மறுபடியும் தொல்லை
தூது கோஷ்டிப் புரளி
இனாம்தார் மசோதா இரண்டாம் முறையும் சென்னைச் சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. வைஸ்ராய் அனுமதி பெறவேண்டியதுதான் பாக்கி. வைஸ்ராய் அனுமதியளித்து விட்டால் ஐம்பது லக்ஷம் இனாம் குடிகளின் கஷ்டம் தீரும். நிர்ப்பயமாக உயிர்வாழ்வார்கள். ஆனால் இனாம்தார்கள் இனாம் குடிகளின் தலையில் கைவைக்க மேலும் என்ன வழியென்று பார்க்கப்போவதாகத் தெரிகிறது. இனாம்தார்களுடைய பிரதிநிதி கோஷ்டியார் கவர்னர் அவர்களைப் பேட்டி கண்டு முறையிட முயற்சி செய்தார்களாம். இனாம் மசோதா விஷயம் வெகுகாலமாகப் பொது ஜனங்கள் முன் இருந்து வந்திருப்பதினாலும் இந்த விஷயத்தை ஏற்கனவே நன்றாகச் சர்ச்சை செய்யப்பட்டிருப்பதினாலும் புதிதாக எந்த விஷயத்தையும் தெரிவிப்பதற்கில்லை யெனக் காரணங்கூறி கவர்னர் தூது கோஷ்டிக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டதுடன் இதர கோஷ்டிகளுக்கும் அனுமதியளிப்பதில்லை யென்று தெரிவித்துவிட்டாராம். இது இரண்டு பார்ப்பனப் பத்திரிகைகளுக்குப் பிடிக்கவில்லை. அவ்விரண்டு பத்திரிகைகளும் தேசீயப் பத்திரிகைகள்தான். ஏழை எளியோர் விடுதலையை தமது லக்ஷ்யமென தேசீய வாதிகளும் தேசீயப் பத்திரிகைகளும் கூறிக்கொண்டாலும் இனாம் குடிகள் மசோதா விஷயத்தில் மட்டும் தேசீயமும் மாயமாக மறைந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன? இனாம் குடிகள் எல்லாம் பார்ப்பனரல்லாதாராயிருப்பதும் இனாம்தார்களில் பெரும்பாலார் பார்ப்பனர்களாயிருப்பதுவுமே காரணம். இந்த இனாம் மசோதாவைக் கவிழ்க்கப் பார்ப்பனர்கள் எவ்வளவோ கிளர்ச்சி செய்தார்கள்; பலிக்கவில்லை. கடைசியில் சட்டமாகப்போவதும் உறுதி. இந்த மசோதா சட்டமானதற்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாரே. ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏழை மக்களுக்கு நன்மையுண்டானதாக ஒரு புகழ் தோன்றுவதை பார்ப்பனர்கள் எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே மசோதா பொதுவுடமைத் தன்மை வாய்ந்ததென்று பூச்சாண்டி காட்டினார்கள். அந்தப் பூச்சாண்டியும் பலிக்கவில்லை. இப்பொழுது கவர்னரைப் பேட்டி கண்டு புரளி செய்ய முயன்றார்கள். மசோதா நன்கு விவாதிக்கப்பட்டிருப்பதினாலும் புதியதாக அறிய வேண்டியது எதுவும் இல்லாமலிருப்பதினாலும் பேட்டியளிக்க கவர்னர் விரும்பவில்லை. இதனால் இனாம்தார்களுக்கு கவர்னர் ஏதோ அநீதி செய்து விட்டதாக சென்னைப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறுகின்றன. இது தானா இந்திய கவர்னரை நாம் பெற்ற பலன் எனவும் ஒரு பத்திரிகை கிண்டலாக எழுதுகிறது.
தற்கால கவர்னர் இந்தியரானதினால் இனாம் மசோதா விஷயத்தை நன்கறிந்திருக்கிறார். எனவே அவரை ஏய்க்க முடியாது. இனாம்தார்கள் குறும்பையும் அவர் நன்கறிந்திருக்கிறார். ஆகவே அனுமதி மறுத்ததில் தப்பு எதுவும் இல்லை. கவர்னர் இந்தியராயிருப்பதினால் இந்தியர்களின் வம்பளப்பு களை யெல்லாம் அவர் காதில் வாங்க வேண்டுமென்ற கட்டாய மில்லை.
குடி அரசு துணைத் தலையங்கம் 27.09.1936