ஜாதி வெறிப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி மனிதத்தையே சாகடிக்கிறது. மேட்டுப்பாளையம் அருகே தலித் பெண்ணோடு குடும்பம் நடத்தியதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற 24 வயது இளைஞர், சொந்தத் தம்பியையே வெட்டிப் படுகொலை செய்து விட்டான். தாக்குதலுக்கு உள்ளாகிய தலித் பெண்ணும் மரணமடைந்து விட்டார். 24 வயதுள்ள இளைஞனைக்கூட ஜாதி வெறி எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கே அவமானம்.

கடந்த 5 ஆண்டுகளில் 185 ஜாதி வெறிக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. ‘கவுரவக் கொலை’களே தமிழ்நாட்டில் நடப்பது இல்லை என்று

ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையில் ‘வாய் கூசாமல்’ பேசினார். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜாதி வெறிப் படுகொலைகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடம் கேட்டது. 22 மாநில அரசுகள் விவரங்களை அனுப்பின. தமிழ்நாடு அரசு எந்த அறிக்கையையும்  அனுப்பவில்லை. தேசிய சட்ட ஆணையம், ஜாதி வெறியோடு திருமணங்களைத் தடுக்க முனைவதை சட்டப்படி குற்றமாக்கும் மசோதா ஒன்றை 2011ஆம் ஆண்டு தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது. மசோதா – நாடாளுமன்ற அலமாரியில் தூங்குகிறது.

சங்கர் படுகொலைக்குப் பிறகு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது இந்த ஜாதி வெறிப் படுகொலை.

கடந்த ஜூன் 26 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கோவை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கழகத் தோழர்கள் நேருதாஸ், நிர்மல்குமார், வெங்கட் உடன் சென்றிருந்தனர்.

பெரியார் முழக்கம் 04072019 இதழ்

You may also like...