தலையங்கம் நாட்டார் வழிபாடும் வைதீக எதிர்ப்பும்!
நாட்டார் தெய்வ வழிபாடுகள், தமிழர் மரபின் அடை யாளங்கள் என்றும் வைதீக பார்ப்பனியத்துக்கு எதிரானவை என்றும் பெருமை கொண்டாடுகிறவர்கள் இருக்கிறார்கள். வைதீகப் பண்பாட்டுக்கு எதிரானவை இந்த நாட்டார் வழிபாடுகள் என்றால், வைதீகத்திடமிருந்து எதிர்ப்புகள் வந்திருக்க வேண்டுமே! அப்படி எந்த எதிர்ப்புகளும் அவர்களிடமிருந்து வரவில்லை என்பதோடு, இந்த வழிபாட்டு முறைகள் மீதான மக்கள் நம்பிக்கை தொடர்ந்து நீடித்தால் தான், தங்களின் வைதீக பார்ப்பனிய மரபுக்கு வலிமை சேர்க்க முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அதேபோன்று, ‘நாட்டார் மரபு’ வழிபாடுகளைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாத தமிழர்களும் தங்களது வழிபாடு வைதீகத்துக்கு எதிரானது என்று கருதுவதும் இல்லை. மாறாக, ‘வைதீக’ வழிபாட்டு முறைகளோடு பார்ப்பனியம் கட்டமைத்த சமஸ்கிருதப் பண்பாட்டு சடங்குகளையும் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள். நாட்டார் சடங்கு வழிபாடுகள் பெரும்பாலும் கிராமங்களில் ஜாதியக் கட்டமைப்புக்குட்பட்டே நிகழ்த்தப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட ஜாதியினரை உள்ளூர் வழிபாடுகளில் ஒதுக்கி வைக்கிறார்கள். பல நாட்டார் வழி பாடுகளில் பெண்கள் பங்கேற்பதும் தடை செய்யப்படுகிறது.
‘குல தெய்வ வழிபாடும் வேண்டும்; திருப்பதிக்குப் போய் சிறப்பு தரிசனம் செய்து மொட்டை போடவும் வேண்டும்’ என்ற இரட்டை வாழ்க்கை முறைக்குத் தான் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இழுத்துச் செல்கின்றன.
இப்போதும் பண்டிகைகளும் சடங்குகளும்தான் மக்களை ‘இந்து’ பார்ப்பனியப் பிடியில் அழுத்தமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன. மட்டுமின்றி, கிராமக் கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகள் மக்களை மூடநம்பிக்கையில் தீவிரமாக மூழ்கச் செய்து விடுகின்றன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்பாபுரம் என்ற கிராமத்தில் தீபாவளிக்கு அடுத்த மூன்றாவது நாளில் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசிக் கொள்ளும் திருவிழா அண்மையில் நடந்துள்ளது. அது கூட பசு மாட்டு சாணமாக இருக்க வேண்டும். எருமை மாட்டு சாணமாக இருக்கக் கூடாதாம். இதிலேயே பார்ப்பனியம் நுழைந்து விட்டது. பார்ப்பனர்கள், பசு மாட்டை மட்டுமே தங்கள் வீடுகளில் வளர்ப்பார்கள். எருமை, காளை மாடுகளை அவர்கள் வளர்ப்பதில்லை. இந்தத் திருவிழா நடக்கும் கோயிலில் ‘மூலவர்’ பெயர் பீரேஸ்வரர். நாட்டார் தெய்வத்துக்கு தமிழ்ப் பெயர் ஒழிக்கப்பட்டு, சமஸ்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. ‘வீதி உலாவுக்கான’ உற்சவர் சிலையை கழுதை மேல் ஏற்றி கோயிலுக்கு அழைத்து வந்து, பூஜைகள் நடத்தி, சாணிகளை ஒருவர் மீது ஒருவர் வீசுவார்களாம். பிறகு ஊர்க் குளத்துக்குப் போய் சாணி உடம்போடு குளிப்பார்களாம். மேலாடை இல்லாமல் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ‘வழிபாடு’ இது. பெண்கள் வேடிக்கைப் பார்க்க வேண்டும்.
குழந்தைகளை மண்ணைத் தோண்டி புதைத்து, மீண்டும் குழந்தையை மீட்டெடுக்கும் ஆபத்தான கோயில் சடங்கு தமிழ்நாட்டில் நடந்தது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதற்கு தடை போட்டார். இப்போதும் தலையிலேயே தேங்காய் உடைக்கிறார்கள். மண்டையில் இரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்கள் தலையை பூசாரியிடம் காட்டுகிறார்கள். ஆண்டிப்பட்டி அருகே முத்தாளம்பட்டி எனும் கிராமத்தில் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் திருவிழா நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தில் தொடையை இரத்தம் வரும் வரை கத்தியால் கீறி அந்த இரத்தத்தை சோற்றில் கலந்து வீசும் திருவிழா இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் ஒரு குழந்தையின் கழுத்தை அறுத்து இரத்தத்தை எடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போது வேறு வடிவத்தில் மாறி இருக்கிறது.
உடம்பு முழுதும் சாக்குகளைக் கட்டிக் கொண்டு வழிபாடு நடத்தும் திருவிழா, கமுதி அருகே செங்கம்படை எனும் கிராமத்தில் நடக்கிறது. இதைத் தவிர செருப்படி திருவிழா, சேறுவாரி இறைக்கும் திருவிழா என்று நீண்ட பட்டியலைப் போட முடியும். ‘நாட்டார் வழிபாடு’ குலதெய்வ வழிபாடு என்ற பெயரில் காலங்காலமாக நடக்கும் இந்த விழாக்களும் சடங்குகளும் மக்களிடையே ஜாதி கடந்த ஒற்றுமை கிராமங்களில் வளர்க்கவில்லை. மாறாக ஜாதிப் பிரிவுகளை கூர்மைப்படுத்தி மூட நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன.
ஜாதிகள் கட்டமைப்பை மீறுவது அவமானம் என்ற ‘பொது மனவியலை’ ஒவ்வொரு ஜாதிக் குழுக்களுக்குள்ளும் உருவாக்குகின்றது. ஜாதிய சமூகத்தை சிவில் சமூகமாக்கி, சமத்துவ உணர்வை விதைத்து, ஜாதிப் பிடிக்குள்ளிருந்து விடுவிப்பதற்கு இந்த சடங்குகள் பெரும் தடைகளாகவே மாறி நிற்கின்றன. அறிவியல் சிந்தனையை புறக்கணிக்கச் செய்கின்றன. இத்தகைய பண்பாட்டை, ‘வைதீக எதிர்ப்பு’ என்று எப்படி ஏற்க முடியும்?
வைதீகப் பார்ப்பனியப் பண்பாடு – பார்ப்பனரல்லாத மக்களை பார்ப்பனியக் கட்டுக்குள் அடக்கி வைத்துள்ளது என்றால் நாட்டார் பண்பாடு, கிராமங்களில் ஜாதிக் கட்டமைப்பு குலைந்து விடாமல் காப்பாற்றி பார்ப்பனி யத்துக்கு சேவை செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.
பெரியார் முழக்கம் 11112021 இதழ்