சிவில் ஜெயில் இல்லை
கடன் பட்டவர்களுக்கு ஜெயில் வாசம் விதிக்க இருக்கும் சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று நாம் வெகு காலமாக எழுதி வந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
அதற்காக என்றே சிலர் சிவில் ஜெயிலுக்கு போனதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
இப்போதுதான் அந்த கிளர்ச்சிக்கு வெற்றி ஏற்பட்டது. அதாவது சென்ற வாரத்தில் இந்திய சட்டசபையில் கடன்காரர்களை ஜெயிலுக்கு பிடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் செய்யப்பட்டு விட்டது.
ஆனால் அதில் பணம் வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டேன் என்றால் அப்படிப்பட்டவனுக்கு இந்த சட்டம் பயன்படாது என்று ஒரு நிபந்தனை கண்டிருக்கிறது.
அப்படிப்பட்டவர்கள் கடன்காரர்கள் என்பவர்களில் 100 க்கு 10 பேர்கள்தான் இருக்கக்கூடும். அந்த 100 க்கு 10 பேர்களிலும் ஒருவர் இருவர்தான் பணம் வைத்துக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆதலால் அந்த நிபந்தனையில் அந்த சட்டம் பாதிக்கப்பட்டு விட மாட்டாது என்பது நமதபிப்பிராயமாகும்.
இந்த சட்டம் தப்பாக கையாளப்பட்டாலும் கூட பிரமாத குற்றமில்லை என்று கருதுகிறோம். ஏனெனில் வட்டிக்கு ஆசைப்பட்டு கண்டபடி கடன் கொடுத்து மக்களின் நாணயத்தையும் தகுதியையும் பாழாக்கும் லேவாதேவிக் காரர்களின் அட்டூழியம் ஒரு அளவுக்காவது ஒழியும் என்றே கருதி மகிழ்ச்சி அடைகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 18.10.1936