சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு
‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) கோயில்களுக்கு பெரும் கோபுரங்கள் கட்டப் படுவதும் அந்தக் கோபுரங்களின் சிற்பக் கலைகள் குறித்து தமிழர் கட்டிடக் கலைப் பெருமை பேசுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்கு முன் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன? அது பக்தர்கள் அனைவரையும் கோயிலுக்குள் அழைக்கத் தூண்டுவதற்காகவா? அது அனைத்து மக்களையும் கோயிலுக்குள் வாருங்கள் என்று வரவேற்கும் சிற்பக்கலை அலங்காரமா? நிச்சயமாகஇல்லை; பின் எதற்கு இந்தக் கோபுரங்கள்? வரலாற்று ஆய்வாளரும் பல மன்னர்களின் வரலாற்றை நூலாக எழுதியவருமான இரா.சிவ. சாம்பசிவ சர்மா எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூலில் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “வர்ணாஸ்ரமங்களைக் கடை பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார், கோயிலுக்குள்...