‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்….
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. ‘பெரியார் வாழ்க; தமிழ் வாழ்க’ என்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கத்துக்கு எதிராக பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர்களே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள்.
‘இராவண-இராம’ யுத்தம் நடந்த காலத்தில் இராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி அயோத்தி மக்கள் வேண்டினார்கள் என்பது ஒரு செவி வழிக் கதை. இராமன் போரில் வென்று சீதையையும் இராவணனிடமிருந்து மீட்டான் என்று இராமாயணம் கதை கூறுகிறது. இராமன் வெற்றி பெற்ற பிறகும் இப்போதும் ‘ஜெய் ராம்’ என்று ஏன் முழங்குகிறார்கள்; இப்போது ‘ஸ்ரீராம பகவானுக்கு’ என்ன ஆபத்து நேர்ந்திருக்கிறது? சீதையை யார் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்?
ஆனாலும், காலங்காலமாக இராமாயணம் – பாரதம் என்ற புராணக் கதைகள், பார்ப்பனரல்லாத மக்களை மூளைச் சலவை செய்து, வேத மதப் பிடிக்குள் வைத்திருப்பதற்கே ‘இராமகாதை’, ‘இராம காலட்சேபம்’, இராமாயண நாடகங்களாகக நடத்தப்படுகின்றன. 10 நாள்கள், 15 நாள்கள், ‘இராமாயண உபன்யாசகங்கள்’ தமிழ்நாட்டில் நடந்தது உண்டு. இறுதி நாள்களில் ‘இராமன் பட்டாபிஷேகக்’ கதைகளை உருக்கமாகப் பேசி, மக்களை கண்ணீர் சிந்த வைப்பார்கள். உபன்யாசகக்காரர்களுக்கு பட்டாபிஷேக உரை நாளில் பொன், பொருள், பட்டாடைகள் பரிசுகளாகக் குவியும்.
இப்போதும் வடமாநிலங்களில் ‘இராமகாதை’ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் பெரியார் இயக்கப் பிரச்சாரத்தால் இந்த காலட்சேபங்கள் குறைந்திருக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் ஜபோல் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி ‘இராம காதை’ நிகழ்ச்சி நடந்தபோது திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் ‘துணிப் பந்தல்’ சரிந்து விழுந்து, கதை கேட்க வந்த 14 பேர் பரிதாபமாக பலியாகி விட்டார்கள். பந்தல் சரிந்தபோது மின்சாரமும் தாக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ‘ஸ்ரீராம ஜெயம்’ என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு பழக்கத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதுவதையே சிலர் தெய்வீகப் பணியாகவும் கருதுகிற மனநிலை இன்றும் தொடருகிறது. ‘இராமனுக்கு’ வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இராமன் கதையை பக்தியுடன் கேட்க விரும்புகிறவர்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு இருக்குமா இல்லையா என்பதையே இராஜஸ்தான் சம்பவம் உணர்த்துகிறது.
தொகுப்பு: ‘இரா’
பெரியார் முழக்கம் 27062019 இதழ்