காங்கரஸ் அனுபவம் தொட்டது துலங்காது
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களை ஏற்று நடத்திய காலத்தில் அவைகளின் நிர்வாகங்கள் ஒழுங்காகவும் குழப்ப மில்லாமலும் இருந்தமையால் அப்போது அவைகள் கலைக்கப்பட வேண்டும் என்று ஒருவரும் கூறியது கிடையாது. அப்படிச் சொல்வதற்கு அவசியமும் ஏற்பட இல்லை.
காங்கிரஸ்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களைக் கைப்பற்றி நடத்திய சில காலத்துக்குள்ளாகவே அவர்கள் நிருவாகம் ஒழுங்காகச் செய்ய முடியாமையால் ஜில்லா போர்டுகளைக் கலைத்து விடவேண்டும் என்று தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியும், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் காங்கரஸ் சார்பாகவே சொல்ல முன்வந்து விட்டார்கள். ஆகவே, இதிலிருந்து காங்கரஸ்காரர்களின் நிர்வாகத் திறமையைப் பொது மக்கள் நன்குணர்ந்து கொள்வார்கள். காங்கரஸ்காரர்கள் எந்தப் பதவியைக் கைப்பற்றினாலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறாதென்பதற்கும், அவர்களுக்கு ஒழுங்காக நிர்வகிக்கத் திறமையில்லை யென்பதற்கும், காரணம் அவர்களுக்குள் கட்டுப்பாடு இல்லாததுதான் என்பதற்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
குடி அரசு கட்டுரை 06.09.1936