காங்கரஸ்காரர் பித்தலாட்டம்

 

ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை

காங்கரஸ் பேரால் அயோக்கியர் யோக்கியராகிவிடமாட்டார்கள்

ஆளின் யோக்கியதையைக் கவனித்து வோட்டுக் கொடுங்கள்

தலைவரவர்களே தோழர்களே!

இன்று தேர்தலும் ஓட்டர்கள் கடமையும் என்பதாக பேச இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்னமேயே அநேக தடவை பேசியிருக்கிறேன்.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் இந்த விஷயத்தைப்பற்றி பேசுவது சகஜமேயாகும். அதுபோலவே சென்னையில் இப்போது கார்ப்பரேஷன் எலக்ஷன் நடக்கப்போவதால் அதைப்பற்றி பேச ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது.

தேர்தல்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை

நான் எப்போதும் அதாவது காங்கிரசில் இருக்கும்போது முதலே தேர்தலைப்பற்றிப் பேசுவதாய் இருந்தால் குறிப்பாக ஸ்தல ஸ்தாபன தேர்தல்களைப் பற்றி பேசுவதாய் இருந்தால் கட்சிகளைப் பற்றிக் கவனிக்க வேண்டாம் என்றும் ஆட்களின் தராதரங்களைக் கண்டு ஓட்டு செய்யுங்கள் என்றும் ஓட்டர்களை கேட்டுக் கொள்ளுவது வழக்கம்.

இம்மாதிரியாக கேட்டுக் கொள்ளும் கூட்டங்களில் கட்சிகளைப்பற்றியும் நான் எப்போதாவது பேசியிருப்பேனேயானால் அது காங்கிரசுக்காரர்கள் கட்சிகளைப் பிரதானப்படுத்தி தங்கள் கட்சியே யோக்கியமான கட்சி என்றும், மற்ற கட்சிகள் குறிப்பாக ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகமான கட்சி யென்றும், கட்டுப்பாடற்ற கட்சியென்றும் கூறி அக்கட்சியிருப்பதாலேயே அக் கட்சியின் பேரால் நிற்பவர்களை இழிவுபடுத்தி பழி சுமத்திக் கூறி மக்களை ஏமாற்றச் செய்துவரும் சூழ்ச்சிக்கும் இழி தன்மைக்கும் பதிலளிக்கும் பொருட்டுத்தான் கட்சிகளைப் பற்றியும் நான் சில சமயங்களில் பேசி யிருப்பேனே ஒழிய வேறில்லை.

இன்று தேர்தல்களில் கட்சி தகராறுக்கும் கட்சித் தொல்லைக்கும் அதிகமாக இடம் ஏற்படுத்தினவர்கள் காங்கிரசுக்காரர்களேயாவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தங்கள் கட்சியின் பேரால் தேர்தல்களுக்கு நிறுத்தவும் கட்சியில் சேர்க்கவும் பெரிதும் யோக்கியமானவர்களும் தகுதியானவர்களும் வேண்டிய அளவு கிடைக்காததாலும், வெகு சாதாரண அதாவது பொது ஜனங்கள் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமில்லாத ஆட்களையே காங்கிரஸ் பேரால் நிறுத்த வேண்டியிருக்கிறதாலும், காங்கிரஸ்காரர்களுக்கு தங்கள் கட்சி பேரால் நிற்கும் ஆட்களின் பெயர்களையும், யோக்கியதைகளையும், நாணயங்களையும், தகுதிகளையும் சொல்லி ஓட்டுக் கேட்க யோக்கியதை இல்லாததால் கட்சி பெயரையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

~subhead

காந்திக்கு ஓட்டுக் கேட்பது

~shend

மற்றும் காந்தியார் பெயரையும் வேறு யார் யாரோ எதற்காகவோ ஜெயிலுக்குப் போனதையும் சொல்லி ஓட்டு வாங்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

நமக்கு அப்படிப்பட்ட அவசியம் இல்லை. பெரிதும் தனிப்பட்ட நபர்களின் பெயர்களைச் சொல்லியே நாம் ஓட்டுக் கேட்கின்றோம். கட்சியின் பேர் சொல்ல வேண்டுமானாலும் நாம் தயாராகவே இருக்கிறோம். மற்ற எந்த கட்சிகளையும்விட நம்கட்சி இளைத்த கட்சி அல்ல என்றே சொல்லுவேன். நமது கொள்கை இன்றைய அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகியவற்றில் காங்கிரசுக்கோ அல்லது மற்ற எந்த கட்சிக்கோ சிறிதும் பின்னடைந்ததல்ல.

ஆதலால் நாம் அவசியமானால் கட்சிப் பேர் சொல்வதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

காங்கிரஸ்காரர்கள் தேர்தல்களில் காந்தியார் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். இது சிறிதுகூட யோக்கியப் பொறுப்பான காரியமாகாது என்றே சொல்லுவேன்.

ஏனெனில் காந்தியார் இன்று காங்கிரசில் ஒரு 4 அணா மெம்பராகக்கூட இல்லை. இந்த விஷயம் காங்கிரசுக்காரருக்கும் தெரியும். காந்தியாருக்கும் ஸ்தல ஸ்தாபன நடவடிக்கைக்கும் நிர்வாகங்களுக்கும் சிறிதும் சம்மந்தமில்லை. ஏனெனில் ஸ்தல ஸ்தாபன மெம்பர்களுக்கு தலைமை வகித்து அவர் ஸ்தல ஸ்தாபன காரியங்களை நடத்தப் போகிறதுமில்லை.

ஸ்தல ஸ்தாபன சம்மந்தமாய் காந்தியாரிடம் எவ்வித கொள்கையுமில்லை. ஆகவே அப்படிப்பட்டவர் பெயரைச் சொல்லி எப்படிப்பட்ட அயோக்கியருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுத்து ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நடத்தப்படுவது என்றால் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொன்னது போல் ஸ்தல ஸ்தாபனங்களை கலைத்துவிட்டு அதன் நிர்வாகத்தை சர்க்கார் வசம் ஒப்புவித்து விடுவதே மேலான காரியமாகும்.

~subhead

சர்க்கார் யோக்கியமாயிருந்தால்

~shend

உண்மையிலேயே சர்க்கார் நியாயமான சர்க்காராய் இருந்தால் இம்மாதிரி பித்தலாட்டம் செய்து ஓட்டர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கின மெம்பர்களை வெற்றி பெற்றதாக ஒப்புக் கொள்ளாமல் அப்படிப்பட்டவர்களின் தேர்தல்களை ரத்து செய்து விடுவதோடு அப்படி ஏமாற்றி ஓட்டு வாங்கியவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தி அவர்களை இனி என்றென்றும் தேர்தலுக்கு நிற்க லாயக்கில்லாதவர்களாக செய்து இருப்பார்கள். அது மாத்திரமல்லாமல் அப்படிப்பட்டவர்க்கு பித்தலாட்டப் பிரசாரம் செய்து ஓட்டு வாங்கிக் கொடுத்த பொலிட்டிகல் டவுட் என்னும் கூலித் தரகர்களிடமும் நல்ல நடவடிக்கைக்கு ஜாமீன் வாங்கி என்றென்றும் மேடை ஏற மார்க்கமில்லாமலும் செய்திருப்பார்கள்.

சர்க்கார் அப்படிக்கு இல்லாமல் இந்த மாதிரி ஆட்களை வைத்தே தங்கள் காரியம் சாதித்துக் கொண்டு போகிறவர்களாய் இருப்பதால் சரியான கவலை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

~subhead

ஜெயிலுக்கு போனதற்கு ஓட்டுக் கேட்பது

~shend

ஜெயிலுக்கு போனதற்காக ஓட்டுப் போட வேண்டுமென்று காங்கிரசுக்காரர்கள் பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். அதுவும் யாரோ எப்பொழுதோ எதற்கோ ஜெயிலுக்கு போனதற்காக வேறு யாருக்கோ எதற்காகவோ ஓட்டு போட வேண்டுமென்கிறார்கள். இதுவும் ஒரு பித்தலாட்டமான காரியமேயாகும். ஜெயிலுக்கு போனவர்களில் பெரும் பான்மையோர்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். வடநாட்டிலும் வெகுபேருக்கு தெரிந்து கஞ்சிக்கு இல்லாதவர்களும் காலிகளுமே பெரிதும் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்கள் என்று வட நாட்டுத் தலைவர்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். இன்றும் கஞ்சிக்கு மார்க்க மில்லாமலும் சோம்பேறியாய் இருந்தும் திரிகின்ற பிள்ளைகளைப் பார்த்தால் “இங்கு ஏண்டா வீணாய் திரிகின்றாய், அநாவசியமாய் பொது ஜனங்களுக்கு ஏன் தொந்திரவு கொடுக்கின்றாய்? காங்கிரசுப் பேரைச் சொல்லி ஜெயிலுக்குப் போய் சௌக்கியமாய் காலம் தாட்டுவது தானே” என்று பொது ஜனங்கள் பலர் சொல்லுவது சகஜமாய் இருக்கிறது.

ஆதலால் ஜெயிலுக்கு போனவர்கள் எல்லோரும் மகா யோக்கியர்கள் என்றோ, தியாகிகள் என்றோ ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்துக்குத் தகுதியானவர்கள் என்றோ அரசியல் ஞானம் உடையவர்கள் என்றோ சொல்லி விட முடியுமா? அல்லது அங்கு அதிகக் கஷ்டப்பட்டார்கள் என்று கருதியாவது அதற்கு கூலியாக கார்ப்பரேஷன், ஜில்லாபோர்டு, சட்டசபை, அசம்பிளி வேலை மெம்பர்கள் கொடுத்து விட முடியுமா? நானும் காங்கிரசில் தலைவனாகவும், காரியதரிசியாகவும், நிர்வாக சபையில் முக்கிய பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறேன். அந்த காலத்தில் ஜெயிலுக்கு போனவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரசு பணத்தில் மாத மாதம் செக்கு கொடுத்திருக்கிறேன். போய்விட்டு வந்தவர்களுக்கும் அந்தச் சலுகையில் சம்பள உத்தியோகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்றும் பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். இதனால் எப்படி அவர்கள் எல்லோரும் பெரிய தியாகி களாகவோ அரசியல் ஞானிகளாகவோ ஆகிவிடுவார்கள்?

அன்றியும் அவர்களை தியாகிகள் என்றே வைத்துக் கொண்டாலும் அந்தப் பெயரைச் சொல்லி கார்ப்பரேஷனுக்கு ஓட்டுக் கேட்பது என்றால் இது ஒரு வியாபாரமா என்று கேட்கின்றேன்.

அதாவது ஜெயிலுக்கு போனதற்கு கூலியா?

~subhead

நிறுத்தப்பட்ட ஆட்களின் யோக்கியதை

~shend

இன்று காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்டிருக்கும் நபர்களின் யோக்கியதைகளைப் பற்றி நானே எல்லாம் தெரிந்ததாக சொல்ல வரவில்லை. ஆனால் காங்கிரஸ் தோழர்களே சொன்னதையும் சொல்லுவதையும் “சுதேசமித்திரன்”, “தினமணி”, “இந்து” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளிலும் காங்கிரஸ் பத்திரிகைகளிலும் வந்திருக்கும் விஷயங்களையே பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிலும் திருப்தி இல்லையானால் குமரி முதல் வேங்கடம் வரை தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் நடந்த ஸ்தல ஸ்தாபன தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாய் வெற்றி பெற்ற ஆட்களில் 100க்கு 75 பேர்களுடைய யோக்கியதைகள் பற்றி காங்கிரஸ் பத்திரிகைகளிலேயே காணும் யோக்கியதையைக் கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த லட்சணத்தில் ஸ்தல ஸ்தாபனத்துக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம் என்று இன்றும் உங்களை கேட்கின்றேன்.

~subhead

காங்கிரஸ் கொடி நாட்டுவது

~shend

“ஸ்தல ஸ்தாபனத் தேர்தலில் வெற்றி பெற்றால் கார்ப்பரேஷன் ரிப்பன் பில்டிங்கில் காங்கிரஸ் கொடி பறக்கவிடுவோம்” என்று சொல்லுகிறார்கள். அக்கட்டடத்தின் மீது எந்த எழவு கொடி பறந்தால் தான் ஓட்டருக்கு என்ன லாபம்? காங்கிரஸ் கொடி பறப்பதினால் யூனியன் ஜாக் கொடி ஒழிந்து விட்டது என்று அர்த்தமா? பிரிட்டிஷார் சட்டமும் அவர்கள் ஆதிக்கமும் ஸ்தல ஸ்தாபனத்தின் மீது இல்லாமல் போய் விடும் என்று அர்த்தமா? கேவலம் ஒரு துணிக்கொடி பறப்பதால் என்ன காரியம் ஆகிவிடும்? இதை பாமர மக்களுக்குள் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்பும் யோக்கியப் பொறுப்பற்ற சூழ்ச்சி என்றுதான் சொல்லுவேன். உண்மையில் காங்கிரஸ் கொடியை பறக்க விடுவதானால் யூனியன் ஜாக் கொடி இந்தியாவில் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் காங்கிரசுக்கொடி பறக்க விடுவேன் என்பது காங்கிரஸ்காரருக்கு அரசியல் ஞானமில்லாததையும் ஏமாற்று வித்தையில் பித்தலாட்டம் பேசுகிறார்கள் என்பதையும் தான் காட்டும்.

வாஸ்தவத்திலேயே காங்கிரசுக்காரருக்கு அரசியல் ஞானமில்லாததாலும் நிர்வாக அனுபோக மில்லாததாலும் இன்று அவர்கள் வெற்றி பெற்ற ஸ்தல ஸ்தாபன மெல்லாம் குச்சுக்காரிகள் வீடுகள் போலவே ஆகிவருகின்றன. எதில் பார்த்தாலும் கள்ளுக்கடை சண்டை போலவே நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இவற்றை காங்கிரஸ் ரிப்போர்ட்களிலிருந்தே பார்க்கலாம். போதாக் குறைக்கு தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் “ஸ்தல ஸ்தாபனங்களை கலைத்துவிட்டுச் சர்க்காரின் நேரடி ஆட்சிக்கு விட்டுவிட வேண்டும்” என்று சொன்னதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் அவர் அதற்கு முன்னதாகவே அந்த அபிப்பிராயம் தான் கொண்டு இருப்பார் என்று கருதுவதானாலும், தோழர் சத்தியமூர்த்தியார் பம்பாயில் பேசியதிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

அதாவது “இந்தியர்களுக்கு நிர்வாகத்திறமை போதாது, கட்டுப்பாடு இல்லை, நாணயமில்லை” என்று சொல்லி இருப்பவைகளிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் இந்தியர்கள் நிர்வாகத்தில் லஞ்ச மயம் என்றும் சொல்லி இருக்கிறார். இவருக்கு இந்த அனுபவ ஞானம் எப்பொழுது எப்படி வந்தது? என்று யோசித்துப் பாருங்கள். இந்த ஒருவருஷ காலமாய் காங்கிரசுக்காரர் கைக்கு சில நிருவாகங்கள் போன பின்பு அவர்கள் நடத்தையில் இருந்து அறிந்து கொண்டதேயாகும். இந்த இருபது வருஷ காலமாக ஏன் இவர்கள் இப்படிச் சொல்லவில்லை? அப்பொழுது அவைகளின் ஆதிக்கம் ஜஸ்டிஸ்காரர்கள் கையில் இருந்ததால் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது.

~subhead

கண்டிறாக்ட் ராஜ்யம்

~shend

ஆனால் ஜஸ்டிஸ் கட்சியாரைப் பற்றி காங்கிரசுக்காரர்கள் சொன்ன குற்றம் எல்லாம் ஸ்தல ஸ்தாபனங்கள் கண்டிறாக்ட் ராஜ்யமாய் இருக்கிறது என்று மாத்திரம் சொல்லி வந்தார்களே ஒழிய அவர்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று சொல்லவில்லை.

இப்பொழுது காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகாவது ஸ்தல ஸ்தாபனங்களில் கண்டிறாக்டர் ராஜ்யம் ஒழிந்து எல்லா வேலைகளும் டிபார்ட்டுமெண்டாராலேயே நடந்து வருகிறதா? என்று கேட்கிறேன்.

இன்றும் காங்கிரசுக்காரர் ஆதிக்கத்தில் உள்ள ஜில்லா போர்டுகள் சிலவற்றில் பிரசிடெண்ட் மெம்பர்கள் ஆகியவர்கள் சொந்தக்காரர்கள், குடும்பக்காரர்கள் பேரால் கண்டிறாக்ட் நடைபெறுகின்றது. அதுவும் எஸ்ட்டுமேட்டுக்கு 100க்கு 15, 20, 30 பர்செண்டு குறைத்துக் கேட்ட கண்டிறாக்ட்டுகளை விட்டு விட்டு தங்கள் குடும்பத்துக்கும் சொந்தக்காரர் களுக்கும் உயர்ந்த தொகைக்கு கேட்டவர்களுக்கும் கண்டிறாக்ட் அனுபவ மில்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சர்க்காருக்கு இது விஷயமாய் புகார்கள் போயும் இருக்கின்றன. புகார்காரர்கள் மீது காங்கிரஸ் பிரசிடெண்டுகள் ஒரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாமல் புகார் கூறியவர்களுக்கும் கொஞ்சம் கண்டிறாக்ட் கொடுத்து சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

~subhead

கார்ப்பரேஷனிலும் காங்கிரஸ் கண்டிறாக்ட் ராஜ்யம்

~shend

அவ்வளவு தூரம் போவானேன்? இச்சென்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கவுன்சிலருக்கு கண்டிறாக்ட் இருக்கிறதா இல்லையா? என்று கேட்கின்றேன். ஆதாரத்தோடு வெளியிட்ட விஷயங்களுக்கு ஒன்றரை லக்ஷம் துண்டு பிரசுரம் மூலம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு தோழர் சத்தியமூர்த்தியார், ராஜகோபாலாச்சாரியார், சாமி வெங்கிடாசலம் செட்டியார் முதல் யாராவது இதுவரை ஏதாவது பதில் சொல்லி இருக்கிறார்களா? தோழர் காந்தியாருக்கும் நகல் அனுப்பப்பட்டது. யாரும் இதுவரை மூச்சுக்கூடக் காட்டவே இல்லை. அதன் பயன் அந்த கண்டிறாக்ட் கவுன்சிலர் மேடையேறுவதற்குத்தான் யோக்கியதை இல்லாமல் செய்ததே தவிர அவர் இன்னமும் காங்கிரசு சார்பாக கார்ப்பரேஷனிலும் அசம்பளியிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அவரை காங்கிரசிலிருந்து நீக்கவில்லை.

காங்கிரஸ் மெம்பர்களே எத்தனை பேர் “யோக்கியர்களுக்கு காங்கிரசில் இடமில்லை” என்று சொல்லிக் கண்டித்தும் வெளியேறியும் இருக்கிறார்கள்? என்பதை “இந்து” “மித்திரன்” பத்திரிகையை பாருங்கள்.

~subhead

புதிய ஆள் பிடிப்பது

~shend

இவைகளை எல்லாம் பார்த்தும் மற்றொரு கட்சியில் இருப்பதால் தங்கள் ஜபம் செல்லவில்லை; தங்கள் காரியம் ஆகவில்லை; தாங்கள் மதிக்கப்படவில்லை என்ற காரணத்தால் அக்கட்சிகளில் இருந்து வெளிவந்த ஆட்களை காங்கிரசில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு பதவிகள் அளிப்பதும், அவர்களை விட்டு நம்மை வையச் சொல்லுவதுமான கேவல செய்கை செய்தால் நாட்டில் எப்படி பொதுநலக் கட்சிகளும் ஸ்தாபனங்களும் யோக்கியதை அடைய முடியும் என்று கேட்கிறேன். இந்தியாவில் நாணயமான அரசியல் கட்சி இல்லை என்று தோழர் சத்தியமூர்த்தியாரே சொல்லுகிறார். காங்கிரசு கூட யோக்கியமான கட்சி அல்ல என்று அவரே ஒப்புக் கொள்ளுகிறார். இப்படி நடந்து கொண்ட காங்கிரசு எப்படி யோக்கியமான கட்சி ஆக முடியும்? பெரிதும் காங்கிரசுக்கு தேர்தல்களில் நிறுத்த புதிய ஆட்களே அதிலும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வெளிவர வேண்டிய வெளியாக்கப்பட்ட ஆட்களே தான் கிடைக்கிறார்கள் என்றால் (50 வருஷத்திய காங்கிரசுக்கு) தகுதி உள்ள ஆட்கள் காங்கிரசில் இல்லை என்றுதானே அருத்தமாகும்.

இப்படிப்பட்டவர்கள் ஏன் பொது ஸ்தாபனங்களுக்கு காங்கிரஸ் பேரால் போட்டி போட வேண்டும்? மற்ற கட்சிகளை ஏன் வைய வேண்டும்? என்று கேட்கிறேன்.

பொது ஜனங்களின் வரிப்பணத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டிய ஸ்தாபனங்களை சுயராஜ்யத்துக்கு நம்மை தகுதியாக்க கொடுத்திருக்கும் பரீட்சை ஸ்தாபனத்தை இம்மாதிரி பொறுப்பில்லாமல் இவ்வளவு பணம் காசு செலவு செய்து போட்டி போட்டு அங்கு போய் உட்கார்ந்து கொண்டு சங்கராச்சாரிக்கு வரவேற்பு அளிக்கலாமா? கவர்னருக்கு வரவேற்பு நிராகரிக்கலாமா என்கின்ற அற்ப விஷயங்களுக்காகச் சண்டை போடுவதில் நேரத்தை பாழாக்கி இதையே வெற்றி தோல்விக்கு அளவு கருவியாக்குவது என்றால் பொதுக் காரியம் எவ்வளவு தூரம் சின்னப் பிள்ளைகள் காரியமாக நடைபெறுகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஒரு மாகாண கவர்னருக்கு அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு ஸ்தாபனத்தில் வரவேற்பு அதுவும் மரியாதை சம்பிரதாயத்துக்கு நடந்து வரும் வரவேற்புக் கூட செய்வதில்லை என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் காலடியில் போய் “மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவே” என்று சொல்லுவதும் மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் என்று அதே ஸ்தாபன ரிக்கார்டுகளில் எழுதுவதும் என்றால் இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்பதையும் எவ்வளவு அறிவற்றவர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

இந்த அற்பத்தனமான காரியங்களுக்கு கவர்னர் தக்க பதிலளிக்கக் கருதினால் அது இந்த ஆட்களை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் அது பொது ஜனங்களை வரி கொடுக்கும் ஏழைகளை பாதிக்கக்கூடும். அதனால்தான் காங்கிரசுக்காரர்கள் பொறுப்பற்றவர்கள் என்று நான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்கள் பேச்சைக் கேட்ட வெள்ளைக்காரர்கள் கவர்னரை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்களாம்.

அன்றைய கூட்டத்தில் இருந்த வெள்ளைக்காரர்களும் மற்ற வெள்ளைக்காரர்களால் கண்டிக்கப்பட்டார்களாம்.

ஆனால் காங்கிரசுக்காரர்களுக்கு சாதாரண மரியாதை புத்திகூட வரவில்லை. அதற்கு ஆக இவர்களை எந்த தலைவர்களும் கண்டிக்கவுமில்லை.

இதே போல காங்கிரஸ்காரர்களில் ஒரு அம்மாள் கவர்னர் சபைக்கு வந்த போது மற்றவர்கள் மற்ற காங்கிரஸ்காரர்கள் செய்த மரியாதை கூட செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தார்களாம். இதே மாதிரி அசெம்பிளியிலும் அகௌரவமான பலகாரியம் செய்தார்களாம். செய்து விட்டு பொய் சமாதானங்களைச் சொல்லி தப்பித்துக் கொள்ளவும் பார்க்கிறார்கள். இதனால் காங்கிரசுக்காரருக்கு யோக்கியமில்லை என்று விளங்கு வதோடு ஆண்மையும் இல்லை என்பதும் விளங்கவில்லையா? என்று கேட்கின்றேன்.

நேற்றுக்கூட இந்திய சட்டசபையில் கவர்னர் ஜனரல் பிரபுவின் ஒரு உத்திரவு வாசிக்கப்படும் போது காங்கிரசுக்காரர்கள் பூனை போல் கத்தினார்களாம். இவை எல்லாம் பெரிதும் அசோசியேட் பிரஸ் செய்திகளே தவிர எனது கற்பனை அல்ல. ஆகவே எவ்வளவு அற்ப புத்தி படைத்தவர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். நான் வெள்ளைக்காரரையோ சர்க்காரையோ கும்பிடும்படி சொல்லவில்லை. மனுஷத் தன்மையும் மரியாதையும் ஒழுங்கும் வேண்டாமா என்றுதான் கேட்கின்றேன்.

~subhead

காங்கிரசின் சிக்கனம்

~shend

மற்றும் காங்கிரசுக்காரர் மிகவும் மிகவும் சிக்கனக்காரர்களாம்.

ஜஸ்டிஸ்காரர்கள் மிக்க ஊதாரிகள் என்றும் காங்கிரசுகாரர்கள் சிக்கனக்காரர்கள் என்றும் மேடையில் பேசுகிறார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் பாருங்கள். நேற்று தோழர் சத்தியமூர்த்தியார் சிம்லாவில் ஒலிபரப்பும் கருவி மூலம் பேசிய பேச்சில் மாகாண கவுன்சிலர்களுக்கு ஆளுக்கு 1 க்கு 300 ரூபாயும் 200 போல் படிச்செலவும் கொடுக்க வேண்டும் என்றும் இந்திய சட்டசபை (அசம்பளி) மெம்பருக்கு 500 ரூ சம்பளமும் முன்னூறு ரூபாய் செலவும் கொடுக்க வேண்டும் என்றும் அதாவது வருஷ மெல்லாம் பெண்ஜாதியுடன் முதல்வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்யும்படியும், படி வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த யோக்கியர்கள்தான் மந்திரியானால் 500 ரூ சம்பளத்துக்கு மேல் வாங்க மாட்டார்களாம். இதை யோசித்துப் பாருங்கள். தோழர் சி.ஆர்.ரெட்டியார் அவர்கள் காங்கிரசுக்காரர் என்ற ஹோதாவில் பெற்ற யூனிவர்சிட்டி வைஸ் சான்ஸ்லர் வேலைக்கு இன்றும் மாதம் 2000 ரூ சம்பளமும் 500 போல் படியும் பெற்று வருகிறார். அவரும் இதுவரை காங்கிரசில் ராஜிநாமாக் கொடுக்கவில்லை. காங்கிரசுக்காரர்களும் அவரை நீக்கவில்லை. இவ்வளவோடு மாத்திரமா? இதற்கு அவரிடத்தில் அதாவது இந்த மாதிரி காங்கிரசுக் கொள்கைக்கு விரோதமான காரியம் செய்ய அவரை அனுமதித்து அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொள்கிறார்களாம்.

தோழர் சத்தியமூர்த்தியார் சொல்லுகிறபடி நடப்பதானால் நமது மாகாணத்திற்கு ஏற்பட்ட 250 மாகாண சட்டசபை மெம்பர்களும் ஆள் ஒன்றுக்கு 300 ரூ சம்பளமும் 200 ரூ படியும் என்றால் 1 க்கு 125000 ரூபாயாகிறது. வருஷம் 15 லக்ஷம் ரூ. ஆகவில்லையா என்று கேட்கின்றேன்.

அதுபோலவே இந்திய சட்டசபை மெம்பர்களுக்கும் ஆள் 1க்கு 500 ரூ. சம்பளமும் 300 ரூ. படியும் என்றால் சுமார் 350 மெம்பர்களுக்கு சுமார் 300000 ரூபாய் வீதம் வருஷம் 35 லட்சம் ஆகவில்லையா என்று கேட்கின்றேன். இது பொது ஜனங்கள் பணம் பாழாகின்ற ஊதாரி முறையா அல்லது சிக்கன முறையா என்று யோசித்துப் பாருங்கள். இந்தப்படி கொள்ளை அடிப்பவர்கள் தான் காங்கிரசு அகராதிப்படி தேச பக்தர்களும் தியாகிகளும் ஆவார்கள் என்று அர்த்தம் சொல்லப்படுகிறது.

ஜஸ்டிஸ்காரர்கள் இந்தப்படியெல்லாம் இதுவரை செய்யவே இல்லை. அவர்கள் நிர்வாகத்தில் இம்மாதிரியான ஆபாசமும் கொள்ளையும் அக்கிரமமும் இல்லவே இல்லை.

~subhead

ஓட்டுகளுக்காகப் பேசவில்லை

~shend

உங்களுடைய ஓட்டுகளுக்காக நான் இவற்றை எடுத்துச் சொல்ல இங்கு வரவில்லை. ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி காங்கிரசார் குறை கூறுவதற்கும் அக்கட்சித்தலைவர்களை இழித்துக் கூறுவதற்கும் சமாதானம் சொல்லுவதற்கு ஆகவே இவற்றை எடுத்துச் சொல்லுகிறேன்.

காங்கிரஸ்காரர்கள் நான் போய் பேசிவிட்டு வந்த ஊர்களுக்குப் போய் ஜஸ்டிஸ்கட்சியாரைப் பற்றியும் என்னைப் பற்றியும் பேசியவற்றை நான் கேள்விப்பட்டேன். நான் சொன்னவற்றில் எதையும் மறுக்க அவர்களுக்கு யோக்கியதையில்லாமல் இழிதன்மையாய் பொய்யும் பழியும் சுமத்தி பேசி இழித்துக் கூறியிருக்கிறார்கள். அவற்றை காங்கிரஸ் தலைவர்கள் கண்டிப்பதே யில்லை.

அநேக அற்பர்கள் ஈனப்பிறவிகள் நான் காங்கிரசில் பணம் எடுத்துக் கொண்டதாக பேசியிருக்கிறார்கள். இந்த மாதிரியான அயோக்கியர்களை வைத்து கட்சிப் பிரசாரம் நடத்தினால் அக்கூட்டத்துக்கும் அக்கட்சிக்கும் அக்கட்சி தலைவர்களுக்கும் எப்படி மரியாதை ஏற்பட முடியும்? கூட்டத்தை கலைக்க பார்க்கிறார்கள், நம்ம கூட்டங்களில் வந்து அயோக்கியத்தனமாய் காந்திக்கு ஜே போடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா?

வெள்ளைக்காரர்கள் இடம் சில பார்ப்பனர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சென்று நாம் அவர்களை கூட்டங்களில் வைவதாக கண்ணீர் வடித்தார்களாம். இது மாய அழுகை என்றே சொல்லுவேன்.

இவர்கள் நம்மை தேசத்துரோகிகள், வெள்ளையர்கள் தாசர்கள், தேசத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொன்னால் நாம் இவர்களை சமூகத்துரோகிகள், மனித சமூக விரோதிகள், வெள்ளையர்கள் சந்ததிகள், தேசத்தை கூட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்லி இனி அவர்கள் அப்படிச் செய்யாமல் ஏன் தடுக்கக்கூடாது என்று கேட்கின்றேன். அவர்கள் நம் சமூகத்தை, நம் கொள்கைகளை, நம் நாணயத்தை, நம் சுயமரியாதையை எல்லாவற்றையுமே வைகிறார்கள். கூலிகளுக்குக் காசு கொடுத்து வையச் சொல்லுகிறார்கள். அப்படி இருக்கும் போது அதை எப்படி நிறுத்துவது என்று கேட்கின்றேன்.

ஆதலால் காங்கிரசுகாரர்கள் ரோஷமுடையவர்களானால் மற்றவர்கள் ரோஷத்துக்கு பங்கம் வரும்படி எந்தக் கூலியும் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது இல்லாமல் கூலிகளுக்குக் கூலி கொடுத்து வையச் சொல்லிவிட்டு நாம் சமாதானம் சொன்னால் வெள்ளையர்களிடம் போய் வைகிறானே, வைகிறானே என்று அழுவதில் என்ன நாணயம் என்று கேட்கிறேன்.

~subhead

ஒரு சீட்டு தொழிலாளர் பிரச்னை

~shend

கடசியாக ஒரு தோழர் தலைவர் மூலம் ஒரு சீட்டு அனுப்பி இருக்கிறார். அதில் பெயர் ஒன்றும் இல்லை. ஆன போதிலும் அச்சீட்டில் கண்ட விஷயங்களுக்கு பதில் சொல்லுகிறேன்.

“ஜஸ்டிஸ் கட்சி இதுவரை தொழிலாளிகளுக்கு செய்தது என்ன? இனிச் செய்யப்போவது என்ன?” என்று அச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

~subhead

தொழிலாளர் யார்?

~shend

நமது நாட்டில் தொழிலாளர்கள் நன்மை என்றால் என்ன? தொழிலாளர்கள் என்றால் யார்? என்பது மிகவும் சிக்கலான பிரச்சினையாகும். இப்போது இங்கு யந்திர சாலைகளில் வேலை செய்பவர்கள் தான் தொழிலாளர்கள் என்ற உரிமையைப் பாராட்டிக் கொள்ளுகிறார்கள்.

அவர்களுடைய சம்பள உயர்வு, வேலை நேரம் கம்மி ஆகியவற்றையே தொழிலாளர் நன்மை என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட சபையிலோ, ஸ்தல ஸ்தாபனங்களிலோ சில ஸ்தானங்கள் கொடுத்து விட்டால் தொழிலாளர்கள் உரிமை நிறைவேறிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே விடுதலை அளித்துவிடாது. இன்னும் அனேக காரியம் ஆக வேண்டியிருக்கிறது.

யந்திர சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்தியா பூராகிலும் உள்ள உண்மையான தொழிலாளர்களில் வீசம் பங்கு கூட ஆகமாட்டார்கள் என்பது எனது அபிப்பிராயம்.

இந்தியாவில் உண்மையான தொழிலாளர்கள் என்பவர்கள் மண் வெட்டியிலும் கலப்பையிலும் வேலை செய்யும் விவசாயக் கூலிகளும், மூட்டை முடிச்சு சுமப்பவர்களும், வண்டி இழுப்பவர்களும், கட்டடம் கட்டும் வேலைக்காரர்களும், மற்றும் வெளுத்தல், சிரைத்தல், கூடை முறம் பின்னல், சட்டி பானை செய்தல், மரம் இரும்பு வேலை செய்பவர்கள் போன்ற சரீர வேலைக் கூலிக்காரர்கள் முக்கிய தொழிலாளிகள் ஆவார்கள்.

என்றாலும் அதைவிட முக்கிய தொழிலாளிகள் யார் என்றால் ஜாதியினால் பிறவியில் மற்ற மக்களுக்கு அடிமை வேலை செய்பவர் என்று பிரித்து ஒதுக்கி, தாழ்த்தியும், இழிவு படுத்தியும் வைத்திருக்கும் தீண்டப்படாத மக்கள் என்பவர்களே இன்று உண்மையான தொழிலாளிகளாவார்கள். அதற்கடுத்தாற் போல் அடிமை என்றும் சூத்திரன் என்றும் கூறப்படும் பார்ப்பனரல்லாத சமூகமே தொழிலாளி வர்க்கமாக கருதப்பட்டு வருகிறது.

இந்த இரு சமூகத்தின் மேன்மையும் முன்னேற்றமும் தான் முதலாவதான தொழிலாளர் நன்மையான காரியமாகும். பிறகு நான் முதலில் கூறின விவசாயக் கூலி முதலிய சமுதாய மக்கள் வாழ்வுக்கு ஆக வேலை செய்யும் மற்ற கூட்டம் தான் இரண்டாவது தொழிலாளர்கள் கூட்டமாகும். அப்புறம் மூன்றாவது தான் யந்திர சாலைகளில் கூலியையும் நேரத்தையும் ஒப்பந்தம் பேசிக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளிகள் ஆகும்.

இன்று இந்த தொழிலாளிகளின் நிலைமை முன் கூறப்பட்ட முதலாவது இரண்டாவதான தொழிலாளிகளின் 100க்கு 90 பேர்கள் நிலையைவிட மேலான நிலையேயாகும்.

இன்று அவர்களைப்பற்றி நினைப்பதற்கு ஜஸ்டிஸ் கட்சியை விட இந்தியாவிலேயே வேறு கட்சி இல்லை என்றே சொல்லலாம்.

~subhead

தொழிலாளர் விடுதலையே “ஜஸ்டிஸ்” கட்சி லக்ஷ்யம்

~shend

ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பமே பிறவியில் தொழிலாளியாகவும் இழி மக்களாகவும் கருதப்பட்டு தாழ்த்தி அழுத்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்காக ஏற்படுத்தப்பட்டதே ஆகும். அந்த துறையில் அக்கட்சி இந்தியாவில் யாரும் செய்திராத அரும்பெரும் காரியத்தை செய்து இருக்கிறது.

இயந்திர சாலைத் தொழிலாளிக்கு ஆக செய்யப்படும் காரியத்தால் பொதுத் தொழிலாளர்களான 100க்கு 90 தொழிலாளிகளின் குறைகள் நீக்கப்பட்டுவிடமாட்டாது.

யந்திர சாலைத் தொழிலாளிகளின் நலம் என்பது அரசியல் காரியம் போல் தந்திரமானதாகத்தான் இருக்கிறது. இவர்கள் பெயரைச் சொல்லி இரண்டொரு ஆள் சட்டசபைக்குப் போகலாம்; இரண்டொரு ஆள் சோம்பேறியாய் வயிறு வளர்க்கலாம்; அல்லது 2 அணா 1 அணா கூலி உயர்த்தலாம்; கால்மணி அரைமணி நேரம் குறைக்கலாம். இதனால் சரீரத்தால் சதா பாடுபடும் நேரமும் கூலியும் நிஷ்கரிசையில்லாத மிருகங்கள் போன்ற உயிர்ப்பிணங்களுக்கு என்ன மார்க்கம் என்று கேட்கின்றேன்.

தொழிலாளிக்காக வேலை செய்பவன் முதலில் பிறவித் தொழிலாளிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மனப்பான்மையில் இருக்கும் நாம் கீழானவர்கள் தொழில் செய்ய பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பது மாற்றப்பட வேண்டும். அதில்லாமல் தொழிலாளிகள் நன்மையை பேசுவது முதலாளிகளின் கூலித் தன்மையேயாகும்.

பொது உடமை கொள்கையின் கீழும் முதல் முதல் சரீர பிரயாசைத் தொழிலாளிகள் நன்மைதான் கவனிக்கப்படும். அதற்கு உதாரணமும் சோவியத் தேசத்தின் தேசியக் கொடி உருவம், கப்பரக் கத்தியும் சம்மட்டியுமாகும். ஆதலால் அப்படிப்பட்ட மக்களாகிய பார்ப்பனரல்லாதார் சமூகத்தைப் பற்றியும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தைப் பற்றியும் ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ நன்மை செய்து வருகிறார்கள். அதற்கு ஆகவே அந்த கட்சியும் இருந்து வருகிறது. மற்ற தொழிலாளிகளுக்கும் அதாவது யந்திர சாலைத் தொழிலாளிகளுக்கும் காங்கிரஸ்காரர்கள் அதாவது தோழர் சத்தியமூர்த்தியாரும் சாமி வெங்கிடாசல செட்டியாரும் செய்து வரும் நன்மையை விட எத்தனையோ மடங்கு அதிகமாகவே செய்து வருகிறார்கள்.

ஆதலால் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவியாய் இருந்து பலம் சேர்த்துக் கொடுப்பார்களானால் இன்னும் அதிகமான காரியம் செய்வார்கள்.

குறிப்பு: 08.09.1936 ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் “தேர்தலும் ஓட்டர்கள் கடமையும்” என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு சொற்பொழிவு 13.09.1936

You may also like...