சுதேச சமஸ்தானமும் வகுப்புவாதமும்

வகுப்பு வாதமும் காங்கிரசும் என்பது பற்றிச் சென்ற வாரம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தோம். அதன் முக்கிய கருத்தெல்லாம் பல மதம், பல ஜாதி, பல வகுப்பு என்பதாக பிரிவினையுள்ள மக்கள் அடங்கிய நாடு எந்த நாடாய் இருந்தாலும் அங்கெல்லாம் வகுப்புணர்ச்சிகளும், வகுப்பு வாதங்களும் இல்லாமல் இருக்காது என்பதும் வகுப்புணர்ச்சியை மதித்து ஏதாவது ஒரு வழியில் அதை சமாதானப்படுத்தி அடக்க முடியாமல் அதோடு போர் தொடுக்கும் வரையிலும் எரிகிற நெருப்பை பெட்றோல் எண்ணெய் ஊற்றி அவிக்கக் கருதும் மூடன் செய்கை போல் வகுப்பு வாதம் வளர்ந்து கொண்டே தான் வரும் என்பதுமேயாகும்.

அதோடு கூடவே வகுப்பு வாதம் இந்தியாவில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னதாகவே வேறு பல பெயர்களால் இந்திய மக்களுக்குள்ளாகவே இருந்து வந்திருக்கிறது என்றும் அதன் காரணமாகவே மக்கள் சமூகத்துக்கு அடிக்கடி தொல்லையும், துன்பமும் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

~subhead

வகுப்புவாதம் புதியதல்ல

~shend

இப்பொழுதும் இன்னும் சற்று விளக்கமாய் தெரியவேண்டுமானால் வேதகாலம் என்பதில் ஏற்பட்டிருந்த கருப்பர்கள், வெள்ளையர்கள் சண்டையும், சாஸ்திரங்களில் இருந்து வந்த பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கின்றதாகிய வருணாச்சிரம தர்மமும், புராண காலங்களில் இருந்து வந்த தேவ அசுர யுத்தங்களும், தேவர்கள் ராக்ஷதர்கள் யுத்தங்களும், சரித்திர காலத்தில் இருந்து வந்த ஆரியர் திராவிடர் சண்டைகளும், முஸ்லீம்கள் படையெடுப்பும் முதலிய காரியங்கள் போதுமான ஆதாரம் என்றே சொல்லுவோம்.

இவைகள் மாத்திரமல்லாமல் சுமார் இந்தியாவின் 1000வருஷ ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் அரசியல் காரணம் அல்லாமல் வகுப்பு காரணமாகவே அரசியல் ஏற்பட்டும் நடைபெற்றும் வந்திருப்பதும் விளங்கும்.

ஒரு காலத்திலாவது வகுப்பு காரணமில்லாமல் கொள்கை காரணமாக கிளர்ச்சிகள் நடந்ததாகச் சொல்லுவதற்கு உண்மைச் சரித்திர ஆதாரம் எதுவுமே காண முடியாமல் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்தியாவுக்கு இன்று மாத்திரம் ஒரு கூட்டத்தார் அதுவும் தாங்கள் அரசியலிலும் சமூக இயலிலும், பொருளாதார இயலிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்றோம் என்ற காரணத்துக்காகவும், மற்றவர்களும் அந்த ஸ்தானத்துக்குப் போட்டி போட ஆரம்பித்து விட்டார்களே என்பதற்கு ஆகவும், அறிவும் உணர்ச்சியும் பெற்ற மற்றக் கூட்டத்தாரை அழுத்தவும் தலை எடுக்கவொட்டாமல் தடுக்கவும் கருதி, முன்னேற்றமடைய வேண்டும் என்று கருதுபவர்களையெல்லாம் வகுப்பு வாதம் வகுப்புவாதம், தேசத்துரோகம் தேசத்துரோகம் என்று குறைகூறுவதால் அடக்கி விடவோ தடுத்து விடவோ கூடுமா என்று கேட்கின்றோம்.

“50 வருஷ காலமாய் இந்திய மக்களுக்கு காங்கிரசானது தேசிய ஞானம் போதித்து வந்தும்” இன்று “இந்த 50 வருஷ காலமாய் இல்லாத வகுப்பு வாதம் தலைவிரித்து ஆடுகிறது” என்றால் அது மக்களுக்கு தேசிய ஞானம் இல்லாத குறையா, அல்லது தவிர்க்க முடியாததும் தடுக்க முடியாததுமான வகுப்புவாதத்தின் இயற்கை வலிமையா என்று கேட்கின்றோம்.

முந்திய கட்டுரையில் “சர்க்காருடைய தூண்டுதல்” அல்லாமலேயே 1916ம் வருஷத்தில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி மூலம் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதித்து அரசாங்கத்தினிடம் ஒப்புக்கொண்டது என்கின்ற விஷயத்தை எடுத்துக்காட்டி இருக்கிறோம்.

~subhead

காந்தி ஆதரித்த வகுப்பு வாதம்

~shend

அப்படி 1916ம் வருஷம் ஒப்புக்கொண்ட காங்கிரஸ் இன்று அதே முஸ்லீம்களுக்கு அதே சர்க்காரால் கொடுக்கப்பட்ட வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி குறை கூறுவதும் சர்க்கார் மக்களைப் பிரித்தாள வேண்டி இம்மாதிரி வகுப்புத் தீர்ப்பு கொடுத்தார்கள் என்று குறைகூறுவதும் முரணான சங்கதியா அல்லவா என்று கேட்பதோடு காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் “சரித்திர சம்மந்தமான காரணங்களைக் கொண்டு முஸ்லீம்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியதுதான்” என்று ஒப்புக் கொள்வதும் இப்பொழுது காங்கிரஸ் வகுப்பு தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுவ தில்லை என்று சொல்லுவதும் இந்த மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களும் ராஜி பேசி வகுப்புவாரி உரிமை ஏற்படுத்திக் கொடுப்பதும், முஸ்லீம் வகுப்பு தீர்ப்பை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை, ஆனாலும் அதற்கு எதிர் பிரசாரம் செய்யக்கூடாது என்று காங்கிரஸ் வேலைத்திட்டத்தில் காட்டிக் கொள்வதும், வகுப்புத் தீர்ப்புக் குறையைப் பற்றி அந்நிய அரசாங்கத்துக்கு விண்ணப்பம் போடுவது இழிவு என்றும் சுயராஜ்யம் வந்தால் வகுப்புத் தீர்ப்பு தானே ஒழிந்து விடும் என்றும் காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் சொல்லுவதும், முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை மாற்ற முடியுமா என்று அரசாங்கத்தாரைக் கேட்டால் அதற்கு இரு சமூகத்தாரும் ராஜியாகி ஒரு முடிவுக்கு வந்தால் அந்தக் காலத்தில் தான் அதை மாற்ற முடியுமே தவிர மற்றபடி எந்தக் காரணத்தாலும் மாற்ற முடியாது என்று அரசாங்கத்தார் பதில் சொல்லுவதும், புதிய சீர்திருத்தம் வகுப்புத் தீர்ப்பை அடிப்படையாய்க் கொண்டிருப்பதால் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இந்திய சட்டசபையில் தோழர் ஆனே தீர்மானம் கொண்டு வருவதும் இப்படியாக பல திருவிளையாடல்கள் வகுப்பு வாதத்தால் தினமும் நடந்தவண்ணமாயிருக்கின்றன.

அப்படி இருக்கும் போது சரித்திர காரணமாகவும் மதம், சாஸ்திரம் காரணமாகவும் வகுப்புக்கு வகுப்பு கீழ் மேல் என்றும், தீண்டவும், உண்ணவும், கொள்ளவும், கொடுக்கவும், அதீதப்பட்டது என்றும் சொல்லும்படியானதுமான வகுப்புகளுக்கு ஏன் வகுப்புரிமைகள் வழங்கக்கூடாது என்று தான் கேட்கின்றோம்.

அரசியல் சம்மந்தமான காங்கிரஸ் கிளர்ச்சிகளைப் பொறுத்த வரை வகுப்புரிமை கேட்கும் வகுப்பார்களுக்கு அதன் திட்டங்களில் ஏதாவது அபிப்பிராய பேதம் இருக்கலாமே ஒழிய அடிப்படையான கொள்கைகளில் காங்கிரசோடு மற்ற வகுப்புகளுக்கு எவ்வித பெரிய வித்தியாசமும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை.

~subhead

வகுப்புவாதிகள் லக்ஷ்யம்

~shend

வெள்ளைக்காரர்களுடைய ஆதிக்கமே இந்தியாவில் இருக்கிறதைப் பற்றியோ, நாளைய தினமே போய் விடுவதைப்பற்றியோ வகுப்புரிமை கேட்கும் மக்களுக்கு அதிக விசாரமில்லை. அவர்கள் இருந்தாலும் போவதானாலும் நாம் பல வகுப்பாரும் இந்தியாவில் எப்படி வாழ்வது என்பதில்தான் முக்கியமாகக் கவலைப்பட வேண்டி இருக்கிறது.

ஏனெனில் காங்கிரசு இந்த நாட்டில் ஏற்பட்ட இந்த 50 வருஷ காலமாக ஒரே ஒரு வகுப்புதான் அதாவது பார்ப்பன வகுப்புதான் மேலும் மேலும் முன்னேற்றமடைந்து விருத்தி அடைந்திருக்கிறதே ஒழிய மற்ற சகல வகுப்பும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கூச்சலாலேயே சிறிதாவது முன்னேறவும் முன்னேறா விட்டாலும் தன் நிலையில் இருந்து கீழே போகாமலும் இருந்து வரவும் முடிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது யார்தான் வகுப்பு உரிமையை கேட்காமல் இருக்க முடியும் என்று கேட்கின்றோம்.

ஆகையால் இந்த நாட்டுக்கு அரசியல் முன்னேற்றமோ சமூக இயல் முன்னேற்றமோ பொருளாதார இயல் முன்னேற்றமோ வேண்டியவர்கள் முதலில் இந்தந்த வகுப்பாருடைய வகுப்புரிமை ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து அதை சீர்திருத்திக் கொள்ள வேண்டியதே முக்கிய காரியமாகும்.

எந்த தேசத்தில் வகுப்புரிமைக்கு மற்றொரு வகுப்பாரால் தடையும் தொல்லையும் இருந்து வருகிறதோ, அந்த நாட்டில் உள்நாட்டுக் கலகம் வளர்க்கப்பட்டு வருகிறது என்பதும் வகுப்புரிமையை தடைப்படுத்தும் மக்களே தான் நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் விரோதிகளாக முட்டுக் கட்டையாளர்களாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

~subhead

வகுப்புரிமையினால் எந்த நாடும் அழியவில்லை

~shend

வகுப்புரிமை அளித்த காரணத்தால் இதுவரை எந்த நாடும் கெட்டுப் போனதாக சொல்ல முடியாது.

~subhead

சுதேச சமஸ்தானங்களும் வகுப்புரிமையும்

~shend

உதாரணமாக இந்தியாவிலேயே நமது மாகாணத்துக்கு சம்பந்தப்பட்ட பல சுதேச சமஸ்தானங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பல வருஷங்களாகவே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

மைசூரிலும், திருவாங்கூரிலும் மற்றும் ஒவ்வொரு வகையில் இதர சமஸ்தானங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு ஆய்விட்டது.

~subhead

கொச்சியில்

~shend

சமீப காலத்தில் கொச்சியிலும் கொடுக்கப்பட்டாய் விட்டது. அதைப் பற்றி கொஞ்ச நாளைக்கு முன்பாக “குடியர”சில் தலையங்கமே எழுதப் பட்டிருந்ததை நேயர்கள் பார்த்திருக்கலாம். இப்போது அதற்கு வேலைத் திட்டமும் போட்டாய் விட்டது. அதாவது கொச்சி அரசாங்கத்தில் 50 உத்தி யோகங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவதாய் இருந்தால் அவற்றை வினியோகிக்கும் முறையில் சர்க்கார் இன்ன முறையைக் கையாள வேண்டும் என்று ஒரு வரிசைக் கிரமத்தை சமஸ்தான கெஜட்டு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொச்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தியோக வினியோகத்துக்கு ஆக கொச்சி பிரஜைகளை 1. பார்ப்பனர், 2. நாயர், 3. ஈழவர், 4. புலையர், 5. இதர ஜாதி இந்துக்கள், 6. இதர ஜாதி இந்துக்களில் பிற்பட்ட வகுப்பார், 7. கிறிஸ்தவர்கள், 8. முஸ்லீம்கள், 9. யூதர் ஆங்கிலேயர் என்கின்றபடி 9 வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள்ளும் முக்கிய வகுப்புகளைப் பிரித்து எந்த வரிசைக்கிரமத்தில் உத்தியோகம் கொடுத்து வருவது என்று திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது.

~subhead

உத்தியோக வரிசைக் கிரமம்

~shend

  1. ஈழவர்
  2. ரோமோசிரியன் கிறிஸ்தவர்
  3. நாயர்
  4. முஸ்லீம்
  5. இதர ஜாதி இந்து
  6. ஈழவர்
  7. பார்ப்பனர்
  8. இதர இந்து பிற்பட்ட வகுப்பு
  9. நாயர்
  10. லேட்டின் கத்தோலிக்கர்
  11. ஈழவர்
  12. இதர இந்து
  13. புலையர்
  14. ரோமோசிரியன் கிறிஸ்தவர்
  15. நாயர்
  16. ஈழவர்
  17. இதர ஹிந்து
  18. இதர கிறிஸ்தவர்
  19. ஜுஸ், ஆங்கிலோ இந்தியர்
  20. ரோமன் சிரியன் கிறிஸ்தவர்
  21. ஈழவர்
  22. நாயர்
  23. இந்து பிற்பட்ட வகுப்பு
  24. லேட்டின் கத்தோலிக்கர்
  25. இந்து பிற்பட்ட வகுப்பு
  26. ஈழவர்
  27. ரோமன் சிரியன் கிறிஸ்தவர்
  28. நாயர்
  29. முஸ்லீம்
  30. இதர இந்து
  31. ஈழவர்
  32. தமிழ் பார்ப்பனர்
  33. இந்து பிற்பட்ட வகுப்பு
  34. நாயர்
  35. இதர கிறிஸ்தவர்
  36. ஈழவர்
  37. இதர இந்து
  38. புலையர்
  39. ரோமோசிரியன் கிறிஸ்தவர்
  40. நாயர்
  41. ஈழவர்
  42. லேட்டின் கத்தோலிக்க கிறிஸ்தவர்
  43. இதர இந்து பிற்பட்ட வகுப்பு
  44. முஸ்லீம்
  45. ரோமன் சிரியன் கிறிஸ்தவர்
  46. இதர இந்து பிற்பட்ட வகுப்பு
  47. நாயர்
  48. ஈழவர்
  49. இதர கிறிஸ்தவர்
  50. இதர இந்து பிற்பட்ட வகுப்பு

என்பதாக பிரித்து உத்திரவு இட்டு விட்டார்கள்

அதாவது, மொத்தத்தில் 100ல் இந்துக்களுக்கு 68 வீதமும் கிறிஸ்தவர்களுக்கு 24 வீதமும், முஸ்லீம்களுக்கு 6 வீதமும், ஜுஸுக்கும் ஆங்கிலோ இந்தியருக்கும் 2 வீதமும் கொடுத்து இவற்றுள் உட்பிரிவுகளாகவும் 12 வகுப்புகளைப் பிரித்து அவைகளில் இந்துக்களுக்குள் 100ல்

பார்ப்பனருக்கு 4 வீதமும்,

நாயர்களுக்கு 16 வீதமும்,

ஈழவர்களுக்கு 20 வீதமும்,

இதர ஜாதி இந்துக்களுக்கு 10 வீதமும்,

பிற்பட்ட வகுப்பு இந்துக்களுக்கு 14 வீதமும்,

புலையர்களுக்கு 4 வீதமும்,

ஆக 68 வீதமும்,

கிறிஸ்தவர்களில்

ரோமன் சிரியன் கிறிஸ்தவருக்கு 12 வீதமும்,

லேட்டின் கத்தலிக்கு கிறிஸ்தவருக்கு 6 வீதமும்,

மற்ற மூன்று வகுப்பு கிறிஸ்தவருக்கும் 6 வீதமும்,

உள்வகுப்பும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே கொச்சி சமஸ்தானத்தில் உள்ள முக்கியமான சகல வகுப்பும் உட்பிரிவு வகுப்பும் ஜன சங்கை விகிதாச்சார உத்தியோகங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டதால் இனி சுலபத்தில் அந்த சமஸ்தானத்தில் வகுப்புச் சச்சரவு வரவோ வகுப்பு நலத்துக்காக இழிவான காரியம் செய்யவோ தேச, சமூக பொது நலனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பார் விரோதமாய் இருக்கவோ அரசியலின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ, எந்த வகுப்பாரும் பொது மக்களை ஏமாற்றவோ இடமில்லாமல் போய்விட்டது.

~subhead

நாம் கேட்பது

~shend

இதைத்தான் நாமும் அரசியலில் உத்தியோகத்திலும் பிரதிநிதித் துவத்திலும் விரும்புகிறோம்.

இந்தியாவில் பிரதிநிதித்துவத்தில் முஸ்லீம் சமூகத்தார் கிளர்ச்சியினால் ஒரு அளவு ஏற்பட்டு விட்டது என்றாலும் இந்துக்களில் மேல்ஜாதி உரிமை பாராட்டும் பார்ப்பனர்களுக்கும் கீழ் ஜாதியார் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அவ்வித பேதம் சமுதாயத்தில் ஒழிக்கப்படும் வரை பிரதிநிதித்துவம் வகுக்கப்படவேண்டும் என்கின்றோம்.

அது போலவே உத்தியோகத்திலும் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி காரணமாக மாஜி மந்திரி கனம் முத்தய்ய முதலியார் அவர்கள் முயற்சியால் முக்கிய மத, வகுப்புகளுக்கு பிரிவுவாரி உரிமை வகுக்கப்பட்டிருந்தாலும் அந்த வினியோக எண்ணிக்கை அநியாயத்தைப் போக்கவும் அக்கொள்கை நிலைத்திருக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

இந்தப்படி செய்வதில் தேசீயத்துக்கோ தேச நலத்துக்கோ என்ன கெடுதி இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.

~subhead

நிரந்தரமாய் அல்ல

~shend

அன்றியும் நாம் கேட்பதும் என்றும் நிரந்தரமாய் இருக்க வேண்டுமென்று கேட்கவில்லை. எதுவரை ஜாதிமத வகுப்புப் பிரிவும் வித்தியாசமும் இருக்கின்றதோ அதுவரை தான் பிரதிநிதித்துவ முறை அனுமதிக்க வேண்டு மென்றும் கேட்கின்றோம்.

இதைப் பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்பதற்கு காரணம் உண்டு. ஏனெனில் இந்த முறை ஏற்பட்டால் பார்ப்பன ஆதிக்க வாயில் மண் விழுந்துவிடும்.

எப்படியெனில் கொச்சியில் தோழர் கனம் திவான் சர். ஷண்முகம் அவர்கள் வகுப்புவாரி உரிமைத் திட்டம் ஏற்படுத்துவதற்கு முன்பு 21754 பேர்கள் ஜனத்தொகை கொண்ட பார்ப்பனர்கள் 412 உத்தியோகத்தில் வருஷம் 430000 நாலு லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாயும் அதாவது மொத்த ஜனத்தொகையில் 50 பேருக்கு ஒரு உத்தியோகமும், மொத்த ஜனத் தொகையில் ஆள் ஒன்றுக்கு 20 ரூபாய் வீதமும், 276500 பேர்கள் ஜனத் தொகை கொண்ட ஈழவர் சமூகத்துக்கு 34 உத்தியோகமும் அதுவும் 16 காயம் உத்தியோகமும் 18 ஆக்டிங் உத்தியோகமாகவும் அவற்றிற்கு வருஷ சம்பளம் 26128 ரூபாயும் அதாவது மொத்த ஜனத்தொகையில் 810 பேருக்கு ஒரு உத்தியோகமும் ஆள் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு ஒரு அணா ஆறு (016) பைசா வீதமும் பெறும்படியான வித்தியாசம் ஒழிந்து பார்ப்பனர்களுக்கு அவர்கள் ஜனத்தொகை விகிதாச்சாரம் 100க்கு 2 வீதமும் ஈழவருக்கு அவர்கள் ஜனத்தொகை விகிதாச்சாரம் 100க்கு 20 வீதமும் உத்தியோகம் கிடைக்கும்படி செய்தால் பார்ப்பனர்கள் கதி என்ன ஆகும் என்று பாருங்கள்.

ஆகவே பார்ப்பனர்கள் இதை எதிர்க்கவேண்டியது தான். ஆனால் பார்ப்பனர்களுடன் எவ்வித சரீர சம்மந்தமோ, சமுதாய சம்மந்தமோ இல்லாத பார்ப்பனரல்லாத மக்கள் இதை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

~subhead

சர். ஷண்முகம்

~shend

கொச்சியில் திவான் கனம் சர். ஷண்முகம் இந்த ஏற்பாடு செய்யும்போது அந்த சமஸ்தானத்தில் ஒரு பிரஜை கூட இதை ஆக்ஷேபித்துப் பேசவே யில்லையாம். இதனால் கொச்சியிலுள்ள பிரஜைகளாகிய 12 லக்ஷம் மக்களும் தேசத்துரோகி என்றோ உத்தியோகத்துக்காக எதையும் விட்டுக் கொடுப்பவர்கள் என்றோ இந்திய தேசீயவாதிகள் என்பவர்களில் சில அயோக்கிய அற்ப ஈன ஜெந்துக்கள் குரைக்கின்ற மாதிரியே எவரும் கூறிவிட முடியாது.

தோழர் சர். ஷண்முகத்தை வகுப்புவாதி என்பதற்காக அவர் மீது பழி சுமத்தி காட்டிக் கொடுக்கும் வேலை செய்து சிலர் அவர்களைத் தோற்கடித்து ஒரு கார்ப்பரேஷன் கண்டிறாக்டருக்கும், தொழிலாளிகளை முதலாளிகளுக்குக் காட்டிக் கொடுத்து வாழும் ஒரு காங்கிரசுக்காரருக்கும் வெற்றி சம்பாதித்துக் கொடுத்தார்கள். அதனால் சர்.ஷண்முகம் யோக்கியதை சிறிதும் மங்கவில்லை. குன்றின்மீது இட்ட எலக்டிரிக் 100000 கேண்டில் பவர் விளக்கு போல் ஜ்வலிக்கின்றது. ஆனால் அவரை தோற்கடிக்கச் செய்தவர் கைக்கு வளையலும், நெஞ்சுக்கு ரவிக்கையும் போட்டு முக்காடிட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே வகுப்பு வாதத்தின் பெருமையை என்ன என்று சொல்லுவது.

~subhead

பார்ப்பனருக்கு ஒரு வார்த்தை

~shend

இந்த சமயத்தில் பார்ப்பனர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம். எங்களில் சில அன்னக்காவடிகளையும் எச்சிக்கலைகளையும் சுவாதீனம் செய்து கொண்டு எங்களை வையச் செய்யாதீர்கள். தேச ஸ்தாபனங்களை தேசமக்கள் வரிப்பணத்தால் ஒழுக்கமாகக் கட்டுப்பாடாக நாணயமாக நடத்தப் படவேண்டிய நிர்வாகங்களை அற்ப காரியங்களுக்கு ஆக அற்பர்களுக்கு கிடைக்கும்படி செய்து நல்ல அரசியல் நிர்வாகத்தையும் சமாதான வாழ்க்கையையும் பாழாக்காதீர்கள்.

பொது உடமை தேசமானாலும் கட்டுப்பாடும் நாணயமும் வேண்டும். அக்கட்டுப்பாடும் நாணயமும் என்பதற்கு என்ன தான் தாராள நோக்கத்துடன் வியாக்கியானம் செய்தாலும் பொதுஉடமைக் கொள்கை உறுதியுடன் நடக்கத்தக்க கட்டுப்பாடும் நாணயமும் என்று தான் சொல்லலாமே தவிர அந்நியன் சட்டைப்பையில் இருக்கும் பணத்தை திருடுவதும் கூலிக்கு குரைக்கும் கொள்கையும் பாமரப் பெண்களைச் சூறையாடி விற்கும் தன்மை போன்றதுமான காரியங்கள் கட்டுப்பாடும் ஒழுங்குமாகாது.

ஆதலால் பார்ப்பனர்களே, மண்குதிரையை நம்பி “வாழ்க்கைப்படுவதும் கெட்டு, தேடித் தின்பதும் போய்” வீணாய் சந்தியில் அலையும்படியான நிலைமையை அடையாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இன்று காங்கிரசில் உள்ள எந்த நபர் நாளைக்கு ஜஸ்டிஸ் கட்சிக்கு கூப்பிட்டால் வரமாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களை சட்டை செய்பவர்கள் யார்?

ஆதலால் வீணாக ஒற்றுமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு மனித சமூக நலத்தை முற்போக்கை சாந்தியை நாணயத்தை ஒழுக்கத்தை பாழாக்காதீர்கள். வைவதும் காலித்தனம் செய்வதும் உங்கள் கூலிகளுக்கே சொந்தமென்று எண்ணி ஏமாந்து போகாதீர்கள்.

~subhead

ஆனாலும் வருந்துகிறோம்

~shend

நாய் கடித்தால் நாயைக் கடிக்க மாட்டார்கள்; ஆனால் நாய் வளர்ப்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டார்கள். அன்றியும் மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்ந்தால் மார்மேல்தான் விழும் என்பார்களே, அதுபோல் மற்றும் சிலர் விஷயத்தில் நம்மவர்கள் தானே நம்மை வைபவர்களாக இருக்கிறார்களே, அவர்களை திரும்ப வைவது நமக்கு மன வேதனை கொடுக்காதா என்று ஒரு அளவுக்கு பயப்படுகின்றோம்.

ஆன போதிலும் காங்கிரசுக்காலிகள் ஆங்காங்கு பல மகாநாடுகளிலும் கூட்டங்களிலும் பேசுவதும் வைவதும் கேள்விப்பட்ட வரையில் பத்திரிகைகளில் பார்த்த வரையில் அந்த பயத்தையும் அடியோடு விட்டுவிட வேண்டியது தான் என்கிற நிலைமைக்கு வர வேண்டியிருக்கிறதே என்று சிறிது வருந்துகிறோம்.

குடி அரசு தலையங்கம் 13.09.1936

 

You may also like...