பிரஜா பிரதிநிதித்துவ சபை கூட்டுவதின் கருத்து
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
~cmatter
காங்கிரசுக்காரர்கள் பொதுஜனப் பிரதிகள் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்று சர்க்காரை கேட்டுக் கொள்ளுவதாக ஒரு தீர்மானம் இந்தியா சட்டசபைக்கு கொண்டு வரப்போவதாக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்களாம்.
அந்த தீர்மானத்தின் வாசகம் எப்படிப்பட்டது என்றால், சீர்திருத்தத்தில் உண்மையான அதிகாரம் இல்லையென்றும், வகுப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் ஆதலால் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அரசியலில் வகுப்புகளைக் காப்பாற்றிக் கொடுப்பதாக பல வகுப்பு மக்களுக்கும் உத்தரவாத மேற்றுக் கொண்ட காங்கிரசானது அரசியலில் வகுப்புத் திட்டம் கூடாது என்று சொன்னால் அதில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். இன்றைய காங்கிரசின் கிளர்ச்சியெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருடைய ஆதிக்கம் அரசியலிலும் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற பார்ப்பனீயக் கிளர்ச்சியே ஒழிய யோக்கியமான அரசியல் கிளர்ச்சி அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
ஆதலால் இப்படிப்பட்ட பொதுஜனங்கள் பிரதிநிதித்துவக் கூட்டம் ஒன்று கூட்டப்படுவதானால் இந்தியாவில் உள்ள சகல வகுப்பாருக்கும் சகல கட்சி ஸ்தாபனங்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் அதுவும் ஜனத்தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் கொடுத்துத் தான் கூட்டவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக அப்படிப்பட்ட சபை ஒன்று கூட்ட ஏற்பாடு செய்யும் முன் காங்கிரசுக்காரர்கள் அபிப்பிராயம் தான் மற்ற சபை யாருடையவும் வகுப்பாருடையவும் அபிப்பிராயமா என்றும் கேட்டுவிட்டே கூட்ட வேண்டும் என்று சர்க்காருக்கு எச்சரிக்கை செய்வதோடு, இந்த மாதிரியான சூழ்ச்சித் தந்திரத்தால் எல்லாம் இந்தியாவில் சமுதாயத்திலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியல் சுதந்திரத்திலும் பிற்படுத்தப் பட்டிருக்கிற மக்களின் கண்களில் மிளகு பொடி போட்டு வாயில் மண்ணைப்போட்டு விட முடியாது என்று காங்கிரசுக்காரருக்கும் எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 13.09.1936