாவரும் வெறுக்கும் இழிகுணங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசம்பளி தேர்தலையும் ஸ்தல ஸ்தாபன தேர்தலையும் நடத்தி தற்கால வெற்றி என்னும் மாய வெற்றியை அடைந்தார்கள். அந்த மாய வெற்றியானது இன்று காங்கிரசை நாற வைத்து இந்தியா பூராவும் காங்கிரசையும் பல பிரமுகர்களையும் பற்றி காறி உமிழும்படியான நிலைமையை உண்டாக்கிவிட்டது எங்கும் சிரிப்பாய் சிரிக்கப்படுகிறது. இதைக் கண்டு ஆச்சாரியார் ஒரு புறம், அய்யர் ஒரு புறம், அய்யங்கார் ஒரு புறம், அம்மங்கார் ஒரு புறம், சாஸ்திரி ஒரு புறம், சர்மா ஒரு புறம் என்பதாக பார்ப்பனக் கூட்டம் ராஜிநாமா ராஜிநாமா என்னும் நெருப்பைக் கக்கிக் கொண்டு பிசாசுகள் போல் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகின்றன. காங்கிரஸ் பத்திரிகைகள் துரோகம் செய்பவர்களை கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டுமென்கின்கின்றன. கட்டுப்பாட்டுக்கு மீறியவர்களை கடுந் தண்டனை விதித்து புத்தி கற்பிக்க வேண்டும் என்கின்றன.
~subhead
தலைவர்கள்
~shend
தலைவர்கள் என்பவர்களோ “அனுபோகமில்லாமலும் ஆராய்ச்சி இல்லாமலும் அவசரப்பட்டு செய்து விட்ட காரியங்களுக்காக நாம் வருந்துவதில் பிரயோஜனம் இல்லை. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதன் பயனாய் இனி வரப்போகும் தேர்தலுக்கு சில இடங்களில் காங்கிரசு போட்டி போடக்கூடாது என்று தலைவர்கள் சொல்லியிருந்தாலும் தேர்தல் கூலிகளாய் இருந்து காலித்தனம் செய்து வயிறு வளர்க்க வேண்டிய ஆட்கள் போட்டி போடாவிட்டால் சோற்றுக்கு வழி என்ன என்று சொல்லிக் கொண்டு “காங்கிரசு தேர்தலில் போட்டிபோட வேண்டும்” என்று தீர்மானித்து பணம் வாங்கிக் கொண்டு ஆட்களை நிறுத்தி கூலிப்பிரசாரம் செய்யத் தொடங்குகின்றனர்.
சில இடங்களில் உள்ள குட்டித் தலைவர்கள் “நிலைமை சரியாக இல்லாததால் போட்டி போடுவதில்லை” என்று தீர்மானிக்கின்றனர். சில இடங்களில் உங்களுக்கு இவ்வளவு ஸ்தானம் எடுத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு இவ்வளவு ஸ்தானம் கொடுங்கள் என்று ராஜிப் பிச்சைக்கு புறப்பட்டு விட்டனர்.
ஆகவே காங்கிரஸ் ஸ்தல ஸ்தாபனக் கொள்கையும் அது வெற்றி பெற்ற யோக்கியதையும் விளங்கிவிட்டன.
மற்றபடி காங்கிரசின் யோக்கியதை விளங்கவும் அதிலுள்ள ஆட்களின் நாணயம், நல்லெண்ணம் விளங்கவும் இனி என்ன பரீக்ஷை வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
~subhead
ஜஸ்டிஸ் சுயமரியாதை கட்சிகளை வைவது
~shend
இந்த நிலையில் ஜஸ்டிஸ் சுயமரியாதை இயக்கங்களைப் பற்றி காலிகளும் கூலிகளும் குரைப்பதின் கருத்து என்ன? இவர்கள் குரைப்புக்கு ஆதாரம் என்ன என்பதைப் பற்றி சிறிது யோசிக்க விரும்புகிறோம்.
சென்ற வாரத்தில் அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு அரசியல் மகாநாடு என்பதில் அதன் தலைவர்கள் என்பவர்களில் ஒருவர் தனது உரையை வாசிக்கையில் ஜஸ்டிஸ் கட்சியை தேசத்துரோகக் கட்சி என்று ஆரம்பித்து அது செய்த துரோகம் என்று ஒவ்வொன்றாக சொல்லி வருகையில் ஜஸ்டிஸ் கட்சியார்
- “தீக்குச்சி வரி போட்டார்கள்.
- வருமான வரி 2000 ரூபாய்க்கு இருந்ததை மாற்றி 1000க்கு வரிபோடும்படி செய்தார்கள்.
- புகையிலைக்கு வரி போட்டார்கள்.
- கந்தாயம் குறைக்கவில்லை.
- தாலூகா போர்டை கலைத்து ஜில்லா போர்டை இரண்டாக்குகிறார்கள்.
- பூமி வரி குறைக்கவில்லை.
- சாமி இல்லை என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு போகிறார்கள்” என்றெல்லாம் எழுதி படித்திருக்கிறார்கள்.
(இது 17836ந் தேதி தினமணி 4 வது பக்கம் 2வது கலத்தில் காணப்படுகிறது.)
மற்றும் பல மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் இதுபோலவே முட்டாள்தனமாக பேசிவருகிறார்கள். இவற்றை பாமர மக்களும் சிலராவது நம்பிவிடுகிறார்கள்.
காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் ஞானம் இல்லை
காங்கிரசுக்காரருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பதற்கும், யோக்கியப் பொறுப்பும் நாணயமும் இல்லை என்பதற்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
தீக்குச்சி வரியும் வருமான வரியும் இந்தியா கவர்மெண்டைச் சேர்ந்தது, அங்கு “மெஜாரிட்டியாய்” இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் ஆதலால் அதற்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சம்மந்தமில்லை. இன்று அவர்கள் அசெம்பளியிலும் இல்லை. ஏதாவது ஒரு காலத்தில் இருந்திருந்தாலும் அவர்கள் மெஜாரிட்டியாய் இருந்ததும் இல்லை.
புகையிலைக்கு வரி போடவே இல்லை. சுங்கத்தை எடுத்ததால் சர்க்காருக்கு ஏற்பட்ட வரி நஷ்டத்தை வஜா செய்ய மக்களுக்கு தேவை யில்லாததும் கெடுதி தரத்தக்கதுமான புகையிலையை ஒழிப்பதற்கு அதை விரும்புகிறவர்களிடம் தண்டம் வசூலிப்பது போல் அதற்கு வரிபோட சென்னை சர்க்கார் சென்ற வருஷம் விரும்பினார்கள்.
அது ஒதுக்கப்பட்ட இலாக்காச் சம்மந்தமானது; ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கு இதன் மீது ஆதிக்கமில்லை; அப்படி இருந்தும் சர்க்காருக்கு தற்காலம் அந்த வரி போட வேண்டிய அவசியமில்லை என்பதை எடுத்துக் காட்டி புகையிலை வரியை நிறுத்திவிட்டார்கள்.
தாலூக்கா போர்ட்டை எடுத்ததற்கும் ஜில்லா போர்டை பிரித்ததற்கும் அதிகாரங்கள் சில குறைத்ததற்கும் ஜஸ்டிஸ் கட்சி மீது குறை கூறுகிறார்.
“தாலூக்கா போர்டு மாத்திரமல்ல, ஜில்லா போர்டு முனிசிபாலிட்டி எல்லாவற்றையுமே எடுத்து அதன் அதிகாரங்கள் பூராவையும் கலக்டர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும்” என்று தோழர் ராஜகோபாலாச்சாரியாரே போன மாதம் சொல்லிவிட்டார். அப்போது வாலை அடக்கிக் கொண்டு இருந்த இந்த ஸ்தல ஸ்தாபன சுயராஜ்யவாதிகள் இப்போது ஜஸ்டிஸ் கட்சியைக் குரைப்பதின் கருத்து என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
பணம் இல்லாததால் தாலூக்கா போர்டுகள் எடுக்கப்பட்டன என்பது யாவருக்கும் தெரியும். அப்போதே ஜில்லா போர்டுகளும் பிரிக்கப்படும் என்று சொல்லியே கலைக்கப்பட்டது. இப்போதும் பண சௌகரியம் பார்த்தே ஜில்லா போர்டுகள் பிரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் தப்பு எங்கே இருக்கிறது என்று கேட்கின்றோம்.
~subhead
ஜஸ்டிஸ் கட்சி பூமி வரி குறைத்தது
~shend
பூமி வரி (கந்தாயம்) குறைக்கவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? 100க்கு 25 வீதம் குறைக்க வேண்டும் என்றே ஜஸ்டிஸ்காரர்கள் ஆசைப் பட்டார்கள். சர்க்காரார் வரவு செலவு சரிக்கட்டாது என்கின்ற காரணத்தால் அடியோடு குறைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கணக்குகள் பார்த்து சர்க்கரை வெகுதூரம் ஒப்பச் செய்து ராஜி முறையில் 12லீ வீதமாவது குறைக்க சர்க்காரை ஒப்புக்கொள்ளும்படி செய்திருக்கிறார்கள். அதுவும் தங்களுக்கு அதிகாரமில்லாத இனத்தில் பிரவேசித்து இவ்வளவு செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ்காரர்கள் இவ்வளவாவது செய்தார்கள். ஆனால் காங்கிரசுக்காரர்கள் அசம்பிளியில் ஒருசிறு தூசி அளவு பயன்படும்படியான வரி குறைப்புக் காரியத்தைச் செய்தார்களா என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களால் எந்த வரி குறைக்கப்பட்டது? எந்த சட்டம் மாறுதலையடைந்தது? என்ன சட்டம் செய்யப்பட்டது? வீணாக அறிவும் அரசியல் ஞானமும் இல்லாமல் குரைப்பதில் பயன் என்ன என்பதை காங்கிரஸ் தலைவர்களும் உணராமல் அவர்களது கூலிகளையும் அடக்காமல், இம்மாதிரி அற்பத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பேசும்படி செய்வதில் என்ன பயன் என்று கேட்கின்றோம். தேசீய பத்திரிகைகள் என்பவை கூட ஒன்று தவறாமல் இவ்வித தொழிலில் முக்கிய பங்கெடுப்பதும் நமக்குப் புரியவில்லை.
இவற்றிற்கு காரணம் எல்லாம் சுயராஜ்யத்துக்கு ஆக செய்வது என்று இருந்தால் இந்த முட்டாள்தனத்தையும், அற்பத்தனத்தையும் மன்னிக்கலாம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு என்று சொன்னால் இவைகள் எப்படி மன்னிக்கப்படும்.
இது பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்பு பேதம் காரணமாக பார்பனர்கள் செய்யும் இழிவான காரியம் என்றே சொல்லுவோம்; முக்காலும் சொல்லுவோம். உதாரணங்களோடு புள்ளிவிவர ஆதாரங்களோடு சொல்லுவோம். அவையாவன :
- அசம்பிளி தேர்தலில் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும் சத்தியமூர்த்தியாரும் ஓட்டுப் பிரசாரம் செய்யும்போது “இந்த தேர்தல்களில் காங்கிரசு ஓட்டுக்கேட்பதானது சர்க்காரோடு சண்டை பிடிக்கவே ஒழிய ஜஸ்டிஸ் கட்சியோடு போட்டி போடுவதற்கு அல்ல” என்று ஓட்டுக்கேட்டு வாங்கிக்கொண்டு வகுப்பு வித்தியாசம் பாராமல் அனேகர் ஓட்டுச் செய்த பிறகு வெற்றிபெற்றவுடன் ஜஸ்டிஸ் கட்சியை 1000 கெஜ ஆழத்தில் வெட்டி புதைக்கவேண்டும் என்றால் இது பார்ப்பனர்பார்ப்பனரல்லாதார் தகராறுக்கு காங்கிரசையும் சர்க்காரை ஒழிப்பது என்பதையும் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்ச்சியா அல்லவா என்று கேட்கின்றோம்.
- வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளுகிற பார்ப்பனர்களையும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஜஸ்டிஸ் கட்சி தீர்மானித்த பிறகும் அதை வகுப்புத் துவேஷக் கட்சி என்று சொல்லுவது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற கருத்தில் சதிசெய்யும் சூழ்ச்சியா அல்லவா என்று கேட்கின்றோம்.
- தமிழ்நாடு காங்கிரசு தலைவர் ஆனைமலை வெள்ளைக்காரரிடம் சுயராஜ்யம் என்பதற்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் என்றும், பூரண சுயராஜ்யம் என்றாலும் வெள்ளைக்காரருடன் ராஜி செய்து கொண்டு நிர்வாகம் நடத்துவது தான் என்றும் ஆனைமலையில் தோட்டக்கார முதலாளிகளிடம் வாக்கு கொடுத்த பிறகும் அதே கொள்கையைக் கொண்டிருக்கிற ஜஸ்டிஸ் கட்சியை தேசத்துரோகக் கட்சியென்றும், பிற்போக்கான கட்சி என்றும் பார்ப்பனர்கள் சொல்லுவதனால் இது காங்கிரசுக்கு ஆகவா, பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆகவா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
- காந்தியார் அராஜகர் என்றும், நாட்டுக்கு கேடு செய்பவர் என்றும் சொல்லும் தோழர் மகாகனம் சீனிவாச சாஸ்திரியையும், அவர் கட்சியாகிய குடியேற்ற நாட்டந்தஸ்து கேட்கும் மிதவாதக் கட்சியையும், டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரியார் ராஜவிஸ்வாச கொள்கையும் ஒத்துழைப்புக் கொள்கையும் கொண்ட மிதவாதக் கட்சியையும் பற்றி ஒன்றும் பேசாமல் அவர்களோடு ராஜி செய்து கொள்ளவும் முயற்சித்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் பிற்போக்குக் கட்சி, ராஜ விஸ்வாசக் கட்சி, சர்க்கார் தாசர் கட்சி என்றால் இதில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்புத் துவேஷம் இல்லாமல் தேசியமோ, தேசாபிமானமோ வேறு ஏதாவதோ இருக்கிறதா என்று கேட்கின்றோம்.
- காங்கிரசுக்காரர்களும் சட்டசபைக்குப் போவதும் அங்கு போய் ராஜ விஸ்வாசம், ராஜபக்தி, சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடத்தல் ஆகியவைகளுக்குப் பிரமாணம் செய்து விட்டுத் தாங்கள் மாத்திரம் தேசிய வீரர்கள் என்றும் ஜஸ்டிஸ்காரர்கள் (அதுபோல் செய்யும் பார்ப்பனரல்லாதார் கட்சியாரை) ராஜ பக்தர்கள் என்றும் பார்ப்பனர்கள் கூறுவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணம் அல்லாமல் மற்றபடி தேசபக்தியாலா, பாரதமாதா புத்திரர் என்ற சகோதர வாஞ்சையாலா என்று கேட்கின்றோம்.
இப்படி ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆதலால் காங்கிரசானது பார்ப்பன ஆதிக்கத்துக்கு இருக்கும் ஸ்தாபனமே ஒழிய தேச நலத்துக்கோ, அரசியல் உரிமைக்கோ இல்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 23.08.1936