தற்கால அரசியல்

 

தஞ்சை ஜில்லா சுற்றுப்பிரயாண பிரசங்கம்

Dr. சுப்பராயன் கம்பெனிக்கு பதில்

தோழர்களே!

இந்தப் பக்கத்துக்கு சுமார் 3,4 மாதத்துக்கு முன் ஒரு தடவை வந்து பேசி இருக்கிறேன். இப்போது பட்டுக்கோட்டை தோழர் சிவராமகிருஷ்ணன் ராஜலக்ஷ்மி திருமணத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் இந்த ஜில்லா சுற்றுப் பிரயாணத்தில் சில பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து இதில் தற்கால அரசியல் என்பது பற்றிப் பேசும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

~subhead

பதவியும் சம்பளமுமே இன்றைய அரசியல்

~shend

தற்கால அரசியல் என்பதைப்பற்றிப் பேசுவது என்றால் அது நாம் அதாவது இந்தியர்களாகிய நாமும் (இந்தியர்களாகிய) நம்மில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பாரும் ஒருவரை ஒருவர் வைது கொள்வது தான் தற்கால அரசியலாக இருக்கிறது என்று சொல்ல வருத்தப்படுகிறேன். நம்மில் ஒருவரை ஒருவர் வைதுகொள்வதைத் தவிர மற்றபடி அரசியல் என்பதின் காரணமாய் கொள்கைகள் திட்டங்கள் என்பவற்றில் இந்தியர்களுக்குள் ஏதும் முக்கியமான வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. மேல் குறிப்பிட்டபடி வைது கொள்ளுகின்ற நம்மவர்களுக்குள்ளாகவே எத்தனை பேருக்கு அரசியல் ஞானமும், அரசியல் கொள்கையும், அரசியல் திட்டமும் தெரியும் என்றால் 100க்கு 5 பேருக்குக்கூட தெரியாதென்றே கருதுகிறேன்.

~subhead

சாதாரணமாக இன்று ஒருவரை ஒருவர் வையத் தெரிவதும், வையத் துணிவு கொள்ளுவதும் தான் அரசியல் ஞானமாக இருந்து வருகிறது.

~shend

அரசியல் என்பதே இன்று உத்தியோகம், பதவி, பெருத்த சம்பளம் என்கின்ற மூன்றுக்குள்ளாகவே அடங்கிவிட்டது. அதைப்பெறுவதே அரசியல் முயற்சியாகவும் ஆகிவிட்டது. அதற்கு ஆகவே இந்த நாட்டில் பல திறப்பட்ட அரசியல் கட்சிகளும் சமூக வகுப்புக் கட்சிகளும் ஏற்பட்டு இருந்து வருகின்றன. இக்கட்சிகளுக்கு இருந்துவரும் பிரதானத்தன்மை யெல்லாம் எந்தக்கட்சியில் சேர்ந்தால் யாரை வைதால் உத்தியோகம் பதவி சம்பளம் கிடைக்கும் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இதைத்தவிர அரசியலைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.

~subhead

தேசியத்தின் யோக்கியதை

~shend

தேசியம் என்பதின் லக்ஷணமும் இந்த யோக்கியதையைக் கொண்டது தான். அரசியல் என்பது உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவைகளைப் பொறுத்ததாய் இருந்தால் தேசியம் தேசபக்தி என்பது பெரிதும் வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்துகொண்டு பதவி உத்தியோகம் பெற ஆசைப்படுவர்களிடம் கூலி பெற்றுக்கொண்டு குலைப்பதே மகாபெரிய தேசியமாய் விளங்குகிறது. இந்த மாதிரி அரசியலும் தேசியமும் ஏழைப் பாட்டாளி மக்கள் தலையில் கையை வைத்து அவர்களது ரத்தம் வேர்வையாய்ச் சிந்த உழைக்கும் உழைப்பை கொள்ளை கொண்டு சோம்பேறிகளும் அயோக்கியர்களும் பொறுப்பற்ற காலிகளும் பிழைக்கத்தான் மார்க்கமாய் இருந்து வருகிறது.

தேசியமும் அரசியலும் வலுக்க வலுக்க ஏழைப் பாட்டாளி மக்களுக் குத்தான் கஷ்டமும் தொல்லையும் வளர்ந்து கொண்டே வருகிறது. பார்ப்பனர்களும் படித்த மக்கள் என்பவர்களுமாகிய சோம்பேறிக் கூட்டத்தார்களாலேயே இம்மாதிரி கஷ்ட நிலைமை இந்த நாட்டுக்கு ஏற்பட்டதே ஒழிய வேறு யாராலும் இல்லை.

இந்தமாதிரி சோம்பேறிக் கூட்டத்தாருக்கு எலும்பு போட்டு அவர்களை அடக்கி சுவாதீனம் செய்து கொண்டால் அரசியல் நிர்வாகம் இடையூறு இல்லாமல் நடத்த சர்க்காருக்கு அனுகூலமாக இருக்குமானதாலும் சர்க்காரின் உண்மையான கடமையைச் செய்யும்படி தூண்டவும் தொந்தரவு கொடுக்கவும் ஆளில்லாமல் போகுமாதலாலும் அரசாங்கத்தார் இவ்வித அரசியலுக்கும் தேசியத்துக்கும் உதவி செய்து உத்தியோகப் போட்டிக்கும், பதவிப் போட்டிக்கும் இடம் கொடுத்து சுகமாய் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

ஏழைப்பாட்டாளி பாமரமக்களுக்கு இந்த சூழ்ச்சி விளங்குவதில்லை யாதலால் அவர்களும் ஏமாந்து போய் இந்தப் புரட்டும் ஏமாற்றமுமான கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

~subhead

சீர்திருத்தம்

~shend

சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்தம் என்பதில் ஜனங்களுக்கு அதாவது ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களுக்கு பெருத்த சம்பளமும், அதிகாரமும் உள்ள பல பதவிகள் கிடைக்கப்போகின்றன. அதற்காக இன்று அவற்றை அடைய ஆசைப்படுவர்களுக்குள் பெருத்த போட்டிக் கிளர்ச்சிகள் நடக்கின்றன. அப்போட்டிக் கிளர்ச்சிகள் சிறப்பாக நம் நாட்டில் இரண்டு கட்சிகளின் பேரால் நடக்கின்றன. அதாவது ஒன்று ஜஸ்டிஸ் மற்றொன்று காங்கிரஸ் என்பதாகும்.

ஜஸ்டிஸ் கட்சி இந்த 16 வருஷ காலமாய் இந்த நாட்டில் பதவியில் இருந்து வந்த கட்சியாகும். காங்கிரஸ் கட்சியானது தங்களுக்கு அப்பதவிகள் கிடைக்காது என்று கருதி, சீ அந்தப்பழம் புளிக்கும் என்று நரி சொன்ன கதைப்போல் “எங்களுக்கு யாதொரு பதவியும் வேண்டியதில்லை” என்றும் “பதவிகளில் யாதொரு பிரயோஜனமும் இல்லை” என்றும் மக்களிடம் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டே தந்திரத்தால் தங்களுக்கு ஏதாவது கிடைக்காதா என்று சூழ்ச்சி செய்து கொண்டே வந்த கட்சியாகும். காங்கிரஸ்காரர்களது ரகசிய சூழ்ச்சி இதுவரை பலிக்காததால் இப்போது வெட்கம் கிக்கத்தையெல்லாம் தூர மூட்டை கட்டி வைத்து விட்டு வெளிப்படையாகவே தங்களுக்கு பதவியும் உத்தியோகமும் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்கள். இதன் பயனாய் காங்கிரஸ்காரர்கள் யாரை எதை பதவி வேட்டைக்காரர் என்றும் உத்தியோக மோகம் என்றும் சொல்லி வந்தார்களோ அந்த வேலைக்கு இப்போது தாங்களே ஆளாகி பதவிகளைக் கைப்பற்றுவதே தங்களுடைய வேலைத்திட்டம் என்று கூட வெளிப்படையாய் சொல்லிக்கொண்டு வெளிவந்துவிட்டார்கள்.

சைத்தான் அரசாங்கமென்றும் இதிலுள்ள பதவியும் உத்தியோகமும் அடிமைத்தனம் என்றும் சுயமரியாதைக்கு விரோதமானதென்றும் சொல்லி தெய்வோபதேசம் செய்துவந்த தோழர் காந்தியாரே அதே சைத்தான் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் கைப்பற்ற ஆசி கூறி திரைமறைவில் இருந்து கொண்டு மார்க்கம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

அரசாங்கம் பணக்கார ஆட்சி என்றும் இதில் பதவிபெறுவதும் உத்தியோகம் பார்ப்பதும் தேசத்துரோகம் என்றும் பணக்காரர்களுக்கு கூலிப்பணி செய்ததாகுமென்றும் ஏழை மக்களுக்கு பயனற்றதும் கெடுதி செய்யக் கூடியதென்றும் வெள்ளைக்காரரை அடியோடு இந்தியாவை விட்டு விரட்டிப் பொது உடமை ஆட்சியை ஏற்படுத்துவது தான் உண்மையான தேச சேவை என்றும் பேசி மக்களை மயக்கி விளம்பரம் பெற்ற வீரர் ஜவஹர்லால் பண்டிதரும் பதவிகளைக் கைப்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொல்லி அதற்கு ஆக பதவி வேட்டைப் பிரசாரம் செய்து வருகிறார்.

இன்னம் 10 நாளில் நம்நாட்டிற்கும் வந்து பதவி வேட்டை ஆடப் போகிறார்.

~subhead

புது காங்கிரஸ் பக்தர்கள்

~shend

இந்த நிலைமை, அதாவது பதவி ஏற்கும் நிலைமை இன்று ஏற்பட்டவுடன் (காங்கிரசும் காந்தியாரும் பண்டிதரும் முன் பதவி பஹிஷ்காரம் பேசும்போது) அப்போது காங்கிரசை விட்டு ஓடிப்போனவர்களும் காங்கிரசை வேப்பங்காயைப்போல மதித்தவர்களுமான அனேக ஆசாமிகள் அதாவது தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்து பிள்ளை போன்றவர்கள் எல்லாம் திடீரென்று தேசபக்த ஜன்மம் எடுத்து காங்கிரசில் சேர்ந்து கொண்டு இன்று நாக்கில் தண்ணீர் சொட்ட பதவி ஆத்திரம் பிடித்து அலைவதுடன் வெட்கத்தை துறந்து தைரியமாய் இன்று நம்மை அதாவது தாங்கள் குடி இருந்த வீட்டையே குற்றம் சொல்லி வைய வெளியில் புறப்பட்டுவிட்டார்கள். அவர்களைத் திருப்பி வைவதற்காக நாம் இன்று இந்தக் கூட்டங்கள் கூட்ட வில்லையானாலும் அவர்கள் நம்மை வைவதற்கு சமாதானம் சொல்லித்தீர நாம் இங்கு பேசவேண்டி இருக்கிறது.

சிறிதும் நாணயமும் யோக்கியப்பொறுப்பும் இல்லாமல் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள் நேற்று பேராஊரணி மகாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகக்கட்சி என்றும், அக்கட்சியில் உள்ளவர்கள் அயோக்கியர்கள் என்றும் ஜஸ்டிஸ் கட்சியை அடியோடு ஒழித்து ஆகவேண்டும் என்றும் கூறினாராம். கூலிக்காக குலைத்து விட்டுப்போகின்ற காலிகளுடையவும் அன்னக்காவடிகளுடையவும் எச்சில் பொறுக்க அலைகின்றவர்களுடையவும் கூச்சலைப்பற்றி நான் இன்று கவலைகொள்ளவில்லை. ஆனால் நாடிமுத்துபிள்ளை, சுப்பராயன் போன்ற பொறுப்புள்ள பதவியை வகிக்கும் ஆசாமிகள் இம்மாதிரி பேசினால் அதை எப்படி அனுமதித்துக்கொண்டிருக்க முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். (இச்சமயத்தில் பட்டுக்கோட்டையில் ஒருவர் “யாரை வேண்டுமானாலும் பேசுங்கள், நாடிமுத்து பிள்ளையைப் பற்றி மாத்திரம் பேசாதீர்கள்” என்றார்) நாடிமுத்து பிள்ளையை வைவதற்கு ஆக நாங்கள் இங்கு வரவில்லை. எங்களுக்கு வேறு பயனுள்ள வேலை எவ்வளவோ இருக்கிறது. ஆனால் நாடிமுத்துபிள்ளை பேராஊரணியில் பேசிய பேச்சுக்கு சமாதானம் சொல்ல இங்கு வந்திருக்கிறோம். இதைக்கூட சொல்லக்கூடாது என்று யாராவது தடுப்பதாய் இருந்தால் அது நாளைக்கு மற்றவர்களை வெளியில் தலைகாட்ட முடியாத மாதிரி செய்துவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆண்மையுள்ளவர்கள் தாங்கள் பேசியதற்கு பதில் சொல்ல மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால்தான் இந்த நாட்டில் சமாதானமாக பிரசாரங்கள் செய்யமுடியும். அதில்லையானால் ஒருவருக் கொருவர் தலைகாட்டாமல் வாழவேண்டிய நிலைமை தான் ஏற்படும்.

நேற்று தோழர் நாடிமுத்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் அயோக்கியர் என்று பேசியிருக்கிறார். வந்து ருஜுவு செய்யட்டும் என்று அறைகூவி அழைக்கிறேன். யார் யார் அயோக்கியர் என்று சொல்லட்டும். அதன் தலைவர்கள் தியாகராய செட்டியார், நாயர் முதல் இன்று தலைவராய் உள்ள பொப்பிலிராஜா வரை எந்த தலைவர் என்ன அயோக்கியத்தனம் செய்தார்கள் என்று சொல்லட்டும். என்னால் முடிந்தால் நான் பதில் சொல்லுகிறேன் அல்லது நாடிமுத்து பிள்ளையுடன் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். அதை விட்டு விட்டு பாமரமக்களைக் கூட்டி வைத்து வாயில் வந்தபடி உளருவது என்றால் அது ஒரு நாளும் யோக்கியமான காரியமாகாது என்று சொல்லுவதோடு அப்படிச் சொல்லுவது தங்களைத்தான் அயோக்கியர்களாக்கிவிடும் என்றும் கூறுகிறேன்.

ஜஸ்டிஸ் கட்சி தேசத் துரோக கட்சி என்று சொல்லியிருக்கிறார். இதோ பாருங்கள் அது பத்திரிகையில் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சி என்ன துரோகம் செய்தது எடுத்துச் சொல்ல வேண்டாமா? அதில்லாமல் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் சொல்லுவது என்றால் பெரிய மனிதன் என்று கருதிக் கொண்டிருப்பவருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று கேட்கின்றேன்.

இந்த 16 வருஷ ஆட்சியில் ஜஸ்டிஸ் கட்சி செய்த தேசத் துரோகம் இன்னது என்று யாராவது யோக்கியமாக சொல்லட்டும் என்று அறை கூவி அழைக்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்திருந்தால் தோழர் நாடிமுத்து ஜில்லா போர்டு பிரசிடெண்டாயிருக்க முடியுமா என்று அவரையே கேட்கின்றேன்.

பார்ப்பனர்கள் பின்னால் தானே மூட்டை தூக்கிக்கொண்டு சாமி சாமி என்று அலைய வேண்டி வந்திருக்கும். இன்றையத் தினமும் நாடிமுத்து பிள்ளை அவர்களை பார்ப்பனர் சேர்த்துக் கொண்டதின் ரகசியம் என்ன? ஜஸ்டிஸ் கட்சியை வைய ஒரு ஆள் வேண்டும் என்பதற்கல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியால் அவர் அடைந்த யோக்கியதையை தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதல்லாமல், மற்றபடி இவருடைய அரசியல் ஞானத்தையும் புத்தி விசேஷத்தையும் தேசாபிமானத்தையும் மதித்தா என்று கேட்கின்றேன்.

தோழர் நாடிமுத்துப் பிள்ளை அவர்கள் ஜஸ்டிஸ் கட்சி பூமிவரி குறைக்கவில்லை என்று பேசியிருக்கிறார். அரசியல் ஞானமுள்ளவர்கள் பூமிவரி குறைக்கவில்லை என்பதை ஜஸ்டிஸ் கட்சி மீது குறையாய் சொல்லமாட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே பழி சுமத்தத்தான் இப்படிப் பேசுவார்கள். வரி விஷயம் இந்தியாவில் எந்த மாகாணத்திலும் மந்திரிகளுக்கு சம்மந்தமில்லை. போலீஸ், நீதி இலாக்காக்களைப் போல் சர்க்காருடைய சொந்த பொறுப்பில் இருக்கும் விஷயம். நிலவரி இன்று எந்த மாகாணங்களிலாவது குறைத்தார்கள் என்றோ குறைக்க முடிந்தது என்றோ யாராவது சொல்லட்டும். அதை விட்டு விட்டு பைத்தியக்காரத்தனமாய் உளறுவதில் என்ன பிரயோஜனம் என்று கேட்கின்றேன்.

கேட்பவர்கள் பாமர மக்களாய் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற பேடிகள் தைரியமே ஒழிய இதில் வீரத் தைரியம் ஒன்றும் இல்லை.

~subhead

சமய சஞ்சீவிகள்

~shend

ஏழைக் குடியானவர்களிடம் மிகவும் பரிதாபம் கொண்டவர்போல் பேசும் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள் தனது குடிகளுக்கு எவ்வளவு விகிதாச்சாரம் தள்ளிக் கொடுத்தார் என்று சொல்லமுடியுமா?

~subhead

சமய சஞ்சீவிகளை நம்பாதீர்

~shend

இவருக்குத்தான் அதிக பூமி இருக்கிறதா? ஜஸ்டிஸ் கட்சியாருக்கு பூமி இல்லையா? யாரோ இரண்டு மூன்று பேர் சம்பளம் வாங்க ஜஸ்டிஸ் கட்சி மிராசுதார்கள் எல்லோரும் வரிகுறைக்க சம்மதிக்காமல் உயர்த்திக் கொள்ளுவார்களா? அல்லது சர்க்கார் குறைப்பதை வேண்டாமென்று சொல்லிவிடுவார்களா? கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு மதி வேண்டாமா? தோழர் சுப்பராயன் மந்திரியாய் இருக்கும்போது எவ்வளவு வரி குறைத்தார் என்று கருதி இப்போது நாடிமுத்து பிள்ளை அவருடன் குலாவுகிறார்? தோழர்களே! இந்த மாதிரி சமய சஞ்சீவிகள் பேச்சைக் கேட்காதீர்கள். உங்கள் புத்தியைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

~subhead

நாடிமுத்து பிள்ளை தேசபக்தி

~shend

எப்படியாவது தனக்கு ஜில்லா போர்டுக்கும் சட்டசபைக்கும் ஓட்டு வேண்டும் என்பதுதான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் தேசபக்தியின் அரசியல் கொள்கையாகுமே ஒழிய மற்றபடி தேசபக்தி என்றால் ரூபாய்க்கு எத்தனை படி என்றுதான் கேட்பார். தகுதி உடையவர் என்று கருதினால் நீங்கள் குஷாலாய் அவருக்கு ஓட்டு செய்யுங்கள். கட்சிக்காக என்று ஏமாந்து போகாதீர்கள். ஜஸ்டிஸ் கட்சியை வைவதென்றால் அதற்காக ஓட்டு செய்யாதீர்கள். இவர் சாதித்தது என்ன, சாதிக்கப்போவது என்ன என்று தெரிந்து ஓட்டு செய்யுங்கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை.

~subhead

நாடிமுத்து ராஜ்யம் எந்த ராஜ்யம்?

~shend

ஜஸ்டிஸ் கட்சி கண்டிறாக்ட் ராஜ்யமென்று கூலிகள் கூப்பாடு போட்டார்கள். தோழர் நாடிமுத்து பிள்ளையின் சொந்த ராஜ்யம் (அதாவது அவரது ஜில்லா போர்டு) யாருடைய ராஜ்யமாய் இருக்கிறது? எல்லா வேலைகளையும் டிபார்டுமெண்டில் செய்கிறாரா? இவர் கொடுக்கும் கண்டிறாக்டுதாரர்கள் பூராவும் பரம்பரை கண்டிறாக்டரும் இவருக்கும் இவருக்குப் பின்னால் கைதூக்கும் மெம்பர்களுக்கும் சொந்தக்காரரும் கூட்டாளிகளும் சிப்பந்திகளும் இல்லாத கண்டிறாக்டு அனுபவசாலிகளா? ஆகவே நாடிமுத்து பிள்ளை நடப்புக்கு மோசமில்லாமலும் அனேக ஜில்லாக்களில் அவரைவிட மேன்மையாயும் தான் ஜஸ்டிஸ் கட்சி ராஜ்யம் நடத்தப்படுகிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

~subhead

டாக்டர் சுப்பராயன்

~shend

டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது ஒரு பெரிய தேச பக்தராய் நடிக்கிறார். நடிக்கட்டும் அவர் மந்திரியானால் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். அதில் எனக்கும் ஏதாவது பங்கு கிடைக்கலாம்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் வையவேண்டும்? மந்திரிகள் ஏதாவது நாணயத் தவறுதலாய் நடந்தார்களா? கொள்கை மாற்றிக் கொண்டார்களா? இருந்தால் ஒரு விஷயமாவது எடுத்துச் சொல்லலாமல்லவா? டாக்டர் சுப்பராயன் மந்திரியாய் இருக்கும்போது ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு கீழ் படிந்து தான் ஆட்சி நடத்தினார். காங்கிரஸ்காரர்களுக்கு நாமத்தை சாத்தி விட்டு வந்து சைமன் கமிஷனை வரவேற்றார். சீர்திருத்தங்களுக்கு உதவி செய்தார். இவர் இப்போது சீர்திருத்தத்தை உடைப்பது என்கின்ற தந்திரக் காரருடன் சேருவதும் வகுப்புவாதம் கூடாது என்று சொல்லுவதும் யோக்கியமாகுமா?

டாக்டர் சுப்பராயன் மந்திரியாய் இருந்தபோதுதான் வகுப்பு வாதம் வீறு கொண்டிருந்தது. அவர்தான் தேர்தலில் தனித்தனி ஜாதிகளுக்கு இடம்வைத்து சட்டம் செய்தவர். அவர் காலத்தில் தான் உத்தியோகங்களும் தனி தனி ஜாதிக்கு விகிதாச்சாரம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காகத்தான் நான் இன்னமும் அவரிடம் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.

~subhead

பார்ப்பன சூழ்ச்சி

~shend

1930 ல் பார்ப்பனர்கள் டாக்டர் சுப்பராயன் மந்திரி சபையை கவிழ்க்க சூழ்ச்சி செய்து ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி செய்தார்கள்.

“இந்து”, “சுதேசமித்திரன்” பத்திரிகைகள் 1930ல் புதிய மந்திரி சபை ஏற்படும்போது சுப்பராயன் கட்சிக்கு கொடுக்கக்கூடாது என்றும் ஜஸ்டிஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஜஸ்டிஸ் கட்சிதான் சட்டப்படி ஒழுங்கான சபை என்றும் எழுதின.

அப்படிப்பட்ட இரு கூட்டமும் இன்று வெட்கமில்லாமல் குலாவுகின்றன. காங்கிரசுக்கோ பார்ப்பனர்களுக்கோ சிறிதும் யோக்கியமோ, நாணயமோ, வெட்கமோ கூட கிடையாது. எப்படியாவது பாடுபட்டுப் பார்ப்பனரல்லாதாரை தலை எடுக்கவொட்டாமல் அடித்து மனு காலப்படி பார்ப்பனரல்லாத ஆண்களையும் பெண்களையும் தங்களுக்கு அடிமையாகவும், தாசியாகவும் வைக்கவே அவர்களது முயற்சி காங்கிரஸ் என்கின்ற ஆயுதத்தைத் தங்கள் கைவசப்படுத்திக்கொண்டு தங்கள் இஷ்டப்படி எல்லாம் செய்கிறார்கள்.

~subhead

காங்கிரஸ்

~shend

காங்கரசானது ஆரம்பித்து சுமார் 30 வருஷம் வரை ஏராளமான உத்தியோகங்களை உற்பத்தி செய்து தாராளமாக சம்பளத்தை உயர்த்தி, வரிகளை உயர்த்தி அவற்றை பகல் கொள்ளைபோல் பார்ப்பனர்களே அனுபவிக்க இடம் கொடுத்து வந்தது. இந்த நாட்டில் இன்றுள்ள சம்பளக் கொள்ளைக்கும் உத்தியோக குவியலுக்கும் காங்கிரசே தான் காரணம். பார்ப்பனரல்லாதார் அதில் பங்கு கேட்டதற்கு ஆகத்தான் பார்ப்பனர்கள் திடீரென்று ஒரே நாளில் தேச பக்தர்களானார்கள். அதுவரை ராஜபக்தி, ராஜவிஸ்வாசம், ராஜ சேவகம் ஆகியவைகள் தான் பார்ப்பனர்களின் வேதக் கட்டளையாக இருந்து வந்தது உத்தியோகம் புருஷலக்ஷணம் என்பதே அவர்களது பல்லவி.

~subhead

வகுப்பு உரிமை

~shend

முஸ்லீம்கள் 1895 முதல் தங்களுக்கு உத்தியோகம் விகிதாசாரம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுவந்திருக்கிறார்கள். 1895ல் ஒருதரம் 1905ல் ஒருதரம் 1915ல் ஒருதரம் இந்தப்படி காந்தி காங்கிரசுக்கு முன்னாலேயே 35 வருஷ காலம் முஸ்லீம்கள் வகுப்பு வாதம் பேசி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். காங்கிரசே முஸ்லீம்களுக்கு ஜனசங்கைப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தனித் தொகுதியின் மூலம் கொடுக்க ஒப்புக்கொண்டு கொடுத்து வந்திருக்கிறது.

நாம் கேட்ட உடனேதான் பார்ப்பனர்கள் காந்தியாரைப்பிடித்து வந்து நம்மை ஏய்த்து ஒடுக்கப் பார்த்தார்கள். நல்ல வேளையாய் காந்தியாரின் ஜம்பம் இந்த 16 வருஷகாலமாக ஒன்றிலும் வெற்றி பெறவில்லை. அவருக்கு தோல்விமேல் தோல்வியே ஏற்பட்டது. ஏன் என்றால் அவருடைய சுயராஜ்யம் எல்லாம் பார்ப்பனரல்லாதார் தலையில் கையை வைக்க செய்த சூழ்ச்சியே ஒழிய சரக்கு ஒன்றுமே கிடையாது. இதை சர்க்கார் உணர்ந்து கொண்டு அவரை மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள்.

~subhead

காந்தி தோல்வி

~shend

1924 லேயே அவரது பகிஷ்காரமும் ஒத்துழையாமையும் அவராலேயே நிறுத்தப்பட்டு விட்டது யாவரும் அறிந்ததேயாகும். மறுபடியும் சைமன் கமிஷனை எதிர்க்க சில தந்திரம் செய்தார். அதுவும் படுதோல்வி அடைந்து சர்க்காருக்கு இனிமேல் இப்படி செய்வதில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்.

இவருடைய சபதங்கள் எல்லாம் தோல்வி அடைந்து ஒரு நிபந்தனையு மில்லாமல் யாரோ சிலர் விடுதலை செய்யப்படுவதற்கு ஆக வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போவதாய் ஒப்புக் கொண்டார்.

(இந்த சமயத்தில் ஒருவர் தஞ்சையில் “உப்பு வாரிக் கொள்ள சர்க்கார் அனுமதி கொடுக்கவில்லையா” என்று கேட்டார்) ஆம் அனுமதி கிடைத்தது. எத்தனை பேர் எத்தனை டன் வாரினீர்கள்? அதனால் யார் பயனடைகிறார்கள் என்று கேட்கிறேன். ஆகாயத்தில் கோட்டை கட்டிக்கொள்ள சர்க்கார் 4மனை இடம் கொடுத்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறேன். தோழர் காந்தியார் வேண்டுமென்றே பாமர மக்களை ஏமாற்ற கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழிபோல் செய்து கொண்ட பயனற்ற நிபந்தனையே ஒழிய அதனால் என்ன நன்மை விளைந்தது? என்று கேட்கிறேன்.

இந்த காங்கிரசு கலைக்கப்பட்டாலொழிய அல்லது பார்ப்பன சூழ்ச்சி ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய ஏழை மக்களுக்கு பயன் இல்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். தற்கால சாந்தியாக சிலர் பணமில்லாமல் பதவி பெறலாம் என்றும், மந்திரி ஆகலாம் என்றும் காங்கிரசுக்காரராகவும் தேச பக்தர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆதலால் அவர்கள் பேச்சை நம்பி ஏமாந்து போகாதீர்கள். அவர்களது கூலிகள் பேச்சையும் நம்பி மோசம் போகாதீர்கள்.

உங்கள் பகுத்தறிவைக்கொண்டு உண்மை அறிந்து அதன்படி நடவுங்கள்.

குறிப்பு: தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது 11.09.1936இல் பட்டுக்கோட்டையிலும் 12.09.1936 இல் மாயவரத்திலும் 13.09.1936 இல் குற்றாலத்திலும் 14.09.1936 இல் பொறையாற்றிலும் 15.09.1936 இல் தஞ்சையிலும் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.

குடி அரசு சொற்பொழிவு 20.09.1936

~cstart

ஜவஹர்லால் வருகை பார்ப்பனர் சூழ்ச்சி

~cmatter

தோழர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அடுத்த மாதம் 5ந் தேதி தமிழ்நாட்டுக்கு நமது பார்ப்பனர்களால் அழைத்து வரப்படப் போகிறார். தமிழ்நாட்டில் 15 நாள் சுற்றுப்பிரயாணமும் செய்யப் போகிறார் ஏன்? எதற்காக? என்பதை நமது வாசகர்கள் அறியவேண்டியது முக்கிய விஷயமாகும்.

தோழர் ராஜேந்திரப்பிரசாத் அவர்கள் எதற்காக அழைத்து வரப்பட்டாரோ அதற்காகவே தான் தோழர் ஜவஹர்லாலும் அழைத்து வரப்படுகிறார்.

அதாவது ராஜேந்திர பிரசாத் அவர்கள் அழைத்து வரப்பட்டது நமது நாட்டில் அப்போது நடக்க இருந்த ஜில்லா போர்டு தேர்தல்களுக்கு மறைமுகமான பிரசாரம் செய்யவே என்பதை நாம் அப்போதே விளக்கி இருந்தோம்.

அதுபோலவே இன்று தோழர் ஜவஹர்லாலை அழைத்து வருவதும் அடுத்த மாதம் நடக்கப்போகும் சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கு மறைமுகப் பிரசாரம் செய்வதற்கேயாகும்.

சென்னை கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நாமினேஷன் கொடுக்கப்பட வேண்டிய தேதி 2-10-36 ஆகும்.

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன் 23-10-36 தேதி ஆகும்.

தோழர் நேரு அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் தேதி 5-10-36 ஆகும்.

5-10-36 முதல் 23-10-36 வரை 15 நாள்களுக்கு தமிழ் நாட்டில் இருப்பதற்கு சுற்றுப் பிரயாணத்திட்டம் போடப்பட்டிருக்கிறது.

ஆகவே தோழர் ஜவஹர்லால் நேரு எலக்ஷன் பிரசாரத்துக்கு வருகிறார் என்பதற்கு ஏதாவது சம்சயமுண்டா என்று கேட்கிறோம்.

பண்டித நேரு தனது காங்கிரஸ் தலைவர் ஹோதாவில் சுற்றுப்பிரயாணம் வருகிறார் என்றால் அது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சாவகாசமுள்ள காலத்தில் வந்து காங்கிரஸ் பிரசாரம் செய்துவிட்டுப்போக வரலாம். ஆனால் இப்போது தலைவர்களும் தொண்டர்களும், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களும் தேர்தலில் ஈடுபட்டு வெளியிடங்களில் உள்ள பிரசாரகர்கள் கூட சென்னைக்கு வந்திருக்கும் இந்த நெருக்கடியான சமயத்தில் நேரு அவர்களை சென்னைக்குக் கூட்டி வந்து தடபுடல் நாடகம் நடத்துவது என்றால் இதை தேர்தல் பிரசாரத்துக்கு என்று அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்.

தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் வரவை தமிழ் மக்கள் இதே காரணம் சொல்லி பகிஷ்கரித்த காலத்தில் தோழர் பிரசாத் அவர்கள்

“எனக்கு இங்கு எலக்ஷன் பிரசாரம் நடப்பது தெரியவே தெரியாது இங்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது, எலக்ஷன் காலமாய் இருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்”

என்று சொன்னார். அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் பெரிதும் சென்னை முதல் அவர் சென்ற இடங்களில் எல்லாம் “ராஜேந்திரபிரசாத் திரும்பிப்போ”

என்கின்ற கோஷத்துடன் 1000 க்கணக்கான மக்களால் பகிஷ்கரிக்கப்பட்டு அதுசமயம் பிரசாத் அவர்கள்

“இந்த பகிஷ்காரத்தின் காரணம் எனக்கு ஒன்றும் தெரியவில்லையே நான் எங்கே போவது? நான் பார்ப்பனன் அல்லவே” என்று அழுது கண்ணீர் உதிர்த்துவிட்டே போனார். தோழர் பிரசாத் அவர்கள் திரும்பி தனது ஊருக்கு வண்டி ஏறும் போதுகூட “சீக்கிரம் போங்கள்” என்கின்ற வளைவுகளும் தட்டிகளும் ரயில்வே மேடை வரை துரத்திக்கொண்டே சென்றன.

அப்படியிருக்க நம் பார்ப்பனர்கள் இப்போதும் அதுபோலவே சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனுக்குப் பண்டிதரை அழைத்து வந்து நமக்கு துன்பத்தையும் தொல்லையையும் விளைவிக்கப் போகிறார்கள். இப்போதே சில இடங்களில் கலகம் ஆரம்பமாகிவிட்டது. இன்றைய பத்திரிகைகளில் திருச்சி முனிசிபாலிடியில் பண்டிதர் வரவேற்பு விஷயமான தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு அது இந்து முஸ்லீம் தகராறாக பரிணமித்ததோடு தலைவர் பக்கம் பாதரட்சை பறந்ததாகவும் காணப்படுகின்றது. இது அவமானத்துக்கான காரியம் தான்; அடாத காரியம்தான்; வருந்தத்தக்கது தான்.

ஆனால் வேலியில் போகும் ஓணானை காதுக்குள் விட்டுக்கொண்டு குடையுது குடையுது என்று சொன்னால் அதற்கு யார் என்ன செய்யக்கூடும் என்று கேட்கின்றோம்.

பண்டிதர் ஜவஹர்லால் தனிமையில் பொதுநல சேவைக்காரர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்தான். சில காரியங்களில் அவர் பார்ப் பனரேயாயினும் இன்றுள்ள சராசரி நாணயத்தில் அவர் மேம்பட்டவரே யாவார். அப்படிப்பட்ட அவரின் வரவை பஹிஷ்கரித்து காட்ட வேண்டிய அவசியமில்லைதான்.

ஆனால் அவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கையாளாக தமிழ்நாட்டில் நடக்கும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போருக்கு பார்ப்பனர் பக்கத் தளகர்த்தராய் கொண்டு வரப்படுகிறார் என்றால் இவரை வரவேற்பது என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வது போலல்லவா என்று கேட்கின்றோம்.

தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் நாமறிய இந்த 15,20 வருட காலமாகவே தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு அவமதிப்பு ஏற்பட்ட காலத்திலும், அவர்கள் சூழ்ச்சியும் நாணயமற்ற காரியங்களும் பலிதப்படாமல் வெளிப்பட்ட காலத்திலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் மக்களது முட்டாள் தனத்தினால் ஆகவேண்டி இருக்கும் காலத்திலும் வடநாட்டில் ஏதாவது ஒரு ஆளைப்பிடித்து அவரை ஆகாயத்துக்கு தூக்கிவைத்து பிறகு அவரைக் கூட்டி வந்து ஆடம்பரம் செய்து காரியம் சாதித்துக்கொள்வதோடு அவர் பேரால் பணமும் வசூலித்துக்கொண்டு திருப்பி அனுப்பி விடுவது வழக்கம். இது மறுக்கமுடியாத உண்மை என்பதற்கு ஒரு உதாரணம் கூறுவோம்.

அதாவது தமிழ்நாட்டில் இருந்து எப்போதும் எந்த ஒரு தமிழ் நாட்டவரையும் வேறு எந்த மாகாணத்துக்கும் இந்தமாதிரி விளம்பரத்துக்கோ, அல்லது ஏதாவது ஒரு பிரசாரத்துக்கோ அழைத்துப்போனது என்பது அரிதாகவே இருக்கும் என்பதேயாகும். தோழர்கள் விஜயராகவாச்சாரியாரையோ, ராஜகோபாலாச்சாரியாரையோ, ஸ்ரீனிவாசய்யங்காரையோ, அதாவது சத்தியமூர்த்தியாரையோ, வேறு யாரையுமோ எங்கும் அழைத்துப் போனதாகவே நமக்கு ஞாபகமில்லை.

இது விஷயமாய் தோழர் சத்தியமூர்த்தியார் கூட ஒரு சமயத்தில் பேசி இருப்பது நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது “வெளி மாகாணங்களில் இருந்து யார் யாரையோ நம் மாகாணத்துக்குக் கூட்டி வந்து பிரமாத ஆடம்பரங்களும் மரியாதைகளும் செய்து மிகப் பெரிய மனிதர்களாக்கி விடுகிறோம். ஆனால் நம் மாகாணத்தவர்களை வெளி மாகாணத்தார் யாரும் லட்சியம் செய்வதே இல்லை” என்று பேசி இருக்கிறார். அதற்கு அந்தக் காலத்திலேயே நாம் தமிழ்நாட்டில் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் நம் பார்ப்பனருக்கு இருப்பது போல் பிற மாகாணத்தாருக்கு இல்லை என்று பதில் கூறி இருக்கிறோம்.

ஆகவே இதுசமயம் தமிழ்நாட்டுக்குப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை அழைத்து வருவது உண்மையிலேயே தமிழ் மக்களை ஏமாற்றவும் அவர்கள் கண்களில் மிளகாய் பொடி போட்டு பார்ப்பனரல்லாதார் பணத்தை பதினாயிரக்கணக்கில் வசூலித்து அப்பணத்தைக் கொண்டு தேர்தல்களில் பார்ப்பனரல்லாதாரை தோற்கடித்து பார்ப்பனர்களும் பார்ப்பனப் பெண்மணிகளும் பார்ப்பனக் கூலிகளும் வெற்றி பெறச் செய்யும் சூழ்ச்சியே அல்லாமல் இதில் வேறு எவ்வித நாணயமும் உண்மையும் இல்லை என்று நிச்சயமாய்ச் சொல்லுவோம்.

இப்படிப்பட்ட சமயத்தில் யாரானாலும் பார்ப்பனரல்லாதாராகிய நாம் நமது வெறுப்பைக் காட்டிக்கொள்வதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்து பணத்தை அள்ளிக் கொடுக்காமல் இருப்பதற்கு ஆகவும் அவரை பஹிஷ்கரிக்க வேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும் என்பதே நமதபிப்பிராயமாகும். அந்த அபிப்பிராயத்தை பார்ப்பன பக்தர்களாகிய பார்ப்பனரல்லாத தோழர்களில் சிலர் சரியல்ல என்றும் கண்டித்தும் பேசியும், எழுதியும் பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்கும் முக விலாசத்துக்கும் ஆளாக முயற்சிப்பார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை யில்லை. அப்படியாவது அவர்கள் பிழைத்தாலும் நமக்கு சந்தோஷமே. ஆனால் அதுதான் கிடையாது. இந்தக் கூட்ட பார்ப்பனரல்லாதார்களுக்கு நம்மை வைது பழியை மூட்டைக் கட்டிக் கொள்ளுகிறார்களே அதுதான் மிச்சம். மற்றப்படி பார்ப்பனர்களால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதோடு அவர்கள் முன்வர முயற்சிக்கும் போது பெரிய கல்லைத் தூக்கிப்போட்டு ஒழித்து விடவே முயற்சிப்பார்கள். இதுவரை நாம் பார்ப்பனர்களிடம் கண்ட அனுபவத்தைக் கொண்டே இதை எழுதுகிறோம்.

உதாரணம் வேண்டுமானால் நாளை மாதம் சென்னையில் நடக்கப் போகும் கார்ப்பரேஷன் எலக்ஷன்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆசாமிகள் யார் யார் என்று பார்த்தாலே இந்த உண்மை விளங்கிவிடும்.

ஆதலால் பண்டித ஜவஹர்லால் அவர்கள் இந்த சமயத்தில் தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதானது பார்ப்பனர்களின் பக்கா சூழ்ச்சியே ஒழிய தேச பக்திக்கோ, “சுயராஜ்யத்துக்கோ” அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

குடி அரசு தலையங்கம் 20.09.1936

You may also like...