சூர்யாவுக்கு மிரட்டல் : பா.ம.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி சென்னை, மதுரையில் கழக சார்பில் மனு
ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த பா.ம.க. – மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை, மதுரையில் கழகத் தோழர்கள் காவல்துறையில் மனு அளித்தனர்.
சென்னையில் : ஜாதியை பிரதானமாக வைத்தே இயங்கும் பாமக தரப்பில் அதிக மிரட்டல்கள் ‘ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவிற்கு வந்து கொண்டே உள்ளன. குறிப்பாக பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, “நடிகர் சூர்யா அவர்களை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு இலட்சம் தருவதாகவும், சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்யமுடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்” என்றும் மிரட்டியுள்ளார்.
சமூக பதட்டத்தையும், வன்முறையையும் , ஜாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் ஜாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். இதற்கான, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை யில் காலை 11 மணியளவில் மனு அளிக்கப்பட்டது. ஆணையர் தரப்பில் ஊளுசு ம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட துணை அமைப்பாளர் சுகுமார், மயிலை இராவணன், சிவா ஆகியோருடம் சென்னை கழக தோழர்கள் உடன் சென்றிருந்தனர்.
மதுரையில் : பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி 16.11.2021 காலை தென்மண்டல ஐ.ஜி. அலுவல கத்தில் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது..
தோழமை அமைப்புகளான விடுதலை சிறுத்தைகள், தமிழ்தேச மக்கள் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்கறிஞர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 25112021 இதழ்