தோழர்களே, கோவைக்குத் திரளுவீர்!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தலைவிரித்தாடுகின்றன. ஜாதிகளைக் கடந்து ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஜாதிவெறிக் கூட்டம் கையில் எடுத்துக் கொண்டு வீச்சறிவாளையும் கத்தியையும் தூக்கிக் கொண்டு வருகிறது.

‘நாம் எல்லோரும் இந்துக்கள்’ என்று மதவாதம் பேசும் கூட்டம், இந்துக்களுக்குள்ளே நடக்கும் ‘ஜாதிக் கொலைகளை’ எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது.

தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்கிறது, தமிழக அரசு!

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சட்டத்தையும் கொண்டுவர மறுக்கிறது,

மத்திய சட்ட ஆணையம். ஜாதியப் படுகொலைகளைத் தடுக்கும் மசோதாவைத் தயாரித்து 2011ஆம் ஆண்டு நடுவண் ஆட்சிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகியும் மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

ஜாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகளுக்கு 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 22 மாநில அரசுகள் பதிலளித்து விட்டன. தமிழ்நாடு மட்டுமே பதிலளிக்கவில்லை.

இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முன் வந்தால் முதியவர்கள் அதைத் தடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும் ஜாதி வெறியர்கள் காதில் விழ மறுக்கிறது.

இன்னும் எத்தனை உயிர்களை ஜாதி வெறி காவு கேட்கப் போகிறது?

ஜாதி அமைப்பு மட்டுமே ‘இந்து’ மதத்தின் பாதுகாப்புக் கவசம். இந்து மதம் மட்டுமே அதைத் தன் வசப்படுத்திக் கொண்ட பார்ப்பனர்களின் உயிர் நாடி!

எனவே ‘ஜாதி கரைப்பு’, ‘ஜாதி மறுப்பு’, ‘ஜாதி ஒழிப்பு’ என்று சமூகம் பயணிக்கத் தொடங்குவதைப் பார்ப்பனர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

‘குடும்ப கவுரவம்’, ‘சொந்த பந்தங்கள் கேவலமாகப் பேசும்’ என்ற உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஜாதி ஆணவப் படுகொலைகளை நடத்துகிறார்கள்.

உடன் பிறந்த சகோதரன் – பெற்ற மகள் இரத்தங்களையே பரிசாகக் கேட்கிறது – ஜாதி வெறி.

இந்த ஆணவப் படுகொலைகளை எதிர்த்து, குரல் கொடுக்க ஜாதி வெறி சக்திகளுக்கு கடும் எச்சரிக்கையும் எதிர்ப்பையும் தெரிவிக்க;

கழகத் தோழர்களே! கோவைக்குத் திரளுவீர்!

நாள் : ஜூலை 23, 2019 செவ்வாய் மாலை 4 மணி

இடம் : கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்கிறார்!

திரண்டு வாரீர், தோழர்களே!

பெரியார் முழக்கம் 18072019 இதழ்

You may also like...