அரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்
நடுவண் அரசின் சமூக நீதித்துறை ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதற்காக அம்பேத்கர் மய்யம் என்ற ஒரு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. திருமணமான இணையர்களில் ஒருவர் பட்டியல் இனப் பிரிவினராக இருத்தல் வேண்டும். நெல்லை, சாத்தூர், நாகர்கோயிலைச் சார்ந்த மூன்று இணையர் ஊக்கத் தொகைக் கேட்டு விண்ணப்பித் திருந்தனர். அம்பேத்கர் மய்ய பார்ப்பன அதிகாரிகள், இந்த இணையர் இந்து சாஸ்திரப்படி புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்தவில்லை என்று கூறி ஊக்கத் தொகையை வழங்க மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன், சமூக நலத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தமிழ்நாட்டில் இந்து சாஸ்திரங்களை மறுத்து நடக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இந்து திருமணச் சட்டத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட் டுள்ளார். இந்து சாஸ்திர அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்று கூறிய அம்பேத்கர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மய்யம் அவரது கொள்கைக்கு எதிராக, ‘இந்து சாஸ்திர’ முறைப்படி நடக்கும் திருமணங்களுக்கே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கூறுவது அம்பேத்கருக்கே இழைக்கும் அவமானம். பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம், அண்ணா முதல்வராக இருந்தபோது சட்டமாக்கப்பட்டுள்ளதால், சுயமரி யாதைத் திருமணம் புரிந்து இந்த மூன்று தம்பதி களுக்கும் ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை கிடைத் துள்ளது. வேறு மாநிலங்களில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இல்லை. திராவிட இயக்கத்தின் சாதனைக்குக் கிடைத்துள்ள வெற்றி இது.
பெரியார் முழக்கம் 27062019 இதழ்