இராஜராஜசோழனின் கதை என்ன? (3) களப்பிரர் காலம் இருண்ட காலமா?
இயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன. நீதிமன்றங் களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன?
இராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து இராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக இராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. இராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை இராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.
பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே, குற்ற விசாரணைக் காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங் களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமை யாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப் பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர் களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று இராஜராஜன் ஆணை பிறப்பித் திருந்தான்.
பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் இராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.
மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த இராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடு கடத்தினான். “கொலைக் குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.
சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்த மாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.
வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காத தால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். இராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
இராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.
களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர் களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப் பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக் காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.
இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப் பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழக மெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கி யிருந்த காலமும் இதுதான்.
இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.
இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக் கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாக வும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் இராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.
இராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.
வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக் காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொது வாக்கப்பட்டன.
பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.
தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?
இன்று இராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித் தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்து கின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பன தாசனாக வாழ்ந்த இராஜராஜனும் இருந்தான்.
கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, இராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.
நன்றி : ‘வினவு’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
(நிறைவு)
பெரியார் முழக்கம் 04072019 இதழ்