பார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் தபோல்கரை பின்னாலிருந்து தலையை குறி வைத்து சுட்டேன்!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் நடைப் பயிற்சி சென்ற போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரியிலும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம்.கல்புர்கி 2015 ஆகஸ்டிலும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவருமே இந்துத்துவா மதவெறிச் சிந்தனைக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். பகுத்தறிவாளர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர்கள்.
எனினும், இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடை யாளம் காண்பதில் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், கன்னட வார இதழான ‘லங்கேஷ்’ பத்திரிகை யின் ஆசிரியர் கவுரி லங்கேஷ், 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல்லப் பட்டது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கவுரி லங்கேஷ் படு கொலை வழக்கில், பெரும் அக்கறை எடுத்துக் கொண்ட அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். அதனடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், பரசுராம் வாக்மோரே, நவீன் குமார், அமோக்காலே, அமித்தேக்வேகர், சுஜித் குமார், மனோகர் எடாவே, மோகன் நாயக், அமித் ராகவேந்திரபட்டி, கணேஷ் மிஸ்கி, ராஜேஷ் உட்பட பலரைக் கைது செய்தனர். அத்துடன், தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலையில் பயன் படுத்தப்பட்ட துப்பாக்கிதான், லங்கேஷ் படுகொலைக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் கண்டறிந்தனர்.
இதனிடையே, மகாராஷ்டிர போலீசார் சரத் கலாஸ்கர் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் லங்கேஷ் படுகொலை தொடர்பான முடிச்சுகள் மேலும், அவிழத் துவங்கின. இவர்களின் கொலையில் சரத் கலாஸ்கருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. இந் நிலையில்தான், சரத் கலாஸ்கர் போலீசாரிடம் அளித்துள்ள 14 பக்க வாக்குமூலம் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளி யாகியுள்ளன. அந்த வாக்கு மூலத்தில் சரத் கலாஸ்கர் கூறியிருப்பதாவது:
தன்னை, சில வலதுசாரியினர் தொடர்பு கொண்டு, இந்துத்துவ சித்தாந்தம், துப்பாக்கிகளைப் பயன் படுத்துதல் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் செயல்முறை ஆகியவை குறித்து பயிற்சி அளித்தனர். அதைத் தொடர்ந்து சில தீய சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வீரேந்திர தாவ்டே என்னிடம் தெரிவித்தார். அதையேற்றே நான் தபோல்கரை சுட்டுக் கொன்றேன். நரேந்திர தபோல்கரை தலையில் சுடுமாறு தவ்டே என்னிடம் கூறியிருந்தார். அதன்படி நான் சுட்டேன். பின்னால் இருந்து, தலை யில் சுட்டேன். அவர் கீழே விழுந்ததும், கண்ணுக்கு மேல் பகுதியை குறி வைத்து சுட்டேன். 2 குண்டுகளைதலையில் பாய்த்துக் கொன்றேன். என்னுடன் வந்த சச்சின் அந்துரே என்ற கூட்டாளியும், தபோல்கரை சுட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடகாவின் பெல்காமில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்துத் துவாவுக்கு எதிராகச் செயல்படுபவர் களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் கவுரி லங்கேஷின் பெயரும் இருந்ததால் அவரைக் கொலை செய்தோம். லங்கேஷ் கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பரத் குர்னே வின் வீட்டில் தான் கொலைக்கான முழுமையான திட்டமும் வகுக்கப்பட்டது; லங்கேஷ் கொலைத் திட்டத்துக்கு `நிகழ்வு (நுஏநுசூகூ)’ எனப் பெயரிடப்பட்டது. இதை யடுத்து, பரத் குர்னேவின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மலைக்குச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தி, பயிற்சி மேற்கொண்டோம். இந்தப் பயிற்சியில் அனைவரும் 15 முதல் 20 தோட்டாக் களைச் சுட்டு பயிற்சிப் பெற்றோம். லங்கேஷை கொலை செய்த பிறகு, அதற்குப் பயன்படுத்திய துப்பாக்கிகளை மும்பை – நாஷிக் நெடுஞ்சாலையில் மூன்று பாகங்களாக கழற்றி வீசி விட்டோம். இவ்வாறு கலாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 11072019 இதழ்