‘இந்து’ ஏட்டின் கட்டுரை கடவுள்களும் காம்ரேட்களும்
இந்து கோவில் திருவிழாக்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் இனி அத்தகைய விழாக்களில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சி.பி.அய்.எம் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறினார். திராவிடர் விடுதலைக் கழகமும், திராவிடர் கழகமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரினர். நோக்கம் சிறந்தது என்றாலும் இந்த செயல் மார்க்சிய தத்துவத்திற்கு முரணானதாக உள்ளது என்று திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டியதோடு, இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் என்று கருத்து தெரிவித்தார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டிற்குப் பிறகு செய்தி யாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ‘கோவில் வழிபாடு, பூஜை, சடங்குகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரடியாக பங்கேற்க மாட்டார்கள்’ என்றும், “கட்சியினுடைய ஆதரவாளர்கள் கோவில் நிர்வாகங்களில் பங்கேற்று, நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளில் மதச்சார்பின்மை கொள்கையை வலியுறுத்தி...
