மறுபடியும் வெளியேறும் நாடகம்
இனிப் பலிக்காது!
காங்கரஸ்காரர்கள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காக புது எலக்ஷன் வரும்போதெல்லாம் அதாவது சட்டசபை காலம் காலாவதி ஆகும் போதெல்லாம் தாங்கள் சட்டசபை ஸ்தானத்தை லட்சியம் செய்யாதவர்கள் என்று காட்டிக்கொள்ளுவதற்காக சட்ட சபையைவிட்டு வெளியேறிவிட்டதாக வேஷம் போட்டு நாடகம் நடிப்பது வழக்கம். இந்த நாடகத்தை தோழர்கள் பெரிய மோதிலால் நேரு முதல் அநேகர் நடித்துப் பார்த்தாய் விட்டது? அப்படி இருந்தும் இப்போது வேறு வழியில் அதே நாடகத்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதனாலெல்லாம் பொதுமக்கள் இனி ஏமாந்துவிடமாட்டார்கள்.
இனி காங்கரசுக்காரர் பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கப்போனால் இதுவரை நீங்கள் சட்டசபையில் சாதித்ததென்ன என்றும், எந்த தடவையாவது, எதிலாவது நீங்கள் வாக்கு கொடுத்தபடி நாணயமாய் நடந்தீர்களா என்றும் கேட்டு முகத்தில் கரியைத் தடவி அனுப்பப் போகிறார்கள் என்பது உறுதி.
குடி அரசு கட்டுரை 06.09.1936